சிறப்புக் கட்டுரைகள்

பித்ரு தோஷம்-அலட்சியம் வேண்டாம்

Published On 2023-10-31 15:00 IST   |   Update On 2023-10-31 15:00:00 IST
  • பெற்றோர் இறந்த திதியை கண்டுபிடித்து அவர்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
  • குல தெய்வம், இஷ்ட தெய்வம் போன்றவற்றை வழிபடுபவர்கள் பித்ருக்களை கண்டுகொள்ளாமல் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் முழுமை இருக்காது.

கண்கண்ட தெய்வம் என்றால் அது பெற்றோர்கள்தான். அவர்களை வாழும் காலத்தில் உரிய மரியாதை கொடுத்து சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். இதை கருத்தில் கொண்டுதான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர். ஆனால் தற்போதைய நவீன யுகத்தில் பெற்றோர்களை யாரும் கண்டுகொள்ளாத நிலைதான் உள்ளது.

வயதான நிலையில் வாடி வதங்கி, ஒருவேளை உணவுக்காக வாரிசுகளின் காலடியில் பரிதாபமாக கிடக்க வேண்டிய நிலையில்தான் பெரும்பாலான முதியோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அந்த முதியவர்கள் படும் வேதனை சொல்லி மாளாது. அந்த வேதனைகள்தான் தோஷங்களாக மாறுகின்றன.

பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்கள் மனம் குளிரும்படி நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொள்ளாதவர்கள் அவர்கள் மறைந்த பிறகாவது உரிய கடமைகளை செய்ய வேண்டும். அதாவது மூதாதையர்களுக்கு செய்யப்படும் பித்ரு கடன்களை ஆண்டு தோறும் செய்ய வேண்டும்.

பெற்றோர் இறந்த திதியை கண்டுபிடித்து அவர்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். அப்படி செய்யாத போது பித்ருக்கள் வருத்தப்படுவார்கள். அந்த வருத்தம்தான் வாரிசுகளுக்கு பித்ரு தோஷமாக மாறிவிடும். குழந்தைகளின் ஜாதகத்தை கணிக்கும்போது இந்த பித்ரு தோஷம் இருப்பதை ஜோதிடர்கள் மிக எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள்.

பித்ரு தோஷம் இருப்பதை பல கிரக அமைப்புகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒருவர் ராகுகாலத்தில் பிறந்திருந்தால் அவருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்பார்கள். அதே போல சுபகிரகங்கள் மறைவு இடங்களில் அமைந்திருந்தால் அதையும் பித்ரு தோஷம் என்பார்கள். சூரியன் பகை அல்லது நீச்சம் பெற்றிருந்தால் அதுவும் பித்ரு தோஷத்துக்குரிய அறிகுறி என்பார்கள்.

ராகு, கேது நட்சத்திரத்தில் குரு சேர்க்கை பெறும்போது அது பித்ரு தோஷமாக கருதப்படும். இதுபோல சூரியன், சந்திரன், செவ்வாய் அமைவதைப் பொருத்து பித்ரு தோஷம் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ளலாம். பித்ரு தோஷம் இருந்தால் குடும்பத்தில் முன்னேற்றம் என்பது இருக்கவே இருக்காது.

ஒருவர் பித்ரு தோஷம் பாதிப்பு இருந்தால் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய கட்டமும் போராட்டம் நிறைந்ததாக இருக்கும். பொருளாதார ரீதியில் திருப்தியான நிலைக்கு வர முடியாமல் திண்டாடுவார்கள். இதை வைத்தே ஒருவருக்கு பித்ரு தோஷம் இருக்கி றதா? இல்லையா? என்பதை கண்டுபிடித்து விடலாம்.


பித்ரு தோஷம் இருந்தால் வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும். சுப காரியங்கள் நடை பெறுவதில் இடையூறு கள் ஏற்படும். பெரும்பாலான பித்ரு தோஷ ஜாதகக்காரர்க ளுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்ப தில் தாமதம் உண்டாகும். எனவே பித்ரு தோஷம் இருந்தால் அலட்சியாக இருக்கவே கூடாது.

