சிறப்புக் கட்டுரைகள்
null

ஆன்மிகத் தூதுவர்கள்

Published On 2024-01-18 15:22 IST   |   Update On 2024-01-18 15:29:00 IST
  • அனுமனின் வார்த்தைகளைக் கேட்டுச் சீற்றமடைந்த ராவணன் அனுமனைக் கொல்லுமாறு கட்டளையிடுகிறான்.
  • அவ்வையார் மன்னர்களின் இடையே பெண் தூதராக இயங்கியிருக்கிறார் என்ற விவரத்தைச் சங்கப்பாடல் மூலம் அறியலாம்.

ஒருவரிடமிருந்து மற்றவருக்குச் செய்தியை எடுத்துச் செல்பவர்களைத் தூதர்கள் என்கிறோம். தூதனுப்பும் மரபு எல்லா நாடுகளிலும் எல்லா இலக்கியங்களிலும் உண்டு. இன்றும் அரசியல் ரீதியாக தூதர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவதைப் பார்க்கிறோம்.

நமது ஆன்மிகம் பல தூதுச் செய்திகளைப் பேசுகிறது. ராமாயணம், மகாபாரதம் ஆகிய இருபெரும் இதிகாசங்களிலும் தூது சென்றது பற்றிய செய்திகள் வருகின்றன.

கம்ப ராமாயணத்தில் இரண்டு தூதர்கள் வருகிறார்கள். இருவருமே முக்கியமானவர்கள் என்றாலும் அவர்களில் ஒருவன் மிக முக்கியமானவன். அவன் இன்று தெய்வமாகவே வழிபடப்படும் அனுமன்.

இன்னொருவன் வாலியின் பிள்ளையும் வாலியின் மரணத்திற்குப் பிறகு சுக்கிரீவன் அணியில் இளவரசனாக முடி சூட்டப்பட்டவனுமான அங்கதன்.

அங்கதன் போர்க்காலத்தில் ராமபிரானால் தூதனாக ராவணனிடம் அனுப்பப்படுகிறான். தூது செல்ல அவனே தகுந்தவன் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகிறான் அவன்.

ஆனால் அனுமன் அப்படி தூதனாக அனுப்பப்பட்டவன் அல்ல. ஆனாலும் சூழ்நிலை கருதி தூதனுக்குரிய வேலையை அவன் செய்கிறான்.

போருக்கு முன்பே சீதாப் பிராட்டியைத் தேடி இலங்கை சென்றவன் அவன். அங்கே ராவணனை நேருக்குநேர் சந்தித்து ராமபிரானின் தூதனாகத் தானே விரும்பி இயங்கியவன்.

அனுமனின் வார்த்தைகளைக் கேட்டுச் சீற்றமடைந்த ராவணன் அனுமனைக் கொல்லுமாறு கட்டளையிடுகிறான். ஆனால் நியாய உணர்ச்சி கொண்ட விபீஷணன் குரல் அந்தக் கட்டளைக்கிடையே குறுக்கிடுகிறது.

அனுமன் தூதன் என்றும் தூதர்களைக் கொல்வது தர்ம சாஸ்திரப்படித் தவறு என்றும் எடுத்துச் சொல்கிறான் விபீஷணன். இவனைத் திரும்ப அனுப்பினால் தானே இவன் ராமனிடம் சென்று நம் வலிமையைச் சொல்வான், இவனைக் கொன்றுவிட்டால் அது நிகழாதல்லவா என்ற விபீஷணனின் விவாத பூர்வமான பேச்சு அரசவையில் எடுபடுகிறது.

அனுமனுக்குச் சிறிய தண்டனை கொடுத்து அனுப்பிவிடலாம் என்ற விபீஷணனின் யோசனையை ராவணன் ஏற்கிறான். அதன்படி அனுமனின் வாலில் தீ வைக்கப்படுகிறது. வால் தானே ஒரு வானரத்தின் முக்கியமான உறுப்பு! அதைச் சேதப்படுத்திவிட நினைக்கிறான் ராவணன்.

அவன் அனுமன் வாலில் தீ வைத்தான்! அதனால் அனுமன் அழித்தது இலங்கை என்னும் தீவைத் தான்! 

இலங்கை முழுவதும் தாவித் தாவிச் செல்கிறான் அனுமன். இலங்கையின் பெரும்பகுதிகள் அனுமன் வாலில் வைத்த நெருப்பால் சுட்டுக் கருகின. ஆனால் சீதாதேவி இருந்த அசோக வனப்பகுதி மட்டும் நெருப்பால் எரியுண்ணப்படாமல் அப்படியே இருந்தபடி இருந்தது.

அந்த விந்தையைப் பார்த்து அனுமன் வியக்கிறான். கற்பின் கனலியான சீதையைக் கனல் சுடாது என்பதை அனுமன் புரிந்துகொண்டு சீதாதேவியைக் கைகூப்பி வணங்குகிறான்.

(சீதை இருந்த இடம் நெருப்பால் பாதிக்கப்படாமல் இருந்ததை, இலங்கையிலிருந்து மீண்டுவந்த அனுமன் ராமபிரானிடம் பிற்காலத்தில் சொல்லியிருக்க வேண்டும். எனவே நெருப்பு சீதாதேவியை ஒன்றும் செய்யாது என்பது அக்கினிப் பிரவேசத்தின்போது ராமனுக்கு உறுதியாகத் தெரியும் என்று கொள்ள இடமிருக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் ராமன் தன் காதல் மனைவியை அக்கினிப் பிரவேசத்திற்கு உட்படுத்தினான் எனவும் கருத முடியும்)

ராமாயணத்தில் மட்டுமல்ல, மகாபாரதத்திலும் தூதன் வருகிறான். ராமாயணத்தில் கடவுளின் அவதாரமான ராமன் தூது செல்லவில்லை. ராமனுக்காக அவன் அணியைச் சேர்ந்த அனுமனும் அங்கதனும்தான் தூது சென்றார்கள்.

ஆனால் மகாபாரதத்தில் தன் அன்பர்களான பாண்டவர்களின் பொருட்டாகக் கடவுளான கண்ணனே தூது செல்கிறான்.

அப்படிச் சென்றபோது, துரியோதனன் அரண்மனையில் தங்காமல் தன் பக்தரான விதுரர் இல்லத்தில் தங்கினான் பரந்தாமன். கடவுள் வசதிகளை விரும்புபவன் அல்ல, பக்தியை அங்கீகரிப்பவன் அல்லவா?

கண்ணன்மேல் அளவற்ற பக்தி செலுத்தும் விதுரரின் மனைவி கண்ணனை நேரில் தரிசித்த பரவசத்தில் வாழைப் பழத்தை உரித்து பழத்தை எறிந்து அதன் தோலைக் கண்ணனுக்குத் தந்தாள். பக்தி அவள் கண்ணை மறைத்தது. ஆனால் அவள் பக்தியை மெச்சி அவள் அன்போடு கொடுத்த வாழைப் பழத்தின் தோலை உண்டான் கண்ணன்.

தான் மேய்க்கும் மாடுகள் உண்ணும் வாழைப்பழத் தோலைத் தானும் உண்டு பார்க்கலாம் என அந்த இடையனுக்குத் தோன்றியதோ என்னவோ! பக்தியை மட்டுமே பிரதானமாகக் கருதும் கடவுள் நிவேதனப் பொருள் என்ன என்பதைப் பார்ப்பதில்லையே?

பாண்டவர்களுக்காக ஐந்து ஊர் அல்லது ஐந்து வீதி, அல்லது ஐந்து வீடு எனக் கண்ணன் கெஞ்சிக் கேட்டதும் ஊசிமுனை அளவுகூட இடம்தர மாட்டேன் என துரியோதனன் ஆணவத்தோடு பதில் சொன்னதும் மகாபாரதத்தில் உள்ள செய்திகள்.

கண்ணன் விரும்பியபடியே கண்ணன் தூது தோல்வியில் முடிந்தது. அப்படி கண்ணன் தூது தோல்வியில் முடியாவிட்டால் கண்ணன் நடத்த விரும்பிய மகாபாரத யுத்தமேது? இறுதி வெற்றிக்குப் பிறகு பாண்டவர்களுக்கு முழு ராஜ்ஜியமும் கிடைப்பதேது?

பக்தி இலக்கியமான சைவம் சார்ந்த பன்னிரு திருமுறைகளிலும் வைணவம் சார்ந்த நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திலும் இறைவனிடம் காதல் கொண்ட தலைவி இறைவனுக்குத் தூது அனுப்புவதாய் அமைந்த பாடல்கள் பல உள்ளன. 

திருப்பூர் கிருஷ்ணன்

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியிலும், காப்பியத் தலைவன் சீவகனிடம் குணமாலை என்ற தலைவி தான் வளர்க்கும் கிளியைத் தூதனுப்பும் செய்தி இடம் பெற்றுள்ளது.

சங்க காலத்தில் பெண் தூதுவர்கள் கூட இருந்திருக்கிறார்கள். அவ்வையார் மன்னர்களின் இடையே பெண் தூதராக இயங்கியிருக்கிறார் என்ற விவரத்தைச் சங்கப்பாடல் மூலம் அறியலாம்.

அதியமான் மேல் போர் தொடுக்க நினைத்த தொண்டைமானிடம் தானே விரும்பித் தூது செல்கிறாள் அவ்வை. `அதியமான் போர்க்கருவிகள் தொடர்ந்து போரில் ஈடுபட்டதால் நுனி மழுங்கிச் சிதைந்தவை. உன்னுடைய போர்க் கருவிகள் புத்தம் புதிதாக இருக்கின்றன` என தொண்டைமானிடம் எடுத்துச் சொல்கிறாள்.

அதன்மூலம் `அதியமானிடம் நீ போரிடுவது சரியல்ல, அப்படிப் போரிட்டால் நீ தோற்றுத்தான் போவாய்` என்பதை அவனுக்கு மறைமுகமாக உணர்த்துகிறாள்.

இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட அவ்வையின் அழகிய தமிழ்ப் பாடல் உதவுகிறது. போர் நிறுத்தப்படுகிறது. போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்திய அந்தப் பாடல் இதோ...

இவ்வே

பீலி அணிந்து மாலை சூட்டி

கண்திரள் நோன்தாழ் திருத்தி நெய்யணிந்து

கடியுடை வியன்நக ரவ்வே, அவ்வே

பகைவர்க்குத்திக் கோடுநுனி சிதைந்து

கொல்துறைக் குற்றிலமாதோ என்றும்

உண்டாயின் பதம் கொடுத்து

இல்லாயின் உடன் உண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்

அண்ணல் எம் கோமான் வைந்நுதி வேலே!

அவ்வை நிகழ்த்திய அரசியல் தூது சங்க காலத்திலேயே தமிழ்ப் பெண்கள் அரசியலிலும் அரசாங்கத்திலும் ஈடுபட்டிருந்ததைப் புலப்படுத்துகிறது. இன்றைய பெண் அரசியல்வாதிகளுக்கு அவ்வையார்தான் முன்னோடி.

அரசியல் தூது அல்லாமல் இலக்கியத் தூதும் பின்னாளில் வளர்ந்தது. தொண்ணூற்றாறு வகைப் பிரபந்த இலக்கியங்களில் ஒரு வகையாக தூது இலக்கியம் அமைந்திருக்கிறது. தமிழின் இலக்கியப் பரப்பில் கணிசமான பங்கு வகிக்கிறது தூது இலக்கியம்.

நாரை விடு தூது, கிளி விடு தூது என்றெல்லாம் தூது நூல்கள் பிறந்தன. தலைவி தலைவனுக்குக் கிளியையும் நாரையையும் இன்னும் மற்ற பறவைகளையும் தூதனுப்பினாள்.

தமிழையே காதல் தூதாக அனுப்பிய தமிழ் விடு தூது என்ற நூலும் தமிழில் உண்டு. அவ்வளவு ஏன்? செருப்பு விடு தூது, பணவிடு தூது போன்றவையும் கூட உண்டு.

அழகர் கிள்ளை விடுதூது, வண்டுவிடு தூது, காக்கை விடுதூது, காந்தியடிகள் நெஞ்சு விடுதூது, மயில் விடுதூது, மான்விடு தூது, தென்றல் விடுதூது, புகையிலை விடுதூது, முகில் விடுதூது எனத் தமிழில் புகழ்பெற்ற தூது நூல்கள் பல உண்டு. பெரும்பாலான நூல்கள் ஆன்மிகம் தொடர்பானவை. பயில்பவர் மனத்தில் பக்தி உணர்ச்சியை அதிகரிப்பவை.

திருவள்ளுவர் திருக்குறளில் தூது என்ற ஒரு தனி அதிகாரத்தையே அமைத்துள்ளார்.

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் நீ கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்` என்ற பாரதியார் பாடல், கண்ணன்மேல் காதல் கொண்ட தலைவி தூது அனுப்புவதாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது.

தூது இலக்கியம் வடமொழியிலும் உண்டு. காளிதாசன் மேகத்தை தூது விட்ட அழகிய காதல் கதையான மேக சந்தேசம் என்ற தூது நூல் பெரும்புகழ் பெற்றது.

`காதல் மணம் கொண்ட பாசம் அந்தக்

கவிஞனின் மேக சந்தேசம்..

தூது செல்லும் ஒரு மேகம்..அதைச்

சொல்வது மேக சந்தேசம்...`

என்பது மகாகவி காளிதாஸ் படத்தில் வரும் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்.

மேக சந்தேசம் நூல் வியக்கத்தக்க வகையில் அற்புதமானது. மேகத்தைத் தூதுவிடும் காளிதாசன் எந்தப் பிரதேசத்தையெல்லாம் தாண்டி மேகம் செல்ல வேண்டும் என திசைகளைக் கூறியும் அடையாளங்களைக் கூறியும் மேகத்திடம் அறிவுறுத்துகிறான்.

அந்த வர்ணனைகள் பாரத தேசத்தின் பூகோளம் முழுவதையுமே அறிந்தவன் காளிதாசன் என்பதைப் புலப்படுத்துகின்றன. எப்படி எல்லா இடங்களுக்கும் பயணம் செய்து அத்தகைய மாபெரும் பூகோள அறிவை அவன் பெற்றான் என்பது மலைப்புத் தருகிறது.

நம் எண்ணங்களை இறைவனுக்குத் தூதாக அனுப்புவோம். இறைவனைப் பிரார்த்தித்து அவன் அருளைப் பெறுவோம்.

தொடர்புக்கு,

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News