வாழ்க! வளர்க! வாழ்வியல்- 105 : துன்பமே இன்பம் ஆகுமோ?
- ஒருநாள் திடீரென அவரது மனதில் ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது.
- பல சரக்கு வணிகம் செய்து வந்த அவருக்குப் போதுமான அளவுக்கு வருமானம் இருந்தது.
வாழ்க்கையின் இன்பத் தருணங்களை எப்போதும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் இனிய வாசகப் பெருமக்களே! வணக்கம்.
"எல்லாம் இன்ப மயம்!" என்கிற முழக்கம் கவிதைகளிலும் பாடல்களிலும் கதைகளிலும் மட்டுமே கேட்கிறதே, அன்றாட வாழ்வியலில் அது வந்து போவது எக்காலம்?; அப்படி அது வந்து போனாலும் ஒரு மின்னலைப் போலல்லவா தோன்றியவுடன் மறைந்து விடுகிறது?; நிரந்தர மகிழ்வாய்த் தங்கி நம்மை நிரந்தர இன்பத்தில் ஆழ்த்திடும் காலம் என்பது வாராதா? என்பதெல்லாம் நம் ஒவ்வொருவரின் ஏக்கமாகவே இருக்கிறது. துன்பமும் இன்பமும் மாறி மாறி வருமென்பது வாழ்வியல் உண்மை என்றாலும், பெரும்பாலானோர் வாழ்வில் துன்பம் மட்டுமே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதே இதற்கு மாற்றுக் காண்பது எவ்வாறு?.
'இன்பம்' என்பதும் 'துன்பம்' என்பதும் எதிர் எதிர் உணர்வுகள்தாம். இன்பம் வந்தால் உள்ளமும் உடலும் மகிழ்ச்சியால் திளைத்திருப்பதும், உற்சாக உணர்வோட்டம் உடலெங்கும் பரவுவதும் இயல்பாக இருக்கிறது. இன்பச் சூழ்நிலையில் எதைச் செய்தாலும் சரியாகவும் திறமாகவும் இருக்கிறது; இன்பச் சூழ்நிலை பெரும்பான்மையும் வெற்றிச் சாதனைகளின் ஊற்றுக் கண்ணாகவே இருக்கிறது. ஆனால் துன்பச் சூழலோ முற்றிலும் மாறுபட்ட உணர்வுகளைக் கொண்டுவந்து சேர்க்கிறது; மனம் துயரத்தில் ஆழ்ந்து குழப்பத்தில் தடுமாறுகிறது; உடலோ சோகத்தில் தள்ளாடிச் செயலற்றுப் போகிறது. துன்பம் நமக்கு எதிர்மறைச் சிந்தனைகளைக் கொண்டுவந்து கொட்டுவதால், எல்லாச் செயல்களும் தோல்விப் பயணங்களாகவே முடிவடைகின்றன. துன்பத்தை இன்பமாக மாற்றும் மாயவித்தைதான் என்ன?.
இராமாயணத்தில், இராமனைப் பிரிய நேருகிற தருணத்தில் குகன் கலங்கி நிற்கின்றான். பிரிவு என்பது வந்துவிட்டால் துன்பம் வந்துவிடுமே! என்பது அவனது கலக்கத்திற்கான காரணம். அந்த நேரத்தில் குகனைப் பார்த்து இராமன், "துன்புளது எனினன்றோ சுகம் உளது!" என்று கூறுகிறான். அதாவது 'எல்லா இன்பங்களும் முதலில் துன்பங்களாகவே வரும்; துன்பங்களின் நிறைவு இன்பங்களாகவே மலரும்!' என்பதை இந்தத் தொடரின் வாயிலாக இராமன் நமக்கு உணர்த்த விரும்புகிறான். பிரிவது துன்பமானால் பின்பு இணைவது இன்பம்தானே! என்று குகனிடம் உணர்த்தாமல் உணர்த்தி நிற்கிறான் இராமன். திருவள்ளுவரும்,
"இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்"
என்கிறார். 'இடும்பை எனப்படும் துன்பம் என்பது, மனித வாழ்வியலின் போக்கில் அடிக்கடி ஏற்படுவதுதான்!; இயல்பானதுதான்! என்கிற உண்மையைப் புரிந்து கொள்பவன் இன்பத்தைத் தனியாகத் தேடாமல், துன்பத்தோடு வாழ்வதற்கும்கூடப் பழகிக்கொள்வான்' என்கிறார் திருவள்ளுவர். சுவைகளில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு, உறைப்பு எனப் பலவகை உண்டு என்றாலும் மனம் எப்போதும் இனிப்பை மட்டுமே நாடி நிற்பது போன்றது இன்பத்தை மட்டுமே வேண்டி நிற்பது ஆகும். எல்லாச் சுவைகளின் கூட்டுக்கலவைகளில் நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்கள், ஆகச் சிறந்த சுவைப்பையும், சத்துக்களையும் தருவதைப்போல, இனிப்புத் தவிர்ந்த பல்சுவை உணர்வுகளையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும்.
