சிறப்புக் கட்டுரைகள்

முதுமைக் காலத்தில் தூக்கமின்மையும், தீர்வுகளும்

Published On 2024-01-24 15:27 IST   |   Update On 2024-01-24 15:27:00 IST
  • அமுக்கரா கிழங்கு என்ற சித்த மருத்துவ மூலிகை முதுமையில் பல்வேறு நோய்நிலைகளில் பலன் தரக்கூடியது.
  • சாதிக்காயைப் பொடித்து சிட்டிகை அளவு பாலில் கலந்து எடுத்துக்கொள்ள மன அழுத்தம் நீங்கும்.

நல்ல தூக்கம் தரமான ஆரோக்கியத்தின் அறிகுறி. ஒரு நாளைக்கு மூன்றில் ஒரு பகுதியும், வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியும் தூக்கத்தில் கடந்து விடுகிறது. அவ்வாறு இருக்கையில், நிம்மதியான தூக்கம் என்பது முதுமைக்கு கிடைக்கும் வரம் எனலாம். முதுமையில் குறைந்தது ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணி நேரம் உறங்க வேண்டியது அவசியம்.

பகல் தூக்கம், இரவில் ஆழ்ந்த தூக்கம் இல்லாமை, இடை இடையே எழுதல், இடையில் எழுந்த பின் தூக்கம் இல்லாமல் போதல் ஆகிய பல்வேறு குறிகுணங்கள் தூக்கமின்மையை உண்டாக்கிவிடுகின்றன.

கிட்டத்தட்ட 50 சதவீதம் முதியவர்கள் இரவில் நிம்மதியான தூக்கமில்லாமல் கண் விழிப்பதுடன், பகலில் தூக்க கலக்கத்துடனும், சோர்வுடனும் அவதிப்படுவதாக ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன. இயல்பாகவே முதுமையில், தூக்கத்தில் விழிப்பு அதிகம் பேருக்கு உண்டாகிறது. இது மட்டுமின்றி பல்வேறு நோய்நிலைகளும் தூக்கமின்மைக்கு காரணமாகின்றன. வயது மூப்பில் தூக்கத்தை உண்டாக்க உதவும் 'மெலடோனின்' எனும் ஹார்மோன் சுரப்பு இயல்பாகவே குறைவதும் தூக்கம் இல்லாமல் போவதற்கு காரணமாக உள்ளது. தூக்கமின்மை எனும் நோய்நிலை இன்னும் பல நோய்நிலைகளுக்கு பாதை அமைக்கிறது என்பது கூடுதல் வருத்தம் தான்.

நீரிழிவு (சர்க்கரை) நோய், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், மூட்டுவாதம், ஞாபக மறதி நோய், அசீரணம், ஆஸ்துமா போன்ற நுரையீரல் நோய்கள், பார்கின்சன் எனும் நடுக்கு வாதம், மன அழுத்தம், மனப் பதட்டம் போன்ற பல்வேறு நோய்நிலைகளில் தூக்கமின்மை உண்டாகக்கூடும். ஆகவே அந்த நோய்களுக்குரிய மருந்துகளுடன், தூக்கமின்மைக்கும் சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

சித்த மருத்துவக் கூற்றுப்படி வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் வாதமானது நரம்புகளில் செயல்படக்கூடியது. நரம்பு சார்ந்து உண்டாகும் நோய்நிலைகளுக்கு வாதமே முதற்காரணமாக உள்ளது. அத்தகைய வாதமானது அதிகரித்து உடல் மற்றும் மனம் இரண்டிலும் பாதிக்கப்பட்டு தூக்கமின்மையை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது.

நரம்புகளில் தங்கும் இத்தகைய வாதத்தைப் போக்கி தூக்கத்தை இயல்பாக உண்டாக்கும் சித்த மருத்துவ மூலிகைகள், முதுமையில் நிம்மதியான தூக்கத்தை வரவழைக்கும். அமுக்கரா கிழங்கு, சடாமாஞ்சில், பிரமி, தகரை போன்ற மூலிகைகளும், அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கான சாதிக்காய் மற்றும் கசகசா ஆகியன தூக்கம் இயல்பாக உண்டாக்க உதவும்.

அமுக்கரா கிழங்கு என்ற சித்த மருத்துவ மூலிகை முதுமையில் பல்வேறு நோய்நிலைகளில் பலன் தரக்கூடியது. 'முதுமையின் தோழன்' என்றே இதனை குறிப்பிடலாம். இது மன அழுத்தம் போக்கும் சிறந்த மூலிகை. அமுக்கரா கிழங்கு சேர்ந்த 'அமுக்கரா சூரணம்' எனும் சித்த மருந்து தூக்கமின்மைக்கு தீர்வு தரக்கூடியது. இதனை இரவு வேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு பாலில் கலந்து எடுத்துக்கொள்வது பலன் தரும்.

தூக்கமின்மைக்கு கசகசா வீட்டு வைத்தியமாக மிகச்சிறந்த நன்மை பயக்கும். கசகசா விதைகளை ஒரு தேக்கரண்டி அளவுக்கு பொடித்து பாலில் கலந்து எடுத்துக்கொள்ள தூக்கம் இயல்பாக வரும். உடலுக்கும் மனத்திற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் மனப்பதட்டமும், மன அழுத்தமும் குறையும். தூக்கமின்மைக்கு கசகசா விதை எண்ணெயை இரவில் எடுத்துக்கொள்வதும் நன்மை பயக்கும் என்கிறது மேற்கத்திய வழக்கு முறை.

கசகசா விதைகளுடன் வால்மிளகு, பாதாம் பருப்பு, கற்கண்டு இவை சம எடை எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் மற்றும் நெய் சேர்த்து லேகியமாக்கி வைத்துக் கொள்ளலாம். இதனை 'கசகசா லேகியம்' என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. அவ்வப்போது இதை அரை முதல் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள உடல் வன்மை அடையும். தூக்கமின்மையை போக்கி நல்ல உறக்கத்தைத் தரும். 

சாதிக்காயைப் பொடித்து சிட்டிகை அளவு பாலில் கலந்து எடுத்துக்கொள்ள மன அழுத்தம் நீங்கும். மனப்பதட்டம் குறையும். நரம்புகளுக்கு வன்மை தரும். தூக்கமின்மையால் தவிப்பவர்கள் சாதிக்காய் பொடியுடன், கசகசா சேர்த்து பாலில் கலந்து எடுத்துக்கொள்வதும் நல்லது.

சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள தகரை மூலிகையின் வேரானது பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் தூக்கமின்மைக்காக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 'வலேரியன் ரூட்' எனும் 'தகரை வேர்' பல்வேறு நவீன ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு உறுதியும் செய்யப்பட்டுள்ளது.

அதே போல் சித்த மருத்துவ மூலிகையான சடாமாஞ்சில் எனும் மூலிகை தூக்கமின்மைக்கு நல்ல பலன் தரக்கூடியது. தூக்கமின்மையைப் போக்க 'சடாமாஞ்சில் சூரணம்' எனும் சித்த மருந்தினை இரவில் பாலில் கலந்து எடுத்துக்கொள்ளலாம். இதனை அதிக அளவில் எடுக்கக்கூடாது. ஆகவே மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது. தகரை மற்றும் சடாமாஞ்சில் ஆகிய இரண்டு மூலிகைகளில் உள்ள வேதிப்பொருட்கள் அதன் மருத்துவ தன்மைக்கு காரணமாக உள்ளன.

நீர்பாங்கான இடங்களில் வளரும் பிரமி எனும் கீரையைப் பற்றி இன்று பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நரம்பு தளர்ச்சியைப் போக்குவதுடன் நல்ல தூக்கத்திற்கும் வழிவகுக்கும். இந்த பிரமி கீரையை நெய்யுடன் சேர்த்து வதக்கி சிறிது மிளகு, உப்பு சேர்த்தும் எடுத்துக்கொள்ளலாம்.

எண்ணெய் குளியல் வாதத்தை சீராக்கும் எளிய முறை. வாரம் இருமுறை எண்ணெய் குளியல் நித்திரையின்மையைப் போக்கும் எளிய வைத்திய வாழ்வியல் முறை. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணையை தேய்த்து குளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

தூக்கமின்மையைப் போக்க கூறப்பட்டுள்ள அஸ்வகந்தா தைலம், பிரமி தைலம் இவற்றை பயன்படுத்துவதும் கூடுதல் பலன் தரும். 'எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்' என்பது சித்த மருத்துவ வழிமுறை. எண்ணெயைத் தேய்த்து வெந்நீரில் குளிக்க வாதம் குறைந்து தூக்கம் இயல்பாக வருவதுடன், நோய்களுக்கு இடமில்லாமல் போகும்.

உணவிற்கும் தூக்கமின்மைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. ஆக, மசாலா தோய்ந்த உணவுப்பொருட்களைத் தவிர்த்து, பாரம்பரிய உணவுகளையும், பழங்களையும், நாடுவது நல்ல தூக்கம் உண்டாக கைக்கொடுக்கும். அசைவ உணவுகளில் கொழுப்புச் சத்துள்ள மீன் எடுத்துகொள்வது தூக்கத்தை தூண்ட உதவும். 

சோ.தில்லைவாணன்

மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும், இரவில் காபி குடிப்பதும் தூக்கத்தை கெடுப்பதாக உள்ளதை பல ஆய்வுகள் ஒப்புக்கொள்கின்றன. மாறாக இரவில் பாலில் மஞ்சள் பொடி சேர்த்து குடிப்பது இயல்பான தூக்கத்திற்கு வழிவகுக்கும். மஞ்சளில் உள்ள 'குர்குமின்' எனும் வேதி மூலக்கூறு தூக்கத்தை உண்டாக்க உதவுவதாக எலிகளில் நடத்திய சோதனை முடிவுகளும் உறுதி செய்கின்றன.

அதே போல் பாலில் உள்ள 'டிரிப்டோபன்' எனும் வேதிக்கூறு தூக்கத்தை உண்டாக்க துணைபுரிவதாக உள்ளது. வெதுவெதுப்பான பால் குடிப்பதும், அவ்வப்போது உடற்பயிற்சி மேற்கொள்வதும் முதுமையில் இயல்பான தூக்கத்தை வரவழைக்கும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

நமது உடலில் சுரக்கும் 'மெலடோனின்' ஹார்மோன் நல்ல தூக்கத்திற்கு மற்றொரு காரணம். அதே மெலடோனின் ஹார்மோன் அன்னாச்சி, ஆரஞ்சு, வாழைப்பழம், காளான், அசைவ உணவுகள் ஆகிய உணவுப்பொருட்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தகைய உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்வது நல்ல உறக்கத்திற்கு நல்லது.

செரடோனின் எனும் உடலில் சுரக்கும் மற்றொரு ஹார்மோனும் இயல்பான தூக்கத்திற்கு காரணமாகிறது. 'கிவி பழம்' இந்த ஹார்மோன் சுரப்பை தூண்டுவதாக உள்ளது. இரவில் படுக்கைக்கு போகும் முன், இரண்டு கிவி பழங்களை உட்கொள்ள தூக்கமின்மையைப் போக்கி தூக்க நேரத்தையும், தரத்தையும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுவது கூடுதல் சிறப்பு.

வயது முதுமையில் ஆண்களுக்கு உண்டாகும் புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திலும், பெண்களுக்கு உண்டாகும் சிறுநீர்ப்பை பலவீனத்திலும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது இரவு தூக்கம் தான். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வால் தூக்கம் கெட்டு உடல் அசதியும், மனச்சோர்வும் பலருக்கு உண்டாகக்கூடும்.

முதுமையில் பெண்களுக்கு கடைசி மாதவிடாய்க்கு பிறகு உடலில் ஏற்படும் தாறுமாறான ஹார்மோன் மாற்றங்களும் தூக்கமின்மை தொந்தரவுக்கு முக்கிய காரணியாக உள்ளது. இத்தகைய தொந்தரவுகளை தீர்க்க முதியோர்கள் தயக்கமின்றி மருத்துவர்களை அணுகினால் தூக்கத்திற்கு வழி பிறக்கும். உடல் பருமன் உள்ள நிலையில் உடல் எடையைக் குறைப்பது இயல்பான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

இரவில் எளிய உணவை உண்பதும், உண்ட பிறகு சிறிது தூரம் நடப்பதும், மனதிற்கு பிடித்த இசையை கேட்பதும், வழக்கமான உடற்பயிற்சியும், பகல் உறக்கம் தவிர்ப்பதும், எவ்வித யோசனையும் இன்றி படுக்கைக்கு செல்வதும் இயல்பான தூக்கம் வருவதற்கு வழிகாட்டும். இரவில் தூக்கம் இல்லாமல் போவது துக்கத்திற்கு வழிவகுக்கும். பாரம்பரிய உணவு முறைகளுடன், வாழ்வியல் முறைகளும், அத்துடன் தேவையான மூலிகை மருந்துகளும் அந்த துக்கத்தைப் போக்கி தூக்கத்தை வரவழைக்கும்.

நோய்நிலைகள் மட்டுமின்றி, சில வகை மருந்து மாத்திரைகளும் தூக்கமின்மையை உண்டாக்கக்கூடும் என்பதால் மருத்துவர் ஆலோசனையை பின்பற்றி மருந்துகளை எடுப்பது முதுமைக்கு என்றுமே நல்லது. ஏனெனில் நல்ல தூக்கம் ஆரோக்கியமான, தரமான வாழ்விற்கு அடிப்படைத் தேவை.

தொடர்புக்கு:

drthillai.mdsiddha@gmail.com

Tags:    

Similar News