சிறப்புக் கட்டுரைகள்

ஒரு வழிப்போக்கனின் பார்வை: உறவுகள் வழித்துணையா, வாழ்வின் சுமையா?

Published On 2023-02-03 11:13 GMT   |   Update On 2023-02-03 11:13 GMT
  • அன்பை உதாசீனப்படுத்துகின்ற உறவுகள் இருக்கத்தானே செய்கின்றன.
  • வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ விதமான மனிதர்களைப் பார்க்கின்றோம்.

தனிமரம் போன்றதா நம் வாழ்க்கை? இல்லை! செடிகொடிகளும் தருக்களும் தழைத்தோங்கிப் பூக்கள் பூத்துக் கனிகள் குலுங்கிட, ஆயிரக்கணக்கான பறவைகள் கூடுகட்டிக் கொண்டாடும் ஆனந்தச் சோலை போன்றதுதான் மனித வாழ்க்கை.

வாழ்க்கை என்றால் அப்படிதான் இருக்க வேண்டும். சொந்தபந்தங்கள் சூழ்ந்திருக்க வேண்டும். உறவுகள் வாழ்வின் பலம். விருந்து உபசரிப்புகள் இன்பம். ஆதரவாய்த் தாங்கிக் கொள்வதற்குத் தோள்கள் அவசியம். உறவுமுறைதானே தனிமனிதர்களைச் சமூகக் குழுக்களாக ஒருங்கிணைக்கின்றது. கூட்டுறவின் வலிமை மகத்தானது.

விழும்போது தூக்கிவிடுவதற்குக் கனிவான கைகள்; உதவிக்கு ஓடிவரத் தயங்காத கால்கள்; ஆறுதல் தேடும் தருணங்களில் அரவணைக்கின்ற நெஞ்சம்; உயர்வோ தாழ்வோ, உடனிருக்கின்ற தோழமை - இவற்றையெல்லாம் தனித்து வாழ்கின்ற ஒரு தனிமனிதன் பெறமுடியுமா? சொந்தபந்தங்கள் வேண்டும்.

எல்லாருக்கும் சொந்தபந்த உறவுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவை நல்ல சொந்தங்களா, நம்பகமான உறவுகளா என்பதுதான் முக்கியமான விஷயம்.

பக்கத்தில்தான் இருப்பார்கள். ஆனால் நீங்கள் பரிதவிக்கும் நேரங்களில் தங்களுக்குத் திரையிட்டுக் கொள்வார்கள். நீங்கள் எப்போது விழுவீர்கள் என்பதைக் காண ஆவலோடு காத்திருப்பார்கள்.

உங்கள் அன்பை உதாசீனப்படுத்துகின்ற உறவுகள் இருக்கத்தானே செய்கின்றன. நல்லவர்களும் இருக்கிறார்கள். வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ விதமான மனிதர்களைப் பார்க்கின்றோம். யார்யாரோ உறவுமுறைகளில் வந்து சேர்கிறார்கள். நல்லவர்கள் யார்யார் என்பதை அவ்வளவு சுலபமாகக் கண்டுகொள்ள முடிவதில்லை.

நிலா எப்போதும் தனது ஒரு பக்கத்தை மட்டுமே பூமிக்குக் காண்பித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல், பல மனிதர்களின் ஒருபக்கம் மட்டும்தான் நமக்குத் தெரிகிறது; மறுபக்கம் தெரிவதில்லை.

நாம் காண்கின்ற அந்த ஒருபக்கம் போலித்தனமான வார்த்தைகளாலும், விஷமேறிய புன்னகைகளாலும் நிறைந்திருக்கிறது.

பொறாமைகளும் சதித்திட்டங்களும் கொடூரச் சிந்தனைகளும் குத்தீட்டிகளும் மறுபக்கத்தில் மறைவாய் பதுங்கி இருக்கின்றன. அவை நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை.

பசிபிக் கடலின் சராசரி ஆழம் 16,000 அடி. இந்தியப் பெருங்கடல் 13,002 அடி. அட்லாண்டிக் கடல் 12,880 அடி. பசிபிக் கடலின் மிக ஆழமான பகுதியின் ஆழம் 35,000 அடி. அட்லாண்டிக் கடலின் மிக ஆழமான பகுதி 30,246 அடி. ஹட்சன் வளைகுடா 600 அடிதான்.

