சிறப்புக் கட்டுரைகள்

விசாலாட்சியின் கருணைப் பார்வை

Published On 2022-11-18 16:26 IST   |   Update On 2022-11-18 16:26:00 IST
  • அம்பிகையின் மகாகாளி அம்ச வடிவங்களில் ஒன்று, அன்னை விசாலாட்சியின் அருள் வடிவம் ஆகும்.
  • பெண் குழந்தைகளுக்கு விசாலாட்சி என்று பெயர் சூட்டும் வழக்கம் உண்டு.

அம்பிகையின் மகாகாளி அம்ச வடிவங்களில் ஒன்று, அன்னை விசாலாட்சியின் அருள் வடிவம் ஆகும். அம்பிகையின் அருள் வெளிப்பாடுகளாக காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி என்று முப்பெரும் அன்னையரை வணங்குவது வழக்கம்.

காசியில்தான் விசாலாட்சி பிரதானம் என்பதுபோல் இருந்தாலும், அநேகமாகத் தென்னகத்தின் ஒவ்வொரு ஊரிலும் விசாலாட்சி எழுந்தருளியிருக்கிறாள். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், ஊருக்கு ஊர், கிராமத்திற்கு கிராமம், பெண் குழந்தைகளுக்கு விசாலாட்சி என்று பெயர் சூட்டும் வழக்கம் உண்டு.

பாரத நாடு முழுமையும் சக்தி பூமியே! இதைப் பற்றி சுவாரசியமான கதை ஒன்று உண்டு. சக்தி தேவியான பரதேவதை, பூத உடலோடு அவதாரம் எடுத்தபோது, அந்த உடலின் பாகங்களை இந்த பூமியோடு சேரச் செய்தாள்.

தட்ச பிரஜாபதிக்கு வினோதமான ஆசை ஒன்று எழுந்தது. என்ன தெரியுமா? சிவபெருமான் தனக்கு மருமகன் ஆகவேண்டும். வேண்டியதை வேண்டியபடி கொடுப்பவரல்லவா பரமனார்! சக்தியை நோக்கினார்; பார்வையைப் புரிந்துகொண்ட அன்னை, தட்சனுடைய மகளாக வடிவம் கொண்டாள். தக்க பருவத்தில் சிவனை மணந்தாள்.

சிவனார் தனக்கு மருமகனாக வேண்டும் என்று தட்சன் ஆசைப்பட்டதற்குக் காரணம் பக்தியன்று. எல்லோரும் பணிந்து வணங்கும் பரமனார், தன்னைப் பணிந்து வணங்குவார் என்னும் ஆணவமே அடிப்படை. இப்போது, மகளுக்கும் சிவனுக்கும் மணமாகிவிட்ட நிலையில் தட்சனுக்கு ஆணவம் தலைக்கேறியது.

இதற்கிடையில், யாகம் ஒன்று நடத்தத் தலைப்பட்டான் தட்சன். சிவனை உதாசீனப்படுத்தினான். கணவன் தடுத்தும் கேளாமல் யாகத்திற்குச் சென்றாள். அங்கு அவமானப்படுத்தப்பட்டாள்.

தன்னுடைய தவறையும் நிலையையும் உணர்ந்த தாட்சாயணி, ஒரு தீர்மானத்திற்கு வந்தாள். 'இந்தப் பிறவியே வேண்டாம்' என்று முடிவெடுத்தாள். தட்சன் மகள் என்னும் பிறவி, அதாவது கொடியவனான தட்சன் மகள் என்னும் பிறவிதானே நீக்குதற்குரியது! ஆகவே, அப்பிறவியை நீக்கிக் கொள்வது என்று தீர்மானித்தாள். நெருப்புக்குள் பாய்ந்தாள். சக்திதேவிதானே, ஆகவே தாட்சாயணியின் ஆன்மா, பரமனோடு இணைந்தது; உடல் மட்டும் நெருப்பில் எரிந்தது.

மனைவிக்கு நேர்ந்த அவமானத்தையும் கொடுமையையும் கேள்வியுற்று, கோபாவேசமாக யாகசாலைக்கு வந்தார் சிவனார். அக்னியில் எரிந்துகொண்டிருந்த மனைவியின் உடலை அள்ளி எடுத்தார். தோளில் அதைப் போட்டுக் கொண்டு ஆத்திரம் தாங்காமல் அங்கும் இங்கும் அலைந்தார்.

இறைவனாரின் சினத்தை எவ்வாறு தணிப்பது? திருமால் வழி தேடினார். தாட்சாயணி என்னும் குறிப்பிட்ட உடல் தனியாக இருந்தால்தானே ஆத்திரம்? உடல் இல்லையென்றால், சக்தியும் சிவனும் ஒன்று என்னும் உணர்வுக்குள் சிவனார் ஒன்றிவிடமாட்டாரா! இவ்வாறு கணக்குப் போட்ட திருமால், பரமனாருக்குப் பின்னாலேயே சென்று, அம்பிகையின் உடலைத் தம்முடைய திருவாழிச் சக்கரத்தால் வெட்டத் தொடங்கினார். வெட்ட வெட்ட, உடலின் பாகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடமாக வீழ, அவ்வாறு வீழ்ந்த இடங்களே சக்தி பீடங்கள் ஆயின. சக்தி பீடங்களின் எண்ணிக்கையைப் பற்றி அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உண்டென்றாலும், அம்பிகையின் அருள் பீடங்கள் அவை என்பதில் ஐயமில்லை.

அம்பிகையின் கர்ண குண்டலங்கள், அதாவது அம்பாளின் திருச்செவி அணிகலன்கள் விழுந்த இடமே காசி என்பதாக ஐதீகம்.

விசாலாட்சி என்னும் திருநாமம், அகன்ற விழி என்றுதானே பொருள்படும், செவியணிகளுக்கும் விழிக்கும் எப்படித் தொடர்பு என்கிறீர்களா? தன்னுடைய அகன்ற விழிகளால் அகிலமெல்லாம் நோக்கி அருள் தருகிற அன்னை, தன்னுடைய செவியணிகளை விழச்செய்த இடத்திற்குத் தனிச் சிறப்பொன்றையும் அளித்திருக்கிறாள்.

காசியில் யாரேனும் உயிர் நீத்தால், என்ன நடக்கும் என்பதைப் பற்றிய குறிப்பொன்று உண்டு. இந்தத் தலத்தில் இறந்துபோகிற உயிரை, அம்பாள் தன்னுடைய மடியில் கிடத்திக் கொண்டு சாமரம் வீசுகிறாள்; சிவனாரோ, காதுகளில் பஞ்சாட்சர மந்திரத்தை (நமசிவாய) ஓதுகிறார். இதனால், அந்த உயிர் முக்தி பெறுகிறது. செவியின் வழியாக நல்ல கதியை அம்பிகை தருகிறாள்; தரச் செய்கிறாள்.

நின்ற திருக்கோலம் கொள்ளும்போது, வலது கரத்தில் தாமரை மலரை ஏந்திக் கொண்டு, இடது கரத்தை ஒய்யாரமாகத் தொங்கவிட்டபடி நிற்பாள். அமர்ந்த திருக்கோலம் என்றால், நான்கு கரங்கள் கொண்டிருப்பாள். வலது மேல்கரத்தில் உடுக்கை, வலது கீழ்க்கரத்தில் வாள், இடது மேல்கரத்தில் திரிசூலம், இடது கீழ்க்கரத்தில் விளக்கு ஆகியவற்றோடு, நாகம் குடைபிடிக்க, வசீகரப் புன்னகையோடு திகழ்வாள்.

இவ்வளவு என்ன? உலக நன்மைக்காக அவ்வப்போது பரமனும் அம்பிகையும் விஜயம் செய்கிறார்கள் இல்லையா? பூமிக்கு வரும்போது எந்தக் கோலத்தில் வருகின்றனர் தெரியுமா? விசுவநாதரும் விசாலாட்சியுமாகத்தான் வருகிறார்கள். தன்னுடைய அகன்ற விழிகளால் மூலை முடுக்கெல்லாம் துழாவிப் பார்த்து, எங்கெங்கு எந்தெந்தக் குழந்தைக்கு என்னென்ன உதவி வேண்டும் என்று அம்பிகை தேடுகிறாள். ஐயனை விசுவத்திற்கே நாயகர் ஆக்குகிறாள்.

விசாலாட்சி என்னும் இவளின் திருநாமமே இவளின் பெருமையை உணர்த்தும். விசாலமான விழிகள் கொண்டவள்; அதாவது, அகன்ற விழிகளும், அகலமான பார்வையும் கொண்டவள். ஒரு தாயின் பார்வை, எப்போதுமே அகலமாக இருப்பதற்கு முற்படும். என்ன காரணம்?

உறவுக்காரர்கள் இல்லத்திற்குப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அம்மா என்ன செய்வாள் தெரியுமா? பிறரோடு பேசிக் கொண்டிருந்தாலும், வேறு ஏதாவது கைக் காரியமாக இருந்தாலும், முக்கியமான பணியாக இருந்தாலும், தன்னுடைய குழந்தை எங்கே இருக்கிறது, எங்கே விளையாடுகிறது என்று கவனித்துக் கொண்டே இருப்பாள்; அதாவது, 'ஒரு கண்' வைத்துக் கொண்டே இருப்பாள். இதுதான், தாயின் தன்மை; தாயின் அக்கறை; தாயின் கவனம்; தாய்மையின் தனிச் சிறப்பு.

பராசக்தி தாசராகத் திகழ்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார், ருஷ்ய நாட்டில் மக்கள் புரட்சி வெடித்தபோது, அதனை வாழ்த்திப் பாடினார். – ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி! ஆனால், இப்புரட்சிக்கான காரணம் என்று எதை அடையாளப்படுத்தினார் என்பதுதான் முக்கியம். மாகாளி பராசக்தி ருஷ்ய நாட்டினில் கடைக்கண் வைத்தாள்; ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி! எங்கேயோ இருக்கும் நாட்டின்மீதும், அதன் மக்களின்மீதும் அம்பாளின் பார்வையா? அம்பாள்தான், அகிலமெல்லாம், அண்டமெல்லாம் விரவியிருக்கிறாளே, எனவே, அண்ட பகிரண்டம் முழுமையும் அம்பிகைப் பிரதேசம்தான். எங்கெல்லாம் தன்னுடைய குழந்தைகளுக்கு உதவியும் கருணையும் தேவைப்படுகின்றனவோ, அங்கெல்லாம் தன்னுடைய கருணை விழிகளைக் காட்டுகிறாள்; கருணைப் பார்வையை நீட்டுகிறாள்.

விரிந்த பிரபஞ்சம் முழுதிலும், தன்னுடைய அன்புக் குழந்தைகளுக்காக அகன்ற பார்வையைச் செலுத்துபவளே அன்னை விசாலாட்சி.

தொடர்புக்கு:- sesh2525@gmail.com

Tags:    

Similar News