- அன்றைய தினம் மகா பெரியவாளைத் தரிசிக்க டாக்டர் கல்யாணராமன் தற்செயலாக வந்திருந்தார்.
- கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
'யார் யாருக்கு எப்போது என்ன உபத்திரவம் வரும் என்று சொல்ல முடியாது.
ஒருவர் நன்றாகவே இருப்பார். பேச்சு, நடை, செயல்பாடு எல்லாமே இயல்பாக இருக்கும். ஆனால், திடீரென்று ஏதேனும் உடல்நலக் கோளாறு வந்து படுத்து விடுவார். யாருமே எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். உறவுகளும், நட்புகளும், அக்கம்பக்கத்தினர்களும் அதிர்ந்து போவார்கள்.
இது போன்ற சம்பவங்களை இன்றைய வாழ்க்கையில் நாம் அதிகம் பார்க்கிறோம் அல்லவா?
இதெல்லாம் விதி. தலையெழுத்து. விரும்பி அழைக்காமல் என்னென்ன நம்மைத் தேடி வருகிறதோ, அவற்றை எல்லாம் அனுபவித்தே ஆக வேண்டும். லாபம் என்றால், சந்தோஷப்படலாம்.நஷ்டம் என்றால், சங்கடப்படலாம். அவ்வளவே!
ஆனால், தேடி வருகிற எதில் இருந்தும் எவராலும் தப்பிக்க முடியாது. நினைவில் கொள்ளுங்கள்!
இது மனிதர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. எத்தகைய மகானாக இருந்தாலும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், அவர்களுடைய தபோ பலத்தால் அதன் வேகம், வீரியம் இவை வேண்டுமானால் குறையலாம். முற்றிலும் அகலாது.
அகில உலகத்தையே காத்தருளும் சர்வேஸ்வரனையே சனி பகவான் ஒரு முறை பிடித்துக் கொண்டதாக செவிவழிக் கதைகூட உண்டு. அப்படி என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?
ஒரு முறை மகா பெரியவாளுக்குக் கழுத்து வலி.
இப்படியும் அப்படியும் திரும்பி பக்தர்கள் பக்கம் பார்த்துப் பேசுவதற்குக் கொஞ்சம் கஷ்டப்பட்டார். 'பெரியவாளுக்குக் கழுத்து வலியா? நமக்கு ஒரு வலி, துன்பம் என்றால் அவரிடம் போகிறோம். அவருக்கே இப்படியா? நடமாடும் தெய்வம் ஆயிற்றே' என்று திகைக்க வேண்டாம்.
மகான் அப்பய்ய தீட்சிதர் வயிற்றில் கட்டி வந்து வலியால் அவஸ்தைப்பட்டார். பகவான் ரமண மகரிஷி தன் கடைசி காலத்தில் தீரா நோயில் சிக்கினார். மகான்களுக்கும் நோய் வரும்.
நோய் என்பது கர்ம வினை.
மனிதன் அனுபவித்துத் தீர்க்க வேண்டிய கர்ம வினைகளை எப்படித் தீர்ப்பது?
அதனால்தான் வியாதிகள் உரிய வேளையில் தொற்றிக் கொள்கின்றன. பெரியவாளுக்குக் கழுத்து வலி என்பது சாதாரணம்தான். என்ன ஒன்று... இப்படியும் அப்படியும் திரும்புவதற்குக் கொஞ்சம் கஷ்டப்பட்டார். அதற்கு மேல் அவருக்கு தொந்தரவு எதுவும் இல்லை.
பக்தர்களுக்குப் பிரசாதம் தருகிறபோதும், வருகின்றவர்களிடம் உரையாடுகிறபோதும் கொஞ்சம் சிரமப்பட்டார். ஆனாலும், யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.
தனக்கு வந்த கழுத்து வலி பற்றிப் பெரியவா ஏதும் பொருட்படுத்தவில்லை. என்றாலும், அவருக்குக் கைங்கர்யம் செய்கிற சிப்பந்திகள் வெகுவாகவே துவண்டு போனார்கள்.
வீட்டிலே ஒரு குழந்தைக்கு ஏதாவது ஒன்று என்றால், அங்குள்ளோர் பொறுத்துக் கொள்ள முடியுமா? 'அந்தக் குழந்தைக்கு வந்திருக்கிற உபாதையை எனக்குக் கொடுப்பா கடவுளே...' என்று தாயும் தந்தையும் இறைவனிடம் வேண்டுவார்கள்.