உரிய பரிகாரங்கள் அவசியம் செய்யப்பட வேண்டும். மறைந்த முன்னோர்களான பித்ருக் கள் மனம் குளிர்ந்த நிலையில் இருந்தால்தான் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். ஒருவர் எந்த அளவுக்கு பித்ருக்களுக்கு சரியான முறையில் எள்ளும், தண்ணீரும் கலந்த தர்ப்பணத்தை முறைப்படி கொடுக்கிறாரோ அந்த அளவுக்கு அவருக்கு வாழ்க்கையில் முன் னேற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்.

பித்ருக்களை வழிபடாமல் எந்த கோவிலுக்கு போனாலும் நிச்சயம் பலன் கிடைக்காது. குல தெய்வம், இஷ்ட தெய்வம் போன்றவற்றை வழிபடுபவர்கள் பித்ருக்களை கண்டுகொள்ளாமல் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் முழுமை இருக்காது. எனவே பித்ருக்களை அமாவாசை தோறும் தர்ப்பணம் செய்து வழிபட்டால் நல்லது.

பித்ரு தோஷம் இருப்பவர்கள் அதற்குரிய பரிகாரத்தை பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு உரிய வகையில் முறைப்படி செய்ய வேண்டும். அனுஷம், பூசம், பூனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் நட்சத்திர நாட்களில் அமாவாசை வருமானால் அன்று செய்யப்படும் தர்ப்பண பூஜைகள் உடனடியாக பித்ரு தோஷத்தை நீக்கும் வகையில் இருக்கும். எனவே மாத அமாவாசைகளில் இந்த நட்சத்திர நாட்கள் வருகிறதா? என்பதை பார்த்து பித்ரு பூஜை செய்யுங்கள்.

புரட்டாசி மாதம் மகாளய பட்சம் உள்ள 15 நாட்களில் பரணி நட்சத்திரம் வரும் நாள் மிகவும் விசேஷமானது. அன்றைய தினத்தை மகாபரணி என்று சொல்வார்கள். அன்றைய தினம் பித்ருக்களுக்கு படையலிட்டு வழிபாடுகள் செய்தால் எவ்வளவு பெரிய பித்ரு தோஷமாக இருந்தாலும் அகன்று விடும்.

அதுபோல அட்சய திருதியை தினமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் புரோகிதர்களை வீட்டுக்கு அழைத்து பித்ரு பூஜை செய்தால் தோஷங்கள் விலகும். பித்ருக்களின் கருணை பார்வை குடும்பத்தி னர் மீது கிடைக்கும். இது தவிர தினமும் நாம் உணவு சாப்பிடுவதற்கு முன்பு அதில் கொஞ்சம் எடுத்து காகத்திற்கு வைப்பது மிகப்பெரிய பரிகாரம் ஆகும்.

காகத்திற்கு தினமும் அன்னம் வைப்பதன் மூலம் எவ்வளவு பெரிய பித்ரு தோஷத்தின் பாதிப்பையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

வீட்டில் இத்தகைய பித்ரு பூஜைகள் செய்ய இயலாதவர்கள் குறிப்பிட்ட ஆலயங்களுக்கு சென்று பரிகாரம் செய்யலாம். காசி, கயா, பிரயாகை தலங்களுக்கு சென்று பிண்டம் வைத்து பித்ரு பூஜைகள் செய்தால் பித்ரு தோஷங்கள் விலகி ஓடி விடும். அவ்வளவு தூரம் போக முடியாது என்று நினைப்பவர்களுக்கு ஏற்ப தமிழகத்தில் பித்ரு தோஷ நிவர்த்திக்காக சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு பல்வேறு ஆலயங்கள் உள்ளன. பித்ரு தோஷம் ஜாத கத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதையும் அதை நிவர்த்தி செய்ய தமிழகத்தில் எந்த ஆலயத்துக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும். பித்ரு தோஷ நிவர்த்தி தலங்களில் அதில் முதன்மை யானதாக ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

ராமேசுவரம் கடலில் அக்னி தீர்த்தம் உள்ளது. முதலில் அங்கு நீராட வேண்டும். பிறகு ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராட வேண்டும். அதன் பிறகு ராமநாத சுவாமியை வழிபட வேண்டும். இந்த வழிபாடு மூலம் உடனடியாக பித்ரு தோஷம் விலகும் என்கிறார்கள்.

