சிறப்புக் கட்டுரைகள்

பெண்களின் உடல் பருமன் கருத்தரிப்பதை பாதிக்குமா?

Published On 2025-08-20 14:32 IST   |   Update On 2025-08-20 14:32:00 IST
  • உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பாதிப்பு ஏற்படும்.
  • சில பெண்கள் உடற்பயிற்சி செய்வது தவறு என்று நினைக்கிறார்கள்.

இன்றைய உணவுப் பழக்க வழக்கங்களாலும், வேலை சூழ்நிலை காரணமாகவும், உடற்பயிற்சி இல்லாத தன்மையாலும் உடல் பருமன் என்பது பலருக்கும் ஏற்படுகிறது. சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் ஆகிய முக்கிய உடல்நல பிரச்சினைகளுக்கு உடல் பருமனே காரணமாக அமைகிறது.

அதிலும் குறிப்பாக பெண்களுக்கு உடல் பருமன் என்பது பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. முக்கியமாக பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சினை ஏற்படுவதற்கு பெரும்பாலும் உடல் பருமனே காரணமாக அமைகிறது.

குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்கள் கேட்கும் கேள்விகள்:-

கருத்தரிப்பு, குழந்தைபேறு விஷயங்களில் உடல் பருமன் எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வி பலரது மனதிலும் உள்ளது. இதுபற்றிய சந்தேகங்களும் பெண்களுக்கு ஏற்படுகிறது. குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்கள் பலரும் சந்தேகங்களை எழுப்பி பல்வேறு கேள்விகளை கேட்கிறார்கள்.

டாக்டர், உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு கருத்தரிப்பதால் சிக்கல்கள் ஏற்படுமா? உடல் பருமனை குறைப்பதற்கான உடற்பயிற்சி எந்த வகையில் பாதுகாப்பானது? உடற்பயிற்சி அதிகமாக செய்தால் கருத்தரிக்க வாய்ப்பு குறைவு என்று சொல்கிறார்களே... இது சரியா? உடல் பருமன் அதிகமாவதால் ஒழுங்கற்ற முறையில் மாதவிடாய் வருமா?

இதுபோன்ற கேள்விகளை சிகிச்சைக்கு வரும் பெண்கள் கேட்கிறார்கள். இது பொது வாகவே எல்லா பெண்களின் மனதிலும் எழக்கூடிய கேள்விதான். எனவே இந்த கேள்விகளுக்கான சந்தேகங்களை பெண்கள் அறிந்து அதனை தீர்த்துக்கொள்வது நல்லது.

இந்த சந்தேகங்கள் உடல் பருமன், கருத்தரிப்பு, மாதவிலக்கு பற்றிய சில விஷயங்கள் தான். அதிலும் குறிப்பாக கருத்தரிக்க முயலும் பெண்கள் தான் இதுபோன்ற கேள்விகளை அதிகம் கேட்கிறார்கள். இதற்கான பதிலை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்கள், கருத்தரிக்கும்போது கண்டிப்பாக சிக்கல்கள் ஏற்படும்.

இதில் 2 விஷயங்கள் உள்ளன. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு கருத்தரிப்பதிலும் பிரச்சினை வரும், கர்ப்ப காலத்திலும் பிரச்சினை வரும். முதலில் அவர்களுக்கு கருத்தரிப்பதில் என்ன பிரச்சினை வரும் என்று பார்ப்போம்.

கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும் ஹார்மோன் மாற்றங்கள்:

உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பாதிப்பு ஏற்படும். இது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். ஏனென்றால் கொழுப்பில் இருந்து வருகிற சில ஹார்மோன்கள் கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும். குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஈஸ்ட்ராடியோல், கொழுப்பில் இருந்து வருகிற மற்றொரு ஹார்மோன் ஆன்ட்ரோஜன் டெஸ்டோஸ்டிரோன் ஆகிய அனைத்துமே கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும் தன்மை கொண்டது.

