சிறப்புக் கட்டுரைகள்

முதுமையில் முதுகுத்தண்டு வலிக்கான தீர்வுகள்

Published On 2023-10-08 15:27 IST   |   Update On 2023-10-08 15:27:00 IST
  • 50 வயதைக் கடந்த 60 முதல் 85 சதவீதம் பேருக்கு, முதுகுவலி ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுவது மிகுந்த வருத்தம் தான்.
  • ‘டிஸ்க்’ எனும் சவ்வுப்பகுதி வலுவிழந்து பசைத்தன்மையற்று பல்வேறு துன்பங்களை உண்டாக்கும்.

மூட்டுவலியும், முதுகு வலியும் வயோதிகத்தில் மிகப்பெரிய சவால்கள். இந்த வலிகளுக்காக மாத்திரைகளை எடுத்து சளைத்துப் போன உடலும், மனமும் ஒரு புறமிருக்க, மறுபுறம் களிம்புகளை தடவி சளைத்துப் போன மூட்டுக்கள் அடையும் வேதனையை வெறும் வார்த்தைகளில் விளக்க முடியாது. இறுதியில் மன உறுதி மட்டுமே மூட்டு வலிக்கு நிவாரணி என்று, முதியோர் கூட்டம் முணுமுணுத்து வாழக்கையை நகர்த்தி கொண்டு செல்வது பலரும் அறிந்திராத உண்மை.

முதுமையில் மூட்டுவலியைப் போல அதிக தொந்தரவுகளை உண்டாக்குவது முதுகுவலியும் தான். 50 வயதைக் கடந்து முதுமையில் ஏற்படும் முதுகுவலி தற்போதைய சூழலில் 30 வயதிலே உண்டாகிவிடுகிறது. 50 வயதைக் கடந்த 60 முதல் 85 சதவீதம் பேருக்கு, முதுகுவலி ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுவது மிகுந்த வருத்தம் தான்.

பொதுவாக முதுகுத் தண்டுவட எலும்புகள் மற்றும் சவ்வின் தேய்மானத்தால் உண்டாகக்கூடியது இந்த முதுகுவலி. அதுமட்டுமின்றி முதுகு தண்டுவடத்தில் உண்டாகும் பல்வேறு நோய்நிலைகள் இந்த முதுகு வலிக்கு காரணமாக உள்ளன. சாதாரணமாக வயது மூப்பில் தோன்றும் முதுகு வலி தானே என்று இதனை சுலபமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

ஏனெனில் எலும்பு சவ்வு தேய்மானம் என்பது மட்டுமின்றி முதுமையில் முதுகுத் தண்டுப்பகுதியில் ஏற்படும் சாதாரண கட்டிகளும், புற்றுநோய்க்கட்டிகளும், கிருமித்தொற்றுக்களும், நரம்பின் அழுத்தம், சவ்வு விலகல், சவ்வு அழுத்தம் மற்றும் எலும்பு முறிவும் கூட காரணமாக இருப்பதால் முதுமையில் முதுகுவலி மீது அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அத்தகைய நோய்நிலைகளை கண்டறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்வது மிக மிக அவசியமானது.

முதுமையில் முதுகுத் தண்டு எலும்புகளுக்கு இடையிடையே காணப்படும் 'டிஸ்க்' எனும் சவ்வுப்பகுதி வலுவிழந்து பசைத்தன்மையற்று பல்வேறு துன்பங்களை உண்டாக்கும். இது ஆண்களைக் காட்டிலும் பெண்களை அதிகம் பாதிக்ககூடியது. ஏனெனில் கர்ப்பிணியாக இருக்கும் போதும், பிரசவ காலத்தின் போதும் இயல்பான முதுகுத் தண்டுவட வளைவுகள் மாறுபடுவது தான் இதற்கு காரணமாகிறது.

கழுத்து முதல் அடி முதுகு வரையிலும் 33 தண்டுவட எலும்புகளைக் கொண்டது முதுகுத் தண்டுப் பகுதி. இந்த எலும்புகளில், வயது மூப்பினை தொடர்ந்து உண்டாகும் மாறுதல்கள் பல்வேறு நோய்நிலைகளை உண்டாக்கி வெவ்வேறு பகுதிகளில் வலி, மரமரத்தல் போன்ற பல்வேறு குறிகுணங்களை ஏற்படுத்தி முதுமையை கூடுதல் சிரமம் உள்ளதாக மாற்றும். எத்தனை வலி நிவாரணி மருந்துகள், தசை தளர்த்தி மாத்திரைகள் பயன்படுத்தினாலும் முன்னேற்றம் கிடைப்பது என்பது முதுமையில் அரிது. இந்நிலையில் பாரம்பரிய மருத்துவ முறைகளை நாடுவது பயனுடையதாக இருக்கும்.

