சிறப்புக் கட்டுரைகள்

ஆன்மிகத்தில் தோய்ந்த மகான் வ.வே.சு. ஐயர்

Published On 2022-12-29 17:45 IST   |   Update On 2022-12-29 17:45:00 IST
  • நமது சுதந்திரத் தியாகிகளில் ஏறக்குறைய எல்லோருமே மிகச்சிறந்த ஆன்மிகவாதிகளாக வாழ்ந்திருக்கிறார்கள்.
  • ரகுபதி ராகவ ராஜாராம் போன்ற பாடல்களின் மூலம் மக்கள் மனத்தில் புதைந்திருந்த ஆன்மிக உணர்வுக்கு எழுச்சியூட்டினார்

நமது சுதந்திரத் தியாகிகளில் ஏறக்குறைய எல்லோருமே மிகச்சிறந்த ஆன்மிகவாதிகளாக வாழ்ந்திருக்கிறார்கள். மகாத்மா முதல் மகாகவி வரை இதற்கான எடுத்துக்காட்டுகள் இன்னும் பல.

தேசியம், தெய்வீகம் இரண்டையும் தம் இரு கண்களாகக் கொண்டிருந்த மகாத்மா, மக்களை ஒருங்கிணைப்பதற்கு அரசியல் மேடைகளில் ராமநாம பஜனை நிகழ்த்தினார் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

`ரகுபதி ராகவ ராஜாராம்` போன்ற பாடல்களின் மூலம் மக்கள் மனத்தில் புதைந்திருந்த ஆன்மிக உணர்வுக்கு எழுச்சியூட்டினார் அவர். அவ்விதம் மக்கள் சக்தியை ஒருங்கிணைத்தே அவர் சுதந்திரப் போராட்டத்தை வலிமைப் படுத்தினார்.

தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களில் மிக முக்கியமான ஒருவராகக் கருதப்படுபவர் வ.வே.சு. ஐயர். அவரும் மிகச் சிறந்த ஆன்மிகவாதி தான். கடவுளையே சரணடைந்து வாழ்ந்தவர் அவர்.

புதுச்சேரியில் அரவிந்தர் தியான நெறியில் ஈடுபட்டு முழுமையான ஆன்மிக வாழ்க்கை வாழ்ந்துவந்த போது அவரால் கவரப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் மகாகவி பாரதியும் வ.வே.சு. ஐயரும். இவ்விருவரும் அரவிந்தருடன் இணைந்து தியானம் பழகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது சிறைவாசம் முடிந்தபின், வடஇந்தியாவில் உத்தர்பாரா என்ற இடத்தில் பேசியபோது `சிறையில் தவத்தில் ஈடுபட்டபோது, நான் கண்ணனை நேரில் தரிசித்தேன்` என்று அறிவித்தார் அரவிந்தர். அதன் பின்னர்தான் தம்மை முழுமையான தெய்வீக வாழ்வில் ஈடுபடுத்திக் கொள்ளும் பொருட்டு அவர் புதுச்சேரி வந்து சேர்ந்தார்.

அரவிந்தரின் கடவுளைக் கண்டது குறித்த அறிவிப்பு அன்றைய நாளிதழ்களில் பிரசுரமாகியது. அதைப் படித்துத்தான் அரவிந்தரிடம் பெரும் ஈடுபாடு கொண்டார்கள் மகாகவி பாரதியும் வ.வே.சு. ஐயரும்.

புதுச்சேரிக்கு நிரந்தரமாக அரவிந்தர் வந்துசேர்ந்த பின் அவரோடு இணைந்து தியானம் பழகினார்கள் அவர்கள்.

*வரகநேரி வேங்கடேச சுப்ரமண்ய ஐயர் என்ற நீண்ட பெயரின் சுருக்கம்தான் வ.வே.சு. ஐயர் என்பது. வரகனேரி அவர் சொந்த ஊர். தாய் காமாட்சி அம்மையார். தந்தை வெங்கடேச ஐயர். 1881 ஏப்ரல் இரண்டாம் தேதி பிறந்தவர் வ.வே.சு. ஐயர்.

ஐயர் வாழ்வில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அச்சமே இல்லாத மாவீரராக அவர் விளங்கினார் என்பதைத் தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் அவை.

ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி சுடப் பயிற்சி கொடுத்தவர் வ.வே.சு. ஐயர்தான்.

*இங்கிலாந்தில் வ.வே.சு. ஐயர் தங்கியிருந்த காலம். லண்டனில் தம் நண்பர்களுக்கு தீபாவளி விருந்தளிக்க முடிவு செய்தார் அவர். அப்போது லண்டனில் இருந்த காந்தியையும் விருந்துக்கு அழைத்தார்.

காந்தியை அதிகம்பேர் நேரடியாகப் பார்த்திராத காலகட்டம் அது. விருந்துக்கு வந்த காந்தி, தம் உழைப்பும் விருந்தில் இருக்க வேண்டும் எனக் கருதினார்.

எனவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், அமைதியாக, எண்ணற்றோரின் அன்புக்குப் பாத்திரமான காந்தி, பாத்திரம் துலக்கினார் என்ற சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

லண்டனில் வாழ்ந்த காலகட்டத்தில், வ.வே.சு. ஐயரைப் பிடிக்க ஸ்காட்லாண்ட் ரகசியப் போலீஸ் முயல்வது ஐயருக்குத் தெரிந்தது. தகவலறிந்த மறுகணமே, கையில் ஒரு சூட்கேசோடு தாம் தங்கியிருந்த விடுதியை விட்டு வெளியேறினார் ஐயர்.

அவரை மறித்தது ரகசியப் போலீஸ். அவரைக் கைது செய்வதற்கான உத்தரவு அடங்கிய உறையைக் கையில் கொடுத்தது.

அதில் வ.வே.சு. ஐயர் என்ற பெயரைப் பார்த்து `அவர் உள்ளே இருக்கலாம். போய்ப் பாருங்கள். அது நானல்ல` என்றார் அவர்.

ரகசிய போலீஸ் அவர் கையில் இருந்த சூட்கேசில் `வி.வி.எஸ்` என எழுதப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி `அது வ.வே.சு. ஐயரின் சுருக்கம்தானே?` என்றது.

கடகடவெனச் சிரித்தார் ஐயர்.

`என் பெயர் வி. விக்ரம் சிங். அதன் சுருக்கம் இது!` என கம்பீரமாகச் சொல்லிவிட்டு நிதானமாக வெளியேறினார். பிறகு கப்பலில் தப்பிச் சென்றுவிட்டார். காவல் துறையினரால் அவரைக் கைதுசெய்ய இயலவில்லை.

வ.வே.சு. ஐயர் லண்டனிலிருந்து பாரீஸ் போனார். பின் பிரஞ்சு அரசு நடந்துகொண்டிருந்த புதுச்சேரிக்கு வந்துசேர்ந்தார்.

ஸ்காட்லாண்ட் ரகசியப் போலீசுக்குத் தாம் இருக்கும் இடத்தைத் தெரிவித்து, `இது பிரஞ்ச் ஆட்சி நடைபெறும் இடம், இனிமேல் அவரைப் பிடிக்க முடியாது, வீணாய்த் தேடி நேர விரயம் செய்ய வேண்டாம்` என அன்போடு தந்தியடித்தார்!

*வ.வே.சு. ஐயர் ஒரு சிறந்த இலக்கியவாதி. தமிழின் பழைய இலக்கியங்களில் தோய்ந்தவர். நவீன இலக்கியத்திற்கும் குறிப்பிடத்தக்க அளவு பங்களித்தவர்.

தமிழின் முன்னோடிச் சிறுகதைகளாகச் சில படைப்புகள் சொல்லப்படுகின்றன. பாரதியாரின் `ஆறில் ஒரு பங்கு` அப்படிப்பட்ட கதை. அதுபோலவே வ.வே.சு. ஐயர் எழுதிய `குளத்தங்கரை அரசமரம்` கதையும் தமிழின் தற்கால இலக்கியப் பரப்பில் தொடக்க காலத்தில் படைக்கப்பட்ட முன்னோடிச் சிறுகதை தான்.

அந்தக் கதையின் உத்திக்காக அது பெரிதும் பாராட்டப் படுகிறது. ஓர் அரசமரமே பேசுவதுபோன்ற உத்தியில் எழுதப்பட்டுள்ள கதை அது. தன் கீழ் நடக்கும் சம்பவங்களை அரச மரம் கூர்ந்து கவனித்து நமக்குக் கதையாகச் சொல்கிறது.

தமிழின் தொடக்க காலக் கதையே உத்தி வகையில் மிகச் சிறப்பானதாக அமைந்துவிட்டது குறித்து விமர்சகர்கள் வியக்கிறார்கள்.

*`மங்கையர்க்கரசியின் காதல், சந்திர குப்த சக்கரவர்த்தியின் சரித்திரம்` போன்ற பல நூல்களின் ஆசிரியர் வ.வே.சு. ஐயர். கம்பராமாயணம் பாலகாண்டத்திற்கு உரை எழுதியிருக்கிறார்.

தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் அபாரப் புலமை பெற்றிருந்தார் அவர். `கம்பராமாயண ஆராய்ச்சி` என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதினார். திருக்குறளையும் சங்க இலக்கிய நூலான குறுந்தொகையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

*சேரன்மாதேவியில் குருகுலக் கல்விக்கு ஏற்பாடு செய்தார் ஐயர். `பரத்வாஜர் ஆசிரமம்` எனத் தம் கல்வி நிலையத்திற்குப் பெயரிட்டார்.

அவருக்கு சமபந்தி போஜனம் முதலிய சீர்திருத்தங்களில் நாட்டமிருந்தது. அவரே பல இடங்களில் சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்டவர்தான்.

ஆனாலும் தாம் நடத்திய குருகுலத்தில் முழுமையாக அந்தச் சீர்திருத்தத்தை அவரால் நடைமுறைப்படுத்த இயலவில்லை. தங்கள் பிள்ளைகளை அங்கு சேர்த்த பெற்றோர் சிலருக்கு அதில் விருப்பமில்லை.

