- செயலி உங்கள் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கிளினிக்குகள், நர்சிங் ஹோம்களை கண்டுபிடிக்க உதவுகிறது.
- ஹெல்திபைமீ என்னும் இச்செயலி மிக நல்ல அம்சங்கள் கொண்டதாய் இருக்கிறது.
"மாமன்னரே! அடுத்து எந்த தேசத்தைக் கபளீகரம் செய்யப்போகிறோம்?"
"எல்லா தேசங்களையும் தான்!"
"ஆகா நன்று! எப்போது புறப்பட வேண்டும்?"
'ஒரு வெங்காயம் வேண்டாம்! இங்கிருந்தே வென்று விடலாம்!'
"என்ன சொல்கிறீர்கள் மன்னவா?"
"இரு தொந்தரவு செய்யாதே! அதுக்குத்தான் இந்த செயலியை டவுன்லோட் பண்ணிட்டு இருக்கேன்!"
மாவீரன் அலெக்சாண்டர் காலத்தில் மொபைல் போன் இருந்திருந்தால், இப்படித்தான் உரையாடல் நடந்திருக்கும்!
ஆம், எதை எடுத்தாலும் அதைச்செய்து முடிக்க மொபைல் செயலிகள் வந்துவிட்டன.
"அடுத்த வாரம் என் தங்கச்சி வீட்டுல விசேஷம். எனக்கு ஆபீசுல லீவு கெடைக்காது! நீ போய்ட்டு வந்துரும்மா! இன்னைக்கு டிக்கெட் புக் பண்ணிக்குடுத்திறேன்!"
புருஷன் சொல்லிவிட்டால் மனைவி ரெடியாகிவிடுவாள். அவளுக்கு ஆபீசில் லீவு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பல்லவன் எக்ஸ்பிரசில் எட்டு மணி நேர பயணம்.
என்ன செய்வது?
தூராத்து உறவினர் வீட்டுத்திருமணம். நுழைந்தவுடன் 'வாங்க உட்காருங்க சாப்பிட்டுத்தான் போகணும் சொல்லிட்டேன்' வரவேற்ற பெண்மணி மற்ற பேரைக்கவனிக்க போய்விட்டதும் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு எவ்வளவு நேரம்தான் சடங்குகளை கவனிப்பது?
"டாக்டருக்கு ஒரு எமர்ஜென்சிங்க! இன்னும் ஒரு மணி நேரமாகும். பிளீஸ் கொஞ்சம் வெயிட் பண்றீங்களா?"
நர்சிங் ஹோம் பெண் சொன்ன பிறகு எப்படி ஒரு மணி நேரத்தைக்கழிப்பது?
இதெல்லாவற்றுக்கும் நம் மொபைல் போன் ஒரு வரப்பிரசாதம். 97 சதவீதம் சதவீதம் ஆசாமிகள் மொபைல் போனை விட்டுப்பிரிவதே இல்லையாம்! அந்த மொபைல் போனை சுவாரஸ்யமாகவும் உபயோகமாகவும் எப்படிப்பயன்படுத்துவது என்பதற்காக ஏராளமான செயலிகள் வந்துவிட்டன.
சுவாரஸ்யமான செயலிகள் சிலவற்றைப்பார்க்கலாமா?
கலரைஸ் (Colorize)
இந்த செயலி கறுப்பு வெள்ளை போட்டோக்களை கலராகச்செய்ய உதவும் செயலி. இதன் பின்புலத்தில் செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்பம் அமைந்திருக்கிறது. நான் பார்த்தவரையில் கறுப்பு வெள்ளைப்படங்களை கலர்கொடுக்க முயலும் செயலிகளில் இது பிரமாதமான ஒன்று என்று நம்புகிறேன். இது டவுன்லோடு செய்யவும் உபயோ கிக்கவும் வெகு சுலபமான செயலி. இந்தச்செயலிக்குள் உங்களின் பால்ய காண்ட போட்டோ ஒன்றை உட்புகுத்துங்கள் அல்லது ஸ்கேன் செய்யுங்கள். சில வினாடிகளிலேயே உங்களின் ஆதர்ச தாத்தாவோ பாட்டியோ அக்காலத்தில் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளையிலிருந்து வசீகரமாக இக்கால தொழில்நுட்ப வண்ணங்களில் தம் பொக்கை வாய்ச்சிரிப்புடன் உங்களைப்பார்க்கும் அனுபவத்தை உணரலாம்! மேலும் இந்தச்செயலி மூலமாகவே அந்தக்கலர் போட்டோவை உங்கள் உறவுகளுக்கு ஷேர் செய்யலாம்.
