சிறப்புக் கட்டுரைகள்

ராகு-கேது மேட்டின் ரேகை குறியீடு பலன்கள்

Published On 2025-08-16 16:45 IST   |   Update On 2025-08-16 16:46:00 IST
  • ராகு/ கேது மேடுகளில் புள்ளி காணப்பட்டால் எப்போதுமே வெற்றி அடைய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.
  • மத்தியில் பிரம்மன் வாசம் செய்வதாக ஐதீகம்.

புதன், சூரியன், சனி, குரு ஆகிய மேடுகளின் கீழ்... மற்றும் கீழ் செவ்வாய் - மேல் செவ்வாய் மேட்டிற்கு இடையே...சந்திர மேட்டிற்கும், சுக்கிர மேட்டிற்கும் மேலே அதாவது உள்ளங்கையின் மத்தியை இரு சிறு பகுதிகளாகப் பிரித்து மேற்பகுதியை கேது மேடாகவும், கீழ் பகுதியை ராகு மேடாகவும் கொடுத்து உள்ளனர். மத்தியில் பிரம்மன் வாசம் செய்வதாக ஐதீகம். இதுவே ராகு/ கேது மேடுகள் ஆகும். இதில் எந்தெந்த குறியீடுகள் இருந்தால் எந்தெந்த விதமான பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

ராகு/ கேது மேடுகளில் ஒரே ஒரு கோடு மட்டும் காணப்பட்டால் அவர்கள் வீரம், சாகஸம் போன்ற இயல்புகளைக் கொண்டு இருப்பார்கள். எதிர்பாராத வகையில் பொருள் ஈட்டி வாழ்வில் வளர்ச்சி பெறுவீர்கள். வாழ்வின் பிற்பகுதியில் நிலம், வீடு என அனைத்து வித சொத்துக்களுடன் இருப்பீர்கள். சொந்தங்களுடன் கூடி வாழும் பாக்கியம் உண்டு.

அதுவே பல கோடுகள் காணப்படுமாயின் அவர்களுக்கு கலைகளில் அதீத ஈடுபாடு இருக்கும். அதிக கோப குணம் கொண்டவர்கள். கோபத்தை மட்டும் நீங்கள் குறைத்துக் கொண்டால் உங்களை போல நல்லவர்கள் என்று இந்த உலகத்தில் யாரும் இல்லை எனலாம். மற்றபடி, உங்கள் வாழ்க்கையில் மேடு, பள்ளங்கள் பலவற்றை சந்தித்தாலும் இறுதியில் ஒரு நல்ல நிலையை அடைவீர்கள்.

ராகு/ கேது மேடுகளில் புள்ளி காணப்பட்டால் எப்போதுமே வெற்றி அடைய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். கூர்மையான புத்தியையும், தரும சிந்தனையையும் கொண்டு இருப்பீர்கள். சொத்துக்களை விருத்தி செய்யும் குணத்துடன் இருப்பீர்கள். உங்கள் காலத்திற்குப் பிறகு கூட உங்கள் சந்ததியால் நீங்கள் அதிகம் நினைக்கப்படுவீர்கள்.

ராகு/ கேது மேடுகளில் நட்சத்திரம் காணப்பட்டால் சாதனைகள் பல செய்து பெயர் எடுப்பார்கள். எதிர்காலத்தில் எண்ணற்ற சாதனைகளை படைப்பீர்கள். எனினும் உங்கள் வாழ்நாளில் வருமானத்தை விட செலவு அதிகம் இருக்கும். எதிர்காலத்தில் உங்களுக்கு ஞாபக சக்தி குறைய வாய்ப்பு உண்டு.