இப்படி கடலின் ஆழத்தைக்கூட கணக்கிட்டுச் சொல்ல முடிகிறது. ஆனால், நம் எதிரில் இருப்பவர்களின் ஆழ்மன சூழ்ச்சிகளைத்தான் நம்மால் கணக்கிட முடியவில்லை.

நல்லவர்களைப் போன்ற முகபாவம் இருக்கும். அப்பாவிகள்போல் தங்களைக் காட்டிக் கொள்வார்கள். சிரித்துச் சிரித்துப் பேசியபடியே வார்த்தைகளில் விஷத்தை ஏற்றுவார்கள். கூர்ந்து கவனித்தால் மட்டுமே அவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை நீங்கள் கண்டுகொள்ள முடியும்.

அரிதார சொந்தங்களிடமும் அழுத்தமானவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூடுமானவரையில் விலகி இருப்பதே நல்லது.

குளோரினைப் போன்றவர்களும் உண்டு. எப்படி தெரியுமா? குளோரின் என்பது நச்சுத் தன்மை கொண்டது. ஆபத்தை விளைவிக்கக்கூடியது. முதலாம் உலகப் போரில் முதன்முதலாக நச்சு வாயு பயன்படுத்தப்பட்டதே. அது குளோரின்தான். அதே சமயம், மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் குளோரின் உதவுகிறது. நோயை உண்டுபண்ணும் கிருமிகளையும், நுண்ம உயிரிகளையும் கொல்லும் பலவகை மருந்துகளில் குளோரின் கலந்திருக்கிறது.

சிலர் அப்படிதானே இருக்கிறார்கள். அவ்வப்போது நல்லது செய்வார்கள். நாம் மதிமயங்கி அவர்களை நம்பிவிடுவோம். அவர்கள் எப்போது நமக்கெதிராய்க் குழிபறிப்பார்கள் என்பதை நம்மால் யூகிக்கவே முடியாது. அவர்கள் செய்கின்ற தீங்கு, நம்மை அவமானப்படுத்துவதாக அல்லது பிரச்சினைகளுக்குள் சிக்க வைப்பதாக இருக்கும். அப்படிப்பட்டவர்களிடம் நாம் கூடுதல் ஜாக்கிரதையாக நடந்து கொள்வது மட்டுமல்ல; மிக சாமர்த்தியமாகவும் அவர்களை மேற்கொள்ளத் தெரிய வேண்டும்.

திருமண வைபவங்களில் அல்லது குடும்பத்தின் பிற நிகழ்வுகளில் உறவினர்கள் கூடி இருக்கின்ற போது, சில இடங்களில் தகராறுகள் ஏற்பட்டுவிடுவதுண்டு. இருக்கைகளை இழுத்துப் போட்டு வட்டமாக உட்கார்ந்து கொண்டு என்றோ நடந்த சம்பவத்தைப் பேசத் தொடங்குவார்கள். அது தேவையற்ற ஒன்றாக இருக்கும். அதைப் பேசிப் பேசி வார்த்தை முற்றி வாய்ச்சண்டையாக மாறி, கடைசியில் அவர்கள் மனவருத்தங்களுடன் கலைந்து செல்வார்கள்.

காரணம் என்ன? எப்போதோ நடந்த ஒரு விஷயத்தைக் கசப்பான சம்பவமாக மனதில் தேக்கி வைத்துக் கொண்டிருப்பதுதான்.

'உங்கள் இருதயத்தில் கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்ட என்ன இருக்கிறது. அது பேய்த்தமானது. வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செயல்களும் உண்டு' என்று பைபிள் கூறுகிறது. இது எத்தனை பெரிய சத்தியம்!

பழைய கதைகளை மறக்காமல் பிடித்து வைத்துக்கொண்டு, சண்டை இழுப்பதற்கென்றே சிலர் வருவார்கள். பெரிய கலவரத்தையே உருவாக்கிவிடுவார்கள். நிம்மதியைச் சிதைப்பார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சி.

அன்பு எங்கு உள்ளதோ அங்குதான் உறவுகள் வளரும்.

