சிறப்புக் கட்டுரைகள்

மன்னிப்புக் கேட்பதும்! மன்னிப்பதும்!!

Published On 2025-07-13 12:15 IST   |   Update On 2025-07-13 12:15:00 IST
  • சொற்களால் காயப்படுத்திய செயலுக்கு மன்னிப்பே கிடையாது என்றுதான் பொருள்.
  • மன்னிப்புக் கேட்பதால் கேட்பவர் தாழ்ந்தவர் என்றோ மன்னிப்பு வழங்குவதால் வழங்குபவர் உயர்ந்த மனிதர் என்றோ அர்த்தமில்லை.

'தவறு செய்துவிட்டால், மன்னிப்புக் கேட்பது மனிதனின் குணம்! மன்னிப்பது மாமனிதனின் குணம்!' என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடைய அன்பு வாசகப் பெருமக்களே! வணக்கம்.

உலக மனிதர் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் கோபமின்றி, ஒருவருக்கொருவர் பரபரப்பும் பதற்றமுமின்றி, ஒருவரையொருவர் குறைப்பட்டுக் கொள்ளாமலும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொள்ளாமலும் நிம்மதியாகவும் அமைதியாகவும் அன்பு மயமாகவும் வாழ்வதற்கு அடிப்படை மூலமந்திரமாகத் திகழ்வது 'மன்னிப்பு' என்கிற செயல்மட்டுமே ஆகும்.

'மன்னிப்பு' என்பது ஒருவர் மீது உருவாகும் தேவையற்ற கசப்புணர்வுகளுக்கும், தேவையற்ற எரிச்சலுக்கும் கோபத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது. நாம் செய்யும் ஒரு செயலாலோ அல்லது நாம் சொல்லும் ஒரு சொல்லாலோ அடுத்தவர் துன்பப்பட நேரிடும் என்கிற நிலை வந்துவிட்டால் அங்கே மன்னிப்புக் கேட்பது அவசியமாகிறது.

மன்னிப்புக் கேட்பதன்மூலம் காயப்படுத்தியவர் வேண்டுமானால் சமாதானம் அடையலாம்; ஆனால் காயப்பட்டவர், காயப்படுத்தியவர் கேட்ட மன்னிப்பை வழங்கினாலும் வழங்காவிட்டாலும் அந்த ரணம் ஆறி மறைவதற்குப் பல காலம் ஆகலாம். அதிலும் செயலால் காயப்படுத்தியதைவிடச், சொல்லால் காயப்படுத்தினால் அந்தப் புண் ஆறவே ஆறாது என்கிறார் திருவள்ளுவர்.

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு"

அப்படிப் பார்க்கும்போது சொற்களால் காயப்படுத்திய செயலுக்கு மன்னிப்பே கிடையாது என்றுதான் பொருள். ஆயினும் அத்தருணங்களிலும் மன்னித்து மறக்கின்ற பெருமைக்குரிய மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மன்னிப்புக் கேட்பதால் கேட்பவர் தாழ்ந்தவர் என்றோ மன்னிப்பு வழங்குவதால் வழங்குபவர் உயர்ந்த மனிதர் என்றோ அர்த்தமில்லை. வீணான பழிவாங்கும் எண்ணம், வீணான மனக்கசப்பு, இருபக்கமும் உருவாகி வளரும் அமைதியற்ற மனப்போக்கு, இவற்றால் வளரும் எதிர்மறை எண்ணங்கள் இவையனைத்தும் மன்னிப்பு என்கிற சொல்லிலும் செயலிலும் மாயமாகிப் போகின்றன.

சுந்தர ஆவுடையப்பன்

 

இப்போதெல்லாம் அறிமுகம் இல்லாத மனிதரிடம் அறிமுகம் ஆகும்போதே, 'தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்! அந்த இடத்திற்கு எப்படிப் போகவேண்டும்?" என்றுதான் உரையாடலைத் தொடங்குகிறார்கள். பெயரைத் தெரிந்துகொள்ள விரும்பினாலும்கூட, ' மன்னித்துக் கொள்ளுங்கள்! உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?' என்றுதான் பேச்சை ஆரம்பிக்கிறார்கள். வழி சொல்வதும் பெயர் சொல்வதும் அவருக்குச் சங்கடமாக இருக்கும் பட்சத்தில், அந்தத் தொந்தரவிற்கு முன்கூட்டியே மன்னிப்புக் கேட்டுவிடுகிற புதுமையான பழக்கம் இது.

தவறு செய்துவிட்டுக், கைதாகி விடுவோமோ என்கிற எதிர்பார்ப்பில் 'முன் ஜாமீன்' வாங்கி வைப்பதைப் போல 'எக்ஸ்கியூஸ் மீ' என்கிற மன்னிப்புக் கேட்கிற ஆங்கிலச் சொல்லை முன்கூட்டியே போட்டு எந்தப் பேச்சையும் தொடங்குகிற முறை. இதுவும் ஒரு நாகரீக முறைதான்; ஆனாலும் பல நேரங்களில் இது அபத்தப் பயன்பாடாகவும் போய் விடுகிறது. கோபப்படும்போதும், எரிச்சலடையும் போதும், ஆச்சரியப்படும்போதும், கெஞ்சிக் கேட்கும்போதும்கூட 'எக்ஸ்க்யூஸ் மீ" என்பதை உண்மை அர்த்தமில்லாமல், சூழலுக்கேற்ற உணர்ச்சிப் பெருக்குடன் பயன்படுத்தும் போது நகைப்புக்கு இடமாகி விடுகிறது.

பேருந்து நடத்துநரிடம், மீதிச் சில்லரையைப் பல தடவை கேட்டபிறகு, எத்தனை முறைதான் கேட்பது? 'ஹலோ! எக்ஸ்கியூஸ் மீ' என எரிச்சலோடு கேட்கும்போதும், வரிசையில் வராமல் முந்திச் செல்ல முயல்பவரை, 'ஹலோ! எக்ஸ்கியூஸ் மீ' என்று எச்சரிக்கும் தொனியில் ஆள்காட்டி விரலைக்காட்டி, வரிசையில் வரச் சொல்லும்போதும், 'ஹலோ! எக்ஸ்கியூஸ் மீ'! டீ சாப்பிடப் பத்துரூபாய் கிடைக்குமா?' எனப் பிச்சை எடுக்கும்போதும், அர்த்தங்கள் மன்னிப்புக் கேட்கும் தொனியைத் தாண்டி, மற்ற பிற உணர்வுகளைப் பீறிட வைத்து விடுகின்றன.

மனிதர் யாரும் இவ்வுலகில் தனியர் இல்லை. அவர்கள் இந்த உலகில் தோன்றி வாழத் தொடங்கிய உடனே சமூக மனிதர் ஆகிவிடுகின்றனர். மனிதர்கள் எந்த வகையிலாவது சக மனிதர்களைச் சார்ந்து, அல்லது இயற்கையோடு இயைந்து, கொண்டும் கொடுத்தும் வாழவேண்டிய கட்டாயம். அப்படியானால் வாழ்க்கையின் போக்கில், பலதிறப்பட்ட மனிதர்களைச் சந்திக்கவும், அவர்களோடு இணைந்தோ அல்லது மாறுபட்டோ வாழவும் வேண்டிய கட்டாயம் மனிதனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. வாழ்க்கையும் எந்த நேரமும் இன்பமயமானதாகவே அமைந்து விடுவதில்லை; அழவும் சிரிக்கவும் இரக்கப்படவும், அச்சப்படவும், ஆச்சரியப்படவும், கோபப்படவும், சந்தோஷப்படவும் எனப் பல்வேறு உணர்ச்சிநிலைகளை அழுந்தி அனுபவிக்க வேண்டிய தருணங்களும் அவ்வப்போது ஏற்படும்.

மனிதனுக்கு எப்போதும் சகமனிதர்களால் உதவிமட்டுமே கிடைப்பதில்லை; அவ்வப்போது உபத்திரவங்களும் தாராளமாகவே கிடைக்கக் கூடும் . அந்த உபத்திரவங்களை உருவாக்கியவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்பதும், பாதிக்கப்பட்டவர்கள் பெரிய மனது வைத்து மன்னித்துவிடுவதும், இரு தரப்பினருக்குமே நீண்ட மன அமைதியையும் நிம்மதியையும் உருவாக்கும். பிளவுபட இருந்த உறவு அல்லது நட்புச் சங்கிலி அறுபடாமல் நிலைத்திருக்கும்.

நம்மைச் சார்ந்திருக்கும் ஒருவர் நம்மால் கடுகளவுத் தொந்தரவுக்கும் ஆளாகக் கூடாது என்று நினைப்பது சரியான உறவுநேயம்; அதே நேரத்தில், நம்மைச் சார்ந்தவராக இல்லாவிட்டாலும், நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஒவ்வொரு உயிரினமும் நம்மால் எந்தவிதத் துன்பத்திற்கும் ஆளாகிவிடக் கூடாது என நடந்துகொள்வது ஆழ்ந்த மனித நேயம். 'மன்னிப்பு' என்னும் மாபெரும் கோட்பாடுதான் இந்த ஆழ்ந்திருக்கும் மனித நேயத்தை பூமியில் வெளிக்கொணரும் மகத்தான வேலையை மாண்புடன் செய்கிறது.

ஒரு சீடர், தன்னுடைய குருநாதரின் ஆசிரமத்திலிருக்கும் குருநாதர் அறைக்குள் வெகு கோபமாகவும் வெகு பதற்றமாகவும் உள்ளே நுழைந்தார்; மின்னல் வேகம்! இடி வேகம்! என்பார்களே, அறைக்குள் நுழையும்போதே காலில் அணிந்திருந்த செருப்புகளை வடக்கும் தெற்குமாகக் காலால் விசிறியெறிந்தார்; கதவுகளைப் படாரெனத் திறந்து படீரென மூடிவிட்டு உள்ளே வந்தார். உள்ளே அறையில் அமைதியாக அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குருநாதர் சீடரை அருகே அழைத்து, "ஏனிந்தப் பதற்றம்? ஏனிந்தக் கோபம்?" என்று கேட்டார். "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை குருநாதரே!" என்றார் சீடர்.

"அப்படியானால், முதலில் அறைக்கு வெளியே சென்று, திசைக்கு ஒன்றாக நீ கழற்றியெறிந்த செருப்புகளை ஒன்றாகச் சேர்த்து எடுத்துவந்து என் கண்முன்னே ஜோடியாக வைத்து அவற்றிடம் மன்னிப்புக்கேள்!" என்றார் ."செருப்பிடம் மன்னிப்பா?" ஆச்சரியமாகக் கேட்டார் சீடர். "ஆம்!. முதலில் செருப்பிடம்!, அடுத்து நீ படாரெனத் திறந்து படீரென மூடிவிட்டு வந்தாயே கதவுகள்! அவற்றிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றார் குருநாதர்.

"செருப்புக்கும் கதவுக்கும் உயிரில்லையே! உயிரற்ற ஜடப்பொருள்களிடமா மன்னிப்புக் கேட்பது?; நான் மன்னிப்புக் கேட்பதால் அவற்றிற்கு என்ன நன்மை வந்துவிடப் போகிறது?" கேட்டார் சீடர். இனிமேல் எதிர்க்கேள்வி தேவையில்லை; குருநாதர் நான் சொல்வதை முதலில் செய்!" ஆணையிட்டார் குருநாதர். மிகுந்த பணிவோடு, தன்னுடைய செருப்பிடமும், தான் தள்ளிவிட்டு வந்த கதவிடமும் மன்னிப்புக் கேட்டார் சீடர். மன்னிப்புக் கேட்டுவிட்டு குருநாதரைப் பார்த்தார்.

" இப்போது எப்படி இருக்கிறது?" கேட்டார் குருநாதர். "மனம் பாரம் குறைந்ததுபோல இலகுவாக இருக்கிறது குருநாதா!" என்று அமைதியாகப் பதிலிறுத்தார் சீடர். "உயிரற்ற பொருள்களிடம் மன்னிப்புக் கேட்கும்போதே மனம் இலேசாக இருக்கிறதே! இந்த மன்னிப்புக் கேட்கும் மகத்துவ குணத்தை மனிதர்களிடம் பயன்படுத்திப் பார்த்தால் மனித குலம் எவ்வளவு மகிழ்ச்சி மயமானதாக இருக்கும்?" என்று கேட்டுவிட்டு குருநாதர் சொன்னார், செருப்பு, குடை மற்றும் கதவு போன்ற வீட்டுப் பொருள்கள் நமக்கு உதவுகின்ற நண்பர்களைப் போன்றவர்கள்; அவற்றிடமும் அன்பின் கனிவோடு நாம் நடந்துகொண்டால், அவையும் நம்மிடம் அந்நியோன்யமாய் நீண்டநாள் வாழ்ந்து நம்மிடம் ஒத்துழைக்கும்; அவற்றிற்கு உயிர் இருக்கிறதோ இல்லையோ நாம் பயன்படுத்துவதால் நம்மைச் சார்ந்த உணர்வு கட்டயம் இருக்கும்!" என்றார்.

"பிறர் வாடச் செயல்கள் பலபுரிந்து!" சில வேடிக்கை மனிதர்கள் இந்த உலகில் வாழ்வதாக மகாகவி பாரதி குறிப்பிடுவான். தாம் வாழவேண்டும் என்பதற்காக, அடுத்தவர் வாடச் செயல்கள் செய்வது தவறுதானே!; அப்படிச் செய்வதற்குத் தயங்கவேண்டும்; மீறிச் செய்துவிட்டாலும் நிகழ்ந்து விட்டதற்காக வருந்தி மன்னிப்பும் கேட்க வேண்டும். உலக வாழ்வில் மனிதர்முன் இருக்கின்ற பெரிய சவால், சகமனிதர்களால் அன்றாடம் உண்டாகின்ற வருத்தங்களையும், எரிச்சல்களையும் சமாளித்து எவ்வாறு இனிமையுடனும் அமைதியுடனும் வாழ்வது என்பதே!.

சாலையில் நாம் நடந்து செல்லும்போதோ அல்லது நாமும் வாகனம் ஓட்டிச் செல்லும்போதோ, இடைவிடாது ஒலியெழுப்பிக் கொண்டே நம்மை எரிச்சலுக்கு ஆளாக்கி, அந்தக் குரூரச் செயலிலும் ஒருவித மகிழ்ச்சித் திருப்தியோடு சிரித்துக்கொண்டே முந்திச்செல்லும் வாகன ஓட்டுயை வாய்க்கு வந்தபடி திட்டுவீர்களா? அல்லது நீங்களும் ஒலியெழுப்பி அவனை முந்திச்சென்று எரிச்சலுக்கு உள்ளாக்குவீர்களா? அல்லது சாலைக்கு வந்துவிட்டால் இதுவெல்லாம் சாதாரணம் என்று ஒரு புன்முறுவலோடு கடந்து போய் விடுவீர்களா?. முதலிரண்டு செயல்களால் பாதிப்படையப் போவது நமது மனமும் உடலும்தான்; எனவே அந்த ஒலியிரைச்சல் ஆசாமிமீது நீங்களாகவே ஒரு வழக்கை உருவாக்கி, அவருடைய செயலுக்கு அவர் கேட்காமலேயே ஒரு மன்னிப்பையும் நீங்களே வழங்கி, அமைதிப் புன்னகையோடு கடந்துவிடுவதே ஆகச் சிறந்த செயலாகும். இந்த உலகம் மன்னிப்புக் கேட்கிறவர்களைவிட மன்னிப்பு வழங்குகிறவர்களாலேயே அமைதி நந்தவனமாகத் திகழ்கிறது.

மன்னிப்பு என்னும் மனப் பக்குவத்தை ஒவ்வொரு மனிதரும் தனது வீட்டிலிருந்தே பழகக் கற்றுக் கொள்ளவேண்டும். வீடாயினும் நாடாயினும் தவறு செய்வது மனித இயல்பு. தெரிந்து செய்வதல்ல தவறு; தவறுதலாக நிகழ்வதே தவறு. அது வீட்டில் நிகழும்போது, உறவு என்கிற உரிமையின் அடிப்படையில் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்பவும், மன்னிக்கவும் செய்யவேண்டும். வீட்டில் மன்னிக்கவும் மன்னிப்புக் கேட்கவும் உறவு என்கிற உரிமை காரணமாக அமைவது போல, சமூகத்தில் சக மனிதம் என்கிற மனித நேய உரிமை அடிப்படையில் அது நிகழ்ந்தால் அமைதி கொடிகட்டிப் பறக்கும். மாண்புக்குரிய மனித நேயத்தைச் சற்று, சகல ஜீவராசிகளுக்கான உயிர்நேயமாக, சகல பொருள்களுக்குமான உலக நேயமாக விரிவு செய்தால், மன்னிப்புக் கேட்பதும் மன்னிப்பதும் தன்னிகரற்ற குணமாக உலகில் செழிக்கும்.

தொடர்புக்கு - 9443190098

Tags:    

Similar News