ராகு/ கேது மேடுகளில் சதுரம் காணப்பட்டால் ஆபத்துக்களை கூட எளிதாக சமாளித்து வெற்றி பெறும் இயல்பு ஏற்படும். விபத்துக்களையும், ஆபத்துக்களையும் சமாளிக்கும் இயல்பு உங்களிடம் அடிப்படையிலேயே இருக்கும். உங்களது சொந்தங்கள் நண்பர்கள் கூட அடிக்கடி அவிப்பிராய பேதத்துடன் நடந்து கொள்ளலாம். எதிர்காலத்தில் சொந்தங்களை விட்டு நீங்கள் தனித்துத் தான் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையின் முற்பகுதியில் நிறைய வேலை மாற்றங்களை சந்திக்க நேரிடலாம். ஜீவனத்தை சமாளித்து நடத்துவீர்கள். எனினும் பிற்பகுதியில் யோகமுடன் திகழ்வீர்கள்

 

ராகு/ கேது மேடுகளில் முக்கோணம் காணப்பட்டால் பல்வேறு வகைகளில் பொருள் ஈட்டுவார்கள். சமூகத்தில் கூட அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். பிறரை வசீகரிக்கும் குணம் உங்களிடம் காணப்படலாம். உங்களுக்கு, மனைவி அல்லது பெண் வழியில் சொத்துக்கள் கிடைக்கப்பெறலாம்.புண்ணிய காரியங்களில் உங்களுக்கு பற்றுதல் இருக்கும். அயர்ச்சியை பார்க்காமல் உழைக்கக் கூடியவர்கள் நீங்கள். அதனால் பிற்காலத்தில் நிறைய தனம் சம்பாதிப்பீர்கள்.

ராகு/ கேது மேடுகளில் வட்டம் காணப்பட்டால் பாதுகாப்பு சார்ந்த துறைகள் அல்லது காவல் துறையில் உயர் பதவி கிடைக்கப்பெறும்.நீங்கள் எதிர்காலத்தில் புகழுடன் இருப்பீர்கள், மேலும், நீங்கள் வாழ்வில் பல நல்ல திட்டங்களை வகுத்து அவற்றை பின்பற்றி நல்ல படியாக வெற்றி அடைவீர்கள்.முற்பகுதியை விட பிற்பகுதியில் நீங்கள் அதிக முன்னேற்றத்தை அடைவீர்கள்.

ராகு/ கேது மேடுகளில் வலை காணப்பட்டால் கோபத்திலும், அவசரத்திலும் தவறுகள் செய்யும் குணம் காணப்படும். மேலும், உங்களிடம் எதிர்மறை எண்ணங்கள் அதிகம் இருக்கும். அவற்றை விட்டொழித்தால் நீங்கள் வாழ்வில் சகல முன்னேற்றங்களையும் அடைவீர்கள். கலைகளில் ஊக்கம் இருக்கும். உங்கள் பேச்சினால் உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்ள இடம் உண்டு. அதனால் கவனமாகப் பேசவும்.

ராகு/ கேது மேடுகளில் பெருக்கல் குறி காணப்பட்டால் வாழ்வில் நிறைய ஏமாற்றமும், அவமானங்களும் ஏற்பட இடம் உண்டு. உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கலாம். நீங்கள் தாராள மனது உடையவர்களாக இருப்பீர்கள், பேச்சில் மட்டும் நிதானத்துடன் இருங்கள். அவ்வாறு இருந்தீர்கள் என்றால் உங்கள் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். உங்கள் வாழ்வில் வரவும், செலவும் உடனுக்குடன் நேரிட்டாலும் கூட பிற்காலத்தில் நீங்கள் யோகமுடன் இருப்பீர்கள்.

ராகு/ கேது மேடுகளில் சூரியனின் சின்னம் காணப்பட்டால் அதிக பலவீனத்துடன் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களிடம் தாழ்வு மனப்பான்மை அதிகம் இருக்கும். எல்லோரும் ஒரு வழியில் சென்றால் நீங்கள் உங்களுக்கு என்று ஒரு தனி வழியை வகுத்து செல்வீர்கள். எனினும், உங்கள் முயற்சியால் எதிர்காலத்தில் செல்வம், செல்வாக்குடன் இருப்பீர்கள்.

ராகு/ கேது மேடுகளில் செவ்வாயின் சின்னம் காணப்பட்டால் அசையா சொத்துக்கள் சேர்ப்பதில் அதிக ஈடுபாடு இருக்கும்.. புண்ணிய காரியங்களில் உங்களுக்கு பற்றுதல் இருக்கும். அயர்ச்சியை பார்க்காமல் உழைக்கக் கூடியவர்கள் நீங்கள். எதிர்காலத்தில் மாளிகை போன்ற வீட்டில் நீங்கள் வாசம் செய்யும் பாக்கியம் கிடைக்கப்பெறும்.

ராகு/ கேது மேடுகளில் புதனின் சின்னம் காணப்பட்டால் எதிலும் போதும் என்ற மனம் இருக்காது.. சுக வாழ்வில் இவர்களுக்கு நாட்டம் அதிகமாக இருக்கும். பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் இருக்கும். எனினும் நீங்கள் கொஞ்சம் குழப்பவாதிகள் தான். ஆனாலும் கூட வாழ்வின் முற்பகுதியை காட்டிலும் பிற்பகுதியில் செல்வ செழிப்புடன் நீங்கள் இருப்பீர்கள்.

அ.ச.இராமராஜன்

 

ராகு/ கேது மேடுகளில் குரு பகவானின் சின்னம் காணப்பட்டால் இறை நம்பிக்கை இருந்தாலும் கூட எதையும் பகுத்தறியும் குணம் இருக்கும். வீடு, நிலம், புலம் வாங்கும் பாக்கியம் உண்டு. புத்திர வழியில் ஆதரவு உண்டு. பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை உங்களிடம் இருக்கும். மற்றவர்களின் மனதை கவரும் குணங்களுடன் இருப்பீர்கள். மனைவி அல்லது பெண் வழியில் சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கப்பெறலாம்..

ராகு/ கேது மேடுகளில் சுக்கிரனின் சின்னம் காணப்பட்டால் சரீர சுகங்களில் அளவு கடந்த ஈடுபாடு இருக்கும்.பெண்கள் விஷயங்களில் சற்று கவனம் தேவை.

ராகு/ கேது மேடுகளில் சனியின் சின்னம் காணப்பட்டால் பிறரை ஏமாற்றும் தன்மை இருக்கும். குறுக்கு வழியில் பொருள் ஈட்டும் இயல்பும் கூட காணப்படும்.தந்திர சிந்தனைகளை கொண்டு இருப்பீர்கள், பண விஷயத்தில் அதிக சுயநலத்துடன் இருக்க வாய்ப்பு உண்டு. மற்றபடி பிற்காலத்தில் நீங்கள் செல்வ செழிப்புடன் இருப்பீர்கள்.

ராகு/ கேது மேடுகளில் ராகுவின் சின்னம் காணப்பட்டால். நீங்கள் அதிகம் உழைக்கக் கூடியவர்கள். நேரத்திற்கு உண்டு உறங்க முடியாத நிலையை வாழ்க்கையில் அடிக்கடி சந்திப்பீர்கள். உங்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட இடம் உண்டு. அதனால் உடல் நலத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்துங்கள்.சில சருமப் பிரச்சனைகளை எதிர்காலத்தில் நீங்கள் சந்திக்க நேரிடலாம். என்றாலும் கூட எதிர்காலத்தில் நல்ல செல்வத்துடன் நீங்கள் இருப்பீர்கள்.

ராகு/ கேது மேடுகளில் கேதுவின் சின்னம் காணப்பட்டால் தவறான சிந்தனையும் அதனால் ஏமாற்றங்களும் காணப்படும். அடிக்கடி உங்கள் மனம் தேவை இல்லாமல் குழப்பம் அடைய இடம் உண்டு. குறிப்பாக ஆரோக்கிய ரீதியாக நீங்கள் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எதிர்காலத்தில் சமூகத்தினரால் மதிக்கப்பட்டு செல்வத்துடன் இருப்பீர்கள். ராகு மேட்டுக்கும் கேது மேட்டுக்கும் ஓரே மாதிரியான சின்னத்திற்கு பலன்கள் தான் ராகு மேட்டில் சூரியன் இருந்தால் என்ன பலன்களோ அதேதான் கேது மேட்டில் இருந்தாலும்.

செல்பேசி 9965799409

Tags:    

Similar News