சிறப்புக் கட்டுரைகள்

இழந்த செல்வத்தை மீண்டும் தரும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி

Published On 2023-11-23 16:37 IST   |   Update On 2023-11-23 16:37:00 IST
  • சிவாலயங்களில் வலது பக்கம் அம்பிகை சன்னதி அமைந்திருந்தால் அந்த ஆலயம் திருமண கோலத்தில் உள்ள தலமாக கருதப்படும்.
  • அறியாமல் செய்த பாவம் நீங்க இதற்கு உப்பு மற்றும் மிளகிட்டு வணங்குகின்றனர்.

காவிரிக் கரையில் அமைந்துள்ள தலங்களில் ஆறு சிவ தலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்று திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் ஆகும். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமைவாய்ந்ததாக உள்ள இந்த கோவில் நீண்ட 3 பிரகாரங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையிலும் சிறப்புடையது திருவிடைமருதூர். இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதின பரிபாலனத்தில் விளங்குகிறது.

கும்பகோணத்துக்கு மிக, மிக அருகில் உள்ளது. கும்பகோணம் ஆலயங்களை தரிசிக்க செல்பவர்கள் மிக எளிதாக இந்த ஆலயத்துக்கு சென்று வரலாம். இத்தலம் 'மத்தியார்கள் சேத்திரம்' என்று போற்றப்படுகிறது. மருத மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட திருத்தலம்.

"திருவாரூர் தேரழகு, வேதாரண்யம் விளக்கழகு, திருவிடை மருதூர் தெருவழகு" என்று கூறுவது வழக்கம். அதற்கிணங்க இங்கு தெருக்களின் அமைப்பு சிறப்பான ஒன்றாகும்.

இத்தலத்தில் அருள் பாலிக்கும் இறைவன் பெயர் ஸ்ரீமகாலிங்கப் பெருமான் ஆவார். அம்மையார் பெயர் பெருநலமா முல்லையம்மை. திருவிடைமருதூர் ஆலயத்தில் மகாலிங்க சுவாமியை வழிபாடு செய்து உமா, விநாயகர், முருகர், திருமால், லட்சுமி, சரஸ்வதி, வசிஷ்ட முனிவர், அகத்திய முனிவர், பத்ரகிரியார், ரோமரிஷி, கபில முனிவர், மார்கண்டிய ரிஷி, பட்டினத்தார், சிவவாக்கிய சித்தர், கருவூர் தேவர், அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்க வாசகர், பாண்டிய மன்னன் வரகுண பாண்டியன் உள்பட ஏராளமானோர் பலன் பெற்றுள்ளனர். திருவிடைமருதூருக்கு செண்பகராண்யம், சக்திபுரம், தபோவனம், முக்திபுரம் ஆகிய பெயர்கள் உண்டு. மருத மரத்தை தல விருட்சகமாக கொண்ட 3 தலங்களில் இந்த தலம் நடுவில் அமைந்து இருப்பதால் இடைமருதூர் என்ற பெயர் ஏற்பட்டது.

இத்தலத்தில் அகத்தீஸ்யர் லிங்கம், காஸ்யபர் லிங்கம், சோழலிங்கம், சேர லிங்கம், பாண்டிய லிங்கம், சகஸ்சர லிங்கம், பஞ்ச பூத லிங்கங்கள் என்று திரும்பிய திசையெல்லாம் லிங்க மயமாக காட்சி அளிக்கிறது. ஆலயத்துக்குள் 30-க்கும் மேற்பட்ட லிங்கங்கள் உள்ளன.

இந்த தலத்தில் லிங்கங்களுக்கு அடுத்தப்படியாக விநாயகர் சிலைகளும் அதிகப்படியாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள பெரிய தேர்களில் இந்த தலத்து தேரும் ஒன்று. இங்குள்ள தேர் 89 அடி உயரம் கொண்டது. இத்தலத்தின் கொடி மரம் 24 அடி உயரம் கொண்டது.

சிவாலயங்களில் வலது பக்கம் அம்பிகை சன்னதி அமைந்திருந்தால் அந்த ஆலயம் திருமண கோலத்தில் உள்ள தலமாக கருதப்படும். அந்த வகையில் திருவிடைமருதூர் தலம் திருமண கோல தலமாக உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள காரிய சித்தி தலங்களில் மனநோய் நீக்கும் தலமாக திருவிடைமருதூர் தலம் கருதப்படுகிறது. விபண்டக முனிவர் முன் தோன்றிய சிவபெருமானிடம் வருடந்தோறும் தைப்பூச நாளன்று காவிரிக் கரையில் உள்ள கல்யாண தீர்த்தத்தில் நீராடியவர்கள் பாவம் நீங்கி இன்புற்று வாழ வேண்டும் என்று விபண்டக முனிவர் வேண்டினார். இறைவனும் அவ்வாறே ஆகுக! என்று வரம் அருளினார்.

