சிறப்புக் கட்டுரைகள்

காற்றைக் கண்டால் பயம்... நீரைக் கண்டால் பயம்...!

Published On 2025-08-29 15:04 IST   |   Update On 2025-08-29 15:04:00 IST
  • கடிபட்ட இடத்தில் இடத்தை சுத்தமாக தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.
  • சில நேரங்களில் ரேபிஸ் தடுப்பூசியை போட்ட பிறகும் கூட ஒரு சிலருக்கு ரேபிஸ் வந்துள்ளது.

மருத்துவ கல்லூரியில் மூன்றாவது வருடம். அன்று மருத்துவமனையில் வகுப்பிற்காக அனைவரும் நின்று கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு பெரியவரும் சிறுவனும் வந்தனர். சிறுவனுக்கு 14 வயது இருக்கும்.

எங்கள் ஆசிரியர் ஒரு காகிதத்தை எடுத்து அந்த சிறுவன் முகத்திற்கு முன்னால் காற்று வருவதைப் போல வேகமாக வீசினார். அடுத்த நொடி அந்த சிறுவன் நாய் போல ஊளையிட்டபடி வாயில் இருந்து எச்சில் ஒழுக நாய் போலவே வேகமாக சுற்றி சுற்றி ஓடினான்.

எங்கள் அனைவருக்கும் ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போய் பார்த்துக் கொண்டிருந்தோம். பிறகு அவனை கூட்டிக்கொண்டு சென்று விட்டார்கள்.

எங்கள் ஆசிரியர் கூறினார், சிறுவனை பிடித்திருந்தது நாய்க்கடியால் வரக்கூடிய ரேபிஸ் நோய் என்று.

அன்றுதான் முதன் முதலில் பார்த்தேன்.

ஆனால் இன்றுவரை மறக்கவில்லை. அந்த சிறுவனின் பாதிப்பும் அந்த தந்தையின் தவிப்பும் மனதை விட்டு அகலவில்லை.

காற்றைக் கண்டால் பயம்!, நீரை கண்டால் பயம் போன்றவற்றை ஏரோபோபியா, ஹைட்ரோபோபியா, என்று கூறுவோம்.

இதுபோன்ற அறிகுறிகள் முதலில் ஆரம்பித்து மொத்தமாக எல்லா தசைகளும் இறுகி அவர்கள் இறந்து போவார்கள்.

ரேபிஸ் என்பது ஒரு வைரஸ் நோயாகும்.

இது நமது மூளையை தாக்கி ஒருவரை உயிரிழக்க வைக்கும்.

ரேபிஸ் நோய் எப்படி பரவும்?

கடிக்கும் விலங்கின் எச்சிலில் உள்ள ரேபிஸ் வைரஸ் நம் உடலில் உள்ள காயத்தில் படும் பொழுது எச்சில் மூலமாக பரவும்.

அதிகமாக நாய்க்கடியிலிருந்தும், அது தவிர பூனை, எலி, குரங்கு, வௌவ்வால், போன்ற மற்ற பாலூட்டிகளின் மூலமும் பரவலாம். ஆனால் 90 சதவீதம் வரை நாய் கடியிலிருந்து தான் பரவும்.

அறிகுறிகள் என்ன?

பொதுவாக அறிகுறிகள் உடனே தெரியாது. ஒரு மாதம் கழித்து வெளிப்படும். ஒரு சிலருக்கு ஒரு வருடம் கழித்து கூட அறிகுறிகள் வரலாம்.

ஆரம்ப கட்ட முதல் நிலை அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் அசதி போன்றவை தோன்றும்.

அடுத்த கட்டத்தில் மூளை பாதிக்கப்பட்டு காற்றைக் கண்டால் பயம்!, நீரை கண்டால் பயம்!, பதட்டம், காதில் யாரோ பேசுவது போல தோன்றுவது, வாயிலிருந்து எச்சில் ஒழுகுவது போன்றவை ஏற்படும்.

மொத்தத்தில் அவர்களுடைய செயல்பாடு முற்றிலுமாக மாறிவிடும்.

ஒரு கட்டத்தில் அனைத்து தசைகளும் செயலிழக்க ஆரம்பித்து இறப்பு ஏற்படும்.

நோய் வந்து விட்டால் எத்தனை நாட்கள் அவர்கள் உயிருடன் இருப்பர்?

சில நாட்களிலிருந்து அதிகபட்சம் ஒரு மாதம் வரை.

அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு கடிபட்ட உடனே தடுப்பூசி எடுத்துக் கொள்வது மட்டுமே உயிர் பிழைக்க ஒரே ஒரு வழி.

ஏதாவது மருந்து உள்ளதா?

முதலில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றுவரை ரேபிஸ் நோய்க்கு மருந்தில்லை. வந்துவிட்டால் மரணம் நிச்சயம்!

அறிகுறிகள் தோன்றிவிட்டால் எந்த மருந்திற்கும் அவை கட்டுப்படாமல் அதிகமாகிக் கொண்டே போய் முடிவில் நெஞ்சு பகுதியில் உள்ள தசைகள் செயலிழந்து உயிரிழப்பர்.

முதல் உதவி எவ்வாறு செய்ய வேண்டும்?

கடிபட்ட இடத்தில் இடத்தை சுத்தமாக தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். ரன்னிங் வாட்டர் என்று சொல்லப்படும், குழாயைத் திறந்து, வேகமாக வரும் தண்ணீரில் காண்பித்து சோப்பு உபயோகித்து நன்றாக கழுவி விட வேண்டும். உடனடியாக மருத்துவரிடம் சென்று காண்பித்து தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

முகம், கை போன்றவற்றில் கடிபட்டிருந்தால் நேரடியாக விரைவாகவும் மூளை பாதிப்பதற்கு வாய்ப்பாகும். அப்போது கடிபட்ட காயத்திலேயே ஒரு தடுப்பூசியும் இம்மினோகுளோபின் என்று சொல்லப்படும் உடனடி நாய்க்கடி தடுப்பு மருந்தும் கொடுக்கப்படும்.

லேசான காயமாக இருந்தாலும், அதை லேசாக எடுத்துக் கொள்ளாது உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.

பிறகு தடுப்பூசியை தொடர வேண்டும்.

ஐந்து தடுப்பூசிகள் குறிப்பிட்ட கால அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக நாய்க்கடி பட்ட காயம் பெரிதாக இருந்தாலும் கூட தையல் போட்டு மூடுவதில்லை. அதில் ஏதேனும் வைரஸ் இருந்தால் அது உள்ளேயே தங்கி விடுவதற்கான வாய்ப்பு என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.

எத்தனை தடுப்பூசிகள்?!

கடிபட்ட அன்று, மூன்றாவது நாள், ஏழாவது நாள், பதினான்காவது நாள்.

0,3,7,14, - அனைவருக்கும் பொதுவானது.

ஐந்தாவது தடுப்பூசி- 28வது நாள் - எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படும்.

இத்துடன் டிடி ஊசியும் கொடுக்கப்படும்.

சில நேரங்களில் ரேபிஸ் தடுப்பூசியை போட்ட பிறகும் கூட ஒரு சிலருக்கு ரேபிஸ் வந்துள்ளது.

வயிற்றில் தொப்புளை சுற்றி ஊசி போடுவார்கள் என்று கூறுவார்களே அது உண்மையா?

முன்பு அது போல இருந்தது. இப்பொழுது நாய் கடிக்கான ஊசிகள் ஐந்து மட்டும்தான். சாதாரண ஊசிகளைப் போலவே இவற்றையும் இடுப்பிலோ அல்லது கையிலோ எடுத்துக் கொள்ளலாம். தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இலவசம்.

இந்த நோயிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள என்ன வழி?

 

வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மிக மிக அவசியம்.

புதிய மிருகங்களை தொடுவதையோ அவற்றின் அருகில் செல்வதையோ தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஆக்ரோஷமாக இருக்கும் எந்த விலங்கிடமும் நெருங்க கூடாது.

குறிப்பாக குழந்தைகள் பழக்கமில்லாத எந்த மிருகங்களிடத்தும் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

மிருகங்களுடன் பணியில் இருப்பவர்கள் மற்றும் ரேபிஸ் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு செல்பவர்கள், காடுகளுக்கு அருகில் வசிப்பவர்கள், ரேபிஸ் தடுப்பூசியை, கடிபடும் முன்பே எடுத்துக் கொள்ளலாம்.

நாய்களில் இருந்து வேறு என்னென்ன தொற்று நோய்கள் நமக்கு வரும்?

நாய் நாடாப்புழு, வேறு சில தொற்றுப் புழுக்கள் மற்றும் சால்மோனெல்லா, லெப்டோஸ்பைரா பாக்டீரியாக்கலிருந்து வரும் நோய்களும் நாயிலிருந்து பரவலாம்.

ரேபிஸ் பாதித்த நாய் எவ்வளவு நாள் உயிரோடு இருக்கும்?

நாய் உயிருடன் இருக்கிறதா என்பதை கண்காணிக்கலாம். பொதுவாக ரேபிஸ் பாதித்த நாய்கள் பத்து நாட்களுக்குள் இறந்துவிடும்.

ரேபிஸ் இருக்கிறது என்று சந்தேகம் இருந்தால் உடனடியாக ஹெல்ப் லைனில் தெரிவிக்க வேண்டும். நாயை டெஸ்ட் செய்து பிறகு உடலை பெரிய பிளாஸ்டிக் கவரிலிட்டு ஆழமாக புதைக்க வேண்டும்.

இதை மருத்துவ அலுவலர்கள் மூலமாகத்தான் செய்ய வேண்டும், நாமாகவே செய்யக்கூடாது.

நாய் இருந்த இடத்தையும் முறைப்படி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் மற்ற விலங்குகளுக்கு அந்த வீட்டில் உள்ளவர்களுக்கோ ரேபிஸ் வராமல் தடுக்கலாம்.

 

மகப்பேறு மருத்துவர், ஜெயஸ்ரீ சர்மா, வாட்ஸ்அப்: 8925764148

தமிழ்நாட்டில் உதவிக்கு அழைக்க வேண்டிய எண் - 1962.

இந்தியாவின் நாடு தழுவிய உதவி எண் - 15400.

ஒரு முறை ஒரு ரேபிஸ் நோயாளி படும்பாட்டை பார்த்துவிட்டால் நாய் என்ன?! நாய் பொம்மையை கண்டால் கூட பயத்தில் நடுங்குவோம். எனவே கவனமாக இருங்கள்! உங்கள் வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி போடுங்கள். கண்காணியுங்கள்! அறிமுகமில்லாத எந்த மிருகங்களின் அருகிலும் செல்லாதீர்கள்!

தவிர்க்கக்கூடிய ஒரு நோய்க்கு எந்த ஒரு உயிரும் பலியாக கூடாது.

Tags:    

Similar News