சிறப்புக் கட்டுரைகள்

உதவி! - செய்பவரே பெறுகிறார்

Published On 2023-12-03 15:19 IST   |   Update On 2023-12-03 15:19:00 IST
  • செய்த உதவிக்குப் பணம் பெறுவது அறத்திற்குப் புறம்பானது! பணம் வேண்டாம் என்றான் இளைஞன்.
  • உதவி செய்யும் தயாள குணம் உடையவர்களே உதவிபெறும் தாராளத் தகுதியையும் அடைகிறார்கள்.

உதவி! - செய்பவரே பெறுகிறார்உதவும் குணத்தில் ஒப்பற்று விளங்கும் உன்னத வாசகர்களே!

வணக்கம்.

மருத்துவமனைகள், விமான, ரெயில், பஸ் நிலையங்கள், பெரும் அலுவலகங்கள், காவல் நிலையங்கள், முகாம்கள், மாநாடுகள், திருவிழாக்கள் போன்ற மக்கள் அதிகமாகச் செல்லும் இடங்களிலெல்லாம், முகப்பில், "நான் தங்களுக்கு உதவட்டுமா?"( May I Help You!) என்கிற சிறு பெயர்ப் பலகையோடு சில மனிதர்கள் அமர்ந்திருப்பதைக் கண்டிருப்பீர்கள்.

வாழ்வில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தேவைகள் ஆயிரக்கணக்கில் என்றால், சமுதாய மனிதனுக்குப் பல்லாயிரக்கணக்கில் இருக்கும். தனிமனிதனோ சமூக மனிதனோ, அவரவர் தேவைகளை அவரவர் நிறைவேற்றிக்கொள்ள முடியாதபோது அடுத்தவர் உதவியை எதிர்பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். இப்படித்தான் 'உதவி' என்பது உற்பத்தி ஆகிறது.

தேடிப்பார்த்தால், உதவி தேவைப்படாத மனிதர்கள் இந்த உலகில் இல்லவே இல்லை என்றுதான் கூற வேண்டும். வறியவர்கள், கூழுக்கு உப்பில்லை எனக் காத்திருப்பர்; கொஞ்சம் வசதி படைத்தோர் பாலுக்குச் சீனி இல்லை என வருந்தியிருப்பர். அவரவர் தகுதிக்கேற்ப அடுத்தவர் உதவிக்காகக் காத்தே இருக்கின்றனர்.

பிரதிபலன் கருதாமல் செய்யப்படுவதே உதவி. அதுவும் நியாயமான தேவையின் உச்சத்தில், கடும் நெருக்கடியில் உழலும்போது, உதவும் குணத்தோடு, ஓடிவந்து செய்யப்படுவதே சரியான உதவி. பெரும்பாலும் நண்பர்கள் இந்த வகையில் ஒருவருக்கொருவர் கேட்காமலேயே உதவி செய்து கொள்ள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

உதவி என்பது பொருள் சார்ந்ததா? அல்லது செயல் சார்ந்ததா? என்று கேட்டால், கோடீஸ்வரனுக்குப் பத்து லட்ச ரூபாய் கொடுத்து உதவுவதை விட, ஓர் ஏழைக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவுவது உத்தமமானதாக இருக்கலாம். கோடீஸ்வர நண்பன் மூன்றாவது கார் வாங்குவதற்குப் பத்து லட்ச ரூபாய் கொடுத்து உதவியிருக்கலாம்; ஏழை நண்பர் மனைவியின் காதுக் கம்மல் அடகுக் கடையில் மூழ்கிப்போகாமல் திருப்ப அந்தப் பத்தாயிரம் உதவி செய்யப்பட்டிருக்கலாம். இதில் பொருளை விடச் செயலின் நோக்கமே உதவிக்கு உன்னதம் சேர்க்கிறது.

நாம் ஏன் அடுத்தவர்க்கு உதவி செய்ய வேண்டும்?. பொருளோ? செயலோ? எதுவாயினும் அடுத்தவர்க்கு உதவினால் அது எப்படி நமக்கு நன்மையைத் தரும்?. பொருளைத் தரத்தர நமது செல்வக் கையிருப்புக் குறையத்தானே செய்யும். வலியச் சென்று பிறருக்கு உதவும்போது பல சமயங்களில், வீண் பழிச்சொல்லும் நேர விரயமும் நமக்குத்தானே வருகிறது? என்று சிலர் கூறும் அனுபவப் புலம்பலும் ஒருபக்கம் ஒலிக்கத் தான் செய்கிறது.

உதவி செய்வதிலும் சில நியதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று கூறும் திருவள்ளுவர், அவரவர் தகுதி அறிந்து உதவி செய்யவேண்டும் என்கிறார். ஆயினும் சரியான மனிதர்க்குச் செய்யப்படுகிற உதவி அளவில் மிகச் சிறிய தினை அளவினதாக இருந்தாலும் அதனைப் பனையளவு உயர்ந்ததாகக் கருத இடமிருக்கிறது என்றும், இக்கட்டின் தருணம் தீர்வதற்குள், காலத்தில் செய்யப்படுகிற உதவிக்கு இந்த உலகம்கூட ஈடாகாது என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

உதவி செய்வதால் நன்மை உண்டு; ஒரு தானியம் விதையாக இருக்கும்போது அது ஒற்றையாகவே இருக்கும். அது நல்ல நிலம் பார்த்து விதைக்கப்படும்போதே ஒன்று பலவாகப் பெருகும். விதைப்பவர்க்கே விளைச்சல் பெருகும். நாம் பிறருக்குச் செய்யும் உதவியும் அப்படித்தான்.

வெளிநாட்டில் ஓர் ஆறுவழி நெடுஞ்சாலை; எந்த வண்டி எந்த வேகத்தில் எப்படிச் செல்லுகிறது என்பதையெல்லாம் கண்டுகொள்ளாதபடி சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. இருள் நெருங்கிக் கொண்டிருக்கும் மாலை நேரம்; ஒரு வயதான பெண்மணி ஓட்டிக்கொண்டு வந்த காரின் டயர் பஞ்சர் ஆகி சாலை ஓரமாக நிறுத்தப்படுகிறது. காரை விட்டு இறங்கிய பெண்மணி, போகிற கார்களையெல்லாம் பார்த்துக் கைகளை உயர்த்தி உதவி கேட்கிறாள்; யாரும் இவரைக் கவனித்ததாகவே தெரியவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாயிற்று; குளிர் பொறுக்க முடியவில்லை; நடுங்கிக்கொண்டே காருக்குள் ஏறி ஏமாற்றத்துடன் அமர்ந்துகொண்டாள்.

அப்போது ஒரு கார் இவரது காருக்குப் பின்னால் ஓரங்கட்டி நிறுத்தப்படுகிறது. ஆஜானுபாகுவான ஓர் இளைஞன் இறங்கி வந்து, "ஏதாவது பிரச்சினையா? நான் உதவலாமா?" என்று மூதாட்டியிடம் கேட்டார். சற்று அச்சத்துடன், டயர் பஞ்சர் ஆனதையும் மாற்று ஸ்டெப்னி டயர் வண்டியின் பின்புறம் இருப்பதையும் சொன்னார் மூதாட்டி.

அந்த இளைஞன், மளமளவென்று வேலையில் இறங்கினான். குளிர் கூடிக்கொண்டிருக்கும் அந்த மங்கிய வெளிச்ச நேரத்திலும், பழுதான சக்கரத்தை கழற்றி, மாற்றுச் சக்கரத்தை மாட்டி, அந்த மூதாட்டியிடம்,"வேலை முடிந்தது மேடம்!, நீங்கள் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பலாம்!" என்றான்.

மிகுந்த மகிழ்ச்சியோடு அந்த மூதாட்டி, 'நீங்கள் பார்த்த வேலைக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும்?" என்று கேட்டார். "மேடம் நான் பார்த்தது வேலை அல்ல! உதவி!; செய்த உதவிக்குப் பணம் பெறுவது அறத்திற்குப் புறம்பானது! பணம் வேண்டாம் என்றான் இளைஞன்.

"இது உங்களது பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஆயினும் உங்களுக்குப் பிரதியாக நான் எதுவும் செய்யாமல் போனால் நான் நன்றி கொன்றவள் ஆவேன். உங்கள் உதவிக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கேளுங்கள்!. தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன்; தயவு செய்து மறுத்து விடாதீர்கள்" என்றார் மூதாட்டி.

"அம்மா! என் பெயர் ஜான் பிரிட்டோ. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இனி உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நபர்களில் யாராவது ஒருவருக்கு உதவி பெறும் தகுதி இருந்து, அவருக்கு மனப்பூர்வமாக நீங்கள் உதவ முனையும்பொழுது, அப்பொழுது என் பெயரை நினைத்துக் கொள்ளுங்கள் அதுபோதும். மிக்க நன்றி. நீங்கள் போய் வாருங்கள்!" என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறிக் கிளம்பினான் ஜான் பிரிட்டோ.

ஜானின் உதவும் குணத்தை வியந்த வண்ணம் காரில் கிளம்பிய மூதாட்டி, சிறிது தொலைவில் இருந்த ஒரு சாலையோர உணவகத்தில் இரவு உணவுக்காக வண்டியை நிறுத்தினார். ஓர் நிறைமாத இளம் கர்ப்பிணிப்பெண் அந்த மூதாட்டிக்கு வேண்டிய உணவு வகைகளைப் பரிமாறும் பணியில் ஈடுபட்டாள். வயிற்றில் பிள்ளை சுமக்கும் அந்த சிரமமான தருணத்திலும் மலர்ந்த முகத்தோடு பரிமாறிய அந்தப் பெண்ணை மூதாட்டிக்குப் பிடித்து விட்டது. சாப்பிட்ட பில்லுக்குரிய பணத்தோடு அன்புத் தொகையாகப் பத்து டாலர் கொடுத்தாள் மூதாட்டி.

"அம்மா! உணவுக்குரிய தொகை மட்டும் போதும். இங்கு நாங்கள் கூடுதலாக அன்புத் தொகை எதுவும் பெற்றுக் கொள்வதில்லை என்று திருப்பித் தந்து விட்டாள் கர்ப்பிணிப்பெண். அவள் அங்கிருந்து நகர்ந்ததும், மூதாட்டி, டயர் மாற்றி உதவிய ஜான் பிரிட்டோவை நினைத்துக் கொண்டே, மேஜையில் இருந்த பில் புத்தகத்திற்குள் ஐந்நூறு டாலரை வைத்து விட்டுச் சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்த கர்ப்பிணிப் பெண்ணுக்கோ அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.

பணி முடித்து இரவு வீட்டுக்குத் திரும்பிய கர்ப்பிணிப்பெண், தன் கணவனிடம், உணவு விடுதியில் நடந்த சம்பவத்தைக் கூறி, இந்த மாதம் எனக்கு நடக்கவிருக்கும் பிரசவச் செலவு ஐந்நூறு டாலருக்கு என்ன செய்வது? எனத் தவித்துக் கொண்டிருந்தோம்! அதற்கான வழி பிறந்து விட்டது ஜான் பிரிட்டோ!" என்று தனது கணவனின் பெயர் சொல்லித் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாள். ஜான் பிரிட்டோ இந்தக் கதையில் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான் வாசகர்களே!. 

முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

உதவி செய்யும் தயாள குணம் உடையவர்களே உதவிபெறும் தாராளத் தகுதியையும் அடைகிறார்கள். உதவி என்பது பணமாக இருக்கலாம்; பொருளாக இருக்கலாம்; ஏன் ஆறுதலான வார்த்தைகள்கூட உதவியின் கீழ்தான் வரும்.

மகாகவி பாரதி உதவியை இப்படிக் கேட்கிறார்:

"நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!

நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!!

அதுவும் அற்றோர் வாய்ச்சொல் அருளீர்!

ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!"

நகை, பணம், நற்சொல், உடல் உழைப்பு இந்த நான்கில் ஆறுதலாக நாலு நல்ல வார்த்தைகள் சொல்வதுகூடத் தற்காலத்தில் பேருதவியாகக் கருதப்பட வாய்ப்பிருக்கிறது. பணம், பொருள் தேவைகளை விட நல்ல வார்த்தைகளைப் பேசி நன்னெறிப்படுத்தி உதவுகிறவர்களின் சேவையே தற்காலத்தில் பெரும் தேவையாக இருக்கிறது.

கணவன், மனைவி, பிள்ளைகள் எனும் குடும்பம்; குடும்ப நிலை தாண்டிய உறவினர்கள்; பிறகு இவர்களைத் தாண்டி நிற்கிற நண்பர்கள் ஆகிய இவ்வட்டத்திற்குள் உள்ளவர்களே ஒருவருக்கொருவர் உடனடியாக உதவிக்கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் பணம் பொருள்களால் உதவிக்கொண்டாலும், வார்த்தைகளால் ஆறுதல் தரும் நற்சொல் உதவிகளை வழங்குபவர்களாகவும் இருக்க வேண்டும்.

இன்றைய வாழ்க்கைச் சூழலில் உடல்நல பாதிப்பிற்கு இணையாக மன நலப் பாதிப்புகளும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. மனம் கனிந்த புன்னகையில் ஆறுதலாக ஒரு வார்த்தை உதிர்ப்பதற்கு காசு பணம் எதுவும் செலவாகி விடுவதில்லை. மனிதர்கள் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்கி, அடுத்தவர் துன்பங்களில் அக்கறை செலுத்தி, அவை தீர்வதற்கான வாய்ச்சொல் வழிமுறைகள் வழங்குவதும் உதவுகளில் பேருதவிதான். அழுத்தம் இல்லாத மனங்களால் மனிதம் மகிழ்ந்து தழைக்கிறது.

'மனிதன் ஒரு சமுதாய விலங்கு' என்றார் சாக்ரட்டீஸ். அதனால் வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும் அவன் மற்ற மனிதர்களையோ, இயற்கையையோ சார்ந்திருந்தே ஆக வேண்டும். சார்ந்திருத்தல் என்பதற்கு உதவியிருத்தல், நன்றியோடிருத்தல் என்றே பொருள். அதனால் அடுத்தவர்க்கு உதவுவது என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் சமுதாயக்கடமை.

அரபுநாட்டில், ஒரு தந்தை ஒரு பெரிய ஆட்டைச் சமைத்து பெரு விருந்து தயாரித்தார். மகளிடம், வெளியில் சென்று அக்கம்பக்கத்தில் வாழும் நம் உறவினர் நண்பர்களை விருந்துக்கு அழைத்து வா என்றார். வீட்டுக்கு வெளியில் வந்த மகள்,"ஆபத்து! ஆபத்து! வீட்டில் சமையல் கட்டில் தீப்பற்றிக்கொண்டுள்ளது! நெருப்பில் என்தந்தை மாட்டிக்கொண்டுள்ளார்! யாராவது வந்து காப்பாற்றுங்களேன்!" என்று கூச்சலிட்டார்.

பல உறவினர்கள் ஓடி விட்டனர்; சில உறவு நட்பினரும், முகம்தெரியாத சில புதியவர்களும் உதவுவதற்காக வீட்டிற்குள் சென்றனர். அவர்களுக்கு அங்கே பெருவிருந்து காத்திருந்தது.

ஆம் உதவி என்பது எல்லைகளைத் தாண்டியது!

செய்பவர்களே பெறுகிறார்கள்!

தொடர்புக்கு:

94431 90098

Tags:    

Similar News