- பட்டீஸ்வரத்தில் கோவில் கொண்டுள்ள சிவபெருமானின் பெயர் ‘தேனுபுரீசுவரர்’.
- ராவணனை கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
வாழ்க்கையில் முன்னேற்றத்தை எட்டி பிடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால் ஆசைப்பட்டது எல்லாம் நினைத்தபடி நடந்து விடாது. ஒவ்வொரு முயற்சியிலும் எதிர்பாராத இடையூறுகள் வந்து விடும். அந்த இடையூறுகளை தகர்ப்பது என்பது சிலருக்கு மிகப்பெரிய போராட்டமாகக் கூட இருக்கும்.
இறையருள் இருந்தால் இடையூறுகளை மிக எளிதாக விரட்டி விட முடியும். கும்பகோணம் யாத்திரை நிச்சயம் அதற்கு கை கொடுப்பதாக அமையும். கும்பகோணத்துக்கு மிக அருகே உள்ள பட்டீஸ்வரம் ஆலயத்துக்கு சென்று வழிபட்டால் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் எந்தவித இடையூறும் இல்லாமல் மிக எளிதாக வெற்றிகளை பெற முடியும்.
பட்டீஸ்வரத்தில் கோவில் கொண்டுள்ள சிவபெருமானின் பெயர் 'தேனுபுரீசுவரர்' என்பதாகும். இவருக்கு பட்டீஸ்வரர், கவர்தீஸ்வரர் என்றும் வேறு இரண்டு பெயர்கள் இருக்கின்றன. இந்த பெயர்கள் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தல வரலாற்றில் குறிப்புகள் உள்ளன.
ஒரு தடவை சிவபெருமானிடம் கோபித்துக்கொண்டு பார்வதி தேவி பூலோகத்துக்கு வந்தாள். அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து தவம் செய்து மீண்டும் சிவபெருமானிடம் சேர வேண்டும் என்பது அவளது இலக்காக இருந்தது. பல இடங்களை தேடிய பிறகு பட்டீஸ்வரத்துக்கு வந்த அவளுக்கு அங்கிருந்த அமைதி பிடித்துப்போனது. அங்குள்ள வனத்தில் ஆசிரமம் அமைத்து பார்வதி தேவி தவம் செய்ய தொடங்கினாள்.
பட்டீஸ்வரத்தில் உள்ள வனத்தில் பார்வதி தேவி வீற்றிருக்கும் தகவல் அறிந்து தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பார்வதி தேவியை சுற்றி நின்று தங்களை மரம், செடி, கொடிகளாக மாற்றிக் கொண்டனர். இந்த நிலையிலேயே அவர்கள் பார்வதி தேவியை தினமும் மனம் குளிர வழிபட்டு வந்தனர். இதனால் பார்வதி தேவியால் அமைதியான முறையில் தவத்தை தொடர முடிந்தது.
எந்த இடையூறும் இல்லாமல் தவத்தை வெற்றிகரமாக செய்த பராசக்தியை கண்டு சிவபெருமான் மகிழ்ந்தார். எனவே பார்வதி தேவியை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக பட்டீஸ்வரம் வந்தார். ஜடாமுடியுடன் பார்வதிதேவிக்கு காட்சி கொடுத்து அருளினார். இதையடுத்து சிவசக்தி ஆற்றல் பெருகியது.
இதன் காரணமாகவே சிவபெருமானுக்கு கவதீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. எந்த இடையூறு வந்தாலும் இந்த தலத்தில் உள்ள ஈசனையும், அன்னையையும் வணங்கினால் அவை விலகி ஓடி விடும் என்பதற்கு இந்த தல புராணமே சான்றாக உள்ளது.
ஒரு தடவை காமதேனுவின் மகள்களில் ஒன்றான "பட்டி" என்ற பசுவுக்கு இந்த தலத்தின் சிறப்பு தெரிய வந்தது. அந்த தலத்துக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டது. அதன்படியே பட்டீஸ்வரம் வனத்துக்கு வந்தது. அங்கு ஒரு லிங்கம் அமைத்து தனது பாலால் அபிஷேகம் செய்தது. அந்த பட்டி பசுவுக்கும் சிவபெருமான் காட்சி கொடுத்து அருள்பாலித்தார்.
