null
அக்னி நட்சத்திர காலத்தில் சுபகாரியம் செய்யலாமா?
- அக்னி என்றால் நெருப்பு அதாவது சூரிய பகவானுக்கு அக்னி என்ற இன்னொரு பெயரும் உண்டு!
- அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல் உள்ளிட்ட அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம்.
கோடை காலம் என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது "அக்னி நட்சத்திரம்"தான்!
அக்னி என்றால் நெருப்பு அதாவது சூரிய பகவானுக்கு அக்னி என்ற இன்னொரு பெயரும் உண்டு!
சித்திரை மாதம் 21-ந்தேதி துவங்கி, வைகாசி மாதம் 14-ந்தேதி வரையிலான 21 நாட்கள் அக்னி நட்சத்திர காலம் ஆகும். இதை கிராமங்களில் முன்னேழு,பின்னேழு நாட்கள் என்பார்கள். இவ்வாண்டு இன்று தொடங்கிய அக்னி நட்சத்திரம் மே 28ந் தேதி வரை நீடிக்கிறது.
சித்திரை மாதத்தில் பரணி மூன்றாம் பாதத்தில் தொடங்கி இடையில் கார்த்திகை நான்கு பாதங்கள் சஞ்சாரம் செய்து ரோகிணி இரண்டாம் பாதம் வரை சூரியன் சஞ்சாரம் செய்வார்.
இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். சித்தரை மாதத்தில் சூரிய பகவான் மட்டுமல்ல சந்திர பகவானும் பூமியின் அருகிலே சஞ்சாரம் செய்வார்!
சூரியனின் சஞ்சாரத்தின் அடிப்படையிலேயே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகிறது.
சூரிய பகவான் மேசத்தில் பயணிக்கும் காலம் சித்திரை! மேச ராசியின் அதிபதி செவ்வாய். நவகிரகங்களில் செவ்வாய் பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி பகவானின் தன்மையை பெற்றவர்.
சூரிய பகவானும் நெருப்பு வடிவானவர் என்பதால் அவர் மேசம் ராசியில் சஞ்சரிக்கும்போது உச்சம் பெறுகிறார். உச்சம் என்றால் மிக வலிமையாக இருக்கிறது என்று பொருள். சூரியனின் பலம் கூடி வெப்பம் அதிகமாக வெளிப்படும் காலமாக சித்திரை மாதம் அமைகிறது.
சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் அக்னி நட்சத்திர காலத்தில் முதல் மற்றும் கடைசி ஏழு நாட்கள் வெயிலின் தாக்கம் குறைவாகவும், இடையில் ஏழு நாட்கள் அதாவது சூரிய பகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் அதிகமாகவும் இருக்கும்.
ஏனென்றால் கார்த்திகை நட்சத்திரமே சூரிய பகவானின் நட்சத்திரம் ஆகும்.பொதுவாக இந்த கால கட்டத்தில் பூமி வறண்டு வயல், குளங்களில் வெடிப்பு ஏற்படுவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அதன் பின் வைகாசி கடைசியில் ஆரம்பிக்கும் தென் மேற்கு மழை பருவம் நமக்கு கோடை மழையாக பொழிந்து வெடிப்புகள் சரியாகிவிடும். இதனால் மழை நீரை தானாக பூமி சேமித்து கொள்ளும்.
கிராமத்து பகுதிகளில் இன்னமும் ஒரு சொலவடை உண்டு. சித்திரையில் குழந்தை பிறந்தால் சீரழித்துவிடும், ஆடியில் குழந்தை பிறந்தால் அலைக்கழித்துவிடும் என்று.
இது எதற்கு சொல்லப்பட்டது என்றால் சித்திரையில் வரும் அக்னி நட்சத்திரத்தை கணக்கில் கொண்டும், ஆடி மாதம் தட்சாயணம் காலம் ஆரம்பிம்பதை கணக்கில் கொண்டும் சொல்லப்பட்டது.
உண்மையில் சித்திரை மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மேலும் கத்திரி வெயில் காலமான அக்னி நட்சத்திர காலத்தில் குழந்தை பிறந்தால் சரும நோய்களால் குழந்தை பாதிக்கப்படும் என்ற காரணத்திற்காக முன்னோர்கள் அப்படி சொன்னார்கள்.
தற்போது நவீன காலத்தில் ஏகப்பட்ட மருத்துவ வசதிகள் வந்துவிட்டபடியால் சித்திரை உள்ளிட்ட எந்த மாதத்தில் குழந்தை பிறந்தாலும் நாம் கவலை கொள்ள தேவையில்லை! மாறாக சித்திரையில் பிறக்கும் குழந்தைகள் சூரிய பகவானின் ஆதிக்கம் பெற்றிருப்பதால் அவர்கள் எதிலும் வல்லவர்களாக திகழ்வார்கள்.
இந்த "அக்னி நட்சத்திரம்"என்ற பெயர் பஞ்சாங்க ரீதியாக வந்ததுதான். விஞ்ஞான ரீதியாக பார்த்தோமேயானால் பூமியின் சாய்மானம் காரணமாகவே நமக்கு பருவகாலங்கள் ஏற்படுகின்றன!
பூமியின் சாய்மானம் காரணமாகத்தான் நமக்கு சூரிய பகவான் தெற்கு,வடக்கில் சஞ்சாரம் செய்வது போல தெரிகிறது.
இந்த வகையில் தான் மார்ச் 23-ந்தேதி சூரியன் பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருப்பார். அதன் பிறகு அது மெல்ல மெல்ல வடக்கே நகர ஆரம்பிக்க வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த நாட்களில்தான் நாம் அக்னி நட்சத்திரத்தை உணர்கிறோம்.
சரி எல்லோருக்கும் ஒரு சந்தேகம் உள்ளது. அதாவது அக்னி நட்சத்திர நாட்களில் எந்த சுபகாரியங்களும் செய்யக்கூடாதா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது.
அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல் உள்ளிட்ட அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம்.
அதேபோல் அனைத்து விதமான மங்கல காரியங்களுக்கும் பேச்சுவார்த்தை நடத்தலாம்.
ஆனால் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் பால் காய்ச்ச கூடாது . அதே போல் வீடு நிலை வைப்பது, சிலாப் போடுவது போன்ற விசயங்களை தவிர்க்கவும்.
மேலும் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது, நார் உரிக்கக்கூடாது, விதை விதைக்கக்கூடாது, கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது, நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது!
முடி இறக்குதல், காது குத்துதல், புது வீட்டுக்கு குடிபோய் பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் செய்தல், பூமி பூஜை செய்வது கூடாது. கிணறு வெட்டுதல் போன்ற விவசாய வேலைகளை தொடங்குவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். இரண்டு சக்கர வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்வதை தவிர்க்கவும்.
அக்னி நட்சத்திர காலங்களில் கண்டிப்பாக நாம் ஒரு மரமாவது நடவேண்டும்.உலகிலே மிக புண்ணிய விசயம் மரம் நடுவது ஆகும்.
நாம் நடும் மரம் நல்லவர்,கெட்டவர் என பாகுபாடின்றி அனைவருக்கும் நிழல் மட்டுமல்ல காய்,கனிகளை கொடுக்கும். அதேபோல் எத்தனையோ பறவைகளுக்கு வாழ்விடமாகவும் இருக்கும்.
நிழலில் இளைப்பாறும் மனிதர்களின் மன திருப்தியும்,பறவைகளின் மகிழ்வும் நமக்கு புண்ணியமாக கிடைக்கும். ஆதலால் இந்த அக்னி நட்சத்திர காலங்களில் அனைவரும் நாம் மரம் நடுவது மிகப்பெரிய புண்ணியமாகும்.
நமக்கு நல்ல பல விசயங்களை உணர்த்தும் அக்னி நட்சத்திர காலத்தை வெறுக்காமல் இந்த காலங்களில் நீர் பந்தல்,மோர் பந்தல், தயிர் சாதம் உள்ளிட்ட அன்னதானங்களை செய்து மரங்கள் நட்டால் இந்த அக்னி நட்சத்திரம் பல நன்மைகளை தரும் என்பது உண்மையாகும்.