சிறப்புக் கட்டுரைகள்

"மிளகாய் வத்தலுக்கு பிராண்ட்" வரப்போகும் கதை!

Published On 2023-05-25 12:10 GMT   |   Update On 2023-05-25 12:10 GMT
  • ஸ்பென்சர்ஸ், புட்வோர்ல்ட், ரிலையன்ஸ் பிரெஷ், பிக் பசார் என்றெல்லாம் வந்த போதே இந்த சிறு முதலாளிகள் ஒவ்வொருவராக தொலைய ஆரமித்தனர்.
  • எல்லா மேல் நாட்டு மாபெரும் ரிடெயில் விற்பனை பிராண்டுகள் இந்தியாவுக்குள் வர தீவிர முயற்சிகள் தொடங்கிவிட்டனர்.

"நாட்டாரே! அரக்கிலோ வெல்லம் தாங்க இப்படி!"

"என்ன அயிரூட்டம்மா! அமாவாசைக்கு எள்ளு வாங்கல?"

"செட்டியாரே! கடப்பையன இஞ்ச அனுப்புங்க கொஞ்சம், இந்த மூட்டயத்தூக்கி சைக்கிள்ள வெக்கணும்!"

ஜாதிப்பெயருடன் விளிக்கப்பட்டாலும் இந்த உரையாடல்களில் இருக்கும், இல்லை, இல்லை, ஒரு காலத்தில் இருந்த வாத்சல்யம் இப்போது காணக்கிடைக்காது. ஒருவருக்கொருவர் உதவி செய்த வித்தியாசம் பாராது கை கொடுத்த சகோதரத்துவம் போயே போய்விட்டது.

இதில் விளிக்கப்படும் நாடாரும் செட்டியாரும் நாம் அனைவரும் விரும்பத்தக்க மளிகைக்கடை முதலாளிகள். நம் வீட்டு விசேஷத்தை தம் விட்டு விசேஷமாக எண்ணி, மகிழ்ந்து சாமான்கள் தந்து "இப்ப என்ன அவசரம்! சாருக்கு சம்பளம் வரட்டும், அப்புறம் வாங்கிக்கறேன்" என்று கை கொடுத்த வியாபாரம்.

ஸ்பென்சர்ஸ், புட்வோர்ல்ட், ரிலையன்ஸ் பிரெஷ், பிக் பசார் என்றெல்லாம் வந்த போதே இந்த சிறு முதலாளிகள் ஒவ்வொருவராக தொலைய ஆரமித்தனர்.

ஐ.டி., சாப்ட்வேர், பாங்க் என்றெல்லாம் அடுத்த தலைமுறை வேலைக்குப்போய் கழுத்தில் ஐடெண்டிடி கார்டு போட ஆரம்பித்தவுடனே இவர்களின் பழக்க வழக்கம் மாறியது.

"என்னம்மா இது! தெருக்கோடி கடையில வாங்கறே! என் கிட்ட விடு! நான் போய் ரிலையன்சு வாங்கிண்டு வர்ரேன்!"

"ஏசி போட்டு, என்ன அழகா டிரே வெச்சு சுத்தமா அடுக்கி வெச்சிருக்கான்! இத விட்டு என்னமோ மளிகைக்கடை அது இதுன்னு வாங்கறியே!"

பெற்றோர்கள் அதட்டப்பட்டு, பிளாஸ்டிக் பைகளில் காய்கறியும், மளிகையும் பிள்ளை பெண்ணின் கார்களில் வீட்டுக்குள் வர ஆரம்பித்தது. இதோ இப்போது அதன் அடுத்த கட்டம்….

வெளிநாட்டு முதலீடு 100 சதவீதம் வரை இந்த உணவுப்பொருட்களின் தயாரிப்பு, மொத்த மற்றும் சில்லரை விற்பனையில் அனுமதிக்கப்பட்டுவிட்டது. போன பட்ஜெட் உரையின் போதே அருன்ஜெட்லி இந்த விஷயத்திற்கான அடிக்கல் நாட்டிவிட்டார்.

இந்தியாவின் பெரும்பாலான சில்லரை வியாபாரம் கட்டுப்படுத்தப்படாமல் சிறு முதலாளிகளின் பிடியில் சிக்கி, விவசாயிகளுக்கு சரியான விலை போய்ச்சேராமல் நடுவில் உள்ள புரோக்கர்களிடம் சீரழிவது நாம் அறிந்த ஒன்று. இந்த 100 சதவீதம் வெளிநாட்டு முதலீடு இந்த குறையைப்போக்கிவிடும் என்று சொல்லுகிறார்கள்.

டெஸ்கோ, செயின்பரிஸ், வெயிட்ரோஸ், மார்க்ஸ் & ஸ்பென்சர்ஸ், ஹாரோட்ஸ் என்று எல்லா மேல் நாட்டு மாபெரும் ரிடெயில் விற்பனை பிராண்டுகள் இந்தியாவுக்குள் வர தீவிர முயற்சிகள் தொடங்கிவிட்டனர்.

"இவர்கள் அனைவரும் இந்தியாவில் முதலீடு செய்ய மகா தயாராக இருப்பதாக மத்திய மந்திரி தெரிவிக்கிறார்.

இந்தியாவின் உணவுப்பொருளாதாரம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. சராசரி இந்தியன் சம்பாதிக்கும் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் நாற்பது ரூபாயை உணவிலும் உணவுப்பொருட்களிலும்தான் செலவழிக்கிறானாம். நம் மந்திரியின் வார்த்தையில் " இந்தியன் இன்று இந்த மாதிரியான இண்டர்நேஷனல் பிராண்டுக்குத்தயாராகி விட்டான்" என்கிறார்.

இது சரிதானா இல்லையா என்பதை எதிர்கட்சிகளும் ஆளும் கட்சியும் விவாதித்துக்கொள்ளட்டும். நாம் அதில் நுழைய வேண்டாம்.

இந்தியாவில் இன்று ஒழுங்குபடுத்தப்பட்ட சில்லரை விற்பனை வெறும் 2 சதவீதம் தான். ஆனால் மேல் நாட்டு உணவுப்பொருட்கள் இந்த 2 சதவீதம் மார்கெட்டில் மற்றும் விற்றால் போறாதே! ஆக, முழு முதலீட்டை அனுமதித்ததால், இந்தப்பொருட்கள் இப்போது நம் தெருக்கோடி மளிகைக்கடைகளிலும் கிடைக்கும் வாய்ப்பு பெருகும் என்பது ஒரு வாதம்.

"ஏங்க நான் கிளம்பிட்டேன்! நீங்க வர்ர லேட் ஆகும்னு சொன்னீங்களே! அப்படியே நெட்ல போய் அரைக்கிலோ கோதுமையும், கால் கிலோ தக்காளி, வெங்காயம் அப்புறம் நூறு கிராம் தனியாவும் ஆர்டர் பண்ணிடுங்க! நா வீட்டுக்குப்போறதுக்குள்ள வந்தா, இன்னிக்கு சப்பாத்தி டின்னர்!"

"ஒரு வேலை அதுக்குள்ள டெலிவரி ஆகலைன்னா..?"

நீங்க ஹோட்டல்ல சாப்பிட்டு எனக்கும் வாங்கி வந்துடுங்க! எனக்கு தயிர் சேமியா!"

ஆம், இனி உப்பு புளியை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிவிட முடியும்!

இந்தியாவுக்குள் நுழையும் வாய்ப்பை ஒரு முறை முயன்று தவறவிட்ட வால்மார்ட் மீண்டும் வருகிறார்கள். தவிர பிரேசில் நாட்டிலிருந்தும் சில பெரிய சில்லரை வர்த்தகர்களும் இந்தியாவுக்கு வந்துவிடவேண்டும் என்று முயலுகின்றனர். இதையெல்லாம் மனதில் கொண்டு உணவு அமைச்சரகம் வருடா வருடம் ஒரு வோர்ல்ட் புட் சம்மிட்டை நடத்த ஆயத்தம் செய்து வருகின்றது.

நம் நாட்டில் விளைவதைக்கொண்டு, வெளிநாட்டு பிராண்ட் உணவுப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யவிருக்கும் அனைத்து நிறுவனங்களும் இதில் பங்கேற்க வருகின்றனர். நம் பிரதமர் மோடியின் மே இன் இந்தியா கொள்கைப்படி அவர்கள் இங்கேயே கச்சாப்பொருட்களை கொள்முதல் செய்து உணவுப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறுவ முன் வருவது மிகப்பெரும் வேலை வாய்ப்பையும் அந்நியச்செலாவணி ஈட்டும் சக்தியையும் நமக்கு அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

இதை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த உணவுப்பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. இருக்கக்கூடாது அல்லது குறைவான நிலுவையை விதிக்க வேண்டும் என்று உணவு அமைச்சகம் ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் லாபியிங் செய்வதாகப்பேச்சு ஓடுகிறது.

" டீ ரமா! மிளகா வத்தல் அரைக்கிலோ வாங்கிக்கோ!"

"என்ன பிராண்டு மிளகா வத்தல் மா வேணூம்?"

மிளகா வத்தலுக்கு பிராண்டா?

வரப்போகிறது!

Tags:    

Similar News