துக்கமோ மகிழ்ச்சியோ அதை நமது மனம் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொறுத்தே அவை தரும் விளைவுகளின் தாக்கமும் எதிர்மறையானதாகவோ நேர்முறையானதாகவோ இருக்கும். இன்பத்தை இன்பமாக எதிர்கொள்வதைப்போல, துன்பத்தையும் இன்பமாகவே எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு துன்பம் வருகிறது; அதற்கு எளிதாகத் துன்பம் கொடுத்து அதனைத் தூரத் தள்ளிவிடுவதற்கு ஓர் எளிய வழியை வள்ளுவர் கூறுகிறார்.
"இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு
இடும்பைப் படாதவர்"
'துன்பத்தைக் கண்டு துவண்டுவிடாமல் துணிச்சலோடு எதிர்த்து நின்று போராடத் தெரிந்தவர்களே துன்பத்திற்குத் துன்பம் செய்து இன்பம் விளைவிப்பவர்கள் ' என்பது வள்ளுவ வாக்கு. வாழ்க்கையில் துன்பமே இயல்பானது; அதனைத் துரத்தித் துரத்திப் போரிடுவதே இன்பம் விளைவிக்கும் செயலாகும். இப்போராட்டத்தில், துன்பமும் துயரமும் சூழத் தளர்ந்து போரிடாமல், தெம்பும் நம்பிக்கையும் பெருக உத்வேகத்துடன் போரிட்டால், வெற்றி இலக்கு மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். ஓர் ஊரில் ஒரு வணிகர் இருந்தார். பலசரக்கு வணிகம் செய்து வந்த அவருக்குப் போதுமான அளவுக்கு வருமானம் இருந்தது. நாலு பெண்குழந்தைகள். தனது வருமானத்தில் நாலு பெண்குழந்தைகளுக்கும் நல்ல கல்வியை வழங்கி ஆளாக்கி வளர்த்து விட்டார். இப்போதுதான் அவரது வாழ்க்கையில் துன்பம் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. நாலு பெண்களுக்கும் படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைக்க வேண்டும்; அதோடு அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளைகள் கிடைத்துக் கல்யாணம் வேறு நல்லபடியாகச் செய்து முடிக்க வேண்டும். பல சரக்குக் கடை வணிகமும் தற்போது சிரமதிசையில் போய்க்கொண்டிருந்தது; போட்டிக்கு நிறையக் கடைகள் வந்ததனால் நஷ்டக் கணக்கு நாள்தோறும் பெருகிக் கொண்டே இருந்தது.