காமதேனு என்றால் பசு. அந்த பசு தனது பால் காம்பு வழியே பால் சொரிந்து ஈசுவரனை வழிபட்டதால் இங்கே இறைவன் 'தேனுபுரீசுவரர்' என்னும் பெயரை பெற்றார்.
மேலும் பட்டியின் பெயரால் இத்தலம் 'பட்டீஸ்வரம்' ஆயிற்று. கோவிலின் ஒரு தூணில் பசு, பாலைப் பொழிந்து ஈசனை வழிபடுகிற காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது. இறைவன் சன்னதியிலும் இச்சிற்பம் சுதை வடிவில் உள்ளது. அம்பிகை இங்கே தவம் செய்த காரணத்தால் 'தேவிவனம்' என்றும் ஒரு பெயர் உண்டு.
பட்டீஸ்வரம் ஆலயம் கிழக்கு நோக்கிய வடிவில் கட்டப்பட்டுள்ளது. 7 நிலை, 9 கலசங்களுடன் கிழக்கு நோக்கி ராஜகோபுரம் கம்பீரமாக அமைந்துள்ளது. இது தவிர 4 பெரிய கோபுரங்கள் உள்ளன. ஆலயத்தில் மொத்தம் 3 பிரகாரங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆலயத்தை சுற்றிப் பார்க்கும்போது பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருக்கும். கோவிலின் முதல் பிரகாரத்துக்கு வெளியே சோமாஸ்கந்தரும், திருஞான சம்பந்தரும் காட்சி கொடுக்கிறார்கள்.
சுற்றுப் பகுதியில் சப்தகன்னிகைகளும், சுவர்ண விநாயகர், மகாலிங்கம், சண்முகர், ராமலிங்கம், லட்சுமி ஆகியோரின் சன்னதிகளும் காணப்படுகின்றன. இது தவிர 63 நாயன்மார்களின் மண்டபமும் இருக்கிறது. இங்கே நாயன்மார்களின் சிலைகள் சேர்ந்தபடி இருக்கின்றன.
பட்டீஸ்வரம் கோவிலில் மொத்தம் 5 நந்திகள் இருக்கின்றன. இதனால் இந்த தலத்தை பஞ்சநந்தி தலம் என்றும் சொல்கிறார்கள். 5 நந்திகளும் சிவபெருமானுக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருப்பதற்கு ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
ஒரு தடவை திருஞான சம்பந்தர் பட்டீஸ்வரம் சிவபெருமானை வழிபடுவதற்கு வந்தார். அப்போது மதியம் ஆகி விட்டது. கடுமையான உச்சி வெயில் தாங்க முடியாத அளவுக்கு உக்கிரமாக இருந்தது. கும்பகோணத்தில் இருந்து நடந்தே வந்து கொண்டிருந்த திருஞானசம்பந்தர் திருவலஞ்சுழி, பழையாறை, வடதளி, திருசத்தி முற்றம் ஆகிய தலங்களில் பாடி விட்டு பட்டீஸ்வரம் நோக்கி வந்தபோது வெயிலால் அவதிக்குள்ளானார். அவர் கால்கள் சூடு தாங்க முடியாமல் தவித்தார்.
இதை கண்டதும் சிவபெருமான் முத்து பந்தல் அலங்காரத்துடன் கூடிய குடை ஒன்றை அனுப்பி வைத்தார். அந்த குடையை பிடித்தபடி திருஞான சம்பந்தர் பட்டீஸ்வரம் கோவிலுக்குள் வந்தார். அவர் வருவதை பார்க்க தேனுபுரீஸ்வரர் விரும்பினார். இதனால் தனக்கு எதிரே இருந்த நந்திகளை சற்று விலகி இருக்குமாறு ஆணையிட்டார். எனவே இந்த தலத்தில் 5 நந்திகளும் விலகி உள்ளன.
