சிறப்புக் கட்டுரைகள்

மன்னிப்பு என்னும் மகத்துவம்!

Published On 2025-09-14 17:30 IST   |   Update On 2025-09-14 17:30:00 IST
  • மன்னிப்பு என்பது ஒருவர் இழைத்த தீமையை முழுமையாக மறந்து விடுவது என்பதில்லை.
  • மன்னிப்புக் கேட்பதும் மன்னித்து விடுவதும் கோழைத்தனமான செயல் என்று சிலர் கருதுகிறார்கள்;

மன்னித்தல் என்னும் மகத்துவம் வாய்ந்த குணத்தைப்பற்றி அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கும் அன்பு வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

'தவறு செய்வது மனித இயல்பு! அதனை மன்னிப்பது தெய்வ இயல்பு!' என்பது சான்றோர் வழக்கு. இதையே வேறுவிதமாகக் குறிப்பிட்டால், 'செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்பது மனித குணம்!; அதனைப் பெருந்தன்மையோடு மன்னித்துவிடுவது மாமனிதனின் குணம்!". தவறு செய்தவர்கள், தண்டனைக்குரிய குற்றமே இழைத்தவர்கள் என்றாலும் அதனை மன்னித்துத், தண்டனைகள் கிடைக்காமல், அவர்கள் பிழைத்துப் போகட்டும் என்று விட்டு வைப்பதற்குப் பெரிய மனது தேவைப்படும்.

அன்றாட வாழ்வியலின் போக்கில் ஏற்படும் சிறுசிறு சறுக்கல்களும் வழுக்கல்களுமே தவறுகள் ஆகும்; இவை நேர்ந்துவிடாமல் வெகு கவனமாக நடத்தையில் அக்கறை காட்டுவதும், பிழைகள் இயல்புதான் என்றாலும், அவற்றையும் திருத்திக்கொள்வதற்கு எப்போதும் தயாராக இருப்பதும் மாண்புடைய மனித குணமாகும். சாலையில் நடந்து செல்லும்போது, பாதைகள் ஒரே சீரானவையாக இருப்பதில்லை; வளைவு நெளிவுகள் உண்டு; மேடு பள்ளங்கள் உண்டு; குண்டு குழிகள் உண்டு; கற்களும் முட்களும் உண்டு; இவற்றையெல்லாம் கவனத்தில் வைத்துத்தான் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

போதாக்குறைக்கு நாம் எடுத்து வைக்கும் அடிகளுக்கிடையேயும் வேறுபாடுகள் உண்டு; கவனக்குறைவால் தள்ளாட்டங்கள் உண்டு; தடுமாற்றங்களும் உண்டு. இவ்வளவு இடையூறுகளுக்கு மத்தியில் நாம் வெகு சரியாகப் பயணிப்பது என்பது இயல்பானது அல்ல. இதே பிரச்சனைகளோடு, எதிரும் புதிருமாய், குறுக்கும் நெடுக்குமாய் நம்மைப்போல் பலரும் பயணிக்க நேரிடும். இப்பயணத்தில் தவறுகள் ஏற்படாமல், விபத்துகளில் சிக்காமல் பயணிக்க முடியுமா?.

அதனால்தான் மனிதர்கள் எப்போதும் மன்னிப்புக் கேட்பதற்குத் தயாராய் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் முதலில் தம்மையறியாமல் தாம் செய்யும் தவறுகளுக்குத் தம்மிடமே மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்க வேண்டும். அடுத்து, நம்மால் அடுத்தவர்களுக்கு நேரிடும் இடையூறுகளுக்கும் நிபந்தனையற்ற முறையில் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, அடுத்தவரால் நமக்கு இடையூறு ஏற்படும் தருணங்களில், அவர்கள் மன்னிப்புக் கேட்க நேரிட்டால், அதனை முழுமனத்துடன் மன்னிக்கவும் கருணையோடு காத்திருக்க வேண்டும்.

மன்னிப்பு என்கிற மாபெரும் சக்தி, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற பகையுணர்வை, எதிர்மறைச் சிந்தனைகளை, வன்மத்தை, நான் என்னும் அகம்பாவத்தை வேரோடு அழித்து மனித நேயத்தை, அன்பை, கருணையை, அமைதியை அளவுகடந்த நிலையில் பரவச் செய்கிறது.

யார்? யாரை மன்னிப்பது? என்கிற அடிப்படையானதொரு கேள்வி எல்லார் மனதிலும் எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒரு குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற பெற்றோர், பிள்ளைகள், கணவன் மனைவி இவர்களெல்லாம் ஒருவருக்கொருவர் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதும், மன்னித்தேன் என்று மன்னிப்பு வழங்குவதும் தேவையற்ற செயல்கள்; அப்படி ஒருவருக்கொருவர் மன்னித்தலில் தான் மகிழமுடியும் என்றால் அதிலும் தவறில்லை என்றே கூறலாம்.

ஆனால் பிடிவாதமாக 'மன்னிப்புக் கேட்டால்தான் உண்டு!', 'மன்னித்தால் தான் உண்டு!' என்று கணவன் மனைவிக்கு இடையேயோ, பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையேயோ ஆணவப் போட்டிகள் அரங்கேறிவிடக் கூடாது. இதையே நண்பர்களிடமோ, சக அலுவலர்களிடமோ, முன்பின் அறிமுகமில்லாத வெளியாட்களிடமோ மன்னிப்புக் கேட்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டால், நிச்சயம் மன்னிப்புக் கேட்கவோ அல்லது மன்னிக்கவோ தயங்கிடக் கூடாது.

சுந்தர ஆவுடையப்பன்


 

மன்னிப்புக் கேட்பவர் உயர்ந்தவர் என்றோ, மன்னிக்கிறவர் உயர்ந்தவர் என்றோ ஆணவப்போக்கில் ஒரு முடிவுக்குத் திடீரென வந்துவிடவும் கூடாது. உண்மையில் காணப் புகுந்தால், அவர்களின் பணிவு மற்றும் விட்டுக் கொடுக்கும் தன்மைகளின் அடிப்படையில், இருவருமே உயர்ந்து நிற்கிறவர்களாகவே திகழ்கிறார்கள். இரண்டுபக்கத்தில் உள்ளவர்களுக்கும் மன்னிப்பின் மாண்பு உணர்ந்து கொள்ளப்பட்டதாகவே திகழ வேண்டும்.

ஒரு நாட்டின் அரசர் அந்த நாட்டின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்த்துக் கொண்டிருந்தார். அந்த நாட்டின் அரண்மனைச் சேவகன் ஒருவன் பத்தாண்டுகளுக்குமுன் பத்தாயிரம் பொற்காசுகள் அரசாங்கத்திடமிருந்து கடனாகப் பெற்றிருந்ததையும், அதில் இன்று வரை அசலாகவோ வட்டியாகவோ ஒருகாசுகூடச் செலுத்தவில்லை என்பதையும் தணிக்கையில் கண்டுபிடித்தார்.

உடனே அந்த அரண்மனைச் சேவகனைச் சபைக்கு அழைத்துவரச் செய்தார். "இன்று வரை நீ அரசாங்கத்திடமிருந்து வாங்கிய கடன்குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் இருந்ததற்கு என்ன முகாந்திரம்?" என்று அரசர் கேட்டார். "அரசே! நான் பிள்ளை குட்டிக்காரன்! மாதாமாதம் வாங்குகிற சம்பளம் குடும்பச் செலவிற்கே சரியாக இருக்கிறது!. இந்த அழகில் நான் கடனை அடைக்க எங்கே போவேன் எஜமான்?" என்று அழுது கண்ணீர் விட்டான்.

"அப்படியா? உனக்குப் பத்துநாள் அவகாசம் தருகிறேன்! வட்டியோடு கடன்தொகை பத்தாயிரத்தையும் கட்டிவிட வேண்டும். இல்லாவிட்டால், உன்னுடைய வீடு நிலங்கள், மற்றும் மனைவி பிள்ளைகள் அனைவரையும் ஏலம்விட்டுக், கிடைக்கிற பணத்தை அரசாங்கக் கஜானாவில் சேர்த்துவிடச் சொல்வேன் ஜாக்கிரதை!" என்று கறாராகப் பேசி எச்சரித்தார் ராஜா.

அவ்வளவுதான் நெடுஞ்சான் கிடையாக அரசன் அமர்ந்திருக்கும் சிம்மாசனம் நோக்கி விழுந்து விட்டான் அரண்மனைச் சேவகன். " அரசே!. என்னை முழுமையாக மன்னித்து விடுங்கள். உங்களின் பெரிய மனதில்தான் என்னுடைய சந்ததியே வாழவேண்டும்!. இந்த ஏழைக்கு மன்னிப்பு வழங்கி ஆதரியுங்கள் பிரபுவே!" என்று கதறினான்.

அரண்மனைச் சேவகனின் பரிதாப நிலையைப் பார்த்த அரசர் அவனை மன்னித்து, அவன் வாங்கிய முழுக்கடனையும் தள்ளுபடி செய்துவிட்டார். " உன்னை முழுமையாக மன்னித்துவிட்டேன்; கடனாக வாங்கிய பணத்தை நீ இனிமேல் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய அவசியமில்லை" என்று கூறி அரசவையிலிருந்து அவனை அனுப்பி வைத்தார்.

மகிழ்ச்சியோடு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த அரண்மனைச் சேவகன், தன்னிடம் பத்துப் பொற்காசுகளைக் கடனாக வாங்கி, ஓராண்டிற்கும் மேலாக வட்டியும் முதலும் கட்டாத ஒரு கடன்காரனை வழியில் பார்த்துவிட்டான். கடன்காரனோ, "ஐயா வயிற்றுக்கும் வாழ்க்கைக்குமே வருமானம் சரியாகப் போய்விடுகிறது; மன்னியுங்கள்! விரைவில் கட்டிவிடுகிறேன்!" என்று கெஞ்சிக்கேட்டான்.

ஆனால் அரண்மனைச் சேவகனோ கடன்காரனை மன்னிப்பதாக இல்லை; நேராக நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று, 'பத்துப் பொற்காசுகள் கடனை வட்டியோடு கட்டும் வரையில் கடன்காரன் சிறையில் இருக்க வேண்டும்!' என்று தண்டனையும் பெற்றுத் தந்துவிட்டான்.

அரண்மனைச் சேவகன், தன்னிடம் கடன் பெற்றவனுக்கு மன்னிப்பு வழங்காததோடு, தண்டனையையும் வாங்கித் தந்த செய்தி அரசரின் செவிகளுக்குச் சென்று சேர்ந்தது. மீண்டும் அரசவைக்கு அந்தச் சேவகனை அழைத்துவரச் செய்தார், "மன்னிப்பின் தரம் உணர்ந்தவர்களால் மட்டுமே மன்னிப்பை முழுமையாக அனுபவிப்பதற்கும் தகுதி உண்டு;

நான் உனக்கு நீ வாங்கிய பணம் பத்தாயிரம் பொற்காசுகளுக்கும் முழு மன்னிப்புக் கொடுத்து உன்னை நான் விடுவித்தேன்; ஆனால் நீயோ உன்னிடம் ஒரு ஏழை வாங்கிய வெறும் பத்துப் பொற்காசுகளுக்கு மன்னிப்பு வழங்காமல் சிறைத் தண்டனை பெற்றுத் தந்திருக்கிறாய். எனவே உனக்கு நான் வழங்கிய மன்னிப்பை முழுமையாக இப்போது ரத்து செய்கிறேன்; உடனடியாக நீ அரசாங்கத்திடம் கடனாகப் பெற்ற பத்தாயிரம் பொற்காசுகளை வட்டியும் முதலுமாகக் கட்ட வேண்டும்; இல்லையென்றால் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியது!" என்று உத்தரவிட்டார்.

மன்னிப்பு என்பது ஒருவர் இழைத்த தீமையை முழுமையாக மறந்து விடுவது என்பதில்லை; அத்தீமை காரணமாக மனத்தில் ஏற்பட்டுள்ள கசப்புணர்வையும், எதிர்மறைச் சிந்தனைகளையும் போக்கிக் கொள்ள முயற்சிப்பது. ஒருவர் அவசரமாக நகர்ந்து கொண்டிருக்கும் பேருந்தில் ஏறுகிறார்; வாசற்படியில் பெருங்கூட்டம்; காலைப் படிக்கட்டில் வைப்பதற்குப் பதிலாக, படிக்கட்டில் நின்று பயணித்துக் கொண்டிருக்கும் ஒருவரது காலில் வைத்துவிடுகிறார்; மிதிபட்ட பயணி கோபத்துடன், யாரது மடத்தனமாகச், செருப்புக்காலோடு என் காலை மிதிப்பது? என்று திட்டுகிறார்.

மிதித்த பயணியோ, எடுத்த எடுப்பிலேயே, "மன்னித்து விடுங்கள்" என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டே பேச்சைத் தொடங்குகிறார்," தெரியாமல் மிதித்துவிட்டேன்! மன்னியுங்கள்!" என்று கெஞ்சிக் கேட்கிறார். தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் வலி ஒன்றுதான். வருகிற கோபம் மிதிபட்டவருக்கு வந்துதான் தீரும்.

ஆனால் தெரிந்து மிதித்தால் அது தண்டனைக்குரிய குற்றம்; தெரியாமல் மிதித்ததால் மன்னித்து, விட்டு விடுவதற்கு இடமிருக்கிறது. மிதிபட்டவர் பதிலுக்கு, மிதித்தவரை அதேபோல மிதித்தால்தான் கோபம் ஆறும்; ஆனாலும் வன்மம் பெருகும். பிரச்சனையைத் தற்போதைக்கு முடித்து வைப்பதற்கு ஒரு மன்னிப்புக் கேட்பது போதுமானது; பாதிக்கப் பட்டவரும் பெருந்தன்மையோடு மன்னித்து விடுவதும் அவரது பரந்த மனத்தை எடுத்துரைப்பது ஆகும்.

மன்னிப்புக் கேட்பதும் மன்னித்து விடுவதும் கோழைத்தனமான செயல் என்று சிலர் கருதுகிறார்கள்; உண்மையில் மன்னிப்பதற்குப் பெரும் தைரியமும் வீரமும் தேவைப்படும். மனிதர் இழைக்கும் குற்றங்களிலேயே பெருங்குற்றம் கொலைக்குற்றம் ஆகும். அதனால்தான் அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டனையாகிய மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ வழங்கப் படுகிறது.

"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்

பைங்கூழ்

களை கட்டதனொடு நேர்"

எனும் குறளில் வள்ளுவர் கொலைக் குற்றவாளிக்கு வழங்கப்பட வேண்டிய அரச நீதி பற்றிக் குறிப்பிடுகிறார்; நற்பயிர் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கிற களைபறித்து அகற்றலைப் போன்றவை இவ்வகைத் தண்டனைகள் என்கிறார். ஆனால் தனிமனித நிலையில், ஒருவருக்கொருவர் குற்றங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளுதலையே வள்ளுவப் பெருந்தகை வலியுறுத்துகிறார்.

"கொன்றன்ன இன்னா செயினும்

அவர்செய்த

ஒன்று நன்றுள்ளக் கெடும்"

ஒருவர், தற்போது கொலைக்கு நேரான குற்றங்களைச் செய்தாலும், அவர் இதற்குமுன் நமக்குச் செய்துள்ள ஒரே ஒரு நல்ல காரியத்தை நினைத்துப் பார்த்தால் போதும்; அவர்மீது வரும் கோபம் மாறிப்போவதற்கும்; மன்னித்து அருள்வதற்கும்! என்பது வள்ளுவம்.

ஒருவரை ஒருவர் மன்னித்து வாழுகிற வாழ்க்கை, ஒருவரை ஒருவர் சகித்து, பொறுத்து வாழ்கிற பொறுமைமிகு வாழ்க்கை ஆகும்; அதுவே மனச் சலனமற்ற அமைதி வாழ்விற்கும், கருணை வாழ்விற்கும் அன்பு வாழ்விற்கும் வழிகாட்டும். போரற்ற சமாதானம்; பொறாமை யற்ற சமூக வளம் அனைத்தும் மன்னிப்பு என்னும் மகத்துவத்தில் அடங்கியிருக்கிறது.

தொடர்புக்கு - 943190098

Tags:    

Similar News