சிறப்புக் கட்டுரைகள்

விவேக சிந்தனைகள்

Published On 2024-01-11 15:13 IST   |   Update On 2024-01-11 15:13:00 IST
  • எல்லா மதங்களுமே இறைவனை அடைவதற்கான வெவ்வேறு பாதைகள் என்றும் அனைத்து மதங்களும் சமமான அளவில் மதிக்கப்பட வேண்டும்.
  • விவேகானந்தரது கருத்துகளில் பல இன்றைய இளைஞர்களின் வாழ்வை மேம்படுத்தக் கூடியவை.

சுவாமி விவேகானந்தரின் குரலில் ஒரு மாய வசீகரம் இருந்தது. கேட்பவர்களை உடனடியாகத் தன்வசப்படுத்தக்கூடிய பேராற்றல் அந்தக் குரலில் அமைந்திருந்தது.

அவரது உரையைக் கேட்ட சட்டம்பி சுவாமிகள் `தங்கக்குடத்தில் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்ற குரல் அவருடையது` எனப் புகழ்ந்திருக்கிறார்.

திருத்தமான உச்சரிப்பு, கணீரென்ற குரல், அழகிய மொழிநடை, தாம் சொல்லும் கருத்துகளில் உள்ள உள்ளார்ந்த ஈடுபாடு, எந்தக் கருத்தையும் விவாதக் கோணத்தோடு சொல்லி நிறுவும் ஆற்றல் என்றிப்படி அவரது பேச்சின் சிறப்பம்சங்கள் பல. அவரது ஆங்கிலம் கேட்பதற்கு சங்கீதம்போல் இருந்தது.

இவை அனைத்தும் இணைந்து அவரை உலகப் புகழ்பெற்ற பேச்சாளர்களில் ஒருவராக மாற்றின. கேட்பவர்களின் மனத்தை மயக்கி அவர்களைத் தம் கருத்தை ஏற்றுக் கொள்ளுமாறு செய்யும் வசீகரம் அவரிடம் இயல்பாகவே அமைந்திருந்தது.

அவர் சொற்பொழிவைக் கேட்க அலையலையாக மக்கள் கூடியதை உலகே வியந்து பார்த்தது.

அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில், சுவாமி விவேகானந்தர் கலந்து கொண்டார்.

உரையாற்றுபவர்களின் வரிசையில் விவேகானந்தர் முப்பத்து ஒன்றாவது இடத்தில் இருந்தார்.

அவர் மேடைக்கு அழைக்கப்பட்டு மேடையேறியதும், `அமெரிக்காவின் சகோதரிகளே மற்றும் சகோதரர்களே!` என்று தன் பேச்சை ஆரம்பித்தார்.

தங்களைச் சகோதர-சகோதரிகள் என்று விவேகானந்தர் குறிப்பிட்டதைக் கேட்டு அங்கு கூடியிருந்த அமெரிக்க மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிடங்கள் விடாமல் கைதட்டிக் கொண்டே இருந்தனர்.

அந்தக் கைதட்டல் நிற்கும் வரை விவேகானந்தர் தம் பேச்சை நிறுத்த வேண்டியதாயிற்று.

அதன்பின் அவர் ஆற்றிய உரைதான், அவரை உலக அளவில் பிரபலமாக்கியது. உலகின் எந்த மதமும் ஒன்றைவிட மற்றொன்று சிறந்ததோ கெட்டதோ அல்ல என்றார் அவர். எல்லா மதங்களுமே இறைவனை அடைவதற்கான வெவ்வேறு பாதைகள் என்றும் அனைத்து மதங்களும் சமமான அளவில் மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். இவையெல்லாம் ராமகிருஷ்ண பரமஹம்சர் போதித்த கருத்துக்களே.

ராமகிருஷ்ண பரமஹம்சர்

சிகாகோ உரையால் கிடைத்த பெரும்புகழ் காரணமாக அடுத்தடுத்து அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் உரையாற்ற அவர் அழைக்கப்பட்டார்.

அமெரிக்க மக்கள் அவரை வியந்து பார்த்தார்கள். அவர் உரையில் மெய்மறந்தார்கள். அமெரிக்கப் பத்திரிகைகள் அவரைப் பற்றியும் அவரது உரையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் பற்றியும் வானளாவப் புகழ்ந்து எழுதின.

இந்தச் செய்திகளெல்லாம் செய்தித்தாள்கள் மூலம் இந்தியாவையும் வந்தடைந்தன. இந்திய மக்கள் அந்தச் செய்திகளை மறுபடி மறுபடி வாசித்து மகிழ்ந்தார்கள்.

