சிறப்புக் கட்டுரைகள்

தெய்வம் அனுப்பிய தேவதைகள்!

Published On 2023-01-30 12:59 GMT   |   Update On 2023-01-30 12:59 GMT
  • சிறுவயதினரை மனசாட்சி இல்லாமல் வேலைக்கு அமர்த்தக் கூடாது.
  • ஆறறிவு இருக்கும் நாம் நம் வீட்டில் இருக்கும் ரத்த உறவுகளை ஏன் உதாசீனம் செய்கின்றோம்.

இன்றைய கால சூழ்நிலையில் எல்லாமே சவால்கள் தான். அன்றாட நாளை ஓட்டுவதே ஒரு சவால் தான். பண்டிகை, வீட்டில் விசேஷங்கள், திருமணம், பிள்ளைகள் படிப்பு என எல்லாமே கடும் சவால்கள் தான். இத்தனை ஏன் மூன்று வேளை சாப்பாடு கிடைத்தாலே பெரிய சாதனை தான். இது காலத்தின் போக்கு. இன்னும் வரும் காலம் எப்படி இருக்கும் என கணித்து கூற முடியாது.

வீட்டில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வது அவசியமாகிவிட்டது. காலையில் வேலைக்கு சென்று இரவில் வீடு திரும்பும் வேலை பளு இருக்கும் பொழுது வீட்டில் பெரியோர்களையும் சிறு குழந்தைகளையும் பார்த்துக் கொள்வது என்பது பெரும் சவால் ஆகிவிட்டது.

வேலைக்கு சென்றாலும் மனதில் வீட்டில் உள்ளவர்களை பற்றிய கவலையே சுற்றுகின்றது. சிலர் வேலையை விட்டு விடுகின்றனர். சிலருக்கு வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் உள்ள 5 நபர்கள் சாப்பிட முடியும் என்ற நிலை.

இந்த மாதிரி சூழ்நிலையில் 95 சதவீதம் குடும்பங்கள் அவதிப்படுகின்றனர். இந்த நேரங்களில் தான் அவர்கள் பகுதி நேர, முழு நேர உதவியாளர்களை தேடுகின்றனர். அவர்கள் துணை கொண்டு நிலைமையை சமாளிக்கின்றனர்.

இந்த இடத்தில் வீட்டு வேலைக்கு வரும் உதவியாளர்களை பற்றி கூற வேண்டும்.

* அநேக வீடுகளுக்கு இவர்கள் "தெய்வம் அனுப்பிய தேவதைகள்".

* பொறுப்பில்லாத கணவன், பெற்றுவிட்ட குழந்தைகள் இவர்களுக்காக தன்னை சதா உருக்கிக் கொள்ளும் மெழுகுவர்த்திகள்.

* மனித மிஷின்கள். காலை 6 மணிக்கு பளிச்சென்று வந்து 4 - 5 வீட்டு வேலைகளை செய்பவர்கள்.

* கையும் காலும் தேய்ந்தவர்கள். 2 - 3 டீ அல்லது காபியில் நாள் முழுவதும் உழைப்பவர்கள். எளிதில் நோயாளி ஆகுபவர்கள்.

* எஜமானி அம்மாவின் கோபத்தினை தாங்கும் இடிதாங்கிகள். இப்படி பல நல்ல விஷயங்கள் இவர்களை பற்றி கூறிக்கொண்டே செல்லலாம்.

சில உதவியாளர்களால் பெரும் பிரச்சினைகள் கூட உருவாகிவிடுகின்றன. இவர்களை நாம் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகின்றது. இதற்கும் உதவி செய்ய நம் தேவைக்கு ஏற்றவாறு ஆட்களை அனுப்ப பல ஏஜென்சிகள் செயல்படுகின்றன. ஆட்களை நன்கு ஆய்வு செய்து அனுப்புகின்றனர். அனேக ஏஜென்சிகள் பாதுகாப்பான முறையிலேயே உள்ளன.

முறையான அங்கீகாரம் பெற்று நடத்துகின்றனர். வரவேற்கத்தக்கது. அவர்கள் அனுப்பும் உதவியாளர்களை தேவைப்பட்டால் அவர்களே மாற்றி வேறு நபர்களை அனுப்புகின்றனர். இதில் அதிக பாதுகாப்பும் கிடைக்கின்றது.

