சிறப்புக் கட்டுரைகள்

மரணபயம் இன்மையே மாசற்ற அழகு!

Published On 2025-08-24 13:04 IST   |   Update On 2025-08-24 13:04:00 IST
  • மரண பயமின்மையே நிம்மதியான மகிழ்ச்சிக்கு அடிப்படை!
  • இந்த உலகில் எது எது உண்மையானதோ அவற்றைப்பற்றிப் பேசுவதற்கு அச்சப்படத் தேவையில்லை.

'அச்சம் என்பது மடமையடா!' என்கிற பழந்திரையிசைப் பாடல் வரிகளை அச்சமின்றிப் போற்றுகின்ற அன்பு வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

உலகில் எதற்கும் அஞ்சாத மனவலிமை உள்ளவர்கூட மரணத்திற்கு அஞ்சியே ஆகவேண்டும் என்று கூறுவர். கொசு தொடங்கிக் கொள்ளிவாய்ப் பிசாசு வரை, மனிதர் அச்சம் கொள்வது ஏகதேசத்திற்கு எல்லாரிடமும் பரந்து விரிந்தே கிடக்கிறது. இன்று கிடைக்கும் உணவு முதலான எல்லா வசதி வாய்ப்புகளும் நாளை திடீரென இல்லாமல் போய்விடுமோ? என்கிற வாழ்வின் நிலையாமை குறித்த அச்சம், நிலைபெற்ற அச்சமாய் ஒவ்வொரு மனிதரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டே இருக்கிறது.

இயற்கை நமக்குக் கொடையாக வழங்கிக் கொண்டிருக்கிற நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், இயற்கையான மரம் செடி கொடிகள், கனிகள் விதைகள் உணவு தானியங்கள், கற்கள் பாறைகள் உலோகங்கள் என எல்லாமே ஒரு பூகம்பத்தில், அல்லது ஒரு சுனாமியில், அல்லது ஒரு பேரழிவு நோயில் காணாமல்போக நேர்ந்துவிட்டால், நமது வாழ்வாதாரங்கள் அத்தனையும் ஒரு நொடியில் நம்மைவிட்டு இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது? என்கிற அச்சம் நிரந்தர அச்சமாகி அல்லற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

சிறுசிறு அச்சங்களுக்கெல்லாம் நான் அச்சப்படுவது கிடையாது; ஆனாலும் மரணபயம் மட்டுமே என்னை பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது என்று சிலர் கூறலாம். மரணமா? பயமா? எனக்கா? எந்தக்காலத்திலும் கிடையவே கிடையாது; பெரும் போர்ப்படைகளைக் கூட எதிர்த்து நிற்கக்கூடிய ஆற்றல் என்னுடையது; ஆனாலும், அவ்வப்போது குளியலறையில் கரப்பான் பூச்சிகளைப் பார்த்தால் மட்டுமே கொஞ்சம் பயப்படுவேன் என்று சிலர் தமது வீரப் பிரதாபங்களைப் பிரஸ்தாபிக்கலாம்.

எது எப்படியோ எல்லாவிதமான அச்சங்களுக்கும் மூலகாரணமாக மரணபயம் மட்டுமே திகழுகிறது. மரணம் என்பது எப்போதும், வருகின்ற வழிகளில் புரியாத புதிராக இருக்கலாம்; ஆனால் அது ஒவ்வொரு உயிருக்கும் நிகழ்ந்தே ஆகும்; வந்தே தீரும் என்பது மட்டும் மாறாத உண்மையாகவே இருக்கிறது. உண்மைக்கு அஞ்சாதவர்கள்; சிறுசிறு பயங்களுக்கும் அஞ்சாதவர்களாக இருந்து பழக வேண்டும். ஒரே ஒருமுறை மட்டுமே வாழ்க்கையில் நிகழ்ந்துவிடக்கூடிய மரணத்திற்காக நாள்தோறும், நொடிதோறும் அச்சப்பட்டு அச்சப்பட்டுச், செத்துச் செத்துப் பிழைக்க வேண்டுமா?.