தமது அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குத் திரும்பும் வழியில் இங்கிலாந்தில் சிலநாட்கள் தங்கினார் விவேகானந்தர். அங்கே இந்திய வேதாந்தங்களில் நாட்டமுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியரான மாக்ஸ்முல்லரைச் சந்தித்தார்.

பாரத தேசத்து வேதங்களை ஆராய்ந்து பதிப்பிக்கும் அவரது செயல் விவேகானந்தரைப் பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதில் வியப்பில்லை. ஏற்கனவே வேதங்களுக்கு உரை எழுதிய சாயனர், தம் உரையைப் புதுப்பிக்கும் பொருட்டு மாக்ஸ்முல்லராக மறுபிறவி எடுத்திருக்கக்கூடும் என அவரைப் புகழ்ந்தார் விவேகானந்தர்.

ஓர் அன்பர் `அப்படியானால் மாக்ஸ்முல்லர் பாரத தேசத்தில் அல்லவா பிறந்திருப்பார், அவர் வெளிநாட்டில் ஏன் பிறக்க வேண்டும்?` எனக் கேள்வி எழுப்பினார்.

`அடிமை இந்தியாவில் வேதங்களின் பதிப்புப் பணியைச் செய்யப் பொருளாதார வளம் கிட்டாது என்பதால் அவர் வெளிதேசத்தில் பிறந்திருக்கலாம்` என்று பதில் சொன்ன விவேகானந்தர், `நாடுகளை நாம்தான் பிரித்தோமே தவிரக் கடவுள் அல்ல, உலகம் முழுவதும் கடவுளுக்கு ஒன்றேதான், யாரை எங்கு எப்போது பிறக்க வைக்க வேண்டும் என்பதை நம்மை விடக் கடவுள் நன்கு அறிவார்` என நகைத்தவாறே கூறினார்.

வெளிதேசம் சென்ற விவேகானந்தர் இந்தியா திரும்பியபோது அவரின் புகழ் இந்தியாவில் முன்பிருந்ததை விடப் பலமடங்கு கூடியிருந்தது. அவரது திருமுகத்தை ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டும் என்று இந்திய மக்கள் அளவற்ற வேட்கை கொண்டிருந்தார்கள்.

பாரத தேசத்து ஆன்மிகத்தின் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்திய சுவாமி விவேகானந்தரை மக்கள் தெய்வம்போல் கருதினார்கள்.

சென்னை வந்த விவேகானந்தர் சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு ரெயிலில் சென்றார். அவரைப் பார்க்க ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் மக்கள் பெருந்திரளாகக் கூடினார்கள். ரெயில் நிற்காத சிறிய ரெயில் நிலையங்களில் மக்கள் தண்டவாளத்தில் படுத்து ரெயிலை நிறுத்தினார்கள்.

மக்கள் தன்மேல் செலுத்தும் பேரன்பைக் கண்டு விவேகானந்தர் மனம் உணர்ச்சிவசப்பட்டது. இவையனைத்தும் தமது குருநாதர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் அருளாலேயே நிகழ்கிறது என எண்ணி மனம் நெகிழ்ந்தார் அவர்.

இந்திய மக்களிடம் ஆன்மிக உணர்வு இயல்பிலேயே அமைந்திருந்ததை உணர்ந்த அவர், உலகம் முழுவதையும் ஒரு மாளிகை எனக் கொண்டால், இந்தியா உலக மாளிகையின் பூஜை அறை என பாரத தேசத்தைப் புகழ்ந்தார்.

சுவாமி விவேகானந்தரை குருவாகக் கொண்டு இந்த உலக பூஜையறையான இந்தியாவை நோக்கிப் பல வெளிநாட்டவர்கள் வரத் தொடங்கினர். அப்படி வந்தவர்களில் புகழ்பெற்ற பெண்மணி சகோதரி நிவேதிதை.

அறிவியல் பூர்வமாக ஆன்மிகத்தை அணுகிய விவேகானந்தரின் சிஷ்யையான அவர் அறிவியல் வளர்ச்சியிலும் ஆர்வம் கொண்டிருந்தார். தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதைக் கண்டுணர்ந்த விஞ்ஞானியான ஜகதீஷ் சந்திரபோசுக்குப் பொருளுதவி செய்து அந்த ஆராய்ச்சியை ஊக்குவித்தார் நிவேதிதை.