இந்த தலத்துக்கு ராமபிரான் வந்து வழிபட்டுள்ளார். ராவணனை கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ள பல தலங்களில் வழிபாடு செய்தார். அந்த ஆலயங்களில் பட்டீஸ்வரம் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்துக்கு வந்தபோது ராமர் தனது வில்முனையால் தீர்த்தம் உண்டாக்கி பட்டீஸ்வரரை வழிபட்டார்.
அவர் உருவாக்கிய தீர்த்தத்துக்கு கோடி தீர்த்தம் என்று பெயர். இந்தக் கோடி தீர்த்தம் தற்போது கிணறு வடிவில் காணப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் ராமேசுவரத்தில் நீராடிய புண்ணிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். மார்கழி அமாவாசை தினத்தன்று இந்த தீர்த்தத்தில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஆலயத்தின் வடதிசையில் ஆலயத்தை ஒட்டியபடியே அம்மன் கோவிலும் அமைந்துள்ளது. இங்கே அம்மன் 'பல்வளைநாயகி', 'ஞானாம்பிகை' என்கிற பெயராலும் ஆராதிக்கப்படுகிறார். இந்த அம்மன் சிவபெருமானை நோக்கி தவம் இருந்ததை குறிக்கும் வகையில் தலையில் கை வைத்து ஒற்றை காலில் தவம் இருக்கும் காட்சியும் இருக்கிறது.
அந்த அம்மன் தவம் இருக்கும் இடத்தில் பட்டி உருவாக்கிய தபசு கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்று தண்ணீர் தீர்த்தத்தை தெளித்துக்கொண்டு அம்மனை வழிபட வேண்டும் என்கிறார்கள். இந்த வழிபாட்டால் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகமாகும். பிரிந்த கணவன்-மனைவி இங்கு வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும்.
இங்கே உள்ள துர்க்கை கோவில் மிகவும் சிறப்புடையது. சோழர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த துர்க்கை 8 கைகளுடன் மகிஷன் தலை மீது நின்ற கோலத்தில் காணப்படுகிறாள். இவளது கைகளில் சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி அமைக்கப்பட்டுள்ளன. 3 கண்கள் மற்றும் காதுகளில் குண்டலங்களுடன் காணப்படுகிறாள்.
ஆனால் மற்ற தலங்களில் அமைந்திருப்பது போல் அல்லாமல் இந்த துர்க்கை சாந்தமான தோற்றத்தில் இருக்கிறாள். இவளை விஷ்ணு துர்க்கை, நவராத்திரி நாயகி, நவக்கிரக நாயகி, நவரத்தின நாயகி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.
சோழ மன்னர்களுக்கு இந்த துர்க்கை தனி சிறப்புடன் திகழ்ந்தாள். சோழ மன்னர்கள் போருக்கு போகும் முன்பு இந்த துர்க்கையை வழிபட்டதாக குறிப்புகள் உள்ளன. அதைப் போல பைரவர் சிலையும் மிகவும் விசேஷமானது.
தல விருட்சம் வன்னி, தல விநாயகர் அனுக்ஞை விநாயகர், மதவாரணப் பிள்ளையார் என்னும் பெயர்களால் வணங்கப்படுகிறார். இந்த தலத்தில் விஸ்வாமித்திரர், காயத்ரி மந்திரத்தை தொகுத்து வசிஷ்டமுனிவரிடம் கொடுத்தார். இதனால் விஸ்வாமித்திரருக்கு இந்த தலத்தில்தான் பிரம்மரிஷி பட்டம் கிடைத்தது.
இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட பட்டீஸ்வரத்தில் வழிபட்டால் எடுத்த முயற்சிகளில் வெற்றி பெற முடியும். மன தைரியம் தானாக வரும்.
வெற்றிக்கு பிறகு என்ன வேண்டும்? பதவி உயர்வு, வாழ்வில் உயர்வைத்தரும் கும்பகோணம் பிரம்மன் ஆலயத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.