நோய்களுக்கு காரணமாக சித்த மருத்துவம் கூறும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் கபவாதத்தின் மாறுபாட்டால் முதுமையில் எலும்பு தேய்மானம் உண்டாகி முதுகு வலி உண்டாவதாக சொல்லப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் கூறும் 4448 வியாதிகளில் வாதம் பாதிப்படைந்து 80 வாத நோய்கள் உண்டாவதாக சித்த மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய வாத நோய்களில் ஒரு வகையே இந்த முதுகுத் தண்டுவலி.

ஆகவே வாதம் குறைக்கும் மருந்துகளை பயன்படுத்துவது மூட்டுவலியில் மட்டுமல்ல முதுகுவலியில் கூட நல்ல பலன் தரும். எளிமையாக வாதத்தைக் குறைக்க கடுக்காய் பொடியை இரவு வேளைகளில் வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்வது சிறந்தது. விளக்கெண்ணெய் வாதம் தணிக்க இயற்கை தந்த நன்கொடை எனலாம்.வாரம் ஒருமுறை இரவில் வெந்நீரில் கலந்து உட்கொள்வதும் முதுகு வலியை வரவொட்டாமல் தடுக்கும்.

மேலும் எளிய சித்த மருத்துவ மூலிகைகளான அரத்தை, நொச்சி, பூண்டு, இஞ்சி, எருக்கு இலை ஆகிய மூலிகைகள் முதுகுத்தண்டு வீக்கம் மற்றும் வலியில் நல்ல பலன் தருவதாக உள்ளன. 'வாதமே' மூட்டுவலி மற்றும் முதுகு வலிக்கு முதன்மைக் காரணம் என்பதால் மூட்டுவலிக்கு பயன்படும் அனைத்து மூலிகைகளும் முதுகுத்தண்டு வலிக்கும் பலனளிக்கும்.

அரத்தையில் உள்ள 'டைஅரைல் ஹெப்ட னாய்டு' எனும் வேதிப்பொருள் எலும்பு மூட்டுக்களில் உள்ள வீக்கங்களை குறைத்து வலியை போக்கும் தன்மை உடையதாக உள்ளன. இதனை சிறந்த வாதம் போக்கும் மூலிகையாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்த மருந்தான அரத்தை சூரணத்தை எடுத்துக்கொண்டால் மருத்துவ பயன்களை அடையலாம்.

அதே போல் நொச்சி இலையில் உள்ள 'லிக்னேன்' வேதிப்பொருட்கள் வீக்கத்தை குறைத்து வலியை போக்கும். நொச்சி இலையுடன், மிளகு, மஞ்சள், பூண்டு சேர்த்து கசாயமிட்டு குடித்து வர முதுகுத்தண்டு வலியில் நிவாரணம் கிடைக்கும். நொச்சி இலையை வெந்நீரில் கொதிக்க வைத்து குளிப்பதும் வலியைக் குறைக்க உதவும்.

முதுமையில் மட்டுமல்லாது, இளம் வயதினரும் முதுகுவலி வராமல் காத்துக்கொள்ள உதவும். எளிய அஞ்சறைப்பெட்டி கடைசரக்கு 'பூண்டு'. தினசரி 4 பல் பூண்டினை பாலில் வேக வைத்து எடுத்துக்கொள்வது முதுகு வலிக்கு நல்லது. சித்த மருந்தான பூண்டு லேகியமும் வாதத்தைக் குறைத்து வலியைக் குறைக்கும். பூண்டில் உள்ள 'டை அல்லில் சல்பைடு' எனும் வேதிப்பொருள் அதன் மருத்துவத்தன்மைக்கு காரணமாக உள்ளதாக நவீன அறிவியல் கூறுவது சிறப்பு.

இஞ்சியில் உள்ள ஜின்ஜெரோன், ஷாகோல் போன்ற வேதிப்பொருட்கள் வீக்கத்தை உண்டாக்கும் 'காக்ஸ்' நொதிகளை தடுப்பதன் மூலமும், இன்டெர்லூக்கின் போன்ற வலிக்கு காரணமாகும் வேதிப்பொருட்கள் உடலில் உற்பத்தியாவதை தடுப்பதன் மூலமும், வீக்கத்தைக் குறைத்து வலியை குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆக, இஞ்சி சேர்ந்த உள் மருந்துகளும், வெளி மருந்துகளும் முதுகு வலிக்கு முடிவு கட்டுவதாக உள்ளன.

சித்த மருத்துவ உள் மருந்துகளோடு, வெளிப்பிரயோக மருந்துகளை பயன்படுத்துவதும் நல்ல பலன் தரும். இயற்கை தசை தளர்த்தியாக எருக்கு இலை உதவும். நல்லெண்ணையை சூடேற்றி அதில் எருக்கு இலையை தோய்த்து ஒற்றடமிட தசை வலி குறையும்.

