பாவேந்தர் பாரதிதாசன் மறைவையொட்டி கண்ணதாசன் கவிதையும் இரங்கல் கட்டுரையும்
- திடீரென பாவேந்தர் தன் வீட்டுக்கு வந்ததில் கண்ணதாசன் பதறிப் போனாராம்.
- கவியரங்கில் “கவிஞன் கண்ட கவிஞன்” என்ற தலைப்பில் பாவேந்தரைப் போற்றி பாடி பலத்த வரவேற்பினை பெற்றார் கண்ணதாசன்.
கவிதை உலகில் கண்ணதாசன் எப்படி சிறப்பிடம் பெற்று திகழ்ந்தாரோ அதேபோல அவருடைய குண நலன்களாலும் சிறப்பு மிக்கவராக திகழ்ந்தார். "பொறாமை" என்ற குணம் அவரது அகராதியிலேயே இல்லை. எல்லா கவிஞர்களோடும் இணக்கமான உறவு கொண்டிருந்தார் கண்ணதாசன். ஒரு படத்திலே இன்னொரு கவிஞர் எழுதிய பாட்டு நன்றாக வந்தி ருந்தால் அவரை கூப்பிட்டு பாராட்டத் தயங்க மாட்டார்.
கற்பகம் படத்தில் சிறப்பான பாடல்களை எழுதி யமைக்காக கவிஞர் வாலிக்கு விருந்து கொடுத்து பாராட்டிய பெருந்தன்மைக்கு சொந்தக்காரர் கண்ணதாசன். இது போல் மற்ற கவிஞர்களை பாராட்டி மகிழ்ந்த நிகழ்வுகள் ஏராளம் உண்டு. ..
பாவேந்தர் பாரதிதாசனிடம் கண்ணதாசன் கொண்டிருந்த நட்பு பற்றியும் அவரைப் பற்றி எழுதிய சில கவிதைகளையும் சென்ற தொடரில் பார்த்தோம். இந்தத் தொடரிலும் பாவேந்தர் பற்றி கண்ணதாசன் எழுதிய கவிதைகள் சிலவற்றையும் பாவேந்தரின் இறுதி யாத்திரைக்கு உருக்கமாக கண்ணதாசன் எழுதிய கட்டு ரையையும் பார்க்க இருக்கிறோம்.
பாவேந்தர் புதுவையில் இருந்து புறப்பட்டு 1956, 1957 -ம் ஆண்டுகளில் சென்னைக்கு வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்... அப்போதெல்லாம் வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் கண்ணதாசனை சந்திக்க பாவேந்தர் தவறியதில்லை. ஒரு முறை தியாகராய நகர் பக்கம் காரில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது, இந்தப் பக்கம் தானே கண்ண தாசன் வீடு...காரை திருப்பு கண்ணதாசனை பார்த்துவிட்டு போவோம் என்று வந்து சந்தித்தி ருக்கிறார்... திடீரென பாவேந்தர் தன் வீட்டுக்கு வந்ததில் கண்ணதாசன் பதறிப் போனாராம். ஐயா சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே தங்களுக்கு சிரமம் எதற்கு என்று சொல்லி இருக்கிறார் கண்ண தாசன். சில நேரங்களில் ஆயிரம் விளக்கில் இருந்த கண்ணதாசனின் தென்றல் அலுவலகத்திற்குள் பாவேந்தர் வந்து சென்றதை கண்ணதாசனே பதிவு செய்திருக்கிறார். இப்படிப்பட்ட நட்பு இருவருக்கும் இடையே இருந்த காலகட்டத்தில் தான் அண்ணாவின் ஏற்பாட்டில் பாவேந்தருக்கு நிதி திரட்டி பொற் கிளியாக 25 ஆயிரம் ரூபாய் பிராட்வே பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை யில் வழங்கப்பட்டது. இந்த விழா ஏற்பாட்டில் ஏதோ ஒரு மனக்குறை பாவேந்தருக்கு ஏற்பட்டு 30 .9.58 -ல் தான் நடத்தி வந்த "குயில்" இதழில் எழுதிய எழுத்துக்கள் அண்ணாவை மறைமுகமாக தாக்குவது போல் அமைந்திருந்தது .
அப்போது கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்ததால் அண்ணாவை தாக்கியதை பொறுத்துக் கொள்ள முடி யாமல் அதற்கு பதிலடி கொடுப்பது போல பாவேந்தரை கண்ணதாசன் தான் நடத்திய தென்றல் இதழில் தாக்கி எழுதிய கவிதை இருவருக்கும் இடையே இருந்த நட்பில் ஒரு விரிசலை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட கோபம் எல்லாம் சில நாட்களுக்கு மட்டுமே,.அப்புறம் அந்த கோபத்தை முற்றுமாக மறந்து விட்டார் கண்ணதாசன். அதேபோல பாவேந்தரும் தன்னை தாக்கி எழுதிய கண்ணதாசனின் குழந்தை மன குண நலன்களை அறிந்திருந்ததால் மறந்து விட்டார்...
இதற்கிடையே அண்ணாவோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு தி.மு.க.வில் இருந்து வெளியேறி சொல்லின் செல்வர் சம்பத்தும் கண்ணதாசனும் வெளியே வந்து 1961-ல் தமிழ் தேசிய கட்சியை துவக்கி விட்டனர் . ஓராண்டு கழித்து தமிழ் தேசிய கட்சியின் முதலாம் ஆண்டு மாநாடு சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ திடலில் 1962 செப்டம்பர் 15 ,16 ,17 -ந் தேதிகளில் நடைபெற்றது. முதல் நாள் மாநாட்டில் பாவேந்தர் தலைமையில் கவிய ரங்கம் ஏற்பாடாகியிருந்தது. அந்த கவியரங்கில் "கவிஞன் கண்ட கவிஞன்" என்ற தலைப்பில் பாவேந்தரைப் போற்றி பாடி பலத்த வரவேற்பினை பெற்றார் கண்ணதாசன்.இதோ அந்த கவிதை ...
"திங்களொடும் பரிதியொடும் பிறந்து வந்த
செந்தமிழை இலக்கியத்தை இலக்கணத்தை
கண்களெனக் கொண்ட தமிழ் கவிதை மன்னா...
காவியத்தில் நாடகத்தில் மூத்த தந்தாய்
பெண்ணடிமை தீர்த்துவைத்த பெற்றி கொண்டோய்
பேச வரும் பேச்செல்லாம் கவிதையாகி
விண்ணதிர ஒலியெழுப்பும் குயிலே! நெஞ்சில்
விளக்கேற்றி வைத்த உனை வணங்கு கின்றேன்" என்று பாவேந்தரின் பெருமை களை தொடக்க கவிதையிலே தொட்டுக்காட்டி சாதாரண குயிலல்ல நீ ... விண்ணதிர ஒலியெழுப்பும் குயில் என்று பாவேந்தருக்கு மகுடம் சூட்டி... எனது நெஞ்சில் விளக்கேற்றி வைத்தவனும் நீதான் என்று குறிப்பிட்டு மகிழ்கிறார் கண்ணதாசன்.
ஏதோ ஒரு வேகத்தில் உன் மனம் புண்படும்படி எழுதிவிட்டேன் குயிலே... அதற்காக என்னை மன்னிப்பாய் எனச் சொல்லி பாவேந்தருக்கு வணக்கம் தெரிவிக்கிறார் கண்ணதாசன்.
"வாடாத நின் இளமைக்கவி மனத்தில்
வடுவிழுந்து போமளவு நானும் சொல்லக்
கூடாத வார்த்தை யெலாம் சொன்னேன் ஐயா...
குற்றமது சுற்றத்தால் விளைந்த குற்றம்
பாடிவரும் பூங்குயிலே மன்னிப்பாய்! உன்
பரம்பரையில் இளையவன் யான் வணங்குகின்றேன்
-எனப் பல்லாயிரம் பேர் கூடியுள்ள மாநாட்டில் பாவேந்தரிடம் மன்னிப்பு கேட்ட இந்த வரிகள் பாவேந்தர் உட்பட எல்லோரின் கண்களையும் குளமாக்கியது ... பரந்த மனப்பான்மை உள்ள கண்ணதாசன் போன்றவர்களால் மட்டுமே இப்படி பாட முடியும் ...
"ஏடெடுத்து கவி யெழுத நினைக்கும் போதில்
என் னெதிரே நின்னுருவம் ஏறுபோன்று
"பாடுதமிழ்" என்றுரைக்க கேட்பேன்! அந்தப்
பக்தியிலே பன்னூறு கவிதை யாப்பேன்
கூடலிறை பாண்டியன் போல் நிமிர்ந்து நிற்கும்
குலத் தலைவா யான் கற்ற கல்வி கொஞ்சம்
நாடெனையும் நோக்கும் வகை நான் வளர்ந்தேன்
யாவுமுனைக் கற்றதனால் பெற்ற பேறு.."
என்று... இதுவரை நான் பெற்றுள்ள பெருமை களுக்கெல்லாம் அடிப்படை உனது கவிதைகளை கற்றதனால் கிடைத்தது என்று மனம் நெகிழ்ந்து நன்றி கூறுகிறார் கண்ணதாசன் ...
"சிறு குழந்தை கடித்ததெனில் கோபம் கொள்ளாச்
சிறப்பான தாயுள்ளம் படைத்த தந்தாய்
இருபதுடன் பதினான்கு வயது சென்றும்
இயல்பினில் யான்குழந்தையென அறிவாயன்றோ...
இருள் சூழ்ந்த உலகினில் யான் வாழ்ந்த காலை
என் பெரும..! நின் கையைக் கடித்து விட்டேன்
பொறுத்தருள்வாய்! யானறிவேன் என்ற போதும்
பொறுக்காத நெஞ்சத்தால் புலம்புகின்றேன்" "என்று..மீண்டும்...மீண்டும் நான் செய்த தவறை பொறுத்தருள்வாய் எனப் புலம்புகிறார் கண்ணதாசன்.
சம்பிரதாயத்திற்காக மன்னிப்பு கோருபவர்கள் ஒரு வரியில் முடித்துக் கொள்வார்கள். ஆனால் கண்ண தாசன் ஒரு குழந்தை மனம்... தன்னை அறியாமல் சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு விடுகிற பிள்ளை மனம்... எனவேதான் தனது குற்றத்தை பகிரங்கமாகச் சொல்லி ஆறுதல் தேடிக் கொள்கிறார்.
நான் பாட நினைத்ததெல்லாம்! இதுதான் அன்னை
நலங்காக்க கவிபாடும் உன்னை வணங்கித்
தேன்பாய் நின் செழுங்கவிதை மரபில் என்னைச்
சேர்த்துக் கொள் எனக் கேட்க வேண்டி வந்தேன்
ஊன் பாய்ந்து, உயிர் பாய்ந்து மணக்கும் உந்தன்
உயர்கவிதை கண்டதனால் கவிஞனாகி நான்
கண்ட கவிஞனென பாட வந்தேன்
நாயகனே! நீ வாழ்ந்தால் தமிழும் வாழும்..!
என்று தன் மனதில் உள்ளதை ஒளிவுமறைவின்றி உரைக்கிறார் கண்ணதாசன். என்னையும் ஒருவனாக எண்ணி சேர்த்துக் கொள். அதுவே எனக்கு பெருமை நீ பல்லாண்டு வாழ வேண்டும். வாழ்ந்தால் தமிழும் வாழும் என்று பாவேந்தர்க்கு மகுடம் சூட்டி மகிழ்கிறார் கண்ணதாசன்.
இந்த மாநாட்டிற்கு பிறகு கண்ணதாசன்- பாவேந்தர் நட்பு ஆழமாகிவிட்டது. பாவேந்தர் தொடங்கிய தமிழ் கவிஞர் பெருமன்றத்தில் கண்ணதாசன் உறுப்பினராக வும் ஆகிவிட்டார். நன்கொடையாக ரூபாய் 200 வழங்கினார் என்பதையும் கவிஞர் பொன்னடியார் மகிழ்வோடு தெரிவித்தார். அதற்கு பிறகு நடந்த தமிழ் கவிஞர் பெருமன்ற நிகழ்வுகள் பலவற்றுள் பங்கேற்று சிறப்பித்தார் கண்ணதாசன்.
ஆடும் கடலலைகள்
ஆனந்த சுதிகூட்ட
பாடிவரும் தென்றல்
பாவலரை தாலாட்ட
கூடிவரும் கவியரங்கம்
குன்றேறி ஒளி விடட்டும்...
ஜாதி மதம் கட்சிஎனத்
தனித்தனியே இல்லாமல்
ஆதிமகள் தமிழ்த் தாயின் அரவணைப்பில் ஒன்றாகி
பாடுபவர் ஜாதி எனப்
பலர் சேர்ந்த அரங்கமிது...
தென்கடலின் தொடர்பாகத்
திரை எழும்பிச் சீராட்டும்
கீழ்கடலின் ஓரத்தில்
கிளைத்தெழுந்த அரங்கமிது.
தங்கத் தமிழுக்கே
தனித்தொண்டு செய்பவர்கள்
வங்கக் கடலுக்கே
வாரிசுக ளானார்கள்
பூப்போல் தமிழலைகள்
பொங்கிப் புறப்படட்டும்
யாப்போ டிலக்கியங்கள்
அணி அணியாய்ப் பிறக்கட்டும்
தமிழ் கவிஞர் பெருமன்றம்
தழைத்தினிது செழிக்கட்டும்...
என்று தமிழ்க் கவிஞர் பெருமன்றத்திற்கு வருகை தந்து சிறப்பான வாழ்த்து கவிதை வழங்கினார் கண்ணதாசன்.
பாவேந்தர்க்கு நீண்ட நாளாக சொந்தமாக திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. அதனுடைய வெளிப்பாடு தான் நடிகர் திலகம் சிவாஜியை வைத்து 1962-ம் ஆண்டு "பாண்டியன் பரிசு" திரைப்படத்தினை எடுக்கும் திட்டம்... ஆனால் ஏனோ அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. அதிலே பாவேந்தர்க்கு மிக்க மன வருத்தம். அவருடைய உடல்நிலையும் அதற்குப் பிறகு பாதிக்கப்பட்டு விட்டது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் பாவேந்தர் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்து ஓடோடி சென்று பார்த்தார் கண்ணதாசன்.
ஆனால் சிகிச்சை பலனின்றி 21-4-1964 அன்று பாவேந்தர் அமரராகிவிட்டார். பாவேந்தருடைய பூத உடலை புதுவைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்ததோடு புதுவைக்கும் சென்று அங்கு நடைபெற்ற இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டார் கண்ணதாசன்.
பாவேந்தர் மரணத்தை பற்றி செய்தி சேகரிக்க வந்த நிருபர் ஒருவர் கண்ணதாசனிடம் ஒரு இரங்கல் கவிதை தர முடியுமா? என்று கேட்டவுடன் அந்த இடத்திலேயே 5 நிமிடத்தில் உடனே எழுதிக் கொடுத்தார் கண்ண தாசன்.
மன்னவர்க்கு மன்னன் மாகவிஞன் பேரறிஞன்
தன்னேரிலாத தமிழ்ப் புலவன் கண் மறைந்தான்...
பொன்னாடும் பூந்தமிழும் பொருளாய் உலவியவன்
தன்னாவி நீர்த்தவனாய் தனியுறக்கம் கொண்டு விட்டான்
இன்னொருவன் எப்போது இங்கே பிறப்பானோ...
இப்படி ஒரு தோற்றம் எவர்கினிமேல் வாய்ந்திடுமோ?
சாகும் வரை அவன் தலை நிமிர்ந்தே நின்றிருந்தான்
வேருமே பொன்னுடலும் வெந்தணலின் வாய்ப்படுமோ?
இல்லை! அவன் நினைவை எந்நாளும் நாம் வடிப்போம்
வல்ல தமிழ் தேனீயை வாழ்த்தி வணங்கி நிற்போம்..! என்பதே அக்கவிதை.
கவிதை எழுதியதோடு இல்லாமல் அடுத்த நாள் தனது "தென்றல்" இதழில் சிங்கத்தின் பெரும் பயணம் எனும் தலைப்பில் படிப்போர் இதயம் துடிக்க மனம் கசிந்துருக கட்டுரை ஒன்றினை எழுதினார் கண்ணதாசன்.
வானத்திலிருந்து நட்சத்திரங்கள் விழுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் நிலவே விழுந்து விட்டதை இப்போதுதான் பார்க்கிறேன். தமிழ் வானம் இரண்டு விட்டது. பாடுவதை தவிர வேறு ஒன்றும் அறியாத வண்ணக்குயில் பறந்து விட்டது. இந்த துன்பத்திற்கு முடிவே இல்லை. இந்த கண்ணீருக்கு ஆறுதல் இல்லை. தமிழ் சமூகத்தின் அங்கம் மறைந்து விட்டது. நன்னடையும் மேற்கொண்ட பார்வையும் நிலத்தின் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் படைத்த கவிமன்னன் கண் மூடிவிட்டான். கணவனை இழந்த மனைவிக்கு ஆறுதல் சொல்லலாம். தந்தை இழந்த மகனை தேற்றலாம். மகுடத்தை இழந்த தமிழ் தாயை யார் தேற்ற முடியும்?
தனக்கிருந்த பாதுகாப்பை இழந்துவிட்ட தமிழ் கவிதை மரபுக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும்? தமிழை இழந்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என முழங்கிய குரலெங்கே?
நேர் நிறைந்த கடலையொக்கும் நேர் உழைப்பவர் தொகை. நேர் மிதந்த ஓடம் ஒக்கும் நிறை முதல் கொள்வோர் தொகை. சூறையொன்று மோதுமாயின் தோனியோட்டம் மேவுமோ...?
என்று தொழிலாளர் புரட்சிக்கு வித்தூன்றிய தூயவன் எங்கே? மூடத்தனத்தின் முடை நூற்றத்தைச் சாடி நின்ற காடு மணக்க வந்த கற்பூர பெட்டகம் எங்கே? எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி? இந்திக்கு தமிழ்நாட்டில் ஆதிக்கமா? என்று இந்திக்கு எதிர்ப்பு குரல் கொடுத்து சேனை சேர்த்த கோமகன் எங்கே?
அவன் பறந்து விட்டான்! அந்தக் குரல் அடங்கிவிட்டது
தமிழ்ச் சிங்கம் பயணம் போய்விட்டது...
இந்த தலைமுறைக்கு அவனே கவியரசன்
அவனது பெயர் எங்கள் நெஞ்சில் இருந்து அகலாது...
ஏறு போல பீடு நடை போட்ட ஏந்தல் இன்று கண்மூடி விட்டார்
பாரதி பாடாதனைத்தும் பாடிய பாவேந்தர் மறைந்து விட்டார்
அவரது சொல்லாட்சியும் கருத்தோட்டமும் வேறொருவரிடம் தோன்றுவது அரிது
இன்றைய அரசியல் அவரது பாடலிலே பிறந்த அரசியலாகும்
இன்றைய தமிழ்ச் சமுதாயம் நிமிர்ந்திருக்க பெரியாருக்கு அடுத்த படி பாவேந்தரே காரணம்
பாடிய குயில் பறந்து விட்டது... மற்ற பறவைகளும் பறக்க வேண்டியவையே
அவருக்கு நமது கண்ணீரை காணிக்கைஆக்குவோம்
என்று முடிகிறது அந்த இரங்கல் கட்டுரை. இதுபோல எவர்க்கும் மனமுருகி கசிந்து கண்ணதாசன் கண்ணீர் பெருக்கியது இல்லை. இப்படிப்பட்ட அபூர்வமான கட்டுரையை தக்க நேரத்தில் எனக்கு கொடுத்து உதவிய பாவேந்தரின் தலை மாணாக்கர், இறுதிவரை பாவேந்தரின் நிழலாக பயணித்த கவிஞர் பொன்னடியார்க்கும் அவரது நண்பர் மணிசாரதிக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும். நாமும் பாவேந்தரின் புகழோங்கச் செய்வோம்.
அடுத்த வாரம் சந்திப்போம்.
-முனைவர் கவிஞர் இரவிபாரதி