சிறப்புக் கட்டுரைகள்

மலரும் நினைவுகள் மீனா: ஆஹா என்ன பொருத்தம் இந்த பொருத்தம்

Published On 2024-01-22 17:15 IST   |   Update On 2024-01-22 17:15:00 IST
  • மிகச்சிறந்த டைரக்டர். மிகப்பெரிய நடிகர் கூட்டணியில் இணைந்து நடிக்க கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியை கொடுத்தது.
  • இவ்வளவு பெரிய நடிகர் இவ்வளவு சாதாரணமாக இருக்கிறாரே என்று ரொம்பவும் ஆச்சரியப்பட்டு போனேன்.

எந்த நாட்டில் எந்த ஓட்டலில் என்ன வகை உணவு பிரபலம்? ருசி எப்படி என்று தெரிய வேண்டுமா? மோகன்லால் சாரை கேட்டால் போதும்...

கேட்பது மட்டுமல்ல... அவரோடு எந்த நாட்டுக்கு சென்றாலும் பிரபலமான உணவு வகைகளை சாப்பிட்டும் மகிழலாம். இது எனக்கு சிங்கப்பூரில் கிடைத்த அனுபவம்!

ரஜினி சாருடன் நான் நடித்த முத்து ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த தருணம். மலையாள பட தயாரிப்பாளர் ஒருவர் என்னை அணுகி மலையாளத்தில் 'வர்ணபகிட்டு' என்ற படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு கேட்டார்.

ஹீரோ யார்...? என்றேன்.

மோகன்லால்...! என்றார்கள்.

டைரக்டர்?

ஐ.வி.சசி! என்றார்கள்.

சூப்பர். கதையை சொல்லுங்கள் பார்ப்போம் என்றேன்.

கதையை சொல்ல தொடங்கினார். அவர் சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டிருந்தேன். கதையும் பிடித்து இருந்தது. ஓ.கே. சொல்லிவிட்டேன்.

மிகச்சிறந்த டைரக்டர். மிகப்பெரிய நடிகர் கூட்டணியில் இணைந்து நடிக்க கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியை கொடுத்தது.

அதுமட்டுமல்ல. இந்த படத்தில் நான் நடிக்க டபுள் ஓ.கே. சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

நான் ஹீரோயினியாக நடித்த அந்த காலக்கட்டத்தில் காஸ்ட்யூம் என்பது சேலை, பாவாடை-தாவணி, கச்சம் ஆகியவைதான். எனக்கு அந்த வயதில் மாடர்ன் காஸ்ட்யூமில் நடிக்க ஆசை இருந்தது. ஆனால் எந்த படத்திலும் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனது.

ஆனால் வண்ண பகிட்டு படத்தில் காஸ்ட்யூம் மாடர்ன் டிரெஸ் என்றதும் 'சூப்பர்' என்று மனதுக்குள் ஒரே கொண்டாட்டமாக இருந்தது.

அதன்பிறகு எப்போது ஷூட்டிங் என்ற எதிர்பார்ப்புதான் இருந்தது.

ஷூட்டிங் சிங்கப்பூர் என்றார்கள். அதை கேட்டதும் வாவ்... சிங்கப்பூரா? என்ற சந்தோசம் வேறு. அப்போதுதான் முதல்முறையாக சிங்கப்பூர் சென்றேன்.

மலையாளத்தில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் மோகன்லால். அப்படிப்பட்ட பெரிய நடிகருடன் நடிக்கப் போகிறோம் என்ற எண்ணம் சிங்கப்பூர் போகும் வரை இருந்தது. ஆனால் அங்கு சென்று ஷூட்டிங் தொடங்கியதும் அந்த எண்ணமும் போய்விட்டது.

அதற்கு காரணமும் மோகன்லால் சார் தான்.

படக்குழுவினரின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டிருந்தது. அங்கு ஓட்டலில் இருந்து ஷூட்டிங் செல்வதற்கும் ஆளுக்கு ஒரு கார் கிடையாது. காலையில் சாப்பிட்டு ரெடியானதும் ஒரு கார் தயாராக நிற்கும். அதில் எத்தனை பேர் செல்ல முடியுமோ அத்தனை பேரும் ஏறிக் கொள்வோம்.

இவ்வளவு சிக்கனத்தை கடை பிடித்ததற்கும் காரணம் உண்டு. நம் நாட்டைவிட சிங்கப்பூரில் செலவு அதிகம். அதனால்தான் இந்த சிக்கன ஏற்பாடு.

மோகன்லால் சார், மனைவி, குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார். இவ்வளவு பெரிய நடிகர் இவ்வளவு சாதாரணமாக இருக்கிறாரே என்று ரொம்பவும் ஆச்சரியப்பட்டு போனேன்.

ஷூட்டிங் செல்லும்போது ஜாலியாக பேசுவார். இந்த டவுனில் இந்த கடையில் இந்த உணவு சூப்பரா இருக்கும் என்பார். சொன்னதோடு விடமாட்டார். அங்கேயே சாப்பிடவும் அழைத்து செல்வார்.

அதுமட்டுமல்ல காரில் சென்று கொண்டிருக்கும்போது ஏதாவது ஓட்டலில் இருக்கும் பதார்த்தத்தை பார்த்துவிட்டால் போதும். அதை காட்டி இதை சாப்பிட்டு இருக்கியா? என்பார்.

நான் சிங்கப்பூர் சென்றதே அதுதான் முதல்முறை. எப்படி சாப்பிடுவது?