அன்புதான் உள்ளங்களை இணைக்கும். அன்புதான் சொந்தங்களை வலுப்படுத்தும். உறவு என்பது இருவழிப் பாதை. இருபுறத்திலிருந்தும் அன்பு வெளிப்பட வேண்டும். அப்படியானால்தான் சொந்தங்கள் நிலைக்கும். பலர் அதைப் புரிந்து கொள்வதில்லை. அதனால்தான் பிரச்சினைகள்.

பல குடும்பங்களில் ரத்த சொந்தங்களுக்குள் பிரிவினைகள். அண்ணன் தம்பிக்கிடையே சொத்துத் தகராறு. நீதி மன்றத்தில் வழக்குகள். வக்கீலுக்கும் கோர்ட்டுக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். ஆனால், உடன்பிறப்புகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க மறுக்கிறார்கள்.

முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். பேச மாட்டார்கள். தங்கள் வாழ்வின் இறுதிவரை அப்படியே இருந்துவிட்டு, அதே பகையைத் தங்கள் சந்ததிக்கு விட்டுச் செல்வார்கள். பின்வருபவர்களுக்குக் காரண காரியம் எதுவுமே தெரியாமல் தலைமுறை தலைமுறையாய் பகை வளர்ந்து கொண்டே இருக்கும். அதில் என்ன பெருமை?

உறவுகளின் பிடிமானம் என்பதே அன்புதான். துன்பத்தில் மனதை ஆற்றுவதும் தேற்றுவதும் அதுதான். அன்பினால் கட்டப்பட்ட சொந்தங்கள் ஒருபோதும் பிரிவதில்லை.

தசரதனிடம் கைகேயி கேட்ட வரங்களினால், நாடாள வேண்டிய ராமனுக்கு வனவாசம். பரதனுக்கு அரியணை. மனத்தளவில் பரதன் அதனை ஏற்கவில்லை.

இந்நிலையில், வனத்தில் ராமனைச் சந்திக்க பரதனும் சத்ருக்னனும் வருகிறார்கள். சித்திரக்கூடத்தில் இருந்த ராமனிடம், அயோத்தியில் நடந்ததையெல்லாம் கூறி அவனின் காலில் விழுந்து கதறுகிறார்கள். ராமன் அவர்களை அணைத்துத் தேற்றுகிறான்.

மான்தோல் ஆடையும் சடையுமாக தவக்கோலம் பூண்டிருந்தான் பரதன்.

'பரதா, ஏன் இந்தக் கோலம்? கேட்கிறான் ராமன்.

'அயோத்தியை அரசாள வேண்டியவர் நீங்கள்தான். ஆனால் வனவாசம் கொண்டுள்ளீர்கள். எனவே நீங்கள் எத்தனை காலம் தவக்கோலத்தில் இருப்பீர்களோ அத்தனை காலம் நானும் தவக்கோலத்தில்தான் இருப்பேன்' - பரதன் கூறுகிறான்.

'பரதனே, என்னுடைய இந்தத் தவக்கோலம் தந்தையின் வார்த்தையைக் காப்பாற்றுவதற்காக. நீயோ நாடாள வேண்டியவன். நமது தந்தையின் வாக்கை நீயும் காப்பாற்ற வேண்டாமா?' என்று கனிவுடன் தம்பியிடம் பேசுகிறான் ராமன்.

பரதன் அதை ஏற்பதாக இல்லை. ராமனை தன்னுடன் அயோத்திக்கு அழைத்துச் சென்று அரசாட்சியை ஒப்படைப்பதில் பிடிவாதமாக நிற்கிறான்.

ராமனுடைய நிலைப்பாட்டிலும் மாற்றமில்லை. பரதன் மன்றாடுகிறான். ஜாபாலி என்னும் புரோகிதர் பற்பல வாதங்களை எடுத்துரைக்கிறார். அவற்றையெல்லாம் மறுத்துவிட்ட ராமன், பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்பே அயோத்திக்கு வருவதாகக் கூறிவிடுகிறார்.

'நீங்கள் என்னுடன் வரவில்லை என்றால், நானும் இங்கேயே இருந்து உயிரை மாய்த்துவிடுவேன்' என்கிறான் பரதன்.

'உயிரை விடுவது வீரனுக்கு அழகல்ல' என்று அறிவுறுத்துகிறான் ராமன்.

'ராமன் வரும்வரை அயோத்திக்கு வரமாட்டேன்' என்று சபதம் செய்திருந்தான் பரதன். எனவே, ராமனின் பிரதிநிதியாக அவனது பாதுகைகளை அரியணையில் வைத்து ஆட்சி செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ராமனின் பாதுகைகளைத் தனது தலையின் மீது தாங்கி, கரம்கூப்பி பரதன் நடந்த காட்சியை ராம காவியத்தில் பார்க்கிறோம்.

அதுதான் சகோதரப் பாசம். ரத்தம் பேசும். ஒருவர்க்காய் ஒருவர் அழ வேண்டும். ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் சொந்தங்கள்.

நமது இன்பதுன்பங்களைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் போது இன்பம் இரட்டிப்பாகும்; துன்பம் பாதியாகும். உறவுகளை அடிப்படையாகக் கொண்டுதான் குடும்பமும் சமுதாயமும் இயங்குகின்றன.

நாலுபேர் கூடுகின்ற போது நல்லவற்றைப் பேச வேண்டும். நல்லவற்றைச் செய்ய வேண்டும். சிலர் கஷ்டப்பட்ட நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். சிலர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் திணறிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு உண்மையான கரிசனையுடன் ஆலோசனை வழங்க வேண்டும். முக்கியமாக, உள்ளன்போடு பழக வேண்டும்.

அப்படியானால்தான், உறவுகள் தொடரும். அத்தகைய உன்னத உறவுகள் வாழ்வின் சுமையாக அல்லாமல், நம்பகமான வழித்துணையாகத் திகழும்.

இன்று வீடுகளுக்கு உறவினர்களின் வருகை அரிதாகிப் போய்விட்டது. காகம் கரையும் போது வாசலுக்கு ஓடிவந்து, உறவினர்கள் வருகிறார்களா என்று ஆவலுடன் எட்டி எட்டிப் பார்த்த காலம் மலையேறிவிட்டது. எனவே, இன்றைய தலைமுறைக்கு உறவினர்களின் முகங்களும் தெரியாது; உறவு முறைகளும் தெரியாது. இதெல்லாமே காலத்தின் கோலம்தான்.

சொந்தபந்தங்களின் திரட்சியே வாழ்வின் வளம். அதன் முக்கியத்துவத்தை உணர்த்த நம் முன்னோர்கள் பல விஷயங்களைச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். உறவினர்கள் நம் கனவில் வந்தால்கூட பல நன்மைகளாம். என்னவெல்லாம் என்று பாருங்கள்:

உறவினர்களைக் கனவில் கண்டால், உங்கள் வாழ்க்கையில் சந்தோஷ நிகழ்ச்சி நடைபெறும். உங்களைத் தேடி நல்ல செய்திகள் வந்து சேரும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். நீண்ட நாட்களாகத் தடைபட்டுக் கிடந்த காரியங்கள் கைகூடும். பணப்பற்றாக்குறை நீங்கும். தொலைவில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்.

இப்படியெல்லாம் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்களே. ஏன் சென்னார்கள்? உறவுகள் தொடர்ந்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான். நல்லுறவுகளால் குடும்பங்கள் வலுப்பெற வேண்டும் என்ற நோக்கில்தான்.

நாம் எப்போதும் நம் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் உண்டு:

உறவினர்களை அவமானப்படுத்தக்கூடிய வார்த்தைகளை ஒருபோதும் பேசக் கூடாது. அவர்களின் மனதைக் காயப்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது. வீண்பழி சுமத்திக் குற்றப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது. சுயலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சொந்தம் கொண்டாடக் கூடாது. நல்ல காரியங்கள் கைகூடி வரும்போது, அதில் மூக்கை நுழைத்துக் கெடுத்துவிடக் கூடாது. உபசரிப்பதற்கும் உதவி செய்வதற்கும் முந்திக் கொள்ள வேண்டும். அன்பைப் பரிமாறுவதன் மூலம் அன்பைப் பெற வேண்டும். அப்படியெனில், உறவுகள் தழைக்கும். மனித சமுதாயம் சிறக்கும்.

Tags:    

Similar News