null
பணம் பெருக்கும் வழிமுறைகள்- தவிர்க்க வேண்டிய தவறுகள் இன்னும் என்னென்ன?
- முதலீட்டுக்கு இவ்வளவு என்று மனதளவிலாவது ஒரு கணக்கு வைத்துக் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும்.
- பணம் வளர்க்கும் கலை பற்றிய புத்தகங்களும், வலைத்தளங்களும் நிறைய உள்ளன.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள்! முயற்சி செய்தால் எந்த வயதிலும் செல்வம் என்ற சிம்மாசனத்தில் ஏற முடியும் என்பது குறித்து பேசி வருகிறோம். நாம் ஏற வேண்டிய வழியில் இருக்கும் ஆறு சிறு தடைக்கற்களை சென்ற வாரம் கண்டோம். மீதியை இன்று காணலாம்.
7.செயல்பாடுகளைத் தள்ளிப் போடும் பழக்கம்
நண்பர் ஒருவர் இருந்தார். செலவைக் குறைக்கும் வழிகள், சேமிப்பை அதிகரிக்கும் முயற்சிகள் பற்றியெல்லாம் முழுவதுமாக விசாரித்துத் தெரிந்துகொண்டார். நாளைக்கே அந்த வங்கியில் இந்தக் கணக்கை ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்லிப் போனார். இரண்டு தினங்கள் கழித்து கேட்டபோது, "பேஸ்புக் பார்ப்பது, வாட்சப் மெசேஜ்களுக்கு பதிலளிப்பது, நண்பர்களுடன் அரட்டை என்று பொழுது கழிந்துவிட்டது. நாளை பார்க்கிறேன்" என்று கூறினார். இவர் போலத்தான் நம்மில் பலர் இருக்கிறோம். நேரம்தான் நழுவுகிறதே தவிர, வேலைகள் முடிந்தபாடில்லை. தள்ளிப் போடுதல் தவறு என்று தெரிந்தாலும் அதையே செய்கிறோம்.
செய்யவேண்டியது: ஒவ்வொரு நாட்களும் மூன்று வேலைகளை கண்ணுக்குத் தெரியும்படி எழுதி வைத்துக்கொண்டு, கண்டிப்பாக அவற்றை செய்து முடிக்கவேண்டும். கடினமான வேலைகளை முதலில் செய்யவேண்டும். வேலைகளை முடிக்கும்வரை செல்போனை கைக்கெட்டாத தூரத்தில் வைக்கவேண்டும்.
8.குற்ற உணர்வில் குடும்பத்தாருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு அளவுக்கதிகமாக செலவழித்தல்
இது முக்கியமாக வேலைக்குச் செல்லும் பெண்களிடம் காணப்படும் ஒன்று. அதிக நேரம் குழந்தையைப் பிரிந்த வருத்தத்தில், வரும்போதே அதற்குப் பிடித்த தின்பண்டங்களை வாங்கி வரும் பழக்கத்தை நிறையத் தாய்மாரிடம் பார்க்கலாம். அதேபோல் குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில், வெளிநாட்டில் வேலை பார்க்கும் பலர் சம்பாதித்த பணத்தில் பாதியை அநாவசிய செலவுகளில் சூறை விடுவதையும் காண்கிறோம். குடும்ப நலனுக்குத்தான் சம்பாதிக்கிறோம் என்றாலும், அதை நீண்ட கால முதலீடுகளாக மாற்றாமல் ஆசைக்கான செலவுகளாக ஊதித்தள்ளுவதில் என்ன பலன் இருக்கமுடியும்?
செய்யவேண்டியது: குடும்பத்தைப் பிரிந்து உள்ளூரிலோ, வெளியூரிலோ வேலைக்கு செல்லும் அனைவரும் "இதனை நாம் குடும்ப நலனுக்காகத்தான் செய்கிறோம்" என்பதை திடமாக மனதில் இருத்தி, குடும்பத்தாருக்கும் புரியும்படி எடுத்துக்கூற வேண்டும். அப்படி சம்பாதித்த பணத்தில் இன்னின்ன செலவுக்கு இவ்வளவு, சேமிப்புக்கு இவ்வளவு, கடனுக்கு இவ்வளவு, முதலீட்டுக்கு இவ்வளவு என்று மனதளவிலாவது ஒரு கணக்கு வைத்துக் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும்.
9.குறிக்கோளின்றி வாழ்வது
நம்மில் பலரும் இந்தப் பழக்கத்துக்கு அடிமை. நல்ல உடல் நலமும், வாய்ப்புகளும் இருப்பவர்கள் கூட அடுத்த கட்டத்துக்கு செல்லவேண்டும் என்ற உணர்வும், அதற்கான முயற்சிகளும் இல்லாமல் செய்ததையே செய்துகொண்டு, இயந்திரத்தனமாக வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். கேட்டால், "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து; கிடைத்ததைக் கொண்டு திருப்தியாக வாழப் பழகவேண்டும்" என்றெல்லாம் பொன்மொழிகளை உதிர்ப்பார்கள். ஆனால் சற்று ஆழமாக சிந்தித்தார்களானால், தங்கள் இளவயதுக் கனவுகள் எல்லாமே இன்னும் கனவாகவே இருப்பதையும், எதுவுமே கைக்கு வராததையும் உணரலாம். இன்று நினைத்தால் கூட கழுத்தளவு கடனில் இருந்து வெளிப்பட்டு தங்கள் குறிக்கோள்களை அடைய இவர்களுக்கு வாய்ப்பிருக்கிறது.
சுந்தரி ஜகதீசன்
செய்யவேண்டியது: உங்கள் கால்விலங்குகள் நீங்களே போட்டுக் கொண்டவை என்று உணர்ந்து, அவற்றைக் கழற்றி எறியுங்கள். உங்களைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை உதறித் தள்ளிவிட்டு, செயலில் இறங்குங்கள். உங்கள் சிறிதும், பெரிதுமான கனவுகளைப் பட்டியலிட்டு, அவற்றை அடையும் வழிகளை சிந்தியுங்கள். உங்களை முன்னேறவிடாமல், தேவையற்ற கேளிக்கைகளில் ஈடுபடுத்தும் நபர்களைப் புறக்கணியுங்கள். 'ஏதோ எழுந்தோம், படுத்தோம், இன்றைய பொழுது கழிந்தது' என்று இல்லாமல், ஒவ்வொரு மணி நேரத்தையும் திட்டமிட்டு செலவழியுங்கள்.
10.பொருளாதார அறிவு இல்லாமல் இருப்பது
ஒரு உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பொருளாதார அறிவு நமக்கு சற்றுக் குறைவுதான். விவசாய நாடாக இருந்தவரை அதற்கான தேவை நமக்குப் பெரிய அளவில் இருக்கவில்லை. ஆனால் தொழில்சார்ந்த நாடாக மாறியபின்னும் நமக்கு பள்ளியிலும்,, கல்லூரிகளிலும், சம்பளம் தரும் வேலைகளைப் பெறுவது எப்படி என்று கற்றுத் தந்தார்களே தவிர, வரும் பணத்தை எப்படி பெருக்குவது,
எப்படி அதன் உதவியுடன் வாழ்வை வளமாக்குவது என்பதெல்லாம் குறித்து எதுவும் கூறவில்லை. பொருளாதார அறிவு இல்லாததால் நம் முன்னேற்றம் தடைப்படுகிறது என்பதை நாம் அறிந்தாலும் அது குறித்து எந்த முயற்சியையும் பெரிதாக எடுப்பதில்லை. யாராவது இந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டு நம்மை நிம்மதியாக வாழவிடுவார்களா என்று தேடி, கண்ணில் பட்டவர்களிடம் பணத்தை ஒப்படைக்கத் துடிக்கிறோம். மீண்டும் சொல்கிறேன் – உங்கள் பணத்துக்கு நீங்களே பொறுப்பு.
செய்யவேண்டியது: இன்று பல பொருளாதார ஆலோசகர்கள் தங்கள் அறிவை, பல வருட அனுபவத்தை யூட்யூபில் கொட்டிக் கொடுக்கிறார்கள். தினமும் அவற்றில் இரண்டையாவது பார்க்க முனைவது நல்லது. பணம் வளர்க்கும் கலை பற்றிய புத்தகங்களும், வலைத்தளங்களும் நிறைய உள்ளன. இவற்றின் உதவியோடு நம் செல்வத்தை எளிதாக வளர்க்கலாம்.
வெளியிலிருந்து வரும் தாக்குதல்கள் சென்ற கட்டுரையிலும், இந்தக் கட்டுரையிலுமாக நாம் பார்த்த 10 தடைகள் மட்டுமின்றி, இன்னும் சில ஆங்காங்கே தலைதூக்க வாய்ப்புண்டு. நம் பயணத்தின் போது அவை குறித்தும் பேசுவோம். மேலே பார்த்த தடைகள் எல்லாம் நம்முள் இருந்து எழுபவை. இவை தவிர வெளியில் இருந்தும் நம் பணத்தைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
யானையை வசமாக்குவது போல் மனித மனதை வசமாக்கும் வேலையும் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. 2500 வருடங்களுக்கு முன்பே கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் மனித மனத்தை வசமாக்கி, வெற்றி கொள்ளும் வித்தைகள் பற்றி பேசியுள்ளார். இன்று அவற்றை முறையாகக் கற்றுத் தர கல்வி நிலையங்களும், கற்றுத் தேர்ந்தவர்களுக்கு வேலை தர பல கம்பெனிகளும் வந்துவிட்டன. இவர்களில் பலரின் நோக்கமும் ஒன்றே – நாம் அறியாமலேயே நம் மனதுக்குள் புகுந்து எண்ணங்களை வசப்படுத்தி, அட்டைப் பூச்சி போல வலி தெரியாமல், நம்மிடமிருக்கும் பணத்தை உறிஞ்சுவதுதான். அதற்காக எந்த விதத்தில் காய் நகர்த்தினால் இந்தப் பட்சி விழும் என்று திட்டமிட்டு செயலாற்றுகின்றனர். அவர்கள் உபயோகப் படுத்தும் யுக்திகளில் சில பற்றி தெரிந்துகொள்ளலாம், வாருங்கள்.
பற்றாக்குறை மனப்பான்மையை ஏற்படுத்துதல்
நம் ஊர்களில் பஞ்சத்துக்கு நெஞ்சடைப்பு என்ற சொலவடையை நீங்கள் கேட்டிருக்கலாம். ஏதாவது ஒரு பொருள் சற்று பற்றாக்குறையாக இருக்கிறது என்று தோன்றினால், அதை வாங்கிக் குவிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏனோ மனிதமனத்தில் தோன்றிவிடுகிறது. கொரோனா லாக்டவுனில் அமெரிக்க மக்கள் டாய்லெட் பேப்பரை பண்டில், பண்டிலாக வாங்கி பதுக்கியதை மறக்க முடியுமா? தங்கத்தின் விலை உச்சம் என்று தெரிந்தாலும், அக்ஷய திரிதியை, அது, இது என்று ஏதேதோ பெயர்களில் வாங்கிக் கொண்டேதானே இருக்கிறோம்? மனித மனத்தின் இந்தப் போக்கை தங்கள் வசதிக்காக சரியான விதத்தில் பயன்படுத்துவோர் பலர்.
உதாரணமாக, பத்து வீடுகள் கொண்ட அபார்ட்மென்ட்டைக் கட்ட ஆரம்பிக்கும்போதே "இரண்டே வீடுகள்தான் விற்பனைக்கு உள்ளன. மீதி எல்லாம் ஏற்கெனவே விலை போய்விட்டன" என்பதுபோல் ஒரு அறிவிப்பு வெளியே தொங்கும். இது, "அய்யோ! அத்தனையும் விற்றுப் போகும்முன் வாங்கிவிடவேண்டும்" என்ற துடிப்பை நம்முள் ஏற்படுத்தும். நகைக் கடைகளில் கூட நாம் தேர்ந்தெடுக்கும் டிசைனில் ஒன்றே ஒன்றுதான் பாக்கி இருக்கிறது என்று கூறுவார்கள். அவ்வளவு ஏன்? "போனால் வராது; இப்போதே வாங்குங்கள்" என்று கூவித்தானே பலபொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன? இது நம் ஆசையைத் தூண்டும் உத்தி என்று புரிந்துகொண்டால் நாம் இந்த வலையில் இருந்து தப்பலாம்.
மனதை அள்ளும் நடத்தை:
தனியார் வங்கிகள், இன்சூரன்ஸ், மியூச்சுவல் பண்டுகள் இவற்றில் இருந்து வந்து உங்களை சந்திக்கக்கூடிய நபர்கள் நல்ல அறிவாற்றலும், பழகுவதற்கு இனிய நடத்தையும் உடையவர்களாக இருப்பார்கள். உங்கள் நலனில் நிஜமான அக்கறையும் இருக்கலாம். ஆனாலும் அவர்களுடைய முக்கிய நோக்கம் தங்கள் கம்பெனிக்கு லாபம் தேடித் தருவதுதான். கம்பெனிக்கு உண்மையாக இருக்க எண்ணும் அவர்களை குற்றம் சொல்ல முடியாது. ஆனால் அளவுக்கு அதிக கமிஷன், பீஸ் போன்ற செலவினங்கள் உங்கள் முதலுக்கு மோசம் விளைவிக்காமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு.
பரிசுப் பொருட்கள் தருதல்:
யாராவது ஒரு பொருளைப் பரிசாக தந்துவிட்டால், அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுவது மனித சுபாவம். நகைக் கடைகளில் காபி அல்லது கூல்டிரிங்க் கொடுத்து உபசரித்தார்கள் என்றால், அங்கிருந்து ஏதாவது வாங்காமல் கிளம்ப மனம் வருவதில்லைதானே?
சில இயக்கத்தினர் ஐந்து ரூபாய் பெறுமான மலர்களைப் பரிசாகத் தந்து, டொனேஷன் பெற்றுச் செல்வதும் இந்த அடிப்படையில்தான். இப்படி மென்மையான மனங்களை உடையவர்கள் பரிசுப் பொருட்களை ஏற்பதைத் தவிர்க்கவேண்டும். அல்லது அதை யதார்த்தமாக ஏற்றுக் கொண்டு, தங்கள் முடிவில் உறுதியாக இருக்கவேண்டும்.
இப்படி நம் மனத்தின் மீதும், பணத்தின் மீதும் உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் பலவிதத் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. சமீபத்தில் உங்களை யார், எவ்விதம் ஏமாற்ற முயன்றார்கள்? அதில் இருந்து எப்படி தப்பினீர்கள்? இது குறித்து குடும்பத்தினரிடம் பேசினீர்களா?