சிறப்புக் கட்டுரைகள்

படிக்காசுப் புலவரை பரவசப்படுத்திய முருகர்!

Published On 2025-08-19 12:50 IST   |   Update On 2025-08-19 12:50:00 IST
  • ஒவ்வொரு நாளும் முருகவேளை வழிபட்டு வந்தவர்.
  • பாடல்களையும் வாக்குகளையும் மக்கள் தெய்வ வாக்காக கருதி வரவேற்றனர்.

திருச்செந்தூர் முருகன் தன்னை புகழ்ந்து பாட புலவரை வரவழைக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. எத்தனையோ புலவர்கள் திருச்செந்தூர் தலத்துக்கு வந்து கருவறை முருகனை பார்த்து, வியந்து, மனம் குளிர்ந்து தங்களையே மறந்து பாடி உள்ளனர். அவையெல்லாம் வரலாற்று குறிப்புகளாக உள்ளன.

அப்படி திருச்செந்தூர் முருகனால் ஆட்கொள்ளப்பட்ட புலவர்களில் ஒருவர் படிக்காசுப் புலவர். ஆதிகாலத்தில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்ட தமிழகத்தின் வட பகுதியில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் பொன்விளைந்த களத்தூர் என்ற ஊரில் பிறந்தார். ஆதிகாலத்தில் இந்த ஊர் பொற்களந்தை என்று அழைக்கப்பட்டது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவர் திருவாரூர் வைத்தியநாத நாவலரிடம் இலக்கண இலக்கியம் கற்று தமிழில் மிகச்சிறந்த புலமை மிக்கவராக மாறினார். அவர் இயற்றிய "தொண்டை மண்டல சதகம்" மற்றும் "தண்டலையார் சதகம்" ஆகிய நூல்கள் மிகவும் புகழ் பெற்றவை.

இளம் வயதில் இவர் ஊர் ஊராக போய் ஆலயங்களை தொழுவதை வழக்கத்தில் வைத்திருந்தார். அதோடு கிராம மக்களுக்கு நல்வழி காட்டி அறிவுரை சொல்லும் வழக்கத்தையும் வைத்திருந்தார். சிலர் ஏற்றுக் கொண்டனர். பெரும்பாலானவர்கள் அவரை கிண்டல் செய்தனர். என்றாலும் படிக்காசுப் புலவர் மனம் தளர்ந்தது இல்லை.

"ஒளி வீசும் விளக்கை அணைத்து விட்டு இவர்கள் வெளிச்சத்தை தேடி அலைகிறார்கள்" என்று பதில் அளித்து விட்டு அடுத்த ஊருக்கு சென்று விடுவார். அப்படி ஊர் ஊராக சென்ற அவர் ஒருமுறை சிதம்பரத்துக்கு சென்றார். அங்கு தில்லைவாழ் சிதம்பரனே என்று மனமுருகி பாடல்கள் பாடி நடராஜர் பெருமானிடம் தனது மனக் குறைகளை வெளியிட்டார்.

அப்போது அருகில் இருந்த அன்னை சிவகாம சுந்தரியிடமும் தனது ஏழ்மை நிலையை சொல்லி வருந்தி வேண்டுகோள் விடுத்தார். முருகருக்கு வேல் கொடுத்தாய். திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தாய். மன்மதனுக்கு செங்கோல் கொடுத்தாய். ஆனால் எனக்கு மட்டும் எதுவும் தரவில்லையே ஏன்? என்று உரிமையோடு அன்னையிடம் பாடல்களில் கேள்வி கேட்டார்.

 

அவர் பாடி முடித்த அடுத்த நிமிடம் சிதம்பரம் பஞ்சாட்சரப் படிகளில் 5 தங்க காசுகளை அன்னை சிவகாம சுந்தரி எடுத்து போட்டாள். இதை கண்டதும் புலவர் உள்பட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இந்த நிகழ்வுக்கு பிறகுதான் அவருக்கு படிகாசுப் புலவர் என்ற பெயர் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் தமிழகத்தில் உள்ள மற்ற தலங்களுக்கும் யாத்திரை சென்றார். அங்குள்ள மக்களுக்கு தனது அருட்கவியால் மகிழ்ச்சி அடைய செய்தார். அவரது பாடல்களையும் வாக்குகளையும் மக்கள் தெய்வ வாக்காக கருதி வரவேற்றனர்.

இவரது சிறப்பை உணர்ந்த சீதக்காதி வள்ளல் இவருக்கு பொன்னும், பொருளும் கொடுத்து ஆதரித்தார் என்று வரலாற்று நூல்களில் குறிப்புகள் உள்ளன. ராமநாதபுரம் ரகுநாத சேதுபதி மன்னரும் படிக்காசுப் புலவரை சிறிது நாட்கள் தனது பராமரிப்பில் வைத்திருந்தார்.