தஞ்சை மாவட்ட ஆலயங்களில் திருவிடை மருதூர் ஆலயத்துக்குதான் அதிக பாடல்கள் கொண்ட தலபுராணம் உள்ளது. இந்த ஆலயம் பற்றி ஞானக்கூத்த சிவபிரகாச தேசிகர் என்பவர் மூவாயிரம் பாடல்கள் தலபுராணமாக பாடியுள்ளார்.

சிவபெருமானின் 64 வடிவங்களுள் ராவண அனுக்கிரக மூர்த்தி அமைந்துள்ள திருத்தலம் திருவிடை மருதூர் மட்டுமே. தஞ்சை மாவட்டத்தில் 100-க்கும் அதிகமான பாடல்களை பெற்ற தலங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று திருவையாறு, மற்றொன்று திருவிடை மருதூர்.

தஞ்சை மாவட்டத்தில் 4 திசைகளிலும் நான்கு கோபுரங்கள் அமையப்பெற்ற தலங்கள் இரண்டு. ஒன்று கும்பகோண கும்பேஸ்வரர் கோவில். மற்றொன்று திருவிடை மருதூர். சோழ நாட்டில் காவிரித் தென்கரையில் இருக்கும் 128 தலங்களுள், இத்தலம் முப்பதாவதாகப் போற்றப்படுகிறது. திருவிடைமருதூரில் தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன.

வைகாசி வசந்த விழா, அறுபத்து மூவர் விழா, நவராத்திரி விழா, மார்கழித் திருவாதிரை விழா, தைப்பூசத் திருவிழாவின் போது சுவாமி காவிரிக்கு எழுந்து அருளி ஐராவணத் துறையில் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.

இத்தலத்தில் மகாலிங்கப் பெருமானுக்கு பூஜை நடந்தபிறகே விநாயகப் பெருமானுக்கு பூஜை நடைபெறும். இத்தலம் சந்திரனுக்குரிய தலமாகவும், வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து பெருமானை வழிபட்டு பிரமஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திரத் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

இத்தலம் காசிக்கு நிகரான தலமாகும். பத்திர கிரியார் முத்தி பெற்ற திருத்தலம். இங்கு 27 நட்சத்திரங்களுக்கும் 27 லிங்கங்கள் உள்ளன. இங்குள்ள நவக்கிரக விக்கிரகங்கள் பிற கோவில்களில் இருந்து வேறுபட்டதாக இடம் மாறி அமைந்துள்ளது

லிங்கவடிவ நட்சத்திரங்கள்

சந்திரன், குருவான பிரகஸ்பதியின் மனைவி மீது ஆசை கொண்டதால் தோஷத்திற்கு ஆளானான். தோஷம் நீங்க, சிவனை வேண்டி தவமிருந்தான். இரங்கிய சிவன் விமோசனம் அளித்தார். சந்திரன் வந்தபோது அவனது மனைவியர்களான 27 நட்சத்தி ரங்களும் வந்தன. சந்திரனுக்கு அருளிய சிவன், நட்சத்திரங்களுக்கும் அருள்புரிந்தார். இங்கு தோன்றிய 27லிங்கங்களில் அவை ஐக்கியமாகின. இந்த லிங்கங்கள் ஒரே சந்நிதியில் உள்ளன. அவரவர் பிறந்த நட்சத்திர லிங்கத்தில் விளக்கேற்றி வழிபடலாம். சந்திரனின் தோஷம் நீங்கியதால் திருவிடைமருதூர் தலத்துக்கு "சந்திர தலம்" என்ற சிறப்பும் உண்டு.

பாவம் நீங்க வழிபாடு

வரகுணபாண்டிய மன்னன் அறியாமல் செய்த கொலைக்காக, பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டான். விமோசனத்திற்காக இத்தலம் வந்து மகாலிங்கசுவாமியை வழிபட்டான். சிவன் அவனைப் பற்றியிருந்த பிரம்ம ஹத்தியை அகற்றினார். இந்த பிரம்மஹத்திக்கு, சிவன் சந்நிதியில் இரண்டாம் கோபுரத்தில் சிலை உள்ளது. அறியாமல் செய்த பாவம் நீங்க இதற்கு உப்பு மற்றும் மிளகிட்டு வணங்குகின்றனர்.

