சிறப்புக் கட்டுரைகள்

கோதுமை உணவின் வரலாறு

Published On 2025-06-19 17:30 IST   |   Update On 2025-06-19 17:30:00 IST
  • வேளாண்மையில் இயந்திரமுறையைப் புகுத்தி அதீத விளைச்சல் காணும் முறையை பரவலாக்கி வந்தார்கள்.
  • உணவு விற்பனைக் கடுமையாக பாதித்து விடும் என்று எந்த உணவகத்தாரும் உணவை சும்மா கொடுக்கமாட்டார்கள்.

கோதுமை. 1960 வரை தமிழகத்திற்கும் தென்னிந்தியாவிற்கும் ஓர் அந்நிய உணவுப் பொருளாகவே இருந்தது. அவ்வாண்டுகளில் அமெரிக்கா போன்ற பெருநிலப்பரப்பில் அதீத கோதுமை விளைச்சல் இருந்தது. அதுவும் அந்தக் காலகட்டத்திலும் அதற்கு முந்தைய பலப் பத்தாண்டுகளிலும் தான் அந்நாட்டின் மரபார்ந்த வேளாண்முறையில் இருந்து மாறுபட்டு நெல், மக்காச்சோளம், பருத்தி, கோதுமை ஆகியவற்றை மட்டுமே விளைவிக்கும் முறைக்கு மாறியிருந்தார்கள்.

அதுவும் வேளாண்மையில் இயந்திரமுறையைப் புகுத்தி அதீத விளைச்சல் காணும் முறையை பரவலாக்கி வந்தார்கள். ஆகையால் கோதுமை விளைச்சல் அவர்களது உணவுத் தேவைக்கு மிகுதியாகவும், வணிகத்தில் விற்றுத் தீர்க்க முடியாத அளவிற்கு மித மிஞ்சியும் இருந்தது. அவ்வாறு மிஞ்சியதை சேமித்துப் பாதுகாத்து வைப்பதே பெரும் பொருட்செலவு மிக்கதாக இருந்தது.

ஆகவே மிகுந்து விட்ட பல லட்சம் டன் கணக்கான கோதுமையை கப்பல் கப்பலாக ஏற்றிக் கடலில் கொண்டுபோய்க் கொட்டுவது என்று முடிவுசெய்தது, அமெரிக்க அரசாங்கம். கொட்டவும் செய்தது. நாடுகள் பலவற்றில் மக்கள் வறுமையிலும் பட்டினியிலும் வாடிக் கொண்டிருக்க கோதுமையைக் கடலில் கொட்டப்படுவதை பலநாடுகள், உலக சமூகம் கண்டித்தது. குறிப்பாக ஐக்கியநாடுகள் சபை கோதுமையை பயனுள்ள வகையில் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமாறு வலியுறுத்தியது.

இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவுறுத்திப் பார்க்க வேண்டும். அன்றாடம் உணவகங்களில் விற்பனைக்காக உணவுகள் சமைத்து வைக்கிறார்கள். மீந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். உடனே அக்கம் பக்கம் உள்ள உணவற்ற ஏழை மக்கள் உண்பதற்காகக் கொடுப்பார்கள். அவ்வாறு கொடுத்தால் தினசரி அப்படிக் கொடுக்கப்படும் உணவுகளைப் பெறுவதற்கே ஒரு கூட்டம் கூடி விடும், அதைச் சமாளிப்பதே பெரும்பாடு, போக காசுகொடுத்து சாப்பிடுவதை விட விற்பனை முடிந்த பிறகு சும்மா கொடுக்கும் உணவைப் பெற்றுக் கொள்ளலாம் என்று காத்திருக்க ஒருசாரார் தயாராகி விடுவார்கள்.

உணவு விற்பனைக் கடுமையாக பாதித்து விடும் என்று எந்த உணவகத்தாரும் உணவை சும்மா கொடுக்கமாட்டார்கள். அனாதை இல்லங்களுக்கும் கூட அனுப்பி வைக்க மாட்டார்கள். வணிகர்களுக்கு சமூகப் பயன்பாடு அக்கறை இருக்காது. வணிக மனம் மேலும் மேலும் காசுபார்ப்பது குறித்து மட்டுமே சிந்திக்க முடியும். அப்படியான எண்ணப் போக்குதான் அமெரிக்க அரசாங்கத்திடமும் உருவானது. ஏனென்றால் அமெரிக்காவானது இன்றுவரை பெரும் வணிக நாடு.

அதனால் தான் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் அவ்வளவு செல்வ வளம் மிக்க நாடாகத் திகழ்கிறது. அதே நோக்கத்துடன் தான் கோதுமையைக் கடலில் கொண்டுபோய்க் கொட்டியது. உலக மக்களின் கண்டனக் குரலுக்குச் சற்றே பணிந்து இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புக் கொண்டது. அதன் பின்னணியிலும் இந்தியாவிடம் வேறுசில லாபக் கணக்கு வைத்திருக்கும் என்பதை நாமிங்கு சொல்ல வேண்டியதில்லை. அதுதனி. அவ்விதமாக அனுப்பப்பட்ட கோதுமையைத் தான் அப்போது பள்ளிகளில் அறிமுகப்படுத்தி இருந்த மதிய உணவுத் திட்டத்திற்கு தமிழக அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது. அப்போது தான் முதன் முதலாகத் தமிழகத்து மக்கள் கூட அல்ல, பள்ளிக் குழந்தைகள் கோதுமை உணவை சாப்பிடத் துவங்கினார்கள்.

இன்று நமக்கு கோதுமை என்றதும் சப்பாத்தி தான் நினைவிற்கு வரும். ஆனால் அன்று பள்ளியில் கொடுக்கப்பட்ட கோதுமை உணவோ வெறும் கோதுமைச் சோறு. ஆம் அரிசியில் எப்படிச் சோறு சமைக்கிறோமோ அதுபோல கோதுமையை உடைத்துப் புழுங்கல் ஆக்கி அதனை உப்புப் போட்டு வேகவைத்தால் போதும் மென்று தின்னும் அளவிற்குச் சோறாகி விடும். அப்படித் தான் கோதுமைச் சோறாக்கி பள்ளி மதியவுணவில் பிள்ளைகளின் தட்டுகளில் போட்டார்கள். நானெல்லாம் ஆரம்பப் பள்ளிகளில் கோதுமைச் சோறும், மக்காச்சோள ரவை உப்புமாவும் சாப்பிட்டு வளர்ந்தவன் தான்.

அமெரிக்காவில் இருந்து கோதுமை, மக்காச்சோளம், சோயா எண்ணை போன்றவை நமக்கு ஏற்றுமதி ஆவது நாளடைவில் குறைந்து நின்று விட்டது. ஆனால் தமிழ்ச் சமூகம் 1970 களின் முற்பகுதியில் 1973, 74 காலகட்டத்தில் மழைப்பொழிவு இல்லாமல் ஏற்பட்ட வறட்சி, உணவுப் பற்றாக்குறைக் காலத்தில் அரிசி விளைச்சலும், தானிய விளைச்சலும் இல்லாமல் உண்ண உணவு இன்றித் தவித்தனர். அவ்வாண்டுகளில் பொதுவிநியோகக் கடைகளில் (ரேசன் கடை) அரசு கோதுமையைத் தனது மத்திய தொகுப்பில் இருந்து அளித்தது. அப்போது அளிக்கப்பட்ட கோதுமை புழுங்கல் அல்ல, பச்சை. எனவே அதனை சோறாக ஆக்க முடியாது. ஆகவே மாவாகத் திரித்து, சப்பாத்தி, தோசை, கோதுமைப் புட்டு என மக்கள் விதவிதமாகச் சமைத்து உண்டார்கள். அப்படித்தான் கோதுமை இங்கு பரவலாகியது.

போப்பு


சப்பாத்தியை அடிக்கடி இல்லை என்றாலும் அவ்வப்போது உண்கிறப் பழக்கம் உள்ள நம்மில் பலரும் கோதுமை வயலைக்கூடப் பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் அது தென்னிந்தியாவில் விளைகிற தானியமே அல்ல. கோதுமை விளைச்சலுக்கு வெயில் ஆகாது. சப்பாத்தி உண்டால் எப்படி நமக்கு அடிக்கடித் தண்ணீர் தவிக்குமோ அதுபோல கோதுமைப்பயிருக்கு, நெல்லைப் போல தண்ணீரைக் கட்டி வைக்க முடியாது, அவ்வப்போது விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் மேலே சுள்ளென்ற வெயிலும் ஆகாது. அது மிதமான வெப்பச் சூழலில் விளைவிக்கும் தானியமாகும்.

ஆனால் கோதுமையை உண்டால் அவ்வளவாகப் பசி தெரியாது. வருடத்தில் கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் குளிர்ச்சி நிலவும் வட இந்திய மாநிலங்களில் தான் கோதுமை விளைச்சலும் அதிகம், பயன்பாடும் அதிகம். பொதுவாகவே ஒரு நிலப்பகுதியில் என்ன பொருள் விளைகிறதோ அதுதான் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் உடலுக்குப் பொருத்தமான உணவாக இருக்கும். ஏனென்றால் அப்பகுதியில் நிலவும் தட்ப வெப்பத்திற்கு ஏற்ற வகையில் விளைவிக்கப்படும் உணவு வகைகளையே ஏற்கும் தன்மையை இயற்கை நம் உடலுக்கு அளிக்கிறது. நம்முடைய வளர்சிதை மாற்ற உடலமைப்பும், செரிமானத் தன்மையும் அதையொட்டியே தகவமைக்கப்பட்டிருக்கும்.

கோதுமை இங்கே அறிமுகம் கண்டபோது மக்கள் கடும் மறுப்புணர்வுடனே அதனை ஏற்றுக் கொண்டார்கள். ஏனென்றால் அது தரும் உடல் உபாதைகள் அப்படி. கோதுமைச் சப்பாத்தியை உண்டு பழக்கமற்ற நம் மக்களுக்கு அதனை உண்டால் உடல் வலி, மலச்சிக்கல், அதீத நாவறட்சி என அதுவரை எதிர்கொண்டிராத பல உடல் உபாதைகளைச் சந்தித்து அவதியுற்றனர். ஆனால் வானம் பொய்த்து வழக்கமான தