சிறப்புக் கட்டுரைகள்

கணவன் மனைவி ஒற்றுமைக்கு திருசத்திமுற்றம்

Published On 2023-12-21 16:31 IST   |   Update On 2023-12-21 16:31:00 IST
  • காவிரி கரையோரத்தில் மண் எடுத்து அதில் லிங்கம் செய்து தினமும் அதற்கு மலர் மாலைகள் சூடி வழிபாடு செய்து வந்தாள்.
  • ஜோதி ரூபமாக காட்சி அளிக்கும் சிவபெருமானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க பார்வதி தேவி முடிவு செய்தாள்.

கணவன்-மனைவிக்கு இடையே மன ஒற்றுமை இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்தான் அது வாழ்க்கையாக இருக்கும். அப்படி இல்லாவிட்டால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்காது. இம்சையாகத்தான் இருக்கும்.

கணவன்-மனைவி ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும், மேம்படுத்தும் வகையிலும் தமிழகத்தில் எத்தனையோ பிரார்த்தனை தலங்கள் உள்ளன. கும்பகோணத்திலும் பல ஆலயங்களில் கணவன்-மனைவி ஒற்றுமைக்கான வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கும்பகோணத்துக்கு மிக அருகில் இருக்கும் திருசத்திமுற்றம் தலம் கணவன்-மனைவி ஒற்றுமைக்கு கை கொடுக்கும் தலமாக கருதப்படுகிறது.

பொதுவாக ஒவ்வொரு தலமும் ஒவ்வொரு புராண நிகழ்வின் பின்னணியில் பலன் கொடுப்பதாக இருக்கிறது. அத்தகைய புராண வரலாற்று பின்னணி கொண்ட தலங்களில் ஒன்றாக திருசத்தி முற்றம் தலம் திகழ்கிறது. கும்பகோணம் அருகே உள்ள இந்த தலத்துக்கு பெயர் வந்த காரணம் ருசிகரமானது. சிவபெருமானுக்கு சக்தியாகிய பார்வதிதேவி கொடுத்த முத்தத்தின் அடிப்படையில் அந்த ஊருக்கு 'சக்தி முத்தம்' என்ற பெயர் ஏற்பட்டது.

நாளடைவில் பேச்சு வழக்கில் சத்திமுற்றம் என்று மாறிப்போனது. இந்த தலத்தில் உள்ள சிவபெருமானுக்கு சிவக்கொழுந்தீசர் மற்றும் தழுவக்குழைந்த நாதர் என்று இரு பெயர்கள் உள்ளன. இந்த இரு பெயர்களும் ஒரு வரலாற்று நிகழ்வின் பின்னணியில் உருவானதாகும்.

ஒருமுறை பார்வதி தேவிக்கும், சிவபெருமானுக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்டது. இதனால் வழக்கம் போல பார்வதி தேவி பூலோகத்தில் பிறக்க நேரிட்டது. மீண்டும் சிவபெருமானிடம் சென்று சேர வேண்டுமானால் காவிரி நதிக்கரையில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட பார்வதி தேவி காவிரி நதிக்கரையில் எந்த இடத்தில் ஆசிரமம் அமைத்து லிங்கம் பூஜை செய்வது என்று பார்த்து கொண்டே வந்தாள். அப்போது கும்பகோணம் அருகே தற்போது திருசத்திமுற்றம் பகுதியில் உள்ள இடம் அவளுக்கு பிடித்து போய்விட்டது. இதனால் அங்கேயே பூஜை செய்ய முடிவு செய்தாள்.

காவிரி கரையோரத்தில் மண் எடுத்து அதில் லிங்கம் செய்து தினமும் அதற்கு மலர் மாலைகள் சூடி வழிபாடு செய்து வந்தாள். அந்த ஈசனையே நினைத்து தவம் இருந்தாள். அவளது தவத்துக்கு மனம் இரங்கிய சிவபெருமானும் அங்கு வந்தார்.

கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்த பார்வதியை சற்று சீண்டி பார்க்க சிவபெருமான் ஆசைப்பட்டார். அதன்படி காவிரியில் கரை புரண்டு ஓடும் வகையில் வெள்ளம் வருமாறு செய்தார். திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததால் பார்வதி தேவி அதிர்ச்சி அடைந்தாள்.