ம்கூம். சாப்பிட்டது இல்லை என்பேன். உடனே அன்று அதை வாங்கி தருவார். அவரோடு செல்லும்போது விதவிதமான சாப்பாடு. வாய்க்கு ருசியாக சாப்பிடலாம்.

இன்னொரு முக்கிய விசயம். அவர் நடிப்பதில் எப்படி கில்லாடியோ அதேபோல் சமையல் செய்வதிலும் கில்லாடி. வீட்டில் நன்றாக சமைப்பார். நான் வெஜ் சூப்பரா பண்ணுவார். அடி பொலியாக இருக்கும். அவர் சமைத்து தர அவரது மனைவி, குழந்தைகளுடன், நானும் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்த தருணங்கள் மறக்க முடியாதது.

ரொம்ப பொறுமையாக இருப்பார். இயல்பாக இருப்பார். காட்சிகளில்கூட நடிப்பதற்காக சிரத்தை எடுத்துக்கொள்ளமாட்டார். இயல்பாகவே நடிப்பார். ஆனால் அது கச்சிதமாக வந்திருக்கும்.

சின்ன சின்ன விசயங்களை மிக இயல்பாக செய்வார். அவரை பார்த்து பல விசயங்கள் நான் கற்றுக் கொண்டேன்.

உடல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துவார். அவர்தான் எனக்கு சூரிய நமஸ்காரம் சொல்லி தந்தார். அதன்பிறகு தான் நானும் சூரிய நமஸ்காரம் செய்ய தொடங்கினேன்.

தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருந்ததால் மலையாளத்தில் என்னால் சரளமாக பேச வரவில்லை. சுமார் 60 சதவீதம் திருப்தியாக தெரிந்தது.

ஆனால் மோகன்லால் சார்தான் எனக்கு சொல்லி தருவார். அவர் ரொம்ப சாதாரணமாக நடிப்பதை பார்த்து இப்படியும் நடிக்க முடியுமா? இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று நினைத்ததுண்டு.

அவர் 'எதையும் மிகைப்படுத்தக்கூடாது. கதை, டயலாக்குகளை உள்வாங்கி கொண்டு இயல்பாக நடித்தால் போதும் சிறப்பாக இருக்கும்' என்பார். அவர் சொன்ன மாதிரியேதான் எல்லாம் அமைந்தது.

டான்ஸ் மாஸ்டர் கலாவை முதல் முதலாக 'இதய வாசல்' படத்தில் சந்தித்தேன். அதன் பிறகும் சில படங்களில் அவர் எனக்கு மாஸ்டராக இருந்துள்ளார். ஆனால் இந்த படத்தில் பணியாற்றிய போதுதான் எங்களுக்குள் நட்பு நெருக்கமானது.

எங்கள் இருவருக்கும் பூர்வீகம் கேரளாதான். ஆனால் தமிழில் பேசுவதை பார்த்து மோகன்லால் சார் 'ரெண்டு பேரும் மலையாள பெண்குட்டிகள். ஆனால் மலையாளம் பேச தெரியாது' என்று கிண்டல் செய்வார்.

உண்மைதான், நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். ஆனால் எனது தாத்தா-பாட்டி நன்றாக மலையாளம் பேசுவார்கள். எனக்கு மலையாள தொடர்பு இல்லாமல் போய்விட்டது.

இந்த படத்தில் நடித்த பிறகுதான் மலையாளத்திலும் நன்றாக பேச கற்றுக் கொண்டேன்.

அப்பல்லாம் மலையாள படங்களில் நடிக்கும்போது வசனம் மறந்து போனால் உதவியாளர் ஒருவர் சொல்லித்தரும் முறை இருந்தது.

ஆனால் அப்படி கேட்டு, கேட்டு வசனம் பேசி நடிப்பது ஈசி அல்ல. ரொம்ப சிரமம். ஏனெனில் முகபாவணை வராது. ஆனால் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஈசியாக நடிப்பேன்.

அதேபோல் டான்சுக்கு தேவையான துணை ஆர்ட்டிஸ்டுகளை இங்கிருந்து அழைத்து செல்லவில்லை. சிங்கப்பூரிலேயே ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

அவர்கள் நமது ஸ்டைலில் ஆடியது வித்தியாசமாக இருந்தது. அந்த காட்சிகளும், நாட்களும் மறக்க முடியாதவை.

அப்போதே சிங்கப்பூரில் மெட்ரோ ரெயில், ரோப் காரில் பயணித்த அனுபவங்களும் மறக்க முடியாதது.

சிங்கப்பூரிலும், கேரளத்திலும் படப்பிடிப்புகள் நடந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்து 1997 ஏப்ரல் 4-ந்தேதி படம் திரைக்கு வந்தது. சூப்பர்-டூப்பர் படமாக ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

தமிழில் சிவாஜி சார்-பத்மினி அம்மா ஜோடி பொருத்தம் சூப்பர் என்று எப்படி பாராட்டுவார்களோ அதேபோல் மலையாளத்தில் முதல் படத்திலேயே எங்கள் ஜோடிப் பொருத்தம் சூப்பர் என்று ரசிகர்கள் சர்டிபிகேட் கொடுத்தார்கள்.

அது முதல் உங்கள் மீனா மலையாள ரசிகர்கள் மனதிலும் நிலையான இடம் பிடித்தேன்.

அடுத்த வாரம் புதிய தகவலுடன் சந்திக்கிறேன்.

-தொடரும்...

Tags:    

Similar News