சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் வியப்பும்... எனது தயக்கமும்...!

Published On 2023-10-02 13:28 IST   |   Update On 2023-10-02 13:28:00 IST
  • ஏ.வி.எம். நிறுவன தயாரிப்பில் வாய்ப்பு கிடைப்பது சாதாரண விஷயமல்ல.
  • ரஜினி சார் ஓ.கே. சொல்லி விட்டாரா? அது எப்படி? வானத்துக்கும் பூமிக்கும் பறந்தது போன்ற உணர்வு.

என்னது....

ரஜினி சாருக்கு ஜோடியாவா...?

கேட்டதுமே தூக்கி வாரி போட்டது. உண்மையிலேயே தெரிந்துதான் இவர்கள் பேச வந்திருக்கிறார்களா...?

ஏ.வி.எம். தயாரிப்பு நிறுவனம். எவ்வளவு பெரிய நிறுவனம்! அங்கிருந்து பேச வந்திருக்கிறார்கள் என்றதுமே ஏற்பட்ட சந்தோசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

ஏ.வி.எம். நிறுவன தயாரிப்பில் வாய்ப்பு கிடைப்பது சாதாரண விஷயமல்ல. திரை நட்சத்திரங்கள் எல்லோருக்கும் அது ஒரு கனவு.

அப்படி இருக்கும்போது வளர தொடங்கிய கால கட்டத்தில் அங்கிருந்து வாய்ப்பு வீடு தேடி வந்தால் எப்படி இருக்கும்...?

மகிழ்ச்சி... அப்படி ஒரு மகிழ்ச்சி....

டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் சார் கதையை சொன்னார். கதையும் மிகவும் பிடித்து போனது.

ஹீரோ யார்...? என்று நாங்கள் கேட்டதும் அவர் சொன்ன பதில்தான் எங்களை திக்குமுக்காட வைத்து விட்டது.

ரஜினிதான் ஹீரோ என்றார்கள்.

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ரஜினிசார் இதற்கு ஒத்துக்கொள்வாரா? என்று எனக்கு சந்தேகம்.

நாலு வயதிலேயே அவருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறேன். இப்போது அவருக்கு ஜோடியாக என்றால்... நிச்சயம் சம்மதிக்க மாட்டார் என்று நினைத்தோம்.

அம்மாவும் இதே சந்தேகத்தை சொன்னார். ஆனால் டைரக்டர் உங்களுக்கு சம்மதமா என்பதை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டு விட்டு சென்றார்.

எங்களுக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. இந்த வாய்ப்பு கிடைக்காது என்றே நினைத்து இருந்தோம்.

ஆனால் நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் திடீரென்று ஒருநாள் வந்து ரஜினி சார் ஓ.கே. சொல்லி விட்டார் நீங்கள்தான் ஹீரோயின் என்று முடிவு செய்துள்ளோம் என்றார்கள்.

ரஜினி சார் ஓ.கே. சொல்லி விட்டாரா? அது எப்படி? வானத்துக்கும் பூமிக்கும் பறந்தது போன்ற உணர்வு.

மீனா.... நீ ரஜினி சார் ஜோடியாக நடிக்கப் போகிறாய் என்று என்னையும் அறியாமல் என் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது.

இன்னொரு பக்கத்தில் அவருக்கு ஜோடியாக என்றதும் ஒருவிதமான படபடப்பும் இருந்தது.

எல்லாம் ஓ.கே. சொல்லி பட தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட பிறகும் ஷூட்டிங் போகும் வரை அம்மாவுக்கு நம்பிக்கை வரவில்லை.

அந்த படம்தான் 'எஜமான்'! ரஜினி சாருக்கு ஜோடியாக நான் நடித்த முதல் படம்.

எப்படி என்னை ஹீரோயினாக தேர்வு செய்தார்கள்? ரஜினி சார் எப்படி சம்மதித்தார் என்பது என் மனதில் விடை தெரியாத கேள்வியாக இருந்தது.

அதற்கு 30 வருடங்களுக்கு பிறகு நடந்த மீனா-40 நிகழ்ச்சியின்போது விடை கிடைத்தது. ரஜினிசார் மேடையிலேயே அதை விவரித்தார்.

எஜமான் படத்துக்கு ஹீரோ ரஜினி என்பதை ஏ.வி.எம். நிறுவனம் முடிவு செய்து விட்டது. இந்த கதைக்கு யாரை ஹீரோயினாக போடலாம் என்று விவாதித்து இருக்கிறார்கள்.

அப்போது டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் சார் நான் கதாநாயகியாக நடித்திருந்த தெலுங்கு படத்தை பார்த்து என்னை ஹீரோயினாக போட்டால் நல்லாயிருக்கும் என்று முடிவு செய்துள்ளார். அதுபற்றி படத் தயாரிப்பு நிறுவனத்திடம் சொன்னதும் டைரக்டருக்கு ஓ.கே. என்றால் எங்களுக்கும் ஓ.கே.தான் என்று ஏ.வி.எம். நிறுவனம் சொல்லி இருக்கிறது.

அதன் பிறகு டைரக்டர் ரஜினி சாரை சந்தித்து பேசி இருக்கிறார். அவரும் ஹீரோயின் யார் என்று கேட்டு இருக்கிறார்.

டைரக்டர் 'மீனா' என்றதும் மீனாவா? யார் அது... பீல்டில் அப்படி யார் இருக்கா? என்று கேட்டுள்ளார்.

'அன்புள்ள ரஜினிகாந்தில் உங்களோடு நடித்த பொண்ணு என்று நினைவுபடுத்தி இருக்கிறார்.

அதை கேட்டதும், அந்த குட்டி பெண்ணா என்று ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார்.

டைரக்டர் ஆமாம் என்றதும் 'என்ன சார் ஹீரோயின் செலக்ஷன்? அது அமுல் பேபி மாதிரி சின்ன பொண்ணாச்சே! ஹீரோயினுக்கு எப்படி சரிப்படும்? என்று தயங்கி இருக்கிறார்.

டைரக்டர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் ரஜினி சார் ஏற்கவில்லை.

உடனே டைரக்டர் அந்த பொண்ணு ஹீரோயினா நடித்து வெளியான படம் தெலுங்கில் சக்கை போடு போடுகிறது. அந்த படத்தை பார்ப்போம். அதன் பிறகு நீங்களே ஏற்றுக் கொள்வீர்கள் என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு டைரக்டர் சொன்ன மாதிரியே அந்த தெலுங்கு படத்தை ரஜினி சார் பார்த்துள்ளார்.

அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியலையாம். 'அவ.... இவ்வளவு வளர்ந்திட்டாளா.... என்னால் நம்பவே முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.

இப்ப சொல்லுங்க...? எங்கள் தேர்வு எப்படி? இந்த கதைக்கு இவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று டைரக்டர் சொன்னதும் ரஜினி சாரும் ஓ.கே. சொல்லி இருக்கிறார்.

அப்படித்தான் எஜமான் என்னை தேடி வந்திருக்கிறார்.

படப்பிடிப்புக்கான நாளும் வந்தது. 'லொகேஷன்' ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி. சென்னையில் இருந்து நானும் அம்மாவும் ராஜமுந்திரிக்கு ரெயிலில் பயணித்தோம்.

ரெயிலில் செல்லும்போது தூக்கமே வரவில்லை. ரஜினி சார் சூப்பர் ஸ்டார். அவருக்கு ஜோடியாக நடிப்பது எப்படி இருக்கும்?

குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது "ரஜினி அங்கிள்... ரஜினி அங்கிள்..." என்று அவரை சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். அவரோடு விளையாடி இருக்கிறேன்.

ஆனால் இப்போது... எப்படி....? ஒருவிதமான வெட்கம்...! வார்த்தையால் விவரிக்க முடியாத ஒருவிதமான உணர்வு என்னுள் வந்து வந்து போனது.

குழந்தையாக அவர் முன்பு நின்றதற்கும் இப்போது நிற்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

இனி அவரை பார்க்கும்போது எப்படி இருக்கும்? எப்படி அழைப்பது? அவர் என்ன சொல்வார்?

இப்படி பல பல கேள்விகள். விதவிதமான எண்ணங்கள்.... ஆனால் எதற்கும் ஒரு முடிவு இல்லை. ரெயில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. அதற்கு இணையாக என் மனமும் வேகமாக அடித்து கொண்டது.

அந்த நினைவுகளோடு எப்படியோ தூங்கி விட்டேன். கண்விழித்தபோது ரெயில் ராஜ முந்திரியை நெருங்கி கொண்டிருந்தது.

ஏற்கனவே தெலுங்கு பட ஷூட்டிங்குக்காக பல தடவை ராஜமுந்திரிக்கு சென்று வந்ததால் அது எனக்கு நன்கு பரிச்சயமான இடம்.

ரெயிலை விட்டு இறங்கி நேராக தங்கும் ஓட்டலுக்கு சென்றோம். ஓட்டலின் முதல் தளத்தில் எங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

ஓட்டல் அறையில் தங்கி இருந்தேன் அவ்வளவுதான். ஆனால் அந்த அறையை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தேன். ஏன்? என்னாச்சு... அடுத்த வாரம் சொல்கிறேன்.

பெற்றோரின் அக்கறை...

எனது வளர்ச்சியில் என் அம்மா-அப்பாவின் பங்களிப்பு அலாதியானது. பார்த்து பார்த்து எனது வளர்ச்சியில் அவர்கள் காட்டிய அக்கறைதான் என்னை சிகரத்தை நோக்கி அழைத்து சென்றது.

தெலுங்கு படங்களில் ராதிகா அவர்களுக்கும், சுகாசினி அவர்களுக்கும் குழந்தையாக நடித்து இருக்கிறேன். ரஜினி சாருக்கு மகளாக நடித்து விட்டு அவருக்கு ஜோடியாகவே நடிக்கும் வாய்ப்பை பெற்றதை மூத்த கலைஞர்களான ராதிகா, சுகாசினி ஆகியோர் வாழ்த்தினார்கள். சமத்தான, அழகான குழந்தை நட்சத்திரமாக இருந்து வளர்ந்து வருபவர் என்று பாராட்டினர். அவர்களை எல்லாம் பார்த்து பார்த்துதான் கலைத்துறையில் நான் வளர்ந்து கொண்டிருந்தேன்.

'என் ராசாவின் மனசிலே' படம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த படமானது. அடுத்து வந்த 'எஜமான்' தமிழ் திரை உலகில் எனக்கென்று ஒரு இடத்தை தேடிக்கொடுத்தது. இந்த படத்துக்கு பிறகு ரொம்ப பிசி ஆகி விட்டேன்.

(தொடரும்)

Tags:    

Similar News