காவிரி கரையோரம் உள்ள மணல் லிங்கம் மீது வெள்ளம் புகுந்தால் அதில் கரைந்து லிங்கம் சென்று விடுமே என்று பரிதவித்தாள். அடுத்த வினாடி ஓடோடி சென்று அந்த லிங்கத்தை கட்டிப்பிடித்து இறுகத் தழுவிக் கொண்டாள். இதனால் காவிரி வெள்ளத்தில் இருந்து மணல் லிங்கத்தை அவளால் காப்பாற்ற முடிந்தது.

இத்தகைய சோதனைகள் இனி வரக்கூடாது என்பதற்காக தனது வழிபாட்டை மேலும் கடுமையாக்க பார்வதி தேவி முடிவு செய்தாள். அதன்படி ஒற்றைக் காலில் நின்றபடி சிவபெருமானை மனதில் நிறுத்தி மிக கடுமையான தவத்தை மேற்கொண்டாள். அவளது இந்த தவத்தை கண்ட ஈசனுக்கு மீண்டும் இரக்கம் பிறந்தது.

என்றாலும் இன்னொரு சோதனை செய்து பார்க்கலாமா என்று ஈசன் நினைத்தார். பார்வதியின் தவத்தை கலைக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். பார்வதி தேவியை அச்சுறுத்தும் வகையில் தீப்பிழம்பாக தோன்றினார்.

தீயின் வெப்பத்தால் பார்வதி தேவியின் ஒற்றை கால் தவம் கலைந்தது. என்ன இது சோதனை என்று நினைத்த போதே, "தீப்பிழம்பாக எழுந்து நிற்பது ஈசனே" என்று பார்வதி தேவி அறிந்து கொண்டாள். ஜோதி ரூபமாக காட்சி அளிக்கும் சிவபெருமானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க பார்வதி தேவி முடிவு செய்தாள்.

ஜோதியே சிவம் என்று சொல்லியபடியே தீப்பிழம்பை பார்வதி தேவி ஆரத்தழுவிக் கொண்டாள். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அன்னைக்கு அருள்பாலித்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார். அப்போது மகிழ்ச்சி மிகுதியால் சிவபெருமானுக்கு பார்வதிதேவி கன்னத்தில் முத்தமிட்டதாக இந்த ஆலயத்தின் தல வரலாறு குறிப்புகள் உள்ளன.

அதை பிரதிபலிக்கும் வகையில் இந்த தலத்தில் கருவறையின் நுழைவு வாயில் வலது பக்கத்தில் சிவனை அம்பாள் தழுவிய கோலத்தில் ஒரு சன்னதி அமைந்துள்ளது. அம்பாள் ஒற்றைக் காலை தரையில் ஊன்றிய படி மற்றொரு காலை ஆவுடையார் மீது மடக்கி வைத்து தன் இரு கைகளாலும் சிவ லிங்கத்தை தழுவியபடி நிற்பதை அங்கு பார்க்கலாம். இத்தகைய அமைப்புடன் தமிழகத்தில் வேறு எந்த சிவாலயத்திலும் சிவனும், பார்வதியும் இருப்பதை பார்க்க முடியாது.

பார்வதி தேவியை பரிசோதிக்க சிவபெருமான் ஜோதி பிழம்பாக நின்றதால் அவருக்கு சிவக்கொழுந்தீசர் என்ற பெயர் ஏற்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கருவறையில் உள்ள மூலவர் திருமேனியில் தீச்சுடர்கள் இருக்கின்றன. அர்ச்சகர் தீப ஆராதனை செய்யும்போது நன்கு உற்றுப் பார்த்தால் இந்த அதிசயத்தை பக்தர்கள் காண முடியும்.

சிவபெருமான் ஜோதியாக எழுந்து நின்ற போதிலும் துணிச்சலுடன் பார்வதி தேவி தீயை கட்டிப் பிடித்ததால் ஈசன் மனம் உருகிப் போனார் என்பது புராண வரலாறு. இந்த சிறப்பை வெளிப்படுத்துவதற்காகவே இந்த தலத்து ஈசனுக்கு "தழுவக்குழைந்த நாதர்" என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த புராண வரலாறு காரணமாக இந்த ஆலயம் திருமண யோகம் பெறும் அருமையான பிரார்த்தனை தலமாக திகழ்கிறது. பரிகார தலம் என்றும் சொல்கிறார்கள். நீண்ட நாட்களாக திருமணம் கைகூடாமல் இருக்கும் இளைஞர்களும், இளைஞிகளும் சக்தி தழுவிய ஈசனை மனம் உருக வழிபட்டால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும்.

