சிறப்புக் கட்டுரைகள்

முதுமையில் ஆஸ்துமா அவதிக்கு மருத்துவ வழிமுறைகள்

Published On 2023-11-29 15:46 IST   |   Update On 2023-11-29 15:46:00 IST
  • நம் தெருக்களின் சாலையோரங்களில் எளிமையாக கிடைக்கும் நொச்சி இலை ஆஸ்துமா நோயினருக்கு கிடைத்த மாபெரும் புதையல்.
  • உணவு முறை மாற்றம் கொண்டு வருவது ஆஸ்துமாவிற்கும் நல்லது.

முதுமையில் கிட்டத்தட்ட 2.5 முதல் 5 விழுக்காடு பேருக்கு ஆஸ்துமா எனும் இரைப்பு நோய் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இது மிகப்பெரிய கொடுமையைத் தரக்கூடிய நோய்நிலை. குழந்தை பருவம் முதல் முதுமை வரை பலர் இந்த ஆஸ்துமாவால் துன்புறும் அவலநிலை உள்ளது.

நாட்பட்ட நுரையீரல் தடை நோய்நிலைகளுள் ஆஸ்துமாவும் ஒன்று. முதுமையில் அதிகப்படியான மரணத்தை உண்டாக்கும் நோய்நிலைகளில் நாட்பட்ட நுரையீரல் நோய்கள் நான்காவது இடத்தில் உள்ளன. நாளுக்கு நாள் இந்த விகிதம் அதிகரித்துக் கொண்டே செல்வது முதுமையில் வாழ்நாளிற்கு மிகப்பெரும் சவால் தான்.

ஆஸ்துமா எனும் நோய்நிலைக்கு நெஞ்சாங்கூட்டில் சேரும் கபம் (சளி) முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக பனி காலங்களில், நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஆஸ்துமா நோயுள்ள முதியவர்களுக்கு மிகச் சவாலான காலமாக இருக்கின்றது. தொற்றுக்கிருமிகள் மட்டுமல்லாது, ஒவ்வாத பொருட்களை எதிர்கொள்ளும் போதும், பருவங்கள் மாறும்போதும், குளிர்ந்த காற்றும், புகையும், தூசும் ஆஸ்துமா நோயின் குறிகுணங்களை அதிகரித்து மூச்சு விட சிரமத்தை ஏற்படுத்தும்.

'கபம் அல்லாது காசசுவாசம் காணாது' என்கிறது சித்த மருத்துவம். மார்பு கூட்டின் உள்ளே நுரையீரலில் சேரும் அதிகப்படியான கபம் எனும் சளி அத்துடன் சேரும் வாதம் ஆஸ்துமா எனும் கொடிய இரைப்பு நோய்க்கு காரணமாகி துன்புறுத்தும் என்கிறது நம் மரபு மருத்துவம்.

கபத்துடன் சேரும் பித்தம் மூச்சுக்குழாயில் வீக்கத்தை உண்டாக்கி நோய்நிலைக்கு அடித்தளமிடும். கபத்துடன் சேரும் வாதம் (வாயுவானது) குறிகுணங்களை உண்டாக்கி நோயாளிகளை அதிக சிரமத்திற்கு ஆட்படுத்துவதாக உள்ளது. இருப்பினும் கபம் தான் ஆஸ்துமாவிற்கு ஆதாரம்.

எனவே சித்த மருத்துவத்தில் உள்ள கபத்தை நீக்கும் மூலிகைகளும், மருந்துகளும் ஆஸ்துமா நோய்க்கு நல்ல பலன் தரக்கூடும். அதேபோல் கபத்தை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை தவிர்ப்பதும் நோய் வராமல் தடுக்கும் எளிய வழிமுறை. இதன் மூலம் முதுமையில் மூச்சிழுத்தற்மருந்தின் (இன்ஹேலெர்) பயன்பாட்டைக் குறைத்து, அதன் பின் விளைவுகளையும் குறைக்க முடியும்.