'ரௌத்திரம் பழகு' அதாவது 'கோபத்தைச், சாந்தமாக மாறும்வரை பழக்க வேண்டும்' என்று பாரதி கூறுவதைப்போல, மனிதர்களும் தமக்குள் தோன்றும் அச்சத்தையும் பழக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அச்சம் பழக்குவது என்றால், கோபம் தோன்றியவுடன் உள்ளத்திலும் உடம்பிலும் ஏற்படும் இரசாயண மாற்றங்களைப் போல, அச்சம் தோன்றிடும் போதும் உருவாகிடும். அவற்றை உளவியல் ரீதியாக அணுகி, அச்சம்மாற்றி ஆற்றல்பெருக்கிடும் வித்தையை நாம் கற்றிட வேண்டும்.

அருளாளர் திருநாவுக்கரசர்,

" அஞ்சுவது யாதொன்றும் இல்லை! அஞ்ச வருவதும் இல்லை"

என்று பாடுகிறார்; 'தான் பயப்படுவதற்கோ, அல்லது தன்னை பயமுறுத்துவதற்கோ இந்த உலகில் எதுவுமே இல்லை!' என்று கூறுகிறார். மேலும், "நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்!" என்று மற்றோர் இடத்தில் பாடும்போது, 'சிவனைத் தவிர வேறு எவருக்குமே தாம் அடிமையில்லை என்றும், மரணபயம் என்பது துளியும் கிடையாது' என்பதையும் துணிச்சலோடு எடுத்துரைக்கிறார். சூழல் சார்ந்து உடம்பிலும் உள்ளத்திலும் ஏற்படுகிற அச்சத்தை ஆன்மீக உளவியல்கொண்டு அகற்றிடும் முயற்சியில் அந்த ஆன்மீக ஞானி ஈடுபடுகிறார்; நம்மை ஈடுபடவும் சொல்கிறார்.

ஒரு துறவி ஆசிரமம் அமைத்து அங்கு நாள்தோறும் வந்து அவரிடம் முறையிடுகிற மக்களுக்கெல்லாம் ஆர்ந்த வார்த்தைகள் கூறி ஆறுதல் வழங்கி கொண்டே இருந்தார். வருகின்ற மனிதர்கள் பலதினுசு என்பதைப்போல அவர்கள் கொண்டுவருகிற பிரச்சனைகளும் பலதினுசுகளாக இருந்தன. ஆனால் எல்லாருக்கும் மலர்ந்த முகத்தோடு, மனம் கோணாமல் அருளாசியும் அருள்வாக்கும் அவர் சொல்லிக்கொண்டே இருந்தார்.

நாள்தோறும் அந்தத் துறவியைச் சந்தித்து அருளாசி பெற்றுக்கொண்டிருந்த ஒரு செல்வந்தர், ஒருநாள் திடீரெனத் துறவியிடத்துத் தயங்கி நின்றார். குருவும் மாறாத புன்னகையோடு," என்ன விஷயம்?" என்று கேட்டார். " சுவாமி! நானும், என்னைப்போன்ற சீடர்களும் நாள்தோறும் உங்களை வணங்கி, உங்களிடமிருந்து அருளாசி வாங்கிச் செல்கிறோம்; ஆனால் உங்கள் முகத்தில் தங்கியுள்ள அந்த 'ஒளி', அந்த தேஜஸ்! எங்கள் எவர் முகத்திலும் எப்போதும் இருப்பதே இல்லையே! அது ஏன்?" என்று கேட்டார். உடனே துறவி சொன்னார், "சீடரே! முகத்தில் தெளிவும், தேஜஸ் என்கிற ஒளிவட்டமும் ஒரு மனிதன் முகத்தில் எப்போது தோன்றும் தெரியுமா?, எப்போது மரண பயம் அவனைவிட்டு முற்றிலுமாக விலகுகிறதோ! அப்போதுதான்!.

"இப்போது சொல்லக் கூடாது!; இருந்தாலும் சொல்கிறேன். உன்னுடைய மரணத்திற்கு இன்னும் பதினைந்து நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இன்றிலிருந்து பதினைந்தாவது நாள் இரவு ஒன்பது மணிக்கு உனது மரணம்!" என்று சொல்லிவிட்டார் துறவி. உடனே பதற்றத்தோடு காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார் செல்வந்தர். "இன்னும் பதினைந்து நாட்கள் மட்டும் தானா?. அதற்குள் நான் ஆற்ற வேண்டிய கடமைகள் இந்தச் சமூகத்திலும் வீட்டிலும் நிறைய இருக்கின்றனவே!. ஆளை விடுங்கள்! நான் முடிந்தால் பிறகு வருகிறேன்" என்று அவசர அவசரமாகத் துறவியிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார் செல்வந்தார். வீட்டிற்குச் சென்றார்.

தான் தனது வாழ்நாளில் இதுவரை தீர்க்கப்படாமல் இருந்த கொடுக்கல் வாங்கல் கணக்குகளை நேர் செய்தார். தன்னுடைய சொத்துகள் முழுவதையும் கணக்கெடுத்து, குடும்பத்தினர், உறவுகள், நட்புகள் என்று எல்லாருக்கும் பிரித்து எழுதிக் கொடுத்தார்; மீதமுள்ள சில சொத்துக்களை தர்ம ஸ்தாபனங்களுக்கு நன்கொடையாக எழுதி வைத்தார். ஏதோ சில சில்லறைக் காரணங்களுக்காக இதுவரை பகைமை பாராட்டி வந்த உறவினர், நண்பர்களோடு சமாதானமாகி நட்புப் பாராட்டத் தொடங்கினார். கோயிலுக்குச் செல்வது, குருநாதரைப் பார்க்க வருவது என்பதற்கெல்லாம் அவருக்கு நேரம் கிடைக்கவே இல்லை. வாழ்நாளில் அவர் சாதிக்க நினைத்த நல்லகாரியங்களில் சிலவற்றையாவது நிறைவேற்ற வேண்டும் என்று இரவு, பகலாகச் செயல்பட்டார்.

பதினைந்து நாட்கள் முடிந்தன; குருநாதர் கணித்துச் சொன்ன மரணம் வருவதற்குச் செல்வந்தருக்கு இன்னும் ஒருமணி நேரம் மட்டுமே அவகாசமாக இருந்தது. அதற்குள் குருநாதரைப்பார்த்து, நன்றி கூறி விடைபெற்றுக் கொள்ளலாம் என்று ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார் செல்வந்தர். செல்வந்தரை ஆர்வத்தோடு வரவேற்ற குருநாதர், "இப்போது சொல்லுங்கள்!" என்று கனிவோடு கேட்டார். " குருநாதரே! நீங்கள் சொன்ன இந்தப் பதினைந்து நாட்களுக்குள் என்னால் முடிந்த பொருளாதார, குடும்ப, சமுதாய, ஆன்மீகக் கடமைகள் யாவற்றையும் முடித்துவிட்டேன். மனத்தில் இப்போது முழு நிம்மதி; மரணத்திற்கும் இப்போது தயாராகி விட்டேன்!" என்றார் செல்வந்தர்.

 

முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

அருகிலிருந்த சீடரிடம் ஒரு முகம்பார்க்கும் கண்ணாடியை எடுத்து வரச்சொன்ன குருநாதர், அதனைச் செல்வந்தரிடம் கொடுத்து, " இப்போது இந்தக் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள்; நீங்கள் தேடிய தேஜஸ்! நீங்கள் விரும்பிய ஒளிவட்டம்! இப்போது உங்கள் முகத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிப்பதைக் காண்பீர்கள்!" என்றார். அந்தப் பதினைந்து நாட்களும் தன்முகத்தைக் கூடக் கண்ணாடியில் பார்க்க நேரமில்லாமல் செயல்பட்ட செல்வந்தர் அப்போது கண்ணாடியில் பார்த்துப் பிரமித்துப் போய்விட்டார். ஆம்! அவர் குருநாதர் முகத்தில் கண்ட அதே ஒளிப்பிரகாசத்தை இப்போது தன் முகத்திலும் கண்டு மகிழ்ந்து போனார்.