அதுபோல் பெரியவா படுகிற சிறு சிறு அவஸ்தைகளைப் பார்த்து கைங்கர்யம் செய்பவர்கள் வேதனைப்பட்டார்கள். 'பெரியவாளுக்கு வந்திருக்கிற இந்த அவஸ்தை தங்களுக்கு வந்திருக்கலாமே...' என்றும் நினைத்தார்கள்.
கழுத்து வலிக்கு எந்த மாத்திரை, மருந்து கொடுத்தாலும் பெரியவா அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. மறுத்து விடுவார்.
காரணம் - 'எந்த வியாதி வந்தாலும் அது கர்மா நமக்குக் கொடுப்பது. கர்மா எதைக் கொடுத்தாலும், அதை அனுபவித்துக் கரைக்க வேண்டும்' என்பார் பெரியவா.
ஊருக்கும் உலகுக்கும் உபதேசம் செய்கிறவர், தனக்கு ஒரு நீதி என்று இருப்பாரா?
எனவே, கழுத்து வலி உபாதையுடன் இருந்து வந்தார்.
அன்றைய தினம் மகா பெரியவாளைத் தரிசிக்க டாக்டர் கல்யாணராமன் தற்செயலாக வந்திருந்தார்.
சிப்பந்திகளுக்கு ஒரே குஷி. காரணம் - பெரியவாளுக்கு மிகவும் பிடித்தவர் இவர். 'டாக்டர் கல்யாணராமனை விட்டுப் பெரியவாளைப் பரிசோதிக்கச் சொல்லலாம். டாக்டர் என்ன சொல்கிறாரோ அதைப் பெரியவா அப்படியே கேட்பார்' என்று உற்சாகமானார்கள் சிப்பந்திகள்.
அதன்படி, கல்யாணராமனை நெருங்கி விஷயத்தைச் சொன்னார்கள்.
'அப்படியா... கழுத்து வலியால் பெரியவா கஷ்டப்படுகிறாரா?' என்று வருத்தப்பட்டார்.
அடுத்த ஐந்து நிமிடங்களில் பெரியவாளிடம் போனார். நமஸ்காரம் செய்தார். பெரியவாளின் திருமுகத்தையே ஒரு சில நிமிடங்கள் உற்றுக் கவனித்தார். மகானின் கழுத்து செயல்பாடுகளை வைத்து அவருக்கு என்ன பிரச்சினை என்பதைத் தன் மருத்துவ அறிவால் தீர்மானித்தார் கல்யாணராமன்.
''என்னாச்சு...?'' - ஒரு புன்னகையுடன் டாக்டரைப் பார்த்துக் கேட்டார் பெரியவா.
''ஒண்ணும் இல்லே பெரியவா... கழுத்து வலியால நீங்க கொஞ்சம் சிரமப்படறதா கைங்கர்யம் பண்றவா சொன்னா...''
''ஓ... அவாள்லாம் உன்கிட்ட சொல்லிட்டாளா?'' - கேட்டு விட்டுப் புன்னகைத்தார் பெரியவா. ''இது ரொம்ப சாதாரணமான ஒண்ணுதான் பெரியவா. கழுத்துக்குச் சில உடற்பயிற்சிகள் கொடுத்தா போதும். எல்லாம் சரியாயிடும். அதை நான் உங்களுக்குச் சொல்லித் தரேன்'' என்றார். 'தன்வந்திரிக்கே சிகிச்சையா?' என்று தோன்றுகிறதல்லவா?
டாக்டரைப் பார்த்துப் புன்னகைத்தார் பெரியவா. 'சொல்லு... கேட்டுக்கறேன்' என்பது போல் இருந்தது அவரது பார்வை.
பெரியவாளை மீண்டும் நமஸ்கரித்தார்.
''பெரியவா... ஆறு விதமான எக்ஸர்சைஸ் செஞ்சா போதும் பெரியவா. உங்களுக்கு வந்த இந்த வலி சரியாயிடும். அந்த ஆறு எக்ஸர்சைசும் என்னன்னு உங்களுக்கு சொல்லிக் கொடுக்கறேன்'' என்றவர் ஒவ்வொன்றாக விவரித்தார்.