அன்பிற்பிரியாள்

சம்பந்தர் இங்கு வந்தபோது, வழியெல்லாம் சிவலிங்கமாகத் தோன்றியது. எனவே தரையில் கால் பதிக்க அவர் அஞ்சினார். அப்போது, சிவன் அம்பிகையை அனுப்பினார்.

அவள், சம்பந்தரை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்தாள். இவளே பிரகாரத்தில் மருதவாணருடன் (சிவன்), கைலாயத்தின் மீது காட்சி தருகிறாள். இவளை "அன்பிற்பிரியாள்' என அழைக்கின்றனர்.

தட்சிணாமூர்த்தி இங்கு அம்பிகையுடன் காட்சி தருகிறார். இவருக்கு "சாம்ப தட்சிணா மூர்த்தி' என்று பெயர். மகாலிங்கசுவாமி சந்நிதியின் முன் மண்டபத்தில் சுதை சிற்பமாக விளங்குகிறார். மூகாசுரனை வதம் செய்த மூகாம்பிகை, தோஷம் நீங்க இங்கு சிவனை வழிபட்டாள். சிவன் விமோசனம் அளித்ததோடு, திருமணம் செய்து கொண்டார். வைகாசி உத்திரத்தன்று இத்திரு மணம் நடக்கும். கிழக்கு கோபுரத்தின் கீழ் பட்டினத்தாருக்கும், மேற்கு கோபுரத்தின் கீழ் அவரது சீடர்பத்திர கிரியாருக்கும் சந்நிதி உள்ளது.

போன வழியே திரும்பக்கூடாத கோவில்

மற்ற கோவில்களில் சென்ற வழியே திரும்புவது தான் வழக்கம். திருவிடை மருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் வேறு வாசல் வழியே திரும்ப வேண்டும். எதற்காக? இங்கு எந்த வழியில் சென்றோமோ, அதே வழியில் திரும்பக் கூடாது என்பது நியதி.

ஏதேனும் பீடை மனித னுக்கு இருந்தால், அது நுழைவு வாசலில் நின்று கொள்ளும். கோவிலை விட்டு வெளியேறும் போது தொற்றிக் கொள்ளும். வேறு வாசல் வழியாக வந்தால் பிடிக்காது. எனவே இந்த தலத்தில் சிவன் சந்நிதி எதிரில் உள்ள கோபுரம் வழியாக நுழைந்து முதலில் படித்துறை விநாயகரை வணங்கி, சிவன், அம்பாள் சந்நிதிகளுக்குச் சென்று, பின்பு மூகாம்பிகையை தரிசித்து முடிக்க வேண்டும். வேறு வாசல் வழியாக வெளியே வர வேண்டும். இதற்கு ஒரு காரணம் உண்டு. ஒருமுறை சிவன், அம்பிகையிடம் இத்தல மகிமையைச் சொல்ல, ஆனந்த கண்ணீர் வடித்தாள். அதுவே குளமாக உருவெடுத்தது. இது காருண்ய (கருணை) தீர்த்தம் எனப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோவிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமருதூர் மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள்.

இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடை மருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சன்னதி உள்ளது.வேறு எங்கும் இல்லை. தனி சன்னதி இங்கு மட்டுமே. இக்கோவிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்கு பக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது. இக்கோவிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோயிற் கோபுர அமைப்பில் அமைந்து விளங்குகிறது. இந்த சன்னதியில் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இங்கு வழிபட்டால் இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் பெற முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மூலவரான மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் என்று நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்.

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் தோஷங்களை விரட்டுவதற்காக தினமும் காலை சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இதற்காக தேவேந்தி ரன் நந்தி அமைந்துள்ள பகுதிக்கும், பிரம்மகத்தி சன்னதிக்கு இடையேயும் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அமர சிறு பலகைகள் போட்டு இந்த பூஜை நடத்துகிறார்கள்.

தினமும் காலை 7 மணி, 8 மணி, 9 மணி என மூன்று தடவையாக தோஷ நிவர்த்தி பூஜை நடத்தப்படுகிறது. தினமும் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தோஷ நிவர்த்தி செய்து கொள்கிறார்கள். சிறப்பு மற்றும் பண்டிகை நாட்களில் இந்த தோஷ நிவர்த்தி பூஜை நேரம் மாறுதலுக்கு உட்பட்டது. எனவே ஆலயத்தில் தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ளுங்கள். மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

பெண்கள் உரிய வயதில் ருது பருவம் அடைவதற்கு வேண்டிக்கொள்ளவும் கும்பகோணத்தில் ஆலயம் உள்ளது. அந்த ஆலயம் பற்றி அடுத்த வாரம் வியாழக்கிழமை பார்க்கலாம்.

Tags:    

Similar News