சிறப்புக் கட்டுரைகள்

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி

Published On 2023-04-21 16:24 IST   |   Update On 2023-04-21 16:24:00 IST
  • சிறுநீரகம் கெட்டுப் போய் இருந்தாலும், தொற்று பாதிப்பு இருந்தாலும் கூட ரத்த அழுத்தம் வரும்.
  • தினமும் யோகா, தியானம், சுவாச பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

மாரடைப்பு வர ரத்த அழுத்தமும் ஒரு காரணம் ஆகும். ரத்த அழுத்தம் பற்றி இன்று பார்க்கலாம்.

ரத்த அழுத்தம் என்றால் என்ன? ஆற்றில் தண்ணீர் ஓடுவதுபோல நம் ரத்தக் குழாய்களில் ரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி ஓடுவதற்கு ஓர் அழுத்தம் தேவை. அந்த அழுத்தத்துக்கு பெயர்தான் ரத்த அழுத்தம்.

பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. பாதரச அளவு என்று இருந்தால், அது வழக்கமானது. இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம். அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகின்ற அழுத்தம் இது.

80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம். அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உடலில் இருந்து வருகிற ரத்தத்தைப் பெற்றுக்கொள்கிறது. அப்போது ஏற்படுகின்ற அழுத்தம் இது. ரத்த அழுத்தம் எல்லோருக்குமே சொல்லி வைத்ததுபோல் 120/80 என்று இருக்காது. உடல், எடை, உயரம் போன்றவை வித்தியாசப்படுவதுபோல, சிஸ்டாலிக் அழுத்தமும் டயஸ்டாலிக் அழுத்தமும் வித்தியாசப்படலாம்.

ஆகவேதான் ஒரு நபருக்கு 100/70 மி.மீ முதல் 140/90 மி.மீ. வரை உள்ள ரத்த அழுத்தத்தை வழக்கமானது என்றும், இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை 'உயர் ரத்த அழுத்தம்' 100/70 மி.மீட்டரைவிடக் குறைந்தால் அதை 'குறை ரத்த அழுத்தம்' என்றும் வரையறுக்கப்பட்டு உள்ளது.

ரத்த அழுத்தத்தில் ஒன்று என்ன காரணத்தினால் வந்தது என்று தெரியாத வகை உடையது. தலை லேசாக சுற்றியது, டாக்டரிடம் சென்று சோதித்தேன். 150-100 என்று அளவு கூறி உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக சொன்னார். அனைத்து சோதனைகளையும் செய்து பார்த்து விட்டோம். உடலில் எந்த கோளாறும் இல்லை. ரத்த அழுத்தம் மட்டும் இருக்கிறது என்பார் டாக்டர். இந்த வகை இனம் புரியாத ரத்த அழுத்தம், காரணம் இல்லாமல் வரும் ரத்த அழுத்தம் ஆகும். இந்த வகை ரத்த அழுத்த நோயால் தான் 85 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மற்றொன்று காரணத்தோடு வரும் ரத்த அழுத்தம். இந்த வகை ரத்த அழுத்தம் 10 வயது சிறுவனுக்கும் இருக்கலாம். 30 வயது இளைஞர் மற்றும் 50 வயது பெரியவருக்கும் இருக்கலாம். அவர்களுக்கு ஏன் ரத்த அழுத்தம் வந்தது என்று தீவிரமாக பரிசோதித்து கண்டுபிடிக்க வேண்டும். சிறுநீரகத்தில் பாதிப்பு இருந்தால் ரத்த அழுத்தம் வரும். சிறுநீரகத்துக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை மற்றும் ரத்தக் குழாயில் சுருக்கம் இருக்கும்பட்சத்தில் ரத்த அழுத்தம் ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கும்.

உடலில் இடது மற்றும் வலது பக்கம் என 2 சிறுநீரகங்கள் உள்ளன. 2 பக்கமும் ரத்தம் செல்கிறது. அந்த ரத்த குழாயில் சிறிது அடைப்பு இருந்தால் பாதிப்பு ஏற்பட்டு ரத்த அழுத்தம் 200 அளவுக்கு சென்று விடும். இதை தெரிந்து கொள்ளாமல் நாம் எத்தனை முறை மாத்திரை உட்கொண்டாலும் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வராது. சிறுநீரகத்துக்கு டாப்ளர் என்று ஒரு பரிசோதனை செய்து அந்த ரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்தால் ரத்த அழுத்தம் நிரந்தரமாக சரியாகி விடும். சிறுநீரகம் கெட்டுப் போய் இருந்தாலும், தொற்று பாதிப்பு இருந்தாலும் கூட ரத்த அழுத்தம் வரும்.

ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய குழாயான மகா பெருஞ்சிரையில் சுருக்கம் ஏற்பட்டாலும் ரத்த அழுத்தம் வரலாம். சிலருக்கு கையில் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். காலில் குறைவாக இருக்கும். வழக்கமாக பரிசோதனை செய்யும் போது 2 கைகள், கால்களில் ரத்த அழுத்தத்தை சோதித்து பார்க்க வேண்டும். படுக்க வைத்து, உட்கார வைத்து, நிற்க வைத்து ரத்த அழுத்த அளவை பார்க்க வேண்டும்.

சிலர் தலைவலி என்று ஆஸ்பத்திரிக்கு போவார்கள், ரத்த அழுத்தம் சோதித்து பார்த்தால் 220/120 இருக்கும். அது அபாயகரமான உயர் ரத்த அழுத்தம். உடனே ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டும். 200-க்கு மேல் சென்று விட்டாலே அபாயகரம் தான். கீழே இருக்கும் அளவு 100-க்கு மேலே சென்றுவிட்டால் அபாயகரம். உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் மூளையில் இருக்கும் ரத்தக்குழாய் உடைய வாய்ப்புள்ளது. அதனால் சுயநினைவு இழக்க கூடும். கை, கால் வலிப்பு ஏற்படலாம்.

உயர் ரத்த அழுத்தத்தால் 3 விதமான பாதிப்பு ஏற்படும். ஒன்று மூளையில் ரத்தக் கசிவு, இதனால் பக்கவாதம் வர வாய்ப்புள்ளது. கை, கால்கள் செயல்படாமல் போகலாம். அடுத்து மாரடைப்பு, 120 அளவு இருக்கும் ரத்த அழுத்தம் 180-க்கு போனால் இதயத்தில் அடைப்பு வரும். மற்றொன்று சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படும். அப்போது சிறுநீர் வெளியே வராமல் போகும். ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அபாயகரமான நிலைக்கு சென்றால் மூளை செயல்படாது. இதயம், சிறுநீரகம் வேலை செய்யாது.

இத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தும் ரத்த அழுத்தத்தை நாம் சாதாரணமாக விட்டு விடக்கூடாது. அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்வது மிகவும் அவசியமானது. ரத்த அழுத்தம் நமது உடலுக்குள்ளே இருந்து நம்மை கொல்லும் நோய். அதனை நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும். டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்யுங்கள். ஒரு நாளைக்கு 2 முறை பரிசோதித்து பாருங்கள்.

இவ்வாறு 3 நாட்கள் தொடர்ந்து சென்று பரிசோதனை செய்து முடிவை தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஒரு முறை மட்டும் பரிசோதித்து விட்டு உயர் ரத்த அழுத்தம் என்று சொல்வது தவறு. 3 நாட்கள் தொடர்ந்து சோதித்து 3 நாட்களும் ரத்த அழுத்தம் இருந்தால் தான் உயர் ரத்த அழுத்தம் என்று உறுதி செய்ய வேண்டும். அவசர கதியில் ரத்த அழுத்தம் சோதித்து விட்டு அதற்கு சிகிச்சை பெற கூடாது. அப்படி சிகிச்சை பெற்றால் மேலும் ஒரு புது நோய் வந்து விடும். அல்லது அதிக ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தமாக மாறி விடும்.

குறைந்த ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் போலவே குறைந்த ரத்த அழுத்த நோயும் மோசமானது. உலகில் இளம் வயதினருக்கு 100-ல் 10 பேருக்கு குறை ரத்த அழுத்தம் உள்ளது. வயது கூடும்போது இந்த சதவீதமும் கூடுகிறது. உயர் ரத்த அழுத்த நோயை 'அமைதியான ஆட்கொல்லி நோய்' என்று அழைப்பர். இதுபோல் குறை ரத்த அழுத்த நோயை ஒரு எரிமலை என்பர். எரிமலை எப்போது நெருப்பைக் கக்கும் என்று சொல்ல முடியாதோ, அப்படித்தான் பல நேரங்களில் இது ஆபத்தில்லாத நோயாக அமைதி காத்தாலும், சில வேளைகளில் திடீரென்று உயிருக்கு ஆபத்து தருகிற நோயாக மாறிவிடுவதும் உண்டு.

இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்லத் தடை உண்டாவதுதான் குறை ரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம். ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்றுவிடுகிறது. இதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்துவிடுகிறது. மயக்கம் ஏற்படுகிறது.

தலைக்கனம், தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, வழக்கத்துக்கு மாறான அதீத நாவறட்சி, சோர்வு, பலவீனம், கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு, பார்வை குறைவது, மனக்குழப்பம், வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைமை, உடல் சில்லிட்டுப்போவது, மூச்சுவாங்குவது போன்ற அறிகுறிகளில் ஒன்றோ பலவோ ஏற்பட்டால் அப்போது குறை ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது.

தந்தைக்கு ரத்த அழுத்தம் இருந்தால் மகனுக்கும் வர வாய்ப்பு உண்டு. அப்படி வந்தவர்கள் ரத்த அழுத்தத்தை மாத்திரை உட்கொண்டு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி

ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிக்க நமது வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைச் செய்வது முக்கியம். மனஅழுத்தம் இல்லாமல் இருங்கள் மற்றும் உடற்தகுதியுடன் இருக்க தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். காலையில் 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளலாம். ஸ்கிப்பிங் குதிக்கலாம். உடற்பயிற்சி செய்தால் உடலில் இருக்கும் 30 வகையான நோய்கள் குணமாக வாய்ப்பு உள்ளது. ரத்தஅழுத்தம், மாரடைப்பு, கொழுப்பு, அதிக எடை போன்றவை கட்டுப்படும். நன்றாக பசி எடுக்கும். யோகா மற்றும் தியானம் ஆகியவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் நல்ல பழக்கங்கள் ஆகும். எனவே தினமும் யோகா, தியானம், சுவாச பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

மது அருந்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக சோடியம் உள்ள உணவுகளை தவிர்க்கவும், உயர் ரத்த அழுத்தம் இருந்தால் உணவில் குறைந்த அளவில் உப்பு சேர்க்கவும். புகைபிடித்தல் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே புகைபிடிப்பதை நிறுத்துவது, உங்கள் உடல் சாதாரண ரத்த அழுத்தத்தை மீட்டெடுக்க உதவுகிறது. உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்க்கவும். இது ரத்த அழுத்தத்தில் சோடியத்தின் விளைவைக் குறைக்க உதவுகிறது. பொட்டாசியம் நிறைந்த உணவுகளில் பட்டாணி, வாழைப்பழம், கீரை, அவகோடோ, காளான்கள், வெள்ளரிகள் மற்றும் ஆரஞ்சு ஆகியவை அடங்கும். டீ, காபி ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். அதனையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

நாமே சொந்தமாக ஒரு ரத்த அழுத்த பரிசோதனை எந்திரம் வாங்கி நம் உடலை சோதித்து அறிந்து கொள்ளலாம். இதனால் டாக்டரிடம் செல்லும் செலவு குறையும். இப்படி நாமே சோதித்து பார்க்கும் போது அதிக ரத்த அழுத்தத்தால் ஏற்படும் பின் விளைவுகளை தடுக்கலாம்.

தினந்தோறும் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து எழுதிக் கொண்டே வரவேண்டும். ஒருநாள் அலுவலகத்தில் வேலைப்பளு காரணமாக ரத்த அழுத்தம் அதிகரித்து இருக்கலாம், மற்றொரு நாளில் தலைவலி காரணமாக அதிகரித்து இருக்கலாம். இப்படி எழுதி வைத்துக் கொண்டு டாக்டரிடம் சென்று அந்த விவரங்களை தெரிவித்தால் அதற்கேற்ப மாத்திரைகள் வழங்குவார். ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். எந்திரம் கையில் இருந்தால் ரத்த அழுத்த சோதனை செய்வதற்காக மட்டும் டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

தொடர்புக்கு:

info@kghospital.com, 98422 66630

Tags:    

Similar News