சிறப்புக் கட்டுரைகள்

"ஸைபர் பாம் போடப்போகிறோம்" இப்படிக்கு அமெரிக்கா!

Published On 2023-05-30 09:47 GMT   |   Update On 2023-05-30 09:47 GMT
  • மிக மிக அதிகமாக தொலைத்தொடர்பையும் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளையும் பயன்படுத்தும் நாட்டில் இந்த தாக்குதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
  • அதிக முன்னேற்றம் கண்டவர்கள் என அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் தென் கொரியாவைச்சொல்லலாம்.

"ஸைபர் பாம் போடப்போகிறோம்"

இப்படிக்கு அமெரிக்கா....!"

"ஆம்! நாங்கள் ஸைபர் ஆயுதங்களை ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத கும்பலுக்கு எதிராகப்பயன்படுத்துகிறோம்!" என்று ஒப்புக்கொண்டுள்ளது அமெரிக்கா.

ஸைபர் போர், ஸைபர் ஆயுதம் என்றால்..?

இன்னொரு நாட்டின் டிஜிட்டல் கம்ப்யூட்டர்களையும் தொலைத்தொடர்பு சாதனங்களையும் முடக்கிச்சீரழிப்பது ஸைபர் போர்.

இதனால் என்ன ஆகும்?

பகை நாட்டின் முக்கிய செயல்பாடுகளைத்தடுக்கும். உதாரணமாக அந்நாட்டின் மின்சார உற்பத்தியைத்தடுத்து அவர்களின் மின் ஆலைகளை செயலிழக்கச்செய்யமுடியும்.

இது ஏன் மிக முக்கியமானது?

ஒரு நாட்டின் சக்தியையே முடக்கிவிட முடியும். மிக மிக அதிகமாக தொலைத்தொடர்பையும் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளையும் பயன்படுத்தும் நாட்டில் இந்த தாக்குதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

இது போலெல்லாம் நடக்குமா?

நடந்திருக்கிறது. மேலும் நடக்கும்!

எங்கே?

உக்ரையினில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், ஈரானில். வேறு சில நாடுகளிலும் நடந்திருக்கலாம். ஆனால் விஷயம் அமுக்கப்பட்டிருக்கும்!

இதெல்லாம் யார் நடத்துகிறார்கள்..

பல நாடுகள் இந்த ஸைபர் போர் டெக்னிக்குக்களில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். அதிக முன்னேற்றம் கண்டவர்கள் என அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் தென் கொரியாவைச்சொல்லலாம்.

ஸைபர் போர் என்பது எங்கெல்லாம் தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுகிறதோ அதை டிஜிட்டல் முறையில் தாக்கி செயலிழக்கச்செய்வது. இப்படிச்செய்வது வெறும் கம்ப்யூட்டர்களை அல்ல. அவற்றால் இயக்கப்படும் எந்திரங்கள், மிலிட்டரி செயல்பாடுகள், ஏன் ஒரு பெரிய அணைக்கட்டின் நீர் திறக்கும் செயல் பாட்டையே குழப்ப முடியும். யோசித்துப்பாருங்கள், என்ன ஆகும்! அணுசக்தி உலைக்களனைக்கூட இப்போது கம்ப்யூட்டர்களும் தொலைத்தொடர்பு சாதனங்களும்தானே இயக்குகின்றன. அவற்றை டிஜிட்டல் தாக்குதல் மூலம் சிதைத்தால்..யோசித்துப்பாருங்கள்.

விபரீதம்!

இன்னும் கொஞ்சம் மென்மையான முறையில் எதிரி நாட்டைப்பற்றி பொய்ச்செய்திகள் பரப்புதல், troll என்று சொல்லப்படும் முறையில் திட்டமிட்டு பெரிய அளவில் செய்திகளையோ மறுப்பையோ வலைதளங்களிலும் சமூக மீடியாக்களிலும் தொடர்ந்து பரப்பி மக்களின் அபிப்பிராயத்தைக்கலைக்கும் அல்லது திரிக்கும் வகையில் செயல்படுவது கூட ஸைபர் போர்தான்.

நாம் மேலும் மேலும் தகவல் தொடர்பு சாதனங்களையும் டிஜிட்டல் வழிமுறைகளையும் பயன்படுத்த ஆரம்பிக்க, எல்லா இயக்கங்களும் – தொழிற்சாலைகள், மின்சார உற்பத்தி, வங்கிக்கணக்கு வழக்கு, பணப்பரிவர்த்தனை – ஒயர்லெஸ்ஸிலும் இண்டர்னெட்டிலும் உலாவப்போக, இந்த ஸைபர் போரில் அடிபடும் சாத்தியங்கள் அதிகமாகின்றன. இவற்றின் முடிவு பொருளாதாரத்தையே சீர்குலைப்பதாக முடியக்கூடும்.

2010 ஆம் ஆண்டு ஈரானின் அணுஆயுத பிராஜக்டை டிஜிட்டலாக தகர்த்த அமெரிக்க-இஸ்ரேலிய முயற்சி ஒரு ஸைபர் போர்தான் என்று ஒப்புக்கொள்கிறார்கள். Stuxnet என்னும் malware அனுப்பி உலைக்களனை நிகழ்த்தும் மையநீக்கிகளை குளறுபடி செய்தார்கள் என்று பேசப்பட்டது.

ஸைபர் போர் நடந்தது பற்றி பராபரி செய்திகள் உலாவுகின்றன.

2013இல் பெயர் தெரியாத ஒரு நாடு (இரண்டெழுத்து முதல் எழுத்து சை, கடைசி எழுத்துனா நடுவில் ஒன்றுமே வராது!) அமெரிக்காவின் எல்லா பர்சனல் கம்ப்யூட்டர்களின் BIOSஐ தாக்கிய முயற்சி தோற்கடிக்கப்பட்டது என்கிறது அமெரிக்கா.

2014 இல் Sonyயின் தகவல் டேட்டாபேஸ் ஊடுருவப்பட்டது, செய்தது வட கொரியா என்பதும் கிசு கிசுவே.

போன கிறிஸ்துமஸுக்கு முன்பு உக்ரெயின் மின்சார உற்பத்தி ஆலைகள் டிஜிட்டல் தாக்குதலுக்கு உள்ளாயின.

போன மார்ச்சில் இரான் அமெரிக்காவில் நியூயார்க்கின் அணையின் செயல்பாட்டை தாக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டிற்று.

தீவிரவாத இயக்கமான ISIS இந்த சைபர் திறமைகளை வளர்த்துக்கொண்டு வருகிறது என்று சொல்லப்பட்டாலும் Stuxnet போன்ற malwareகளை த்தயாரிக்க மிக மிக அதிக செலவு ஆகும். அந்த அளவு செலவுகளை அவர்களால் இப்போதைக்கு செய்யமுடியாது என்பது நொண்டிச்சமாதானமா என்பது எதிர்காலத்தில்தான் நமக்குத்தெரியவரப்போகிறது. சாதாரண Hackersகளால் நாட்டின் முக்கிய பாதுகாப்புச்செயல்பாடுகளை ஊடுருவ அவ்வளவு சுலபத்தில் முடியாது.

இந்த ஸைபர் போர்களில் தாக்குபவர்களை சீக்கிரமாக அடையாளம் காணுதலும் கஷ்டமே. என்னதான் Digital Forensic இயல் முன்னேற்றம் அடைந்தாலும் தாக்குதலின் மூலத்தைக்கண்டு பிடிப்பது ரிஷி மூலம் நதி மூலம் போலத்தாம் என்கிறார்கள் விற்பன்னர்கள்.

மேரிலாண்ட் யூனிவர்ஸிடியைச்சேர்ந்த ப்ரொஃபசர்கள் Richard Forno மற்றும் Anupam Joshi இது பற்றி விலாவரியாக எழுதியிருக்கின்றனர்.

"அமெரிக்காவின் ஸைபர் போர் தந்திரங்கள் ரகசியமானவை. ஆனாலும் எங்களுக்குக்கிடைத்த செய்திகளை வைத்துக்கொண்டு ஆராய்ந்து இந்த வியசத்தை எழுதியிருக்கிறோம்" என்கிறார்கள் இந்த விற்பன்னர்கள்.

சாதாரண சிக்னல ஜாம் செய்வதில் இருந்து நாட்டையே ஸ்தம்பிக்கச்செய்வது வரை ஸைபர் போர்முறைகள் பெருகியும் கூரியதாகவும் ஆகி வருகின்றன. ஆக இன்றைய ஜேம்ஸ் பாண்டுகள் துப்பாக்கியுடன் அழகிய பெண்களுடன் நாடு விட்டு நாடு அலைய வேண்டியதில்லை. குளிருக்கு அடக்கமாக தத்தம் வீட்டிலேயே உட்காந்துகொண்டு சக்தி வாய்ந்த கம்பியூட்டர் மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் இன்னொரு நாட்டில் நெட்வொர்க்கில் புகுந்து, ஊடுருவி நாசவேலைகளைச்செய்ய முடியும்.

மூன்றாம் உலக யுத்தம் பானிப்பட்டிலோ வாடர்லூவில்லொ நடக்கப்போவதில்லை. வான் வெளியில் கண்ணுக்குத்தெரியாமல் நடக்கும். உங்களை மாதிரி என்னை மாதிரி ஆசாமிகள் தான் கூண்டோடு முடங்கி செயலிழந்து திண்டாடபோகிறோம்.

சைபரீஸ்வரோ ரக்ஷது!

Tags:    

Similar News