அதிலும் குறிப்பாக சோமவார தினமான திங்கட்கிழமைகளில் சென்று வழிபட்டால் திருமணம் கைகூட விடாமல் செய்யும் தோஷங்களை மிக எளிதாக நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

காதல் வலையில் விழுபவர்களுக்கு திருமணம் கைகூடாமல் பல பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. அத்தகைய சிக்கல்களில் தவிக்கும் காதலர்கள் இந்த தலத்துக்கு வந்து தழுவக்குழைந்த நாதரை வழிபட்டால் தடைகள் விலகி அருமையான இல்வாழ்க்கை அமையும். காதல் வெற்றி பெற இங்கு காதலர்கள் வேண்டிக் கொள்வது உண்டு. மேலும் கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படவும் இந்த தலத்தில் வேண்டிக் கொள்கிறார்கள்.


சில கணவன்-மனைவிகள் விதி வசத்தால் பிரிவது உண்டு. ஒரு கால கட்டத்துக்கு பிறகு மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவார்கள். அத்தகைய நிலையில் இருப்பவர்களும் இந்த தலத்துக்கு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும். குழந்தை பாக்கியம், முன் ஜென்ம பாவ விடுதலை ஆகியவற்றுக்கும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

அப்பர் இந்த தலத்தில் தங்கியிருந்து ஏராளமான திருப்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு சிவக்கொழுந்தீசர் நேரில் காட்சி அளித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. திருஞான சம்பந்தர் வெயில் படாமல் செல்வதற்காக அவருக்கு சிவபெருமான் இந்த தலத்தில் முத்துப்பந்தல் கொடுத்தார். இதை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் முதல் வாரம் முத்துப்பந்தல் திருவிழா நடத்தப்படுகிறது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் இந்த ஈசன் மீது தேவார பதிகம் பாடியுள்ளனர்.

தேவார பாடல் பெற்ற தலங்களில் 85-வது தலமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது. கிழக்கு நோக்கிய இந்த ஆலயம் மிகப்பெரிய ஆலயமாகும். பல்வேறு சன்னதிகள் இங்கு உள்ளன. அம்பாள் தெற்கு நோக்கி பெரிய நாயகியாக அருள் பாலிக்கிறாள். சுவாமி சன்னதி பிரகாரத்தில் ஒரு ஆள் உயரத்துக்கு பைரவர் சிலையுடன் தனி சன்னதி இருக்கி றது. இவ்வளவு உயர பைரவரை தமிழகத்தில் வேறு எங்கும் பார்க்க இயலாது.

பார்வதியை தொடர்ந்து அகத்தியருக்கும் இந்த தலத்தில் ஈசன் அருள் பாலித்துள்ளார். அதாவது சிவபெருமானின் திருவடித்தரிசனத்தை இந்த தலத்தில்தான் அகத்தியரால் காண முடிந்தது. நீங்களும் அந்த தலத்துக்கு சென்று வந்தால் உங்களுக்கும் அத்தகைய தரிசனத்தை தந்து நல்ல இல்வாழ்க்கை அமைந்திட சிவக்கொழுந்தீசர் அருள்புரிவார்.

இந்த தலத்தில் ஏராளமான அபூர்வ கல்வெட்டுகள் உள்ளன. கோவில்களில் வரி வசூல் செய்வது எப்படி? என்பது உள்பட பல்வேறு தகவல்கள் அடங்கிய கல்வெட்டுகள் இங்கு இருக்கின்றன. இவை அபூர்வமானதாக கருதப்படுகிறது. ஆனால் பக்தர்கள் யாரும் அவற்றை கண்டுகொண்டதாக தெரிய வில்லை.

இந்த ஆலயம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். அதற்கேற்ப தரிசன நேரத்தை அமைத்துக் கொள்ளுங்கள். திருசத்திமுற்றம் தலத்தை சுற்றி ஏராளமான மிக பழமையான ஆலயங்கள் இருக்கின்றன. எனவே கும்பகோணம் ஆலய வழிபாடுகளின் போது இவற்றையெல்லாம் நன்கு கவனித்துக் கொண்டு திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

திருசத்திமுற்றம் தலம் போலவே கணவன்-மனைவி ஒற்றுமைக்கு சிறப்பு பெற்ற மற்றொரு தலம் திருவலஞ்சுழி. இந்த தலத்தின் சிறப்புகளை அடுத்த வாரம் காணலாம்.

Tags:    

Similar News