குருகுலத்தில் சமபந்தி போஜனம் அனுசரிக்கப் படாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. `காலப் போக்கில் அது இயல்பாகும், இப்போதே அப்படிச் செய்தால் பல மாணவர்கள் குருகுலத்தில் சேர மாட்டார்கள்` என அதற்கு அவர் காரணம் சொன்னார் ஐயர்.

அந்தக் காரணத்தைப் பல அரசியல் பிரமுகர்கள் ஏற்கவில்லை. எனவே அதுதொடர்பான விமர்சனங்களை வ.வே.சு. ஐயர் எதிர்கொள்ளத்தான் வேண்டியிருந்தது.

*வ.வே.சு. ஐயரின் மனைவி பெயர் பாக்கியலட்சுமி. அவரின் அத்தை மகள் தான் அவள். வ.வே.சு. ஐயருக்கு சுபத்ரா என்ற ஒரு பெண் குழந்தை உண்டு.

ஐயர் தம் 44 ஆம் வயதில் 3.7.1925 ஆம் தேதியன்று தம் மகளான எட்டு வயதுச் சிறுமி சுபத்ராவோடு பாபநாசம் அருவியில் குளிக்கச் சென்றார். அங்கு குரங்குகளின் நடமாட்டம் அதிகம். எனவே மாற்றுத் துணியை யாரிடம் பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்லிக் கொடுப்பது எனச் சுற்றுமுற்றும் நோட்டமிட்டார்.

அப்போது ஆன்மிக நாட்டமுள்ள ஓர் இளைஞன் அருவி அருகில் தியானத்தில் ஆழ்ந்திருந்தான். அவனிடம் மாற்றுத் துணிகளை வைத்திருக்கச் சொல்லிக் கொடுத்துவிட்டு அருவியில் குளிக்கப் போனார்.

சிறுமி சுபத்ரா உற்சாகத்தோடு குதித்துக்கொண்டே போனாள். அணையும் விளக்கின் உற்சாகம் அது என்பதை வ.வே.சு. ஐயர் புரிந்து கொள்ளவில்லை. பாசியில் வழுக்கி அவள் சடாரென அருவியில் அவர் கண்முன்னே விழுந்தாள்.

அருவியில் விழுந்தவளைக் காப்பாற்ற இயலுமா? இயலாது என வ.வே.சு. ஐயரின் அறிவுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அவரின் உணர்வுக்குத் தெரியவில்லை.

பாசியில் வழுக்கி விழுந்த மகளைக் காப்பாற்றும் எண்ணத்தில் பாசத்தில் வழுக்கி வ.வே.சு. ஐயர் அருவியில் குதித்தார். அவ்வளவுதான். அவர்கள் இருவருமே ஒரே கணத்தில் மாண்டு போனார்கள்.

அதைப் பார்த்துக்கொண்டே இருந்தான் மாற்றுத் துணிகளைக் கையில் வைத்திருந்த இளைஞன். `அடடா, ஒரு கணம் முன் நம்முன் இருந்தவர்கள் இப்போது இல்லாமல் போனார்களே` என அவன் மனம் துயரம் நிறைந்த தீவிர சிந்தனையில் ஆழ்ந்தது.

`உடலே ஒரு மாற்றுத் துணிதான்` என்ற உண்மையையும் `ஆன்மா உரிய நேரம் வந்ததும் உடல் சட்டையைத் துறக்கிறது` என்ற உண்மையையும் அவன் ஆழ்மனம் உணர்ந்துகொண்டது.

அந்த இளைஞன் மனம் துறவு நெறியில் ஈடுபட்டது. திருப்பராய்த்துறையில் வாழ்ந்த சுவாமி சித்பவானந்தராக மலர்ந்தவர் அந்த இளைஞன் தான். பிரபல அரசியல் பிரமுகர் சி. சுப்பிரமணியம் அவருடைய சிற்றப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

வ.வே.சு. ஐயர் உடல் மூன்றுநாள் கழித்துக் கண்டெடுக்கப்பட்டது. சுபத்ரா உடல் ஒரு கல்லிடுக்கில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அவற்றிற்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

மாபெரும் ஆன்மிகவாதியான வ.வே.சு. ஐயர், தன் மரணத்தின் மூலம் இன்னொரு ஆன்மீகவாதியான சித்பவானந்தர் துறவியாக உருவாகக் காரணமாயிருந்தார் என்பதுதான் வரலாறு தெரிவிக்கும் விந்தையான செய்தி.

வ.வே.சு. ஐயர் இறக்கும்போது அவர் வயது நாற்பத்து நான்குதான். தான் வாழ்ந்த நாற்பத்து நான்கே ஆண்டுகளுக்குள் மாபெரும் சாதனைகளைப் புரிந்த மகான் அவர். வ.வே.சு. ஐயரின் வரலாற்றைச் சிந்திப்பதன் மூலம், உயர்ந்த லட்சிய வாழ்வு வாழும் உத்வேகத்தை நாம் பெற முடியும்.

தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News