எனவே இந்த ஹார்மோன்களின் சமநிலையின்மை மாற்றங்கள் காரணமாக பல பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சியில் குறைபாடுகள் ஏற்படும். அதன் மூலம் நாளமில்லா சுரப்பிகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு, ஒழுங்கற்ற முறையில் மாதவிடாய் வரலாம். மேலும் பி.சி.ஓ.டி. எனப்படும் பாலிசிஸ்டிக் கருப்பை பாதிப்பும் வரலாம். இதனால் கருமுட்டைகளின் தரம் குறைவாகலாம்.

எனவே உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக ஹார்மோன் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். முக்கியமாக தைராய்டு பாதிப்பு இருக்கலாம். புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாக இருக்கலாம். ஒழுங்கற்ற மாதவிடாயும் ஏற்படலாம். இதனால் தான் அந்த பெண்கள் உடல் எடையை குறைக்கும்போது அவர்களுக்கு மாதவிலக்கு சரியாக வரும்.

என்னிடம் சிகிச்சைக்கு வரும் நிறைய பெண்கள் சொல்வார்கள், 'டாக்டர் எனக்கு திடீரென்று உடல் எடை அதிகரித்தது. அதன் பிறகு மாதவிலக்கு சீராக வருவதில்லை. பின்னர் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்தேன். அதன்பிறகு மாதவிலக்கு சீராக வருகிறது என்பார்கள்.

எனவே பெண்களின் உடல் எடை கூடுவது கண்டிப்பாக கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கும். அதனால் தான் உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்களுக்கு உடற்பயிற்சி செய்யுங்கள் என்று சொல்கிறோம்.

 

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

பெண்கள் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும்:

சில பெண்கள் உடற்பயிற்சி செய்வது தவறு என்று நினைக்கிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் கண்டிப்பாக எந்தவித பிரச்சினையும் வராது. ஏனென்றால் சில பெண்களிடம் ஒரு தவறான கண்ணோட்டம் இருக்கிறது. இது பொதுவாகவே குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு ஏற்படும் தவறான கருத்தாகும். அதிகமாக உடற்பயிற்சி செய்யும்போது கருத்தரித்தால் கருச்சிதைவு ஏற்படும், கருத்தரிப்பதை அது தடுத்து விடும், கர்ப்பப்பையையும் அது பலகீனப்படுத்திவிடும், கரு உருவாகி கர்ப்பப்பையை ஒட்டி வளராது என்கிற தவறான கருத்துக்கள் இருக்கிறது.

இதில் முக்கியமாக பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும்போது ஹார்மோன் சமநிலையின்மை சீராக்கப்படுகிறது. ஹார்மோன் சமநிலையின்மை சீரானால் கருமுட்டை வளர்ச்சி சரியாகிறது. கருமுட்டை வளர்ச்சி சரியாகும்போது கருத்தரிப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

எனவே உடற்பயிற்சி என்பது பெண்களுக்கு கண்டிப்பாக தேவை. இதில் ஒரே ஒரு விஷயம்தான், அதி தீவிரமாக உடற்பயிற்சி செய்யாதீர்கள். பாடி பில்டிங், ஸ்பிரிண்டிங், அத்லெடிக் உடற்பயிற்சி என்பது போன்ற தீவிர உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியதில்லை. மிதமான வகையில் உடற்பயிற்சி செய்யலாம்.

ஓட்டப்பயிற்சி, நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி செய்யலாம். நல்ல வகையான யோகாசனம் செய்யலாம். பல நேரங்களில் எச்ஐஐடி என்று சொல்கிற ஹை&இன்டன்சிட்டி இன்டர்வல் டிரெய்னிங்கில் சில நிலை பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். இதெல்லாம் மிதமான உடற்பயிற்சிகள் தான். இவை உடல் எடையை குறைப்பதற்கு கண்டிப்பாக நேர்மறையாக பயன்படுகிறது.