அப்போது துறவி பேசினார்," மரண பயமின்மையே நிம்மதியான மகிழ்ச்சிக்கு அடிப்படை!; எவருடைய மனத்தில் மரணம் குறித்த அச்சம் அகன்று போகிறதோ, அவருடைய முகத்தில் அருள் என்னும் ஒளிவட்டம் அன்புப் பிரகாசம் செய்யத் தொடங்கி விடுகிறது. உங்கள் மரணம் குறித்து நான் சொன்ன கணிப்பு உண்மையானது அல்ல; எவருடைய மரணத்தையும் எவரும் எளிதில் கணித்துவிட முடியாது; நான் சொன்ன அந்தப் பதினைந்துநாள் கணக்கு, உங்களின் மனநிலை மாற்றத்திற்கும், மரண பயத்திலிருந்து உங்களை விடுவிப்புச் செய்வதற்கும் காரணமாக அமைந்து விட்டது; தற்போதைக்கு உங்களுக்கு மரணமில்லை; இனிமேலும் நீங்கள் நீண்ட ஆயுளோடும், நிறைந்த மகிழ்ச்சியோடும் வாழ வாழ்த்துகள்! அச்சமின்மையே மகிழ்ச்சியின் திறவுகோல்!".

துறவியின் அந்த வார்த்தைகள் தத்துவச் செறிவு மிக்கவை என்றாலும், சமூகத்தில் எந்த நிலையில் உள்ளோரும் அச்சமற்ற துணிச்சலோடு எதனை எதிர்கொண்டாலும் துன்பமற்ற இன்பமே ஒவ்வொரு அடியெடுப்பிலும் உறுதுணையாக அமையும். நமது சங்கத் தமிழ் இலக்கியமாம் குறுந்தொகையில், "நல்மொழிக்கு அச்சமில்லை" என்கிற உண்மையைப் போற்றும் ஓர் உன்னத வார்த்தை வருகிறது. உலகில் அச்சமில்லாமல் செயல்படுவோர் ஒளிப்புகழோடு வாழ்ந்திடுவார்; அந்த அச்சமின்மை யாருக்கு வாய்த்திடும் தெரியுமா? ' நல்மொழி' என்னும், எல்லாருக்கும் நன்மை விளைவிக்கிற உண்மையைப் பேசுவோருக்கே வாய்த்திடுமாம். இந்த உலகில் எது எது உண்மையானதோ அவற்றைப்பற்றிப் பேசுவதற்கு அச்சப்படத் தேவையில்லை. உண்மையை உண்மையென்று நம்புதலே, சகல அச்சங்களையும் எதிர்த்து வெற்றி கொள்வதற்கு இனிய வழி ஆகும்.

வீணான கனவுகள், வெற்றுக் கற்பனைகள், மூடத் தனமான நம்பிக்கைகள் போல்வன மனிதர்களை மரணம் குறித்த இல்லாத பொல்லாத அச்சங்களுக்கு ஆட்படுத்தித் துன்ப வலையில் சிக்கித் திணறடிக்கின்றன. எப்போதும் வெற்று மனமாய் வைத்துக்கொள்ளாமல், நிறைந்த மனமாய் வைத்துக்கொண்டால் நலம்குறித்தே மனம் சிந்திக்கும். திரைப்படம் தொடங்கும்போதே, முடிவுக்காட்சி என்ன என்பதைத் தெரிந்துகொண்டால், படம் எப்படி சுவாரஸ்யப்படும்?. வாழ்க்கையும் அப்படித்தான்; அதன்போக்கில் அதனை ரசித்து வாழ வேண்டும்; எல்லார் வாழ்க்கைக்கும் நிறைவு உண்டு; அதனை முன்கூட்டியே தெரிந்து கொண்டு எதைச் சாதித்துவிடப் போகிறோம்.

அச்சங்களின் தொகுப்பு வாழ்க்கை என்று கருதத் தொடங்கினால், வாழ்க்கையின் அத்தனைப் பக்கங்களும் இருட்டுச்சாயம் பூசப்பட்ட இருள்மயமாக மட்டுமே திகழும்; மாறாக எல்லாம் இன்பமயம் என உண்மையின் சார்பில் உற்சாக உறுதியோடு உலாவத் தொடங்கினால் வாழ்க்கை ஒளிமயமாக ஒளிர்ந்து பிரகாசிக்கும். மரண பயமின்மையே மாசற்ற அழகு முகத்திலும்! அகத்திலும்!.

தொடர்புக்கு: 9443190098

Tags:    

Similar News