குழந்தைகளை கையாள, முதியோர்களை கையாள அனுபவம் பெற்றவர்களாகவும் இருக்கின்றனர். உதாரணமாக குழந்தைகளை தூக்குவது, குளிப்பாட்டுவது, அது போல் முதியோர்களை உட்கார வைப்பது, சாப்பிட வைப்பது போன்றவற்றிற்கு அனுபவமும் கூடவே பொறுமையும் தேவைப்படுகின்றது.

ஆனால் ஒரு சில உதவியாளர்களுக்கு இவ்வாறு கையாளவும் தெரிவதில்லை. பொறுமையும் இருப்பதில்லை. மேலும் இவர்கள் குழந்தைகளையும் பெரியோர்களையும் கடும் சொற்களால் பேசுகின்றனர், அடிக்கின்றனர். இதுதான் சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கின்றது.

சில முதியவர்கள் தனக்கு நடக்கும் கொடுமைகளை வீட்டில் சொல்லக்கூட பயப்படுவர். ஏனெனில் முதியவர்களை சுமைகளாக பார்க்கும் இல்லங்களும் உண்டு. குழந்தைகளுக்கோ சொல்ல கூட தெரியாது.

இத்தகு நிகழ்வுகள் நாமே வேலைக்கு அமர்த்துபவர்களால் அதிகம் ஏற்படுகின்றது. ஏஜென்சி மூலம் வரும் பொழுது இவ்வாறு நிகழ்வது குறைவுதான்.

மற்றொரு பிரச்சினையும் உதவியாளர்களால் ஏற்படுவது உண்டு. இது சற்று அரிதானது தான். ஆனால் சற்று ஆபத்தானது. வீட்டில் உள்ளவர்களுக்கு மிக நம்பிக்கையானவர்கள் என்று கருதப்படும் உதவியாளர்களால் கொலை கூட நிகழ்கின்றது.

இன்றைய சூழ்நிலையில் நாம் திருட்டு, பொய் சொல்வது என்பதற்கு கூட இது காலத்தின் கோலம்' என்ற அங்கீகாரத்தினை கொடுத்துவிட்டோம். எதிர்த்துப் போராட சக்தியும் இல்லை, நேரமும் இல்லை என்றாகிவிட்டது. ஆனால் உயிரிழப்புகள் ஏற்படும் பொழுது நாமும் மனதால் இடிந்து விடுகின்றோம்.

பொதுவில் நாம் தேடி அமர்த்தும் உதவியாளர்களும் ஏஜென்சி மூலம் அனுப்பப்படும் உதவியாளர்களும் சமுதாயத்தில் பல குடும்பங்களுக்கு நிம்மதி அளிக்கின்றனர். பல உதவியாளர்கள் வீட்டில் ஒரு அங்கத்தினர்களாகவே ஆகிவிடுகின்றனர். குடும்பத்தினரும் இவர்கள் பிள்ளைகளின் படிப்பு, உணவு ஆகியவற்றினை நன்கு கவனித்துக் கொள்கின்றனர். நன்மையே!

சில குடும்பங்களில் வருகின்ற உதவியாளர்களை அடிமை போல் நடத்துகின்றனர். அதிகாரப் பேச்சு, கடும் சொற்கள் என அவர்கள் மனதினை காயப்படுத்துகின்றனர். உணவினை வெளியில் கூட கொட்டுவார்கள். ஆனால் இவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். பேசிய சம்பளம் தரமாட்டார்கள். இவர்களை நாம் மனிதன் என்ற பிரிவின் கீழ் கூட கொண்டு வரக்கூடாது.

முதலில் நம்மை நாம் எப்படி சரி செய்து கொள்வது என்று பார்ப்போம். உதவியாளர்களை மரியாதையோடு நீங்கள் என்று சொல்லலாமே. நீ, வா, போ, வாடா, போடி இந்த சொற்களை நம் அகராதியில் இருந்தே நீக்கிவிடலாமே.