அந்த ஊரில் பெரிய கோவில் ஒன்று இருந்தது. அக்கோவிலுக்குச் சென்று அங்குள்ள கடவுளை நாள்தோறும் வழிபடும் வழக்கத்தைப் பல்லாண்டுகளாகக் கொண்டிருந்தார் வணிகர். முன்பெல்லாம் வியாபாரம் நன்றாக நடந்துகொண்டிருக்கும் போது, அவருக்கு நிதானமாக நின்று சாமி கும்பிடுவதற்கே நேரம் இருக்காது; ஆனால் இப்போதெல்லாம் கோவிலுக்கு வந்தால் மணிக்கணக்காக நேரத்தைச் செலவழிக்கிறார். தெய்வத்தின்முன் நின்று தன்னுடைய மகள்களின் வேலைவாய்ப்பு, திருமணம், மற்றும் வணிகத்தில் நேர்ந்துவரும் நஷ்டங்கள் ஆகியவை குறித்து நிறையவே புலம்பவும் தொடங்கி விட்டார்.
ஒருநாள் திடீரென அவரது மனதில் ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது. "நாள்தோறும் கூட்டத்தோடு கூட்டமாய் வந்து சாமிமுன் நின்று நமது துன்பங்களையெல்லாம் புலம்பிவிட்டுச் செல்கிறோமே! உண்மையிலேயே சாமி அதனை முழுமையான கவனத்தோடு கேட்பாரா?. நாம் இப்படிச் செய்தால் என்ன? ஊரில் சில முக்கிய நபர்களைக் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று பார்க்காமல், தனியாகச் சென்று தனிப்பட்ட முறையில் பார்த்தால் காரியம் நடந்துவிடுகிறதே!. அதைப்போல நாமும் சாமியை யாருமில்லாத நேரம் பார்த்துச் சென்று , நமது துன்பங்களைச் சொல்லிக் கதறி அழுதால் நிச்சயம் நமது துன்பங்களைக் கடவுள் நீக்கி விடுவாரல்லவா?".
முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
தொடர்புக்கு 9443190098
'சரியான முடிவு!' எனத் தீர்மானித்த வணிகர் அன்று இரவே கோவிலுக்குள் சென்று நடை சாத்தும் நேரத்தில் யார் கண்ணிலும் படாமல் கோவில் மண்டபத்தில் ஒளிந்து கொண்டார். அப்படியே ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்து சிறிது நேரம் கண்ணயர்ந்து தூங்கவும் தொடங்கிவிட்டார். நள்ளிரவு நேரத்தில் யாரோ பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டு படக்கென்று விழித்துக்கொண்டார். அந்தக்கோவில் பிரகாரத்தில் இருந்த ஒரு தூணும் ஒரு படிக்கல்லும் பேசிக்கொண்டன. அவை பேசிக்கொண்டிந்ததை எந்தவித ஓசையும் எழுப்பிவிடாமல் அமைதியாகக் கேட்டார் வியாபாரி.
படிக்கல் பேசியது, "இந்தக் கோவிலில் கருவறையில் சாமியாக இருக்கக் கூடிய சிலையும், தூணாக இருக்கக் கூடிய நீயும், படியாகக் கிடக்கக் கூடிய நானும் ஆகிய நாம் மூவரும் ஒரே மலையில் அருகருகே கிடந்த பாறாங்கற்கள்தானே!. நம்மை வந்து பார்த்த சிற்பியும் கொத்தனாரும் நம்மை இப்படிப் பிரித்துத் தூணாகவும் சாமிசிலையாகவும், படிக்கட்டாகவும் மாற்றி இந்தக் கோவிலில் நம்மை அமைத்து விட்டார்கள். ஆனால் எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி தாங்கமுடியாத துன்பம்?. கோவிலுக்கு வருவோர் போவோர் என்று ஒவ்வொருவரும் மிதித்து மிதித்து நான் படும் வேதனைக்கு அளவே கிடையாது!".
உடனே தூண் பேசியது, " உனக்காவது ஆட்கள் வந்து போய் மிதித்தால் மட்டுமே வேதனை! மற்ற நேரத்தில் நீ மிதிபடாமல் இன்பமாக இருக்கலாம்; ஆனால் நான் அப்படியா?. என்னைத் தூணாக நிறுத்தி, என்மீது இந்தக் கோவிலையே தூக்கி நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இரவு பகல் எந்நேரமும் இறக்கி வைக்க முடியாத சுமையைச் சுமந்த வண்ணமே இருக்கும் என் துன்பத்தை நான் எங்குபோய்ச் சொல்வேன்?".
"ஆமாம்! ஆமாம்! உன் துன்பமும் பெருந்துன்பம்தான். நம்மில் துன்பம் எதுவுமில்லாமல் ஜாலியாக இருப்பது சாமிசிலை மட்டும்தான்" என்றது படிக்கல். உடனே கருவறையிலிருந்து ஒரு விசும்பல் ஒலி கேட்டது; இலேசான வெளிச்சத்தில் வியாபாரி உற்றுக் கவனித்தார்; சாமி சிலை அழுது கொண்டிருந்தது. "உனக்கென்ன கஷ்டம்?. அன்றாடம் பாலபிஷேகம், பன்னீர் அபிஷேகம், நெய் அபிஷேகம் என்று விதம் விதமான அபிஷேகங்களில் உன்னைக் குளிப்பாட்டி வணங்குகிறார்களே! உனக்கென்ன துன்பம்?" தூண் கேட்டது. "எல்லாரும் என்னைக் குளிப்பாட்டுகிறார்கள்!, குளிர்விக்கிறார்கள்!, கும்பிடுகிறார்கள்! உண்மை. ஆனால் என் சிலை முன்னால் நின்றுகொண்டு ஒவ்வொரு பக்தரும் அவர்கள் படுகிற துன்பங்களை அடுக்கடுக்காய்ச் சொல்லி அழும்போது, ஒவ்வொரு துன்பத்தையும் நானே அனுபவிப்பதுபோல் உணர்கிறேன். ஒரு நாளைக்குப் பத்தாயிரம்பேர் வந்து என்னை வழிபட்டாலும், எந்தக் குறையும் சொல்லாமல் மகிழ்ச்சியோடு வந்து என்னை எந்தத் தொந்தரவும் செய்யாமல் வழிபட்டுச் செல்பவர்கள் பத்துப்பேர்கூடத் தேற மாட்டார்கள்; அடுத்தவர் படும் துன்பப் பட்டியல்களிலிருந்து மீண்டு வந்து நான் எப்போது நிம்மதியாக இருக்கப்போகிறேன்? என்று நினைத்துப் பார்க்கிறேன்; அதற்கு வாய்ப்பே இல்லை!; துன்பத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வதிலும் ஒரு இன்பம் இருக்கும்; ஏற்றுக்கொள்வோம்!" என்றது சாமி சிலை. சாமியைத் தனிப்படப் பார்த்துத், துன்பப்பட்டியல் வழங்க வந்திருந்த வணிகருக்குக், கோவிலுக்குள்ளேயே இவ்வளவு புலம்பல்களா? என்று ஆகிப்போனது.
துன்பம் இருக்கும் வரைதான் நிவர்த்திக்கான தேடல்களும் தீர்ப்பதற்கான வேட்டைகளும் இருந்துகொண்டே இருக்கும். மனிதனுக்கு இன்பம் வேண்டும்! ஆனால் துன்பத்தை வென்றால்தான் இன்பம் சாத்தியம். துன்பமில்லாத உலகத்தில் போட்டிகளே இல்லை; போட்டிகள் இல்லையென்றால் வெற்றி ஏது? மகிழ்ச்சி ஏது?.
நம்மில் ஒருவருக்குத் துன்பம் என்றால் துடைக்க வரும் அத்தனை கரங்களும் அன்பின் கரங்கள்; சமூக ஒருங்கிணைவைத் துயரங்களே கயிறுகளாகச் சேர்ந்து பிணைத்து வைக்கின்றன. அடுத்தவர்க்கு உதவுவது அல்லது அடுத்தவரிடம் உதவிக்காகக் காத்து நிற்பது ஆகிய இவ்விரண்டு அன்பின் செயல்களும் துன்பத்தின் நெருக்கடிகளால் சாத்தியமாகின்றன; பிறகு உதவி என்னும் மகிழ்ச்சி மலர்ந்து மணம் பரப்புகிறது.