ஸ்ரீசாரதா தேவி, விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதையைத் தன் மகள் போலவே கருதினார் என்பதை வரலாறு சொல்கிறது.

விவேகானந்தர் பல அரிய கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார். இப்போதும் அதைப் படிப்பவர்கள் புதிய உத்வேகத்தைப் பெற முடியும். `எழுமின் விழிமின் குறிசாரும் வரை நில்லாது செல்லுமின்` என்ற விவேகானந்தரின் வாசகங்கள் புகழ்பெற்றவை.

விவேகானந்தரது கருத்துகளில் பல இன்றைய இளைஞர்களின் வாழ்வை மேம்படுத்தக் கூடியவை. அதனால்தான் அவர் இளைஞர்களின் துறவி எனப் போற்றப்படுகிறார். அவரது பிறந்ததினமான ஜனவரி பன்னிரண்டாம் நாள் இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

விவேகானந்தரது அறிவுரைகளின் சிறப்பம்சம். அவை வெறும் அறிவுரையாக அல்லாமல் விவாத பூர்வமாக நாம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கின்றன என்பதுதான். இதோ அவர் உதிர்த்த முத்துக்களில் சில:

நீ இப்போது இருக்கும் நிலை எதுவானாலும் அதற்கு நீயே பொறுப்பு. கடந்த காலங்களில் நீ செய்த செயல்களால் நீ இன்று இந்த நிலையை அடைந்துள்ளாய் என்பதை உணர்ந்துகொள். அப்படியானால் இப்போது நீ செய்யும் செயல்களால் எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை நீ அடைய முடியும் என்ற விதியும் அதில் உள்ளதே. அந்த விதிக்குத் தலைவணங்கு. புதிய வாழ்க்கையைத் தொடங்கு.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். எனவே உன்னை வலிமை உடையவன் என்று நினை. வலிமை உடையவனாய் ஆவாய். அதில் சந்தேகமில்லை. நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் அவ்விதமே ஆவாய் என்பதும் உண்மைதான். உன்னை நீ எப்படிப்பட்டவனாய் நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான தேர்வு உன்னிடமே உள்ளது.

உலகின் குறைகளைப் பற்றிப் பேசாதே. அதனால் உனக்கோ உலகிற்கோ எந்தப் பயனும் இல்லை. நீ உலகிற்கு உண்மையிலேயே ஏதேனும் உதவி செய்ய விரும்பினால் உலகைத் தூற்றாமல் உன்னால் இயன்றதைச் செய்.

உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் தீய எண்ணங்களைப் பற்றி நாம் சிறிதும் கவலை கொள்வதில்லை. நம் உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகி விடும். எனவே முதல் தேவை உலகத்தை ஒழுங்கு படுத்துவதல்ல. உள்ளத்தை ஒழுங்குபடுத்துவதுதான்.

எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான செயல்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள். பொறாமையே உங்கள் செயல் திறனைக் குறைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இளைஞர்களே! தேச முன்னேற்றம் என்னும் தேர்ச்சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். உங்களைப் போன்ற உடல் வலிமையும் மன வலிமையும் கொண்ட இளைஞர்களை எதிர்பார்த்து இந்த தேசம் காத்துக் கொண்டிருக்கிறது.

நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணமல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் காரணம்.

உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் வெளியில் எங்கும் இல்லை. அவை உனக்கு உள்ளேயே உள்ளன. நீ அடுத்தவர்களைக் குறை சொல்லாதே. குறை சொல்வதானால் நீ முன்னேறாததற்கு உன்னையேதான் நீ குறை சொல்லிக்கொள்ள வேண்டும்.

உடல் பலவீனத்தையோ மன பலவீனத்தையோ உருவாக்கும் எதையும் கனவிலும் நினையாதே. நீ மாபெரும் பலசாலி என்ற உண்மையைப் புரிந்துகொள்.

வாழ்வில் நேரும் துன்பங்களுக்கு வருந்துவது ஏன்? நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ அடைந்த அனுபவமே சிறந்தது. அனுபவத்தை விடச் சிறந்த ஆசான் எவருமில்லை.

விவேகானந்தரின் சிந்தனைகளை உள்ளடக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் நிறைய வெளிவந்துள்ளன. தங்களை வாசித்து இளைஞர்கள் முன்னேற வேண்டும் என இளைஞர்களின் வாசிப்புக்காக அவை காத்திருக்கின்றன.

தொடர்புக்கு:

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News