சிறுவயதினரை மனசாட்சி இல்லாமல் வேலைக்கு அமர்த்தக் கூடாது. வேலை செய்ய வருபவர்களின் பாதுகாப்பிற்கும் சட்ட திட்டங்கள் உள்ளன. அவைகளை தெரிந்து கொள்ளுங்கள். படுத்த படுக்கையாய் உள்ள உங்கள் வீட்டு முதியோருக்கு அவர்கள் செய்யும் சேவையினை மகன், மகளான உங்களால் செய்ய முடியுமா? என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

ரூ.100 என்பது உங்களுக்கு எளிதானது. ஆனால் அவர்களுக்கு 5 பேருக்கான ஒரு வேலை சாப்பாடு. எனவே அதிக பேரம் பேச வேண்டாமே. உதவியாளர்களுக்கும் மழை, வெயில், உடல் நல பாதிப்புகள் என எல்லாம் இருக்கும் அல்லவா? மாதத்தில் இரு நாட்களாவது அவர்களுக்கு லீவு கொடுக்கலாமே.

கெட்டுப்போன உணவினை கொடுப்பது மகா பாவம். அவர்கள் சம்பளத்தினை குறிப்பிட்ட நாளில் கொடுத்துவிடலாமே. பேசிய வேலையினை விட அதிகமான வேலைச் சுமைகளை கொடுக்காது இருக்கலாமே. இப்படி நாம் இருந்தால் அவர்கள் மனம் மட்டுமல்ல நம் மனமும் மகிழ்ச்சியாக இருக்கும்.

இனி அடுத்து அவர்களால் ஏற்படும் சில பிரச்சினைகளை பற்றி பார்ப்போம். 5 சதவீதம் உதவியாளர்கள் பிரச்சினைகளை குடும்பத்தாருக்கு ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எந்த பிரிவிலும் தவறே இருக்கக் கூடாது என கடும் முயற்சிகள் எடுத்தாலும், அதனால் தவறுகள் வெகுவாய் குறைகின்றது. அடியோடு நீக்குவது சற்று கடினமாகத்தான் உள்ளது.

சில இடங்களில் வேலைக்கு வரும் உதவியாளர்களால் குழந்தைகளும் பெரியோர்களும், மனதாலும் உடலாலும் பாதிக்கப்படுகின்றனர்.

* காரணமே இன்றி அடிக்கடி விடுமுறை எடுப்பர். * அதிக பணம் கேட்பர்.

* சமூக விரோத செயல்களில் ஈடுபடுவர். இதனை எப்படி தவிர்ப்பது.

* எந்த வேலையானாலும் அவர்கள் நமக்கு நன்கு அறிமுகப்பட்டவர்கள் மூலம் கிடைப்பது நல்லது.

* ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, சமீபத்திய கேஸ் சிலிண்டர் பில் இவைகளின் நகல்களை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

* எழுத்து மூலம் கையொப்பம் மூலம் முறையான ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

* கேமிரா பொருத்துவது மிக அவசியம்.

* வீட்டு விஷயங்கள், வீட்டுப் பிரச்சினைகளை அவர்கள் காதுபட பேச வேண்டாம்.

* முடிந்தவரை வீட்டில் யாரேனும் உறவினர்கள் உடன் இருப்பது நல்லது .

* வரும் உதவியாளர்களும் நல்ல உடல் நிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

* நல்ல மனநிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

* பீரோவினை அவர்கள் எதிரில் திறப்பது, எளிதாக எதையும் வந்தவுடனேயே புது ஆட்கள் கையாள்வது என்பவை வேண்டாம்.அவர்களை தவறு செய்ய தூண்டும் விதமாக நாமும் நடக்க வேண்டாம்.

* ஒருவருக்கு அறியாமை இருக்கின்ற வரை அவர் ஏமாளி தான்.

* வேலைக்கு வருபவர்களின் குடும்ப உறவுகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

* கண்காணிப்பு இல்லாத எதிலும் தவறு நிகழும் என்பதனை அறிய வேண்டும்.

* உதவியாளரே கதி, அவர் இல்லாவிடில் எதுவும் அசையாது என்ற அளவில் சோம்பேறியாக இருக்க வேண்டாம் .

இவை அனைத்தும் ஒழுங்கு முறையே. தேவை இன்றி எதற்கெடுத்தாலும் உதவியாளர்களை சந்தேகப்படவும் வேண்டாம். அதிகம் நம்பி ஏமாறவும் வேண்டாம் .

