சிறப்புக் கட்டுரைகள்
null

மாசிமாத வழிபாட்டுக்கு இரட்டிப்பு பலன்: மகத்துவம் மிக்க மாசி மாதம்

Published On 2023-02-15 18:00 IST   |   Update On 2023-02-15 18:02:00 IST
  • உணவில் மருந்தாக சேர்க்கப்படும் பொருட்களில் மிளகு முக்கிய இடத்தை பிடிக்கின்றது.
  • "பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்" என்பது பழமொழி.

ஆண்டின் 11வது மாதமான மாசிமாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். மாசி புதிய கலைகளையும் கல்விகளையும் கற்கத் தொடங்குகிற மாதம். "மாதங்களில் மாசி மாசம் உயர்ந்தது" என்பது நாட்டுப்புறங்களில் வழக்கு. மாசி மாதம் வழிபாடுகள், பண்டிகைகள், விரதங்கள் என பலவற்றையும் கொண்டது. மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணிக்கிறார். இதனால் "கும்ப மாதம்" "மாங்கல்ய மாதம்" என்றும் கூறுவர்.

திருமால், மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில் ஆகும். மாசிமகத்தில் பார்வதிதேவி காளிந்தி நதியில் தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள் என்கிறது தொல்லியல் வரலாறு. சிவனின் திருவிளையாடல்கள் பல நிகழ்ந்தது மாசி்யிலாகும். அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையன் முருகன் மாசி பூச நட்சத்திரத்தில் சுவாமிமலையில் சிவபெருமானுக்கு உபதேசம் செய்து தகப்பன் சுவாமியானார். மாசி மகத்தன்றுதான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து, பூமியை பாதாளத்தில் ஒளித்து வைத்திருந்த அசுரனை வதம் செய்து பூமியை மீட்டுக் கொண்டு வந்தார். பிரகலாதனைக் கொல்வதற்காக வந்த நயவஞ்சக அரக்கி, தீயில் வெந்து சாம்பலானது மாசியிலாகும். மன்மதன் சிவபெருமானால் எரிக்கப்பட்டதும் மாசி பவுர்ணமியில்தான். . வருணதேவன் தன்னைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட்டு அருள்பெற்றதும் மாசி மகத்தில் தான்.

தீர்த்தச் சிறப்பு மிக்க மாதம்

இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கும்ப மாதத்தில் நடைபெறுவது கும்பமேளா. இந்துக்களால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளா வடநாட்டில் அலகாபாத், அரித்துவார், உஜ்ஜைனி மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நான்கு இடங்களில் கொண்டாடப்படுகிறது. கங்கையில் நீராடுவதால் தங்களின் பாவங்கள் விலகி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். வட இந்தியாவில் மாசிமகத்தில்தான் ஹோலிப் பண்டிகை வருகிறது. கிருஷ்ணன், ராதையுடன் வண்ணப்பொடிகள் தூவி விளையாடிய தினம் இது என்பதால் இந்தப் பண்டிகை மிகவும் முக்கியமானதாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தவறாது இறைவழிபாடு செய்து நன்மைகளைப் பெறலாம்.

மாசி மாத விசேஷ நாட்கள்

மாசி மாதத்தில் வருகிற சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து வேண்டுவோருக்கும் பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வேண்டுவோருக்கும் எல்லாவித தோஷங்களில் இருந்தும் விடுபடச் செய்து அருளுவார் பிள்ளையாரப்பன். மாசி வளர்பிறை சதுர்த்தி திதியில் நடைபெறும் முழுக்கு, தேவர்கள் செய்யும் பூஜை என்பது ஐதீகம்..

மாசி ஏகாதசிகள்

மாசி மாதத்தில் வருகிற ஏகாதசியில் விரதம் இருப்பது மகாபுண்ணியம். சகல தோஷங்களையும், பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களையும் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான் . விஜயா என்றால் வெற்றி என்று பொருள். இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தால் கடல் கடந்தும் சென்று வெற்றியை நிலைநாட்டுவர் என்பது நம்பிக்கை. ராமபிரானே இந்த விரதத்தை அனுசரித்துக் கடல் கடந்து இலங்கை சென்று வெற்றியும் பெற்று நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

மற்றொன்று ஆமலகி ஏகாதசி ஆம்லா என்றால் நெல்லிக்கனி என்று பொருள். மகாலட்சுமி தேவியின் அருள் நிறைந்தவற்றுள் நெல்லிக்கனியும் ஒன்று. இந்த ஏகாதசி தினத்தில் நெல்லி மரத்தடியில் பகவானை வழிபடுவது வழக்கம். இவ்வாறு பெருமாளை வழிபாடு செய்ய, மகாலட்சுமி தேவியின் அருள்கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் 7 தானியங்களை ஒன்றன்மீது ஒன்றாகப் பரப்பி அதில் கலசம் வைத்துப் பெருமாளை ஆவாஹனம் செய்து வழிபட சகல காரியங்களும் சித்திக்கும் என்பது நம்பிக்கை.

மகாபிரதோஷம்

ஒவ்வொரு மாதமும் வரும் திரயோதசி திதியே பிரதோஷ தினமாகும். நந்திதேவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் வரங்கள் கிடைக்கும். சிவராத்திரிக்கு முன்பு வரும் பிரதோஷத்தை மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது . இந்த பிரதோஷ தினத்தை சிவபெருமானை வணங்கி வழிபட்டால் நம் துயர்கள் தீரலாம். சனிக்கிழமை வரும் பிரதோஷம் சனி மகாபிரதோஷம் என்று போற்றப்படுகிறது. ஆலகாலம் உண்ட ஆடவல்லான் திருநடனம் புரிந்தது சனிப் பிரதோஷ வேளையில்தான். எனவேதான் இதை மகாபிரதோஷம் என்கிறோம்.

சிவராத்திரி

மாசி மாதத்தில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகின்றது. மகா சிவராத்திரியில் விரதம் இருந்தால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது ஐதீகம். மாதம்தோறும் சிவராத்திரி வந்தபோதும் மாசி மாதம் வரும் சிவராத்திரி மிகவும் விசேஷமானது. ஆண்டில் பிற சிவராத்திரியின்போது விழித்திருந்து இறைவனை வழிபடாதவர்கள் இந்த நாளில் வழிபாடு செய்தால் ஆண்டுமுழுவதும் சிவராத்திரி வழிபாடு செய்த பலன்கள் கிடைக்கும். சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகளையும் கண்டு சிவ வழிபாடு செய்ய சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மாசிஅமாவாசை

மற்ற அமாவாசை போல மாசி அமாவாசையும் முன்னோர்கள் வழிபாட்டுக்கு உரியது. மாசி மாதம் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக, அவிட்ட நட்சத்திர தினத்தில் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய நீர்க்கடன் செலுத்தி மனதார வழிபட அனைத்து நலன்களும் சூழும் என்பது நம்பிக்கை.

சஷ்டி விரதம்

சஷ்டியில் முருகப் பெருமானை வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும். குறிப்பாகக் குழந்தை வரம் வேண்டுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய விரதம் சஷ்டி விரதம். இந்த நாளில் தவறாமல் ஆலயம் சென்று முருக வழிபாடு செய்வது அவசியம். சஷ்டியில் வழிபட அகப்பையில் வரும் என்பது இதன் அடிப்படையில் குறிக்கப்படும் பழமொழியாகும்.

மாசி மகம்

மகாபிரளய காலத்தில் கும்பத்தில் இருந்து அமிர்தம் பரவி உலகம் மீண்டும் உருக்கொண்ட தினம் மாசி மகம். மாசி மாதத்தில் பவுர்ணமியுடன் வரக்கூடிய மக நட்சத்திர நாள் இந்துக்களால் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கடற்கரை ஓரம் உள்ள கோவில்களின் கடவுளர்கள் கடற்கரைக்குச் சென்று திருமஞ்சனம் கண்டு தீர்த்தவாரி செய்து சமுத்திரராஜனை ஆசிர்வதித்து வருவதாக ஐதீகம் உண்டு. அம்பிகைக்குரிய பவுர்ணமி வழிபாடு நாளில் மாசி மாதத்தில் மட்டும் பவுர்ணமியில் சிவ வழிபாட்டுக்கும் முன்னோர் வழிபாட்டுக்கும் உரியது வல்லாள மகராஜனுக்கு வாரிசு இல்லாததால் சிவபக்தனான மகாராஜனுக்கு மாசி மகத்தன்று அண்ணாமலையார் பள்ளி கொண்டாப்பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி, வல்லாள மகாராஜனுக்கு மகனாகக் காட்சி கொடுத்து, நீத்தார் கடனுக்குரிய வழி பாட்டினை நடத்தினார் என்கிறது புராண வரலாறு.

சாவித்திரி தன் கணவன் சத்தியவான் மரணமடைய, அவனது உயிரைக் கவர்ந்து சென்ற எமதர்மராஜரிடம் மன்றாடி, போராடி, வாதம் செய்து, தன் கற்பின் சக்தியினால், தன் கணவரின் உயிரைத் திரும்பப் பெற்றாள். இந்த சம்பவம் மாசிமாதக் கடைசி தினத்தில் நிகழ்ந்ததாக, ஸ்ரீமத் மகாபாரதம் கூறுகிறது.

அருளாளர்களும் ஆலயத்திலும்……

குலசேகர ஆழ்வார் திரு அவதாரம் செய்தது மாசி மாதம் புனர்பூச நட்சத்திரமாகும்.சோளசிம்மபுரம் தொட்டயாசார், மணக்கால் நம்பிகள், திருமாலையாண்டான் போன்ற ஆசார்யர்களும் அவதரித்தது மாசியில் தான். திருப்புட்குழி, திருவரங்கம், அகோபிலம், ஸ்ரீமுஷ்ணம், காரமடை, திருக்கண்ணபுரம், அம்பில், உத்தமர்கோவில் குடந்தை சாரங்கபாணி, திருச்சித்ரக்கூடம், திருவகீந்தபுரம், திருக்கோவிலூர், போன்ற திவ்ய, அபிமான தேசங்களில் உற்சவம்மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

காளஹஸ்தி, கும்பகோணம், கஞ்சனூர், திருவொற்றியூர், விருத்தாசலம், வேதாரண்யம், ஸ்ரீவாஞ்சியம், திருமழபாடி, ஆகிய முக்கிய சிவாலயங்களில் உற்சவமும், வேதாரண்யம், திருப்பாப்புலியூர், ஆகிய இடங்களில் மாசிமகம் தீர்த்தமும் நடைபெறுகிறது. காரிநாயனார், கோச்செங்கட் சோழர், திருவள்ளுவர், எரிபத்தர் போன்றோர் முக்திபெற்றதும் இம்மாதத்தில் தான்.

மாசி மாதத்திற்கு அதிதேவதை மகாவிஷ்ணு. அதனால் மகா விஷ்ணுவை இம்மாதம் முழுவதும் துளசி தளத்தால் அர்ச்சித்து வழிபட்டால், இல்லத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

மாசி மாதத்தில் மந்திர உபதேசம், உபநயனம் செய்வதும் சிறந்தது என்று சொல்லப்படுகிறது. இம்மாதத்தில் எந்நாளிலும் முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்தால் மும்மடங்கு பலன்களைத் தரும். உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் மாசிமக நாளில் தொடங்கினால் அதில் சிறந்து விளங்குவதோடு மிகப்பெரிய உச்சம் தொடலாம்.

மாசி மாதத்தில் நாம் செய்யும் எந்த காரியமும் இரட்டிப்பு பலன்கள் தரும். மாசி மகத்தன்று விரதமிருந்து இறைவனை நம்பிக்கையோடு வழிபட்டு வந்தால் வாழும் வரை ஆரோக்கியத்தோடு, உலகையே ஆளக்கூடிய ஆசி கிட்டும். மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது வீடு மாறி குடிபோனால் பலன் பல மடங்கு அதிகரிக்கும்.

Tags:    

Similar News