இன்னொரு நல்ல அம்சம் என்னவென்றால் இந்தச்செயலியில் பழைய போட்டோவையும் புதிதாகக்கலர் செய்த போட்டோவையும் அருகருகே ஒப்பீடு செய்யவும் முடியும்! இந்தச்செயலி முழுவதும் இலவசமில்லை. குறைவான அளவே போட்டோக்களை இலவசச் செயலியில் சேமிக்க முடியும். இதற்கு மேலும் வேண்டுமென்றால் சந்தா கட்ட வேண்டும். இல்லையென்றால் கலர் செய்த போட்டோக்களை வேறொரு டிஸ்கில் சேமித்துக்கொண்டு இந்தச்செயலியில் இருந்து நீக்கிட வேண்டும். அல்லது மீண்டும் இச்செயலியை தரவிறக்கம் செய்து மேலும் மேலும் பயன்படுத்தலாம்! செயற்கை அறிவுத்திறனின் சக்தியை வெளிப்படுத்தும் இந்தச்செயலியை முயன்று பாருங்கள்
வால்ராப் (Wallwrap)
மொபைல் போன் என்பது தொலைபேசும் கருவி என்பதிலிருந்து வெகு தூரத்துக்கு வந்துவிட்டோம். போன மாதம் புது மொபைல் போன் வாங்க கடைக்குப்போனேன். ஒரு லேடஸ்ட் போனை எடுத்தேன்.
"இந்த மொபைல் மாடல் எப்படிங்க?"
"அடடா! இது பிரமாதமான மொபைல் மாடல் சார்! ஏழு பிக்செல் கேமரா இருக்கு. நீங்க எடுக்கற படம் ஒவ்வொண்ணும் துல்லியமா விழும் தெரியுமா?"
'அப்படியா?'
"அட ஆமாம் சார்! அது மட்டுமில்ல, இதுல ரேடியோ இருக்கு! எல்லா விதமான சினிமா பாட்டு, கர்நாடக சங்கீதம், பாப் மியூசிக்குன்னு ஆயிரத்துக்கும் மேல்பட்ட பாட்டுக்கள் கேக்கலாம் சார்!"
"அட!"
"அது மட்டுமில்ல, இங்க பாருங்க எவ்வளவு பவர்புல் டார்ச் லைட் இருக்கு! நீங்க இருட்டுல மாட்டினா இந்த டார்ச் லைட்ட வெச்சிக்கிட்டு ஆறு மணி நேரம் வெளிச்சத்துல இருக்க முடியும்!"
"ஒரு கேள்வி கேட்கலாமா?"
"கேளுங்க சார்!"
"இந்த மொபைல்ல போன்ல பேச முடியுமா?"
ஆம், மொபைல் போன் என்பதன் அடிப்படை வலுவிழந்துபோய் மற்ற விஷயங்கள் முன்னுக்கு வந்துவிட்டன. அந்த வகையில் உங்கள் மொபைல் போன் ஸ்கிரீனில் விதவிதமான டிசைன்கள் கொண்ட வால்பேப்பர் வைத்துக்கொள்ள மட்டுமே ஒரு தனி செயலி இருக்கிறது, அதுதான் வால்ராப். இந்தச்செயலியின் மூலம் ஆயிரக்கணக்கன ஸ்கிரீன் வடிவமைப்பை உங்கள் மொபைலில் வைத்துக்கொள்ள முடியும். அன்றைய டிரெண்டுக்கு ஏற்றவாறு அந்த ஸ்கிரீன் மேற்புறத்தை வெவ்வேறு வால்ராப் பால் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டு உங்கள் நண்பர்களிடமிருந்து பாராட்டுக்களை அள்ளலாம். அதோடு விதவிதமான வால்ராப் புக்களை ஒரு க்யூவில் வைத்து நேரக்கணக்கின்படி அதுவாகவே லூப்பில் மாற்றிக்கொள்ளும் படியும் செய்ய முடியும்.