இதே போல கூத்தனூர் அருகே உள்ள திலதர்ப்பணபுரி, திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகே உள்ள பூவாளூர், மதுரை அருகே உள்ள திருபுவனம், திருவெண்காடு மற்றும் புள்ளம் பூதங்குடி, வேதாரண்யம, கன்னியாகுமரி, ஆகிய தலங்களும் பித்ரு தோஷம் நிவர்த்திக்குரிய தலங்களாக கருதப்படுகிறது. கோவில்களில் மரக்கன்றுகள் நடுவது மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும். இதுவும் பித்ரு தோஷத்தை தணிக்க கை கொடுக்கும்.

ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் அமைந்திருக்கிறதோ அதற்கு ஏற்பதான் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியத்தை கணக்கிட முடியும். சூரியன் சரியானபடி அமையாவிட்டால் பித்ரு தோஷம் அதிகம் இருப்பதை உணர முடியும். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் சூரியனை வழிபட வேண்டும்.


தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு-பட்டுக்கோட்டை செல்லும் வழியில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் பரிதியப்பர் ஆலயம் உள்ளது. ஜாதகத்தில் சூரியன் உச்சம் அல்லது நீச்சம் பெற்றவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். இந்த தலத்தில் உள்ள சூரிய தீர்த்த கரையில் நீத்தார் கடன் செய்யலாம். இந்த பித்ரு பூஜை காசியில் செய்யப படும் பித்ரு பூஜைக்கு இணையானதாக கருதப் படுகிறது.

ஈரோடு மாவட்டம் பவானியில் அமைந்துள்ள சங்கமேஸ்வரர் ஆலயமும் பித்ரு தோஷ நிவர்த்தி தலமாகும். அங்கு நதியில் நீராடி சங்க மேஸ்வரரை வழிபட்டால் பித்ருக்களின் ஆசியை பெற முடியும். அதுபோல கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயமும் பித்ரு தோஷ நிவர்த்திக்கு மிக சிறந்த பரிகார தலமாகும். அங்கும் நதியில் நீராடி மகுடேஸ்வரரை வழிபட வேண்டும்.

திருவாரூர் மாவட்டம் குருவி ராமேசுவரத்தில் உள்ள திருப்பள்ளி முக்கூடல் ஆலயமும் சிறப்பானதாக கருதப்படுகிறது. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயமும் பித்ரு தோஷ நிவர்த்தி பூஜைகளுக்கு புகழ் பெற்றது. அமாவாசை நாட்களில் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் ஆலயத்தில் திரளும் பல்லாயிரக்கணக்கான மக்களே இதற்கு சாட்சியாகும்.

சென்னை கவரப்பேட்டை அரண்வாயலில் உள்ள வரமூர்த்தீஸ்வரர் கோவிலும் பித்ரு தோஷ நிவர்த்தி தலமாகும். சென்னை மக்கள் இந்த தலத்துக்கும் சென்று வழிபட்டு பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட முடியும். இது போல தமிழகம் முழுவதும் பல ஆலயங்கள் பித்ரு தோஷத்தில் இருந்து மக்களை மீட்கும் சிறப்பான தலங்களாக உள்ளன.

உங்களுக்கு எந்த ஆலயம் அருகில் இருக்கிறதோ அங்கு சென்று உரிய முறையில் வழிபாடு செய்தாலே போதுமானது.

Tags:    

Similar News