அதிசயிக்க வைக்கும் செங்கல்பட்டு கோவில் வரலாறு: மாறி குடிகொண்ட ராமரும் அனுமனும்
- கோவிலுக்கு எதிரே சுயம்புவாய் ஒரு பாறையில் ஆஞ்சனேயர் திருவுருவம் கோட்டை வீர ஆஞ்சனேயர் என்ற பெயரில் இருந்து வழிபடப்பட்டது.
- செங்கல்பட்டு வேதாசல நகரில் செங்கல்பட்டு பேருந்து நிலயத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலேயே அமைந்து உள்ளது.
சென்னை ராஜதானியான கேரளம், ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை, பிரிட்டீசாரும், டச்சு போர்ச்சுக்கீசியர்களும் காலனிகளை அமைத்துக்கொண்டு கூறு போட்டுக்கொண்டு நாட்டில் இருந்த சிறு சிறு மன்னர்களை அடிமைகளாக்கி வரி வசூல் செய்து கப்பம் கட்ட வைத்தனர். காலசூழலில் பிரிட்டீசாருக்கு அடங்கியாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.
வியாபாரத்திற்காக வந்தவர்கள் வசதிக்காக ரெயில் மார்க்கத்தை ஏற்படுத்தத் தொடங்கினர். ராயபுரத்தில் ரெயில் நிலையம் கிபி 1856ல் துவக்கப்பட்டது சென்னையில் இருந்து குறிப்பாக தெற்கே செல்லும் ரெயில் பாதைகள் அமைக்க நிலங்கள் அளக்கப்பட்டு காஞ்சிபுரம், மகாபலிபுரம் மற்றும் புராதனச்சிறப்பு மிக்க பட்சி தீர்த்தம் எனப்படும் திருக்கழுக்குன்றம் ஆகியவற்றுக்கு இடையே செங்கல்பட்டு வழியாக ஊருக்கு வெளியே இருப்புப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது
செங்கல்பட்டில் சுமார் 800 ஆண்டுகட்கு முன்பாக விஜயநகர காலத்தில்அமைக்கப்பட்ட ஏரி, கோட்டையும் அதனுள் விஜயநகர மன்னர்களின் வழிபாட்டு தெய்வமாக இருந்த "ராஜ்ய பரிபாலன ராமர் கோவில்" ஆகியவை இருந்தன. அந்தக் கோட்டையை ஆதியில் திம்மராஜா என்பவர் கட்டி ஆதர்ச தெய்வமாக ஆராதித்து வந்த ராஜ்ய பரிபாலன ராமர் கோவிலும் உண்டு. அது கோட்டைக்குள் இருந்ததால் கோட்டை கோதண்டராமர் என வணங்கப்பட்டது.
செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து செழித்திருந்ததால் செங்கழுநீர்பட்டு செங்கல்பட்டு என மருவி வழங்கியது. ராஜ்ய பரிபாலன ராமர் கோவில் செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பொதுமக்களின் வழிபாட்டிலும் அன்பிலும் இருந்தது. அந்த கோவிலுக்கு எதிரே சுயம்புவாய் ஒரு பாறையில் ஆஞ்சனேயர் திருவுருவம் "கோட்டை வீர ஆஞ்சனேயர்" என்ற பெயரில் இருந்து வழிபடப்பட்டது. கோட்டையை உடைத்து புதிய ரெயில் பாதை அமைக்க திட்டங்கள் தீட்டப்பட்டன. அந்த ரெயில் பாதை அமையும் இடம் ராஜ்ய பரிபாலன ராமர் கோவிலின் குறுக்கே ஆகும்.
ஆங்கிலேய அரசாங்கம் ஏரிக்கரையைத் தொட்டு ரெயில் பாதை அமைக்கும்போது கோட்டைக்குள் இருக்கும் தொன்மைமிக்க ராஜ்ய பரிபாலன ராமர் கோவில் குறுக்கே நின்றதால் அதை அகற்றி விட்டு ரயில் பாதை அமைக்க முடிவு செய்தது.
தாங்கள் பல தலைமுறைகளாக போற்றி வணங்கி வந்த கோவிலை அகற்றக் கூடாது என பொதுமக்களிடம் கொந்தளிப்பு உண்டானது. அதே நேரத்தில் இங்கிலாந்து நாட்டிலும் நிர்வாகத்தில் பலவிதமான பிரச்சினைகள் உண்டாகி குழப்பங்கள் உண்டானது. ஆங்கில அரசும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட மதராஸ் ராஜதானியில் இருக்கும் அன்றைய செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அமைதியின்றி கொந்தளித்தன.
அப்போது சென்னை கவர்னருக்கு பிரிட்டீஷ் மகாராணியிடம் இருந்து ஒரு தாக்கீது (தகவல்) வந்ததாம். கோவில் அகற்றுவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து தகுதியான நியாயவாதிகள் மூலம் பொதுமக்களிடம் கருத்து கேட்டு உடன்பாடு ஏற்படுத்தி பிறகு கோவிலைப் பிரித்து வேறு இடத்தில் கட்டுங்கள் என தகவல்கள் கிடைத்ததாம்.
கோவிலை பிரித்து புது இடத்தில் கட்டும் பொறுப்பு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மநியாயத்தில் சிறந்த வக்கில்கள் வசம் டிஸ்டிரிக்ட் கோர்ட்டு ஒப்படைத்தது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் புரிய வைத்து, ஒத்த கருத்தை ஏற்படுத்தி கோவிலை அந்த இடத்திலிருந்து பிரித்து எடுத்து வந்து எந்த சேதமும் ஏற்படாமல் மற்றோரு புராதனப் பெருமை வாய்ந்த வரதராஜப்பெருமாள் கோவிலிலேயே இரட்டைப் பெருமாள் கோவிலாக அமைப்பது எனவும் முடிவு செய்தனர்.
பொதுமக்கள், தனவந்தர்கள், வக்கில்கள், கோர்ட்டின் பணியாளர்கள் சேர்ந்து அதனை அங்கிருந்த மலையை ஒட்டி இருந்த வரதராஜர் சன்னதி உள்ளபடி தெற்கு நோக்கியும். பெருந்தேவித் தாயார் சன்னதி கிழக்கு நோக்கியும் இரண்டு சன்னதிகளுக்கும் இடையில் முன்புறம் கிழக்கு நோக்கி ராமர் சன்னதியை அமைக்க முடிவு செய்தனர். கிபி 1885ம் ஆண்டில் கோட்டைக்குள் இருந்த ராமர் சன்னதியின் கற்கள் ஒவ்வொரு எண்ணிடப்பட்டு பிரிக்கப்பட்டு தண்டலம் மிராஸ்தார் வெங்கடாசலம் பிள்ளை என்பவரால் ஆனந்த விமானத்தின் கீழ் அனேகருடைய உதவி பெற்று முன்னின்று அவ்வாறே கொண்டுவந்து அடுக்கப்பட்டு கட்டி முடிக்கப் பட்டது. கிழக்கு பார்த்து இருந்த ராமர் சந்நிதி விக்ரகங்கள் முதல் அனைத்தும் புலிப்பாக்கம் வெங்கட நாராயணப்ப நாயுடு என்பவரால் சேதம் ஏதும் ஏற்படாமல் கொண்டு வரப்பட்டு அவ்வாறே அமைக்கப்பட்டது. அதேபோல் சப் ஜட்ஜாயிருந்த சூரா நரசிம்மலு நாயுடு திருமதில், மடப்பள்ளி, வாகன மண்டபம், வசந்த மண்டபம் திருக்குளம் ஆகியவற்றைக் கட்டி வைத்து கோபுர வாயிற் கதவு கல்யாண மண்டபம் ஆகியவற்றுக்கு அஸ்திவாரம் போட்டு வைத்தார்.
கோவில் பிரித்துக் கட்டப்பட்ட பிறகு பழைய இடத்தில் இருந்த ஒரு சிறிய பாறையில் சன்னதிக்கு எதிரில் சுயம்புவாய் உருவாகி இருந்த வீர ஆஞ்சநேயரைப் பெயர்த்து எடுக்க முடியாத நிலை அந்த கோட்டை வீர ஆஞ்சனேயர் இன்றும் அங்கேயே பாறையில் ரயில்வே தண்டவாள ஓரமாகவே பயணிகள் பதுகாப்பிற்காக எழுந்தருளியுள்ளார்.
ஆனாலும் பட்டாபிஷேக ராமர் இருக்கும் இடத்தில் கோட்டைக்குள் இருந்த வீர ஆஞ்சனேயர் கொண்டு வரப்பட்டு ராமர் சன்னதியின் வலப்புறம் சன்னதி தனியாக சிறியதாக அமைக்கப்பட்டது.
கட்டப்பட்ட கோவிலை பராமரிப்பதற்காக சில நிரந்தர நிதிகள் உருவாக்கப்பட்டன. இங்கிலாந்து விக்டோரியா மகாராணி வேறிடத்தில் மாற்றிக் கட்டப்படும் ராஜ்ய பாரம்பரிய ராமருக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென நினைத்து டிஸ்ட்ரிக்ட் கோர்ட் ரீடர் மா ராமானுஜ நாயுடுவுக்குத் தெரிவித்தார். மகாராணியாரின் 50-வது வயது பிறந்த நாளை முன்னிட்டு 16-2-1887-ம் தேதியில் அவர் தெரிவித்தபடி 12.2 தோலா எடையுடைய, 70 பொன் காசுகள் கோர்த்த பொன்காசுமாலையை சக்கரவர்த்தினியவர்கள் பெயரால் சமர்ப்பித்தார்.
7-4-1877-ல் செங்கல்பட்டு ரெயில் நிலையம் உள்ள இடத்தில் இருந்து பிரித்து மலையடிவாரத்தில் கொண்டு வந்து கட்டப்பட்ட குடிபெயர்ந்த ராமர் சன்னதிக்கு திருக்கடல் மல்லை தல சயனப் பெருமாள் எழுந்தருளி மங்களா சாசனம் செய்தார், அப்போது செங்கல்பட்டு ராஜ்ய பரிபாலன ராமர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் இங்கிலாந்து சக்கரவர்த்தினியவர்கள் வேண்டுதல் செய்து சமர்ப்பித்த பொன் காசு மாலை முதன்முறையாக சார்த்தப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
இந்த வரலாறுகள் ராமர் கோவிலின் கிழக்குப்பக்க முன் வாயில் மரக்கதவில் இருந்து எடுக்கப்பட்ட வெள்ளைச் செம்புப் பட்டயத்தின் மூலமும் கதவின் அருகினில் உள்ள கல்வெட்டின் மூலமும் அறிய முடிகிறது.
கம்பர் கருத்துப்படி அனுமன் சிம்மாசனத்தைத் தாங்கி நிற்க அங்கதன் உடைவாள் ஏந்த, பரதன் வெண்குடை தாங்க, மற்ற இரு சகோதர்களும் சாமரம் வீச, சீதை மகிழ , வசிஷ்டர் மகுடம் சூட்டுகிறார். இந்த பட்டாபிஷேக வைபவம் முடிந்த பின்னால் அரசாளும் வைபவக் காட்சி நடைபெறுகிறது
இக்கோவில் கருவறையில் மூலவராகிய ராஜ்ய பரிபாலன பட்டாபிஷேக ராமர் பத்திராசனத்தில் ஞான முத்திரையுடனும் சீதை இடப்புறம் அமர்ந்திருக்க பின்புறம் தம்பி லட்சுமனன் நின்ற கோலத்திலும் ராமருக்கு வலப்புறம் பரதனும் இடப்புறம் சத்ருகுணனும் கைகூப்பித் தொழுத வண்ணம் காட்சி தருகின்றனர்.. அனுமன் எதிரில் கை கூப்பி வணங்கியவாறு இருக்கின்றார்
ஆண்டாள் வரதராஜர் வரதராஜப் பெருமாளின் தனிக்கோவில் நாச்சியார் பெருந்தேவித் தாயார், ஆழ்வார்கள் கருடன் சன்னதிகள் ஆகியவை அமைந்துள்ளன.
திருக்கோவிலின் வடகிழக்கு மூலையில் புராதனமான தனி வீர ஆஞ்சனேயர் சன்னதி உள்ளது. அனுமனின் கீழ்ப்பாகத்தில் சனி பகவானை காலால் மிதித்து வதம் செய்யும் சனித்துயர் துடைக்கும் ஆஞ்சனேயராகத் தோன்றி அருளுகிறார்.
வில்வத்தையும் புன்னை மரத்தையும் தலவிருட்சமாகக் கொண்ட இத்திருக்கோவில் தினமும் 2 கால பூஜைகள் நடைபெறுகின்ற திருக்கோவிலாகும். காலை 7.30 மணி முதல் 11 மணி வரையும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் பொதுமக்கள் தரிசனத்திற்காக சன்னதி திறந்திருக்கும்.
ஆவணியில் ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி, உறியடி விழா, புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகமும், தனுர் மாத உற்சவமும் வைகுண்ட ஏகாதசி கருட சேவை புறப்பாடும் நடைபெறுகின்றது.
பங்குனி மாதம் ஸ்ரீராம நவமி உற்சவம் விடயாற்றி உட்பட 15 நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. எதிர்வரும் 21.3.2023 முதல் திருமஞ்சனத்துடன் ஸ்ரீராம நவமி விழா துவங்கி, அடுத்த நாள் முதல் தினமும் திருமஞ்சனம் நடந்து மாலையில் வாகனங்களில் புறப்பாடு நடைபெறுகிறது 29.03. 2023 அன்று அதிகாலை 6 மணிக்கு கருட சேவையும் 30.3.2023 அன்று இரவு 7 மணிக்கு அனுமந்த வாகன சேவையும் கோவிலில் அனைத்து சன்னதிகள் பூலங்கி சேவை நடைபெறும்.
இன்றைக்கும் நீதிமன்றமே முன்னின்று எடுத்துக் கட்டிய கோவிலாகையால் செங்கல்பட்டு வக்கில்கள், குமாஸ்தாக்கள் முதல் நாள் விடயாற்றி உற்சவமும் அடுத்த நாள் செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதிகளும் நீதிமன்ற சிப்பந்திகளும் ஒரு நாள் தங்கள் சார்பாக விடயாற்றி உபயம் நடத்தும் ராஜ்ய பரிபாலன ராமர் கோவிலாகவும் அமைந்துள்ளது.
இக்கோவில் செங்கல்பட்டு வேதாசல நகரில் செங்கல்பட்டு பேருந்து நிலயத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலேயே அமைந்து உள்ளது.