மீறி தவறுகள் நடக்கும் பொழுது கண்டிப்பாய் அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது உங்கள் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நீங்கள் செய்யும் உதவியாக இருக்கும். மாறாக அவர்களைத் திருத்தாது அப்படியே விட்டுவிடும் பொழுது இவர்கள் மேலும் பல தவறுகளை செய்யத் துணிந்து விடுகின்றனர்.

நான் பார்த்த செய்தியினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த நிகழ்வின் மையக் கருத்தினை மட்டுமே நாம் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டில் ஆகாய விமானம் ஒன்று பறக்க தொடங்கிய பொழுது அதனை பல பல பறவைகள் சூழ்ந்து கொண்டு பறக்க விடாமல் தடுத்தன. விமானி சில சப்தங்களை எழுப்பி அப்பறவைகளை விரட்ட முயன்றார். அவை பயந்து போகவில்லை. மாறாக கும்பல் கும்பலாக மேலும் பறவைகள் சூழ்ந்தன. விமானத்தின் உள் இருப்பவருக்கு வெளியே இருட்டாக தெரியும் அளவிற்கு பறவைகள் சூழ்ந்து விமானத்தினை முற்றுகையிட்டு இருந்தன.

விமானி கடும் முயற்சி செய்து பத்திரமாய் விமானத்தினை தரை இறக்கினார். பயணிகள் விமானத்தை விட்டு பாதுகாப்பாய் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் பறவைகள் பயணிகளின் பெட்டிகள் இருந்த பகுதியினை சுற்றி சுற்றி வந்தன. அதிகாரிகளுக்கு பெட்டி ஏதோ ஒன்றில் தவறு இருப்பது புரிந்தது. பெட்டிகளை திறந்து பரிசோதித்த போது ஒரு பெட்டியினுள் நிறைய அரிய வகை பறவைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த பெட்டியின் உரிமையாளர் பாஸ்போர்ட்டினை ஆய்வு செய்த பொழுது அது போலி பாஸ்போர்ட் என தெரிய வந்தது. வந்த நபர் நெடுங்காலமாக விலங்குகளை கடத்துபவர். இதன் காரணமாக பலமுறை தண்டனை பெற்றவர் என்பது தெரிய வந்தது. இந்த செய்தியில் பல கேள்விகள் எழலாம்! போலி பாஸ் போர்ட் என அதிகாரிகளுக்கு ஏன் தெரிய வில்லை?

பறவைகள் ஸ்கேன் செய்யப்படும் பொழுது எப்படி தெரியாமல் போனது? இந்த பறவைகள் சத்தம் மற்ற பறவைகளுக்கு மட்டும் எப்படி கேட்டது? என நியாயமான பல சந்தேங்கள் எழலாம். நியாயமானதே. இதனை அந்த அதிகாரிகள் கண்டிப்பாய் ஆய்வு செய்திருப்பார்கள். கடத்தியவருக்கும் கடும் சிறை தண்டனை அளிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

அடைக்கப்பட்ட பறவைகளின் நிலைமையை அவர்கள் அளித்த ஓசை மூலம் அறிந்த பறவைகள் அதாவது அதே இனத்தை சாராத மற்ற பறவைகளும் கூடி இப்பறவைகளை காப்பாற்ற கடும் முயற்சிகளை செய்துள்ளன என்கின்றனர்.

நாம் இங்கு பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உள்ளன. ஒரு பறவைக்கு ஆபத்து என்றால் பறவை கூட்டமே கூட ஓடி வர தயாராய் உள்ளது. ஆறறிவு இருக்கும் நாம் நம் வீட்டில் இருக்கும் ரத்த உறவுகளை ஏன் உதாசீனம் செய்கின்றோம்? அக்கம் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் வாழ்கின்றோம். தெரிந்தால் அவர்கள் வாழ்வை கண்டு பொறாமை படுகின்றோம். மனிதனுக்கு மனிதனே தீங்கு செய்கின்றான்.

காரணம் பணம்! பணம்!! பணம்!! இனியாவது வருங்காலத்தில் நம்மை நாம் மாற்றிக் கொள்வோமே!

அன்பே பலம்! அறிவே சக்தி! என்று வாழ்வோமே!

Tags:    

Similar News