இதில் நேர்மறை எப்படி ஏற்படுகிறது என்று பார்த்தால் உடல் எடை குறையும்போது ஹார்மோன் சமநிலையின்மை சரியாகிறது. கொழுப்பு குறையும்போது ஹார்மோன் மாறுபாடுகள் சீராகிறது. ஹார்மோன் சீராகும்போது முட்டை வளர்ச்சியும் சீராகும். இதனால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக மிதமான உடற்பயிற்சியானது அந்த பெண்ணுக்கு ஒருவிதமான மன உற்சாகத்தையும் கொடுக்கிறது. உடல் பருமனாக இருக்கும் நிறைய பெண்கள் மனதளவில் சந்தோசமாக இருக்க மாட்டார்கள். அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்துகொண்டே இருக்கும். உடல் பருமனாக இருப்பதால் இவர்களுக்கு பாலியல் பிரச்சினைகளும் ஏற்படுகிறது. பாலியல் செயலிழப்பும் அதிகமாகிறது.

உடல் பருமனால் பாலியல் உறவில் தாழ்வு மனப்பான்மை:

உடல் பருமனாக இருக்கும் பெண்கள் நிறைய பேருக்கு, பாலியல் உறவின்போது தாழ்வு மனப்பான்மை ஏற்படும். அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையால் அதிகமாக பாலியல் உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள். கருத்தரிப்பதற்கு தாம்பத்திய உறவு சரியாக இருக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால்தான் கருத்தரிக்கின்ற வாய்ப்புகள் ஏற்படும்.

அவர்களுக்கு உடல் பருமனை பற்றிய தாழ்வு மனப்பான்மை இருப்பதால், அவர்களுக்குள் ஒரு எதிர்மறை உணர்வு உருவாகும் நிலையில், கண்டிப்பாக தாம்பத்திய உறவில் பிரச்சினை வரும். அப்படி இருக்கும்போது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவாகும். மேலும் நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்பை ஏற்படுத்துதல், மன அழுத்தத்தை உருவாக்குதல் ஆகியவையும் கருத்தரிப்பதை பாதிக்கும்.

இவை தவிர உடல் பருமனால் பல பெண்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான பாதிப்பு சர்க்கரை வியாதி. ஏனென்றால் கொழுப்பு அதிகமானால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்களுக்கு குளுக்கோஸ் தன்மையில் மாறுபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் வருவதால், பல நேரங்களில் இந்த பெண்களுக்கு கருத்தரிப்பதிலும் பிரச்சினை வரும், ஒருவேளை கருத்தரித்தால்கூட, கரு வளரும்போதும் பிரச்சினை வரும்.

மேலும் சர்க்கரை அதிகமாக இருப்பதால் இந்த பெண்களுக்கு முட்டைகளின் தரம் குறைவாகும். ஏனென்றால் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு ஆகியவை அதிகமாகும்போது, அதில் இருந்து வருகிற சில ரசாயனங்களால் கரு முட்டைகளுக்கான குரோமோசோம்களில் உள்ள இணைப்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு, அதனால் கரு முட்டைகளின் தரம் பாதிக்கப்படும்.

சில பெண்களுக்கு உடல் பருமன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகும். சிலருக்கு இருதய நோய் ஏற்படலாம். மேலும் சில பெண்களுக்கு உடல் பருமன் அதிகமானால் மன அழுத்தம் ஏற்படும். இதுவும் கருமுட்டைகளின் தரம் பாதிக்கப்படுவதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும்.

பெண்கள் கருத்தரிப்பதற்கு இவை எல்லாமே எதிர்மறையாக அமைகிறது. இந்த வகையில் உடற்பயிற்சி செய்வது கண்டிப்பாக கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகமாக்கும். முட்டைகளின் வளர்ச்சியை தூண்டும். உடல், மனதில் நல்ல ஒரு நம்பிக்கையை கொடுக்கும். உடல் எடை குறைவாகும்போது அவர்களுக்குள் ஒரு நேர்மறை சிந்தனை வரும். அவர்களின் தாம்பத்திய உறவில் முன்னேற்றம் ஏற்படும். இதன் மூலமாக கருத்தரிக்கின்ற வாய்ப்புகள் அதிகமாகும்.

அடுத்ததாக உடல் பருமன் காரணமாக கர்ப்ப காலத்தின்போது கருவில் வளரும் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அது என்னென்ன பாதிப்புகள்? உடல் எடை குறைப்பு மூலம் அதற்கு தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

Tags:    

Similar News