அவை என்னென்ன தெரியுமா? கழுத்தைக் கீழ் நோக்கிச் சாய்ப்பது; அடுத்து உடனே மேல் நோக்கி உயர்த்துவது. பக்கவாட்டில் இடப்பக்கம் திருப்புவது; அடுத்து வலப்பக்கம் திருப்புவது. தலையை இடப்பக்கம் சற்றே சாய்த்துக் கீழே குனிவது; அடுத்து வலப்பக்கம் சற்றே சாய்த்துக் கீழே குனிவது.
- இவைதான் அந்த ஆறு விதமான உடற்பயிற்சிகள்.
டாக்டர் கல்யாணராமன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு முன்னால் ஒரு மாணவனைப் போல் செய்ய ஆரம்பித்தார் பெரியவா. கல்யாணராமனுக்கும் சிப்பந்திகளுக்கும் ஏக சந்தோஷம்.
'இதை அப்பப்ப பண்ணிண்டு இருந்தா பெரியவாளுக்கு இருக்கிற கழுத்து வலி கூடிய சீக்கிரம் இருந்த இடம் தெரியாமல் ஓடியே போய் விடும்' என்று நிம்மதியானார்கள் சிப்பந்திகள். ஒரு மாதம் ஓடிற்று. அன்றைய தினம் பெரியவாளைத் தரிசிக்க டாக்டர் கல்யாணராமன் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார். பெரியவா திருச்சந்நிதிக்குச் சென்றார். பரமேஸ்வர சொரூபமாய் வீற்றிருக்கும் தெய்வத்துக்கு நமஸ்காரம் செய்தார். ஒரு புன்னகையுடன் ஆசி வழங்கினார் மகான். பிறகு பெரியவாளைப் பார்த்து பயபக்தியுடன் கேட்டார் கல்யாணராமன். ''பெரியவா... உங்களுக்குச் சொல்லிக் கொடுத்த அந்த ஆறு விதமான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யறேளா?''
அதற்கு, ''நீ சொல்லிக் கொடுத்ததை சிறிது நாட்கள் பண்ணிண்டு வந்தேன். பிறகு, அப்படியே நிறுத்திட்டேன்'' என்றார். ''என்ன காரணம் பெரியவா?'' - சற்று திகைப்புடன் கேட்டார் கல்யாணராமன். பெரியவா சிரித்துக் கொண்டே பதிலளித்தார்:
''இந்த பயிற்சியை ஒரு நாள்ல பல தடவை பண்ணுமாறு நீ சொல்லிட்டுப் போனே... அதன்படி நானும் செய்ய ஆரம்பிச்சேன். பக்தாள்லாம் எனக்கு எதிர்ல உக்காந்திண்டு இருக்கறப்பவும் விடாம நான்பாட்டுக்குச் செஞ்சேன். இதனால என்ன ஆச்சுன்னா, நான் எப்படிக் கழுத்தைத் திருப்பறேனோ, அதுபோல அவாள்லாம் செய்ய ஆரம்பிச்சா. 'இது என்னடா வம்பாப் போச்சு... கழுத்து வலி எனக்குத்தானே... வலி இல்லாத இவாள்லாம் என்னைப் பாத்துக் கழுத்தை இப்படியும் அப்படியும் திருப்ப ஆரம்பிச்சா, வலியே இல்லாத அவாளுக்கும் கழுத்து வலிவந்துடுமோ'னு கவலைப்பட்டு எல்லாத்தையும் நிறுத்திட்டேன்.''
- சொல்லி முடித்து விட்டு மீண்டும் சிரித்தார் பெரியவா.
''பயப்படாதே... காமாட்சி கிருபையினால எனக்கு எல்லாம் சரியாயிடுத்து'' என்று கழுத்து வலி பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் பெரியவா. தனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கி, மகா பெரியவா திருச்சந்நிதிக்கு ஒரு நமஸ்காரம் செய்து பிரசாதம் வாங்கிக் கொண்டார் டாக்டர் கல்யாணராமன்.
தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை... தன்னிடம் வருகிறவர்கள் கஷ்டப்படக் கூடாது என்று நினைப்பவர்கள் மகான்கள்!
(தொடரும்)
swami1964@gmail.com