அதன் பிறகு அங்கிருந்து விடைபெற்று திருச்செந்தூருக்கு சென்றார். திருச்செந்தூர் ஆலயத்தில் முருகப்பெருமான் கருவறை முன்பு நின்று மனமுருக பாடினார். அந்த பாடல்கள் மிகவும் பிரபலமானவையாக மாறின. முருகப்பெருமான் மீது அவர் வைத்திருந்த பக்தியை வெளிப்படுத்தும் வகையில் அந்த பாடல்கள் அமைந்தன.

அது மட்டுமின்றி திருச்செந்தூர் முருகனின் சிறப்பையும் திருச்செந்தூர் தலத்தின் பெருமையையும் பிரதிபலிக்கும் வகையில் படிக்காசுப் புலவரின் பாடல்கள் அமைந்தன. அந்த பாடல்கள் விவரம் வருமாறு:-

இன்னமும் சின்னவனா?

முன்ன நின் அன்னை முலை ஊட்டி இமை இட்டு மூக்குச் சிந்திக்

கன்னமும் கிள்ளிய நாள் அல்லவே என்னைக் காப்பதற்கே

அன்னையும் அஞ்ஞையும் போல் இரு பெண் கொண்ட ஆண் பிள்ளை நீ

இன்னமும் சின்னவன் தானோ செந்தூரில் இருப்பவனே - 12

திருச்செந்தூர் முருகா! தாய் முலைப்பால் ஊட்டி, கண்ணுக்கு மை இட்டு, மூக்கில் ஒழுகும் சளியைச் சிந்தி, கன்னத்தைக் கிள்ளி, அந்த நாளில் உன்னை வளர்த்தாளே அந்த நாளிலா நீ இன்னும் இருக்கிறாய்? தாய் போலவும் மனைவி போலவும் இரண்டு பெண்களை வைத்துக் கொண்டிருக்கும் ஆண்பிள்ளை அல்லவா நீ. என்னைக் காப்பாற்றக் கடமைப்பட்டவன். என்னோடு விளையாடுவதற்கு இன்னமும் நீ சின்னப்பிள்ளை தானா?

செந்தூர் தானத்திலே

முற்கரை அப்பரை ஏற விட்டு ஆட்கொள் முதல்வர் உள்ளக்

கற் கரைக்கும்படி போதித்திடும் கருணைக் கடலைச்

சிற்பரைக் குட்டியை எங்கெங்கும் தித்திக்கும் செங்கரும்பின்

சர்க்கரைக் கட்டியைக் கண்டேன் செந்தூர் எனும் தானத்திலே - 13

கல்லைக் கட்டிக் கடலில் போட்ட அப்பரைக் கரையேற்றி ஆட்கொண்ட முதல்வன் சிவனுக்குக் கல்லைக் கரைக்கும்படி பாடம் போதிக்கும் கருணைக்கடலை, சிதம்பரச் செல்வியின் குட்டியை, எந்த இடத்தில் சுவைத்தாலும் தித்திக்கும் செங்கரும்பின் சர்க்கரைக் கட்டியை, திருச்செந்தூர் தலத்தில் கண்டேன்.

குறத்திக்கு மாப்பிள்ளை

சின்னஞ்சிறு பிள்ளை செங்கோட்டுப் பிள்ளை சிவந்த பிள்ளை

பொன்னன் மணிப்பிள்ளை பூலோகம் எங்கும் புகழும் பிள்ளை

சொல் நெஞ்சு சுழல்கின்ற சூரனை வென்ற சொக்கேசர் பிள்ளை

வன்னக் கிளிப்பிள்ளை செந்தில் குறத்திக்கு மாப்பிள்ளையே - 14

செந்தில் முருகன் இன்னும் சின்னஞ்சிறு பிள்ளை. திருச்செங்கோட்டுப் பிள்ளை. சிவந்த நிறம் கொண்ட பிள்ளை. பொன் நிறம் கொண்ட சிவனின் பிள்ளை. நிலவுலகம் எல்லாம் புகழும் பிள்ளை. சூரனை வென்ற பிள்ளை. மதுரைச் சொக்கேசர் பிள்ளை. வன்னக்கிளி போன்ற பிள்ளை. குறமகள் வள்ளிக்கு மாப்பிள்ளை.

செந்திலானோ 19

கல்லடிக்கும் முனி இரண்டு காதடிக்குள் அடிப்பதெனக் கவிதை கேட்டுப்

பல்லடிக்கக் கிடுகிடென பறையடிக்கும் நெஞ்சர் தமைப் பாடுவேனோ

வில்லடிக்கும் பிரம்படிக்கும் கல்லடிக்கும் விரும்பி நின்ற மெய்யன் ஈன்ற

செல்லடிக்கும் தடவரையில் சேறடிக்க வலை அடிக்கும் செந்திலானே-19

அருச்சுனன் வில்லடியையும், பாண்டியன் பிரம்படியையும், சாக்கிய நாயனார் கல்லால் அடித்ததையும் விரும்பித் தன் உடம்பில் வாங்கிக் கொண்டு நின்ற சிவனின் செல்லூர் மலையில் கடலலையின் சேறு படும்படி அலை வீசும் செந்தில் நகர் முருகனே! கல்லால் அடிக்கும் இரண்டு முனிகள் காதுக்குள் அடிப்பது போல் பாடும் கவிதையைக் கேட்டுக் கிடு கிடு என்று பல் அடிக்கும்படி நடுங்கி, பறையொலி போல் பட படக்கும் நெஞ்சத்தவரைப் பாடுவேனோ? (என் கவிதையைக் கேட்கவே நடுங்குவோரை நான் பாடுவேனா?)

இவ்வாறு பாடிய படிக் காசுப் புலவர் மேலும் சில பாடல்களை திருச்செந்தூர் முருகனை புகழ்ந்து பாடியுள்ளார். அவர் திருச்செந்தூர் முருகனை கண் கண்ட தெய்வமாகவும் கலியுக வரதனாகவும் போற்றினார்.

ஒவ்வொரு நாளும் முருகவேளை வழிபட்டு வந்தவர். வறுமை போக்கி வாழ்வளிக்க வேணும் ; துயரம் துடைத்து தூய உள்ளம் அருள வேணும்' என்றெல்லாம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்; அதே நிலையில் முருக வேளைச் சின்னஞ் சிறு பிள்ளையாகவும் கருதி வழிபட்டிருக்கிறார்.

திருச்செந்தூர்க் கோவிலுக்கு வந்து, ஆறுமுகப் பெருமான் வேல் கொண்ட கையும், வீரம் செறிந்த தோளுமாய்க் காட்சியளிப்பதைக் கண்ணுற்றதும், 'நீயா சின்னப் பிள்ளை? இன்னமுமா சிறு பிள்ளை? வீரத்திருக்கோலத்துடன் மணவாளக் கோலமும் வாய்த்திருக்கிறதே ! என்னைக் காப்பாற்றக் கூடாதா? என் துயரங்களை ஏற்கெனவே போக்கி இருக்கக் கூடாதா?' என்றெல்லாம் உணர்ச்சிப் பிரளயமாய் இருக்கும் தம் நெஞ்சப் பளிங்கில் வைத்துக் காட்டுவது போல் பாட்டில் புலப்படுத்துகிறார்.

இத்தகைய புலவர்களின் தொடர்ச்சியான பரம்பரை திருச்செந்தூரைச் 'செந்தமிழ் மணக்கும் செந்தில்' ஆகப் பாதுகாத்து வந்திருக்கிறது.

திருச்செந்தூரில் முருகனை மனம் குளிர தரிசித்த பிறகு அவர் தருமபுரம் ஆதீனத்துக்கு சென்றார். அங்கு சில காலம் தங்கி இருந்தார். அப்போது வெள்ளை உடை அணிந்து தருமபுரம் ஆதீனத்திடம் ஞான உபதேசம் பெற்றார். இதனால் அன்று முதல் படிக்காசுப் புலவர் பெயர் மாறி படிக்காசு தம்பிரான் என்று அழைக்கப் பட்டார்.

அவர் சன்னியாசம் பெற்றதால் அவரது வாழ்க்கை முறையும் மாறியது. அவரை தருமபுரம் ஆதீனம் மட தலைவர் புள்ளிருக்குவேளூர் என்று பெயர் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார். அதன் பேரில் அங்கு சென்று தருமபுரம் ஆதீன பணிகளை செய்து வந்தார்.

அப்போது 'வேளூர்க்கலம்பகம்' எனும் கலம்பகம் நூலை இயற்றினார். அதை அந்த ஆலயத்தில் அரங்கேற்றம் செய்தார். சிறிது நாட்கள் கழித்து அவருக்கு சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்து அங்கு இறுதி காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதனால் வைத்தீஸ்வரன் கோவில் பணிகளை ஒப்படைத்து விட்டு சிதம்பரத்துக்கு பயணம் ஆனார். அங்கு தங்கி இருந்து நடராஜரை தினமும் வழிபட்டு வந்தார். இறுதி நாள் வரை அங்கேயே வாழ்ந்தார். சிதம்பரத்தில் அவர் முக்தி பெற்றதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.

தொண்டை மண்டலத்தில் பிறந்த படிக்காசுப் புலவரை திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆட்கொண்டு தனது சன்னதிக்கு அழைத்து பாட வைத்து சிறப்பித்தது இன்றும் வரலாற்று குறிப்புகளில் பெருமையாக இடம் பிடித்துள்ளது. இதே போன்று எத்தனையோ புலவர்களை திருச்செந்தூர் முருகப்பெருமான் ஆட்கொண்டுள்ளார். அத்தகைய அற்புதம் ஒன்றை அடுத்த வாரமும் காணலாம்.

Tags:    

Similar News