மருத்துவம் அறிவோம்- ஜிங்க் சத்தினை கூட்ட உதவும் தானியங்கள்
- ஜிங்க் குறைபாடும் நாம் மக்களிடையே காண்கிறோம்.
- நீண்ட கால உடல் பாதிப்பு போன்றவை ஜிங்க் குறைபாடு ஏற்படக் காரணமாக இருக்கின்றது.
நம் உடல் சீராய் இயங்க பல வகை வைட்டமின்களும், தாது உப்புகளும் கூட அவசியம் என்பதனை நாம் அறிகின்றோம். அப்படிப்பட்ட தாது உப்புகளில் ஒன்றுதான் ஜிங்க் (Zinc) இது உணவுகளில் இருந்து சிறிய அளவில் கிடைத்து விடுகின்றது. உடலுக்கும் மிக அதிக அளவில் இது தேவைப்படுவதில்லை. இருப்பினும் 'ஜிங்க்' குறைபாடும் நாம் மக்களிடையே காண்கிறோம். ஜிங்க் நம் உடலுக்கு எதற்கு அவசியமாகின்றது.
* உடலில் 'செல்'களின் செயல்பாட்டிற்கு சுமார் 100 என்சைக்கள் ரசாயன செயல்பாடுகளை நிகழ்த்த 'ஜிங்க்' அவசியம் ஆகின்றது.
* உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூட உதவுகின்றது.
* வாசனை, சுவை இவை அறிய உதவுகின்றது.
* புண்கள் ஆற உதவுகின்றது.
* கர்ப்ப கால பெண்களுக்கும், குழந்தைகளின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றது.
இதனை உடல் சேமித்து வைக்க முடியாது. ஆகவே அன்றாட உணவில் இதன் சத்தினை பெறுவது அவசியம். இதன் குறைபாட்டின் அறிகுறிகளாக வெளிப்படுவது:-
*பசியின்மை *வளர்ச்சி குறைபாடு *நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு *வயிற்று போக்கு *சரும கட்டி *கண் பாதிப்பு *முடி கொட்டுதல் *காயங்கள் ஆறுவதில் தாமதம் *காரணமில்லாத எடை குறைவு எனக் காணப்படும். * தேவையான உணவு-சத்தான உணவு எடுத்துக் கொள்ளாது இருப்பது.
* குடலில் 'ஜிங்க்' சத்து உறிஞ்சப்படாமல் இருப்பது.
* நீண்ட கால உடல் பாதிப்பு போன்றவை 'ஜிங்க்' குறைபாடு ஏற்படக் காரணமாக இருக்கின்றது.
மேலும் *அதிக மது, *புற்று நோய், *குடல்நோய், *நீண்டகாலமான அடிக்கடி வயிற்றுப் போக்கு, *சிறுநீரக பாதிப்பு, *கல்லீரல் பாதிப்பு, *சர்க்கரை நோய் பாதிப்பு, *கணைய பாதிப்பு, *குடல்புண், வீக்கம்.
* சைவ உணவு உண்பவர்களுக்கு 'ஜிங்க்' குறைபாடு ஏற்படுகிறது. *முதியோர்கள், சில குறிப்பிட்ட வகை மருந்துகள் இவற்றினாலும் 'ஜிங்க்' குறைபாடு ஏற்படுகிறது. இதன் குறைபாட்டினை மருத்துவரே ஆய்ந்து முடிவு செய்வார். இதற்கான சத்து மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை மூலமே பெற்றுக் கொள்வது சரியாகும்.
பீன்ஸ் வகைகள், தயிர், கொண்டை கடலை, ஓட்ஸ், பால், அசைவ உணவுகள் மூலம் இயற்கை முறையில் இதனை பெறலாம். சுயமாக சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும், அதிகமாக உட்கொள்வதும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஜிங்க் குறைபாடு பாதிப்பின் ஆய்வு தொடர்ச்சியின் முடிவுகளாக ஆய்வாளர்கள் கூறுவது.
* தேவையான அளவு தூக்கம் இருக்காது. * அடிக்கடி சளி பாதிப்பு இருக்கும். * உற்சாகமின்றி இருப்பார்கள். * எடை குறையும் என்று பார்த்தோம். ஆனால் அதிக எடை இருப்பவர்களுக்கும் குறைபாடு உள்ளதினையும் ஆரோக்கியமான மெட்டபாலிசம் இல்லாத காரணத்தினால் இவ்வாறு ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்கின்றனர்.
*பல் சொத்தை, ஈறுகளில் ரத்த கசிவு ஏற்படலாம். அதிக குறைபாடு இருக்கும் பொழுது நகங்களில் கோடு புள்ளிகள் ஏற்படலாம். * கை, முகத்தில் திடீரென அதிக சுருக்கங்கள் ஏற்படலாம். * முகப்பருக்கள் ஏற்படலாம். * மாதவிலக்கு சுற்றில் பிரச்சினை ஏற்படலாம்.
ஆக இதை தவிர்க்கும் முறையாக ஜிங்க் சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதே நல்லது. குறைபாடு இருப்பின் மருத்துவர் மூலம் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய நபர்கள் சொல்லும் ஒரு வார்த்தை, பாதாம் எல்லாம் எதற்கு? வெறும் வேர்க்கடலை ஒரு பிடி சாப்பிட்டாலே பல சத்துக்கள் கிடைக்கும் என்பர். வேர்க்கடலை சத்தான உணவு தான். பாதாம், வேர்க்கடலை இரண்டிலுமே வைட்டமின் ஈ உள்ளன. ஆனால் பாதாமில் வைட்டமின் ஈ அன்றாட தேவையில் 45 சதவீதம் வரை கிடைத்து விடுகின்றது. அதுவும் ஒரு அவுன்ஸ் அளவில்.
வேர்க்கடலையில் வைட்டமின் பி, குறிப்பாய் போலேட் மற்றும் நியாசின் உள்ளன. இது பாதாமில் உள்ளதை விட அதிகம். மக்னீசியம் சத்து இரண்டிலும் ஏறத்தாழ சம அளவில் உள்ளது. பாதாமில் இரும்பு சத்தும், கால்சியம் சத்தும் வேர்க்கடலையினை விட அதிகம். ஜிங்க் அளவு இரண்டிலும் சம அளவில் உள்ளது. இப்படி கூறிக் கொண்டே செல்லலாம். ஆக இரண்டுமே குறிப்பிட்ட அளவு அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுபோல் மாதுளை பழத்தினை பற்றியும் குறிப்பிட வேண்டும். அதனை பற்றி பலமுறை நன்கு படித்துள்ளோம். கிராமங்களில் கூட உடல் ஆரோக்கியம், ரத்த சோகை இவற்றிற்கு மாதுளை பழத்தினை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் நகர்புறங்களில் பலர் அதன் தோலினை தூக்கி எறிந்து விடுவார்கள். இன்று ஆய்வுகளின் காரணமாக மாதுளை பழத்தோலின் நன்மைகள் தெரிய வந்துள்ளன. முந்தைய காலம் முதல் அழகு குறிப்புகளில் மாதுளை பழத்தோலினையும் ஆரஞ்சு பழ தோலினையும் நன்கு காய வைத்து பொடித்து மாவு பதத்தில் வைத்துக் கொள்வர். இதனை பாலிலோ தயிரிலோ கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் சென்று கழுவி விட சரும அழகு கூடும் என்று கடைபிடித்தனர்.
* இன்று மாதுளை தோல் பொடியினை டீ போல் கொதிக்க வைத்து வடிகட்டி நீரிழிவு நோய் உடையவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். * இந்த டீ வயிற்று உப்பிசம் போன்ற பாதிப்புகளுக்கு உதவுவதாக கூறப்படுகின்றது. * ஆயுர்வேதத்தில் மாதுளை கருப்பை கோளாறுகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றது.
இதனையும் அறிந்து கொள்வோமே!
* 40 வயதிற்கு மேல் வயது கூடும் பொழுது மூட்டு வலி எலும்பு தேய்மானம் என ஆரம்பித்து விடுகின்றது. 50 வயதில் கை, கால் அசைவுகளில் அதிக பிரச்சினை இருப்பதாக கூறுபவர்கள் ஏராளம். எலும்பின் ஆரோக்கியம் குறைவதுதான் இதன் முக்கிய காரணமாக இருக்கின்றது. இதனால் வாழ்க்கை முறையே மாறி விடுகின்றது. சிலர் தான் உட்காரும் போதும் படுக்க, எழுந்திருக்க, நடக்க எனவும் அதிக துன்பத்தினை அனுபவிக்கின்றனர்.
* மருத்துவ முன்னேற்றம் காரணமாக மருத்துவர், பயிற்சியாளர் மூலம் பல நன்மைகளை பெறுகின்றனர். சிலர் எலும்பு தேய்மானம் என்றதும் தானாகவே மனம் போனபடி கால்ஷியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர்.
* கால்ஷியம் கண்டிப்பாக எலும்புகளுக்கு அவசியம்தான். இந்த கால்ஷியத்திற்கு கொலஜன் புரதம் அவசியம். இந்த புரதம் இல்லாமல் ரத்த குழாய்களில் கால்ஷியம் உப்புகள் திட்டு உண்டாக்கும். * சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும்.
* இயற்கையிலேயே நமது உடலின் கொலஜன் உற்பத்தியாகின்றது. நாம் 20 வயதினை கடக்கும் பொழுது ஒவ்வொரு வருடமும் இதன் உற்பத்தி திறன் குறையத் தொடங்குகின்றது. 50 வயதினை கடக்கும் பொழுது சுமார் 20 சதவீதம் அளவுகூட இதன் உற்பத்தி திறன் குறைந்து விடுகின்றது. அதிக வெய்யில், புகை, அதிக மது, தூக்கமின்மை, உடற் பயிற்சியின்மை ஆகியவையும் உடலில் கொலஜன் புரதம் குறைய காரணம் ஆகின்றது.
* அசைவ உணவு, எலும்பு இவற்றின் மூலம் அதிக கொலஜன் பெற முடியும். கொலஜன் உருவாக்க ஜின்க்' தாது சத்து அவசியம். மீன், பருப்பு, வகைகள் அசைவ உணவு, கொட்டை வகைகள், முழு தானியங்கள் வைட்டமின் 'சி' சத்து நிறைந்த உணவுகள். கீரை, கொடை மிளகாய் இவைகளை எடுத்துக் கொள்வது 'ஜிங்க்' சத்தினை கூட்ட உதவும். * மருத்துவ ஆலோசனையின் பெயரில் கொலஜன் சத்தினை உபயோகிக்கலாம்.
* கூடவே தலைமுடி, சருமம், நகம், இவைகளும் உறுதி பெறுகின்றன. ஆக உங்கள் மருத்துவர் மூலம் இன்றே இதற்கான தீர்வு பெறுங்கள்.
வாய் ஓரத்தில் புண்: சிலருக்கு வாயின் இரு ஓரத்திலும் சிவந்து வீங்கிய திட்டு போன்று இருக்கும். இது இரு ஓரத்திலும் தொடரலாம். அல்லது ஒரு பக்கம் மட்டும் ஏற்படலாம். இதன் அறிகுறிகளாக:-
* ரத்த கசிவு, கொப்பளம், வெடிப்பு, அரிப்பு, வலி, சிகப்பு, வீக்கம், ஒருவித உலர்ந்த தன்மை இப்படி இருக்கலாம். உதடுகளும் உலர்ந்து வறண்டு இருக்கலாம். சிலருக்கு வாயை திறப்பது கூட வலி தரலாம். இதனால் இவர்கள் திட உணவினைத் தவிர்ப்பார்கள்.
இதற்கு காரணமாக நமது வாயில் ஊறும் நீர் இந்த பக்க வாட்டில் படியலாம். இது உலரும் பொழுது அவ்விடத்தில் வெடிப்பு ஏற்படுகின்றது. இதனை ஒருவர் தெரியாமல் நாக்கினால் தொட்டு ஈரப்படுத்திவிடுவார். உலர்வும், ஈரப்பதமும் மாறி மாறி ஏற்பட்டு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகின்றது. இதுவே மிக சாதாரணமாகக் காணப்படும் காரணம் ஆகும். வைட்டமின் பி2 ரிபோ புளேவின் குறைபாடு காரணமாகவும் இது ஏற்படலாம்.
* பல் கிளிப் போட்டிருப்பவர்கள். பல் கட்டு பொருத்தி இருப்பவர்கள். அடிக்கடி உதடினை நாக்கால் ஈரப்படுத்துபவர்கள். * அதிக உமிழ்நீர் கொண்டவர்கள். பல் முறையாக அமையக் பெறாதவர்கள். மூப்பு காரணமாகவும், அதிக எடை குறைவு காரணமாகவும் தசை வாயினை சுற்றி தொய்வு கொண்டவர்கள்.
* வாயில் விரல் போடும் குழந்தைகள், புகை பிடிப்பவர்கள். * வைட்டமின் 'பி'சத்து, இரும்பு சத்து அதிகம் இல்லாதவர்கள் இவர்களுக்கும் எளிதில் இந்த புண் ஏற்பட்டு விடும். * சர்க்கரை நோய் உடையவர்கள் எளிதில் இந்த பாதிப்பிற்கு ஆளாகுவர். ஆகவே இவர்கள் சர்க்கரையினை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.