கபத்தைக் குறைக்கும் துளசி, அதிமதுரம், தூதுவளை, கண்டங்கத்திரி, நஞ்சறுப்பான், திரிகடுகு, தாளிசபத்திரி, ஆடாதோடை, நொச்சி, கற்பூரவள்ளி, வெற்றிலை, முசுமுசுக்கை, அரத்தை ஆகிய மூலிகைகளும், மஞ்சள், கிராம்பு, பூண்டு, ஓமம் ஆகிய அஞ்சறைப்பெட்டி கடைசரக்குகளும் ஆஸ்துமா நோயில் பலனைத் தரக்கூடியதாக உள்ளன. அடிக்கடி மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு, ஆஸ்துமாவால் உண்டாகும் அவதியில் சித்த மருத்துவம் ஆறுதல் தரும். 

நொச்சி இலை - தூதுவளை

நம் தெருக்களின் சாலையோரங்களில் எளிமையாக கிடைக்கும் நொச்சி இலை ஆஸ்துமா நோயினருக்கு கிடைத்த மாபெரும் புதையல். நொச்சி இலையுடன் பூண்டு, மிளகு, ஓமம் சேர்த்து கசாயமாக்கி குடித்து வர மூச்சு இரைப்பு நோய்நிலையில் நல்ல பலன் தரும். நொச்சி இலையில் உள்ள 'லிக்னேன்' வேதிப்பொருட்கள் மூச்சுக்குழாயில் உண்டாகும் அழற்சியைக் குறைத்து மூச்சு விட சிரமத்தைக் குறைக்கும்.

தூதுவளை நுரையீரலின் வன்மைக்கு இயற்கை தந்த வரம். இதனை பயன்படுத்த மறப்பது நுரையீரலுக்கு இழைக்கும் பெரும் துரோகம். காரச் சுவையுடைய தூதுவளை இலைகளுடன் இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள், பெருங்காயம், சிறிது உப்பு சேர்த்து சூப் வைத்து மாலை நேரங்களில் எடுத்துக்கொள்ள நுரையீரல் வலுவடையும். அடிக்கடி உண்டாகும் ஆஸ்துமா தொல்லையும் குறையும். சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள 'தூதுவளை நெய்' எனும் மருந்தினை பயன்படுத்துவதும் பலன் தரும்.

அதே போல் கண்டங்கத்திரி எனும் மூலிகை ஆஸ்துமா நோய்நிலையில் நன்மை பயக்கக்கூடியது. இவை இரண்டும் சேர்ந்த மருந்துக்கலவை ஆஸ்துமா நோயில் பலன் தருவதை ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. கண்டங்கத்திரி வேரினை ரசம் வைத்து எடுத்துக்கொள்ள சளியைக் குறைத்து இரைப்பு நோயில் உதவும்.

ஆடாதோடையின் பேரை சொன்னால் பாடாத நாவும் பாடும் என்கிறது சித்த மருத்துவம். நுரையீரலில் கெட்டிபட்டு மூச்சுத் திணறலை உண்டாக்கும் சளியை இளக்கி வெளிப்படுத்தும் தன்மை இதற்குள்ளது. மேலும் இதில் உள்ள வாசைன், பிரோம்ஹெக்சன் ஆகிய வேதிப்பொருட்கள் மூச்சுக்குழாயை விரிவடையச் செய்து ஆஸ்துமாவின் துன்பத்தை குறைக்க உதவும். சித்த மருந்துகளாகிய 'ஆடாதோடைக் குடிநீரும்', 'ஆடாதோடை மணப்பாகும்' அத்தகைய நன்மைகளைத் தர வல்லன. ஆடாதோடை இலைச்சாறுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு மூன்று வேளை எடுத்துக்கொள்வதும் பலனளிக்கும்.

தாளிசபத்திரி இலைகள் சேர்ந்த 'தாளிசாதி சூரணம்' எனும் எளிய மருந்து ஆஸ்துமா முதல் நுரையீரல் புற்றுநோய் வரை பலனை அளிக்க கூடியது. தாளிசபத்திரி இலையில் உள்ள 'பிக்ளிடாக்சால்' எனும் வேதிப்பொருள் நுரையீரல் சார்ந்த பல்வேறு நோய்நிலைகளில் பலன் தருவதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

எளிமையாக காரச் சுவையும், விறுவிறுப்புத் தன்மையும் உள்ள வெற்றிலையுடன் மிளகு சேர்த்து கசாயமிட்டு குடிக்க மார்பில் கெட்டிப்பட்ட கோழை வெளிப்பட்டு துன்பம் நீங்கும். இது பாரம்பரிய பாட்டி வைத்தியமாய் இன்றளவும் பல கிராமங்களில் பயன்பாட்டில் உள்ளது.

'திரிகடுகு சூரணம்' எனும் சித்த மருந்து சுவாசப்பாதை தொற்றினைக் குறைத்து ஆஸ்துமா நோயில் பலன் தரக்கூடியது. இதில் உள்ள சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் கபத்தை வேரறுக்கும் காரத்தன்மை உடைய மூலிகை பொக்கிஷங்கள். இதனை தேனில் கலந்து எடுத்துக்கொள்வது நல்லது. ஆஸ்துமாவில் இருந்து மீண்ட பிறகு நுரையீரலை வன்மைப்படுத்த 'திப்பிலி ரசாயனம்' எனும் மருந்து உதவும். இதனை தினசரி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ளலாம்.

மஞ்சளில் உள்ள 'குர்குமினாய்டு' வேதிப்பொருட்கள் ஆஸ்துமா நோயில் மூச்சுக்குழாய் அழற்சியை உண்டாக்கும் பல்வேறு வேதிநொதிகளைத் தடுத்து வீக்கத்தைக் குறைக்க உதவும். மேலும் இது ஒவ்வாமையை தடுத்து, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவும் கூடியது. ஆஸ்துமாவில் ஓமத்தை கசாயமாக்கி எடுத்துக்கொள்வதும் மூச்சுதிணறல் குறைய வழிவகை செய்யும்.

மூலிகைகள் மட்டுமல்லாது பவழம், முத்துச்சிப்பி சேர்ந்த சித்த மருந்துகளும், இன்னும் பல தாது கலப்புள்ள மருந்துகளும் இரைப்பு நோய்நிலையில் பெரும் பயன் தரக் கூடியதாக உள்ளன. மார்பு இறுக்கம் இருப்பின் தேங்காய் எண்ணெயில் பூங்கற்பூரம், ஓமம் சேர்த்து காய்ச்சி வெளிப்பிரயோகமாக தடவிவர சிரமம் குறையும். கோதுமை தவிட்டினை வறுத்து துணியில் முடிந்து ஒற்றடம் இடுவதும் நல்லது. மூச்சுத்திணறல் இருக்கும்போது ஆவி பிடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

உணவு முறை மாற்றம் கொண்டு வருவது ஆஸ்துமாவிற்கும் நல்லது. குளிர்ச்சி தரும் நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களையும் நோயுள்ள காலங்களில் தவிர்ப்பது நல்லது. குளிரூட்டப்பட்ட பானங்களும், உணவுப்பொருட்களும் கபத்தைக் கூட்டும். எனவே எக்காலத்திலும் அவற்றை தவிர்ப்பது நல்லது. இனிப்பும், இனிப்பு கலந்த உணவுப்பண்டங்களும், சளி சுரப்பை அதிகரிக்கும். அடிக்கடி சுவாசப்பாதை தொற்று, ஆஸ்துமா உள்ளவர்கள் இனிப்பைத் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும்.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் ஊட்டமளிக்கும் உணவுப்பொருளாக இருப்பினும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஏற்புடையது அல்ல. இது கபம் சார்ந்த உணவு என்பதால் சளி உற்பத்தி அதிகரிக்கக்கூடும் என்கிறது சித்த மருத்துவம். சீன பாரம்பரிய மருத்துவமும் பால் பயன்பாட்டால் ஆஸ்துமா நோய் அதிகரிப்பதாக தெரிவிக்கின்றது. ஆகவே கபத்தை அறுக்கும் தன்மையுள்ள துளசி, அதிமதுரம், சுக்கு, மஞ்சள், மிளகு இவற்றை நீரில் கொதிக்க வைத்து தேநீராக எடுத்துக்கொள்வது நுரையீரலுக்கு வன்மை தரும்.

முதுமையில் திடீரென ஏற்படும் மூச்சுத்திணறல் சவால் மட்டுமல்ல, பயமும் தான். அடுத்து என்ன நிகழ்ந்து விடுமோ என்ற உள்ளுணர்வும், உடனிருக்கும் பிறருக்கு சிரமம் கொடுக்க நேரிடுமோ என்ற வருத்தமும், ஆஸ்துமா முதுமையை மனம் உடைய செய்யும். அவசர தேவைக்கு மூச்சிழுத்தற் மருந்துகளை பயன்படுத்துவது நல்லது தான். ஆனால் நாட்பட பயன்படுத்துவதால் மூட்டுக்கள் தேய்மானமும், நடுக்கமும், மார்பு படபடப்பும் ஏற்படக்கூடும் என்று நவீன அறிவியல் எச்சரிக்கின்றது. 

சோ.தில்லைவாணன்

முதுமையில் இதயம் சார்ந்த நோய்நிலைக்காக எடுத்துக்கொள்ளும் ஆஸ்பிரின் போன்ற மருந்துகளால் கூட ஆஸ்துமா உண்டாவதாக இருப்பதால், சாதாரண ஆஸ்துமா தான் என்று சுய மருத்துவம் செய்துகொள்ளாமல் மருத்துவரை நாடுவது நல்லது.

மூச்சுப் பயிற்சி செய்வது பல்வேறு உடல் உபாதைகளுக்கு நன்மை பயக்கும் எனினும் ஆஸ்துமா உள்ளவர்கள் அவசியம் பழகுவது நல்லது. யோக இருக்கை நிலைகளான சுகாசனம், சவாசனம், புஜங்காசனம், சேது பந்தாசனம், உஷ்ட்ராசனம், உத்தனாசனம், திரிகோணாசனம் ஆகியவற்றுடன் மூச்சு பயிற்சி பழகுவது நுரையீரலை வலுப்படுத்தும், அடிக்கடி ஆஸ்துமா ஏற்படுவதைத் தடுக்கும்.

எத்தோப்பியா நாட்டில் நடந்த ஆய்வில், ஆஸ்துமா நோயாளிகள் யோகா பயிற்சி மேற்கொள்ளும்போது, நோயின் தாக்கம் குறைவதாகவும், ஆஸ்துமா மருந்துகளின் பயன்பாடு குறைவதாகவும் ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன. இது நமது பாரம்பரிய மருத்துவத்தின் யோகக்கலைக்கு மணிமகுடம் சூட்டுவது போலுள்ளது.

அதிகாலை வேளையில் மூச்சுத்திணறலை உண்டாக்கி பிராணன் பறிபோகும் அளவிற்கு பயத்தையும், உடல் சோகத்தையும் உண்டாக்கி சித்ரவதை செய்யும் நோய்நிலையாக உள்ளது ஆஸ்துமா. கபம் நீக்கும் மூலிகை மருந்துகள், பாரம்பரிய உணவுகள் இவற்றை நாடுவதும், மூச்சுப்பயிற்சியும், முதுமையில் ஆஸ்துமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தி வாழ்நாளைக் கூட்டும்.

தொடர்புக்கு:

drthillai.mdsiddha@gmail.com

Tags:    

Similar News