கால்சியம் குறைபாடும், வைட்டமின் டி-3 குறைபாடும் முதுமையில் முதுகு எலும்புகளின் தேய்மானத்திற்கும், முதுகு வலிக்கும் முக்கிய காரணமாக உள்ளன. பொதுவாகவே அதற்கான சேர்க்கை மருந்துகளை (supplements) எடுத்துக்கொள்வது தற்போதைய கால கட்டத்தில் வாடிக்கையாகிவிட்டது. உண்மையில் இத்தகைய சேர்க்கை மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்வது உகந்தது அல்ல என்று சமீபத்திய ஆய்வுத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

மாறாக கால்சியம் சத்து அதிகம் உள்ள முருங்கை, பிரண்டை இவற்றை அடிக்கடி உணவில் சேர்க்கலாம். உளுந்து இடுப்புக்கு வலிமை தரும் என்பதை 'இடுப்புக்கு அடுபலமாம்' என்று சித்த மருத்துவம் வியந்து கூறுகின்றது. எனவே பால் சேர்த்த உளுந்து கஞ்சியினை உணவுக்கு பதில் எடுத்துக் கொள்வது இடுப்பு எலும்புகளுக்கு வன்மை தரும்.

முதுமையில் வைட்டமின்-டி-3 குறைபாட்டால் எலும்பு தேய்மானத்துடன் தசை வலியும் ஏற்படும். வாரம் இரண்டு மூன்று நாட்கள், 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வெயிலில் நடைப்பயிற்சி செய்வதே இயற்கை யாக வைட்டமின் டி-3 கிடைக்கும் எளிய வழிமுறை.

வெளிநாடுகளில் 'சூரிய குளியல்' (சன் பாத்) எனும் முறை மிகப்பிரபலமானது. இது வைட்டமின் டி-3 கிடைக்கும் எளிய வழிமுறை. இந்த சூரிய குளியலை பாராட்டி வியந்து பார்க்கும் நம்மவர்கள், நமது 'சூரிய வணக்கம்' செய்யும் முறையை மறந்தவர்கள் என்பது தான் உண்மை. ஆக முதுமையில் வெயிலில் நடைப்பயிற்சியும், சூரிய வணக்கமும் செய்வது உடலுக்கு நன்மை தரும்.

முக்கியமாக முதுகுத்தண்டு வலியில் ஓய்வு மிக மிக அவசியம். சமமான தரையில் அல்லது மெத்தையில் படுப்பது அதற்கு நலம் பயக்கும். அதே போல் முன்பக்கமாக உடலை அதிகம் வளைக்காமல், முதுகு பக்கமாக (பின்பக்கம்) வளைத்து யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

மேடு பள்ளமான சாலையில் நடைப்பயிற்சி செய்வதும், பயணம் மேற்கொள்வதும் வலியை அதிகமாக்கும். எனவே வலி அதிகமுள்ள போது அவற்றை தவிர்ப்பது நல்லது. அதிக உடல் எடையும், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து இருத்தலும் முதுகு வலியை அதிகமாக்கும் முக்கிய காரணிகள்.

சர்க்கரை சத்துள்ள உணவுப்பொருட்களும், நிறைவுற்ற கொழுப்பு அதிகம் கொண்ட பாமாயில் போன்றவைகளும், டிரான்ஸ்பேட் அதிகம் கொண்ட அடைக்கப்பட்ட உணவுகளும், மோனோசோடியம் குளுட்டமேட் எனும் செயற்கை சுவையூட்டி கொண்ட உணவுகளும் குளுட்டன் கொண்ட கோதுமை உணவுகளும், கேசீன் கொண்ட பாலும் பால் பொருட்களும், அஸ்பார்டேம் எனும் செயற்கை இனிப்பு சேரும் உணவுகளும், மது, புகை போன்ற பழக்கவழக்கங்களும் மூட்டுவலி மற்றும் முதுகு வலிக்கான வீக்கத்தை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே முதுமையில் மட்டுமல்லாது இளமையிலும் அவற்றை தவிர்ப்பது உடலுக்கு நலம் பயக்கும். ஆயுட்காலத்தைக் கூட்டும்

முதுகு வலியை நிர்வகிப்பதில் வாழ்வியல் மாற்ற நெறிமுறைகள் முக்கிய பங்காற்றுகின்றன. எலும்பு சவ்வுகளுக்கு வன்மை தரும் தாவரங்கள் அடிப்படையிலான உணவு வகைகளும், நடைப்பயிற்சியும், உடல் பயிற்சியும், மன பயிற்சியும், மன அழுத்தம் நீங்கி நல்ல உறக்கமும், வாதம் குறைக்கும் உணவு முறைகளும், முதுகுவலியில் நல்ல முன்னேற்றம் காண்பதற்கான எளிய வழிமுறைகள். இவற்றை கடைப்பிடித்து வாழ்ந்தால், முதுமையில் முதுகு வலியில் இருந்து விடுதலை பெற முடியும்.

தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

Tags:    

Similar News