90 சதவீத மக்களுக்கு சத்தான உணவின்மை காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. மருத்துவர் ஆய்ந்து இதற்கான மருந்தினை அளிப்பார். பூஞ்சை (அ) பாக்டீரியா பாதிப்பு, சத்து குறைபாடு இதனை ஆய்ந்து மருந்தளிப்பார். வைட்டமின் பி-2, வைட்டமின் பி12, வைட்டமின் சி சத்து இவையும் அவசியமானவை.
* சிலருக்கு அடிக்கடி இந்த பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான தொடர் சத்து மாத்திரை சிகிச்சையும் தேவைப்படும். * காரமான மசாலா உணவுகள், சிப்ஸ் போன்ற கரகர உணவுகள், அதிக ஆசிட் கொண்ட ஆரஞ்சு, கிரேப் ஜூஸ் வகைகளை தவிர்க்க வேண்டும்.
* உடலில் நீர் சத்து குறையாது பார்த்து கொள்ள வேண்டும். * கீரை வகைகள், பால் சார்ந்த பொருட்கள், சூப் போன்றவை சிறந்த சத்து அளிக்க கூடியவை.
வாழ்வு இனிமையாய் இருக்க
2023-ல் அடியெடுத்து வைத்துள்ள நாம் சில முயற்சிகளின் மூலம் நல்ல மன நலத்துடனும் அதன் மூலம் உடல் நலத்துடனும் வாழ்வோமே.
*ஒன்றினை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரைப்பார்த்து நாம் அவருக்கென்ன? வாழ்வதற்கென்றே பிறந்தவர். எவ்வளவு நன்றாக இருக்கிறார் என்று நினைக்கிறோம். ஆனால் ஒவ்வொருவரும் அவரது வாழ்வின் வலியினை உள்ளுக்குள் அனுபவிப்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். *எல்லோரும் அன்றாடம் பல வகையில் சிறிது சிறிதாக உடைந்துதான் போகின்றோம். இருப்பினும் நம்பிக்கையோடு வாழ்வினைத் தொடர்கின்றேம்.
*ஒவ்வொரு நொடியும் அல்லது அடிக்கடி நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டு, ஒப்பிட்டு நேரத்தை வீணடிக்கிறோம். இதனை நிறுத்தி நம் வெற்றியைப்பற்றி மட்டுமே சிந்திப்போமே. *நம் மீது நம்பிக்கை கொள்ள பழக வேண்டும். தன்னம்பிக்கை மிக அவசியம். *வேகம் வாழ்விலும் விவேகம் அல்ல. நிதானமாய் செயல்படும் பொழுது சொல், சிந்தனை, செயல் இந்த மூன்றும் சரியாய் இருக்கும். தலை, இதயம், கைகள் மூன்றும் கூட்டாக செயல்பட பழக வேண்டும். *மனம் விட்டு, வாய் விட்டு, சிரிக்க முடிகின்றதா? இயற்கையை ரசிக்கும் பழக்கம் இருக்கின்றதா? அன்பு இருக்கின்றதா? அப்புறம் என்ன? ஒவ்வொரு நாளும் இனிய நாள்தான்.
*பெரியோர், கற்றோர் அறிவுரை பெறுதல், சாதனையாளர்கள் புத்தகங்களை படித்தல் என்பது நமக்கு கடைசி மூச்சு இருக்கும் வரை இருக்க வேண்டும். *ஒன்றை நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவரவர் தலைமேல் இருக்கும் பிரச்சினைகளே ஏராளம். *எப்பொழுதும் குறை, குற்றம், புலம்பல்இவற்றினை அடியோடு விட்டொழிப்போம். *நம்மை சுற்றி நம்மீது அன்பு செலுத்துபவர்களும், ஆக்கப்பூர்வ சிந்தனை உள்ளவர்களும் மட்டுமே இருக்க வேண்டும். *நம் உடல் நலம், மனநலம், உணவு, உடை, தோற்றம் இவற்றில் நாம் தான் கவனம் செலுத்த வேண்டும். *சந்தோஷத்தினை நாம் தேடிப்போகக்கூடாது. அது நம்முள்ளே எப்போழுதும் இருக்க வேண்டும். *ஒவ்வொரு நிகழ்வும் எதோ ஒன்றினை நமக்குச்சொல்கின்றது. அதனை கூர்ந்து கேட்டால் வாழ்வு எளிதாகும்.
*எந்த ஒரு சிறு நன்மைக்கும் நன்றியோடு இருக்க வேண்டும். முயன்று பாருங்களேன். வாழ்வு இனிமையாய் இருக்கும். *நாம் தான் நம் வாழ்வினை வடிவமைத்துக்கொன்கிறோம். செய்யும் முறையான முயற்சிகள் கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்துதல் வாழ்வினை இனிமையாய் மாற்றும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!