பிராக்டோ (practo)
இந்தச்செயலி உங்கள் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கிளினிக்குகள், நர்சிங் ஹோம்களை கண்டுபிடிக்க உதவுகிறது. அது மட்டுமில்லை அங்குள்ள டாக்டர்கள், அவர்களின் ஸ்பெஷாலிடி, அவர்களுடன் எப்படி அப்பாயிண்ட்மெண்ட் செய்வது போன்ற வசதிகளும் கொண்டது. அதோடு எந்தெந்த டாக்டர்களின் நேரம் எப்போதெல்லாம் கிடைக்கும் என்பதையும் இச்செயலி தெரிவித்துவிடுவதால் நம் நேரம் மிச்சப்படும்.
நோய்களை வகைப்படுத்தி ஒவ்வொன்றுக்குமான கன்சில்டிங் விவரங்களையுமே இச்செயலியில் காண முடியும். டாக்டர்களின் ஸ்பெஷலிடி தவிர அவர்களின் படிப்பு அனுபவத்தையுமே இச்செயலியில் காண முடியும். இது தவிர அந்த கிளினிக்குக்கோ அல்லது டாக்டரிடமோ சென்றவர்கள் தாம் அனுபவத்தையுமே இதில் பகிர முடிவதால் மற்றவர்களுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கிறது.
ஹெல்திபைமீ
பிட்னெஸ் என்றால் பெண்கள் உடனே எடை குறைப்பதை மட்டுமே யோசிக்கிறார்கள். ஆனால் பிட்னெஸ் என்பது தினமும் கவனித்து பராமரிக்க வேண்டிய விஷயம். ஹெல்திபைமீ என்னும் இச்செயலி மிக நல்ல அம்சங்கள் கொண்டதாய் இருக்கிறது. உங்களின் தினப்படி டையட்டைக்கூட இதில் கண்காணிக்கலாம். அதோடு மட்டுமின்றி நீங்கள் பிட்-பிட், அல்லது கூகிள் பிட் போன்ற சாதனங்களை பயன்படுத்துபவராக இருந்தால் இச்செயலியின் விவரங்களை அந்தச்சாதனங்களில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
உதாரணத்திற்கு நீங்க சாப்பிடும் ஒவ்வொரு உணவு வகையிலும் இருக்கும் கலோரிகளை இச்செயலி தெரிவித்து விடுவதால் உங்களின் தினப்படி கலோரி அதிகரிப்பைக்கண்காணிக்க முடிகிறது. அதனால் உங்களின் பிட்னெசை தினமுமே ஒவ்வொரு உணவின்போதும் கண்காணித்து கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள முடியும்.
இந்த மொபைல் செயலிகள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டதை மறுதளிக்கவே முடியாது. 2019-ல் மட்டுமே இந்தியாவில் 19 கோடி செயலிகள் தரவிறக்கம் செய்யப்பட்டதாம்! 91 சதவீதம் இந்தியர்கள் மொபைல் போன் மூலம் செயலிகளைப்பயன்படுத்துகிறார்களாம். உலகத்திலேயே மிக அதிகமாக வாட்ச அப் செயலியைத்தரவிறக்கம் செய்த பெருமையை இந்தியா தட்டிக்கொண்டு போய்விட்டது.
"லெச்சுமி! செத்த மாடிக்குப்போய் துணி காயப்போட்டு வந்திருடி!"
"பாட்டி! ஏன் சும்மா தொண்டை கிழிய கூவுற? அதான் உன் மொபைலுல துணின்ற செயலி இருக்குல்ல? அதுல ஒரு மெசேஜ் தட்டிவுட்டா வந்துரமாட்டேனா? கத்துறியே?"
மேற்கண்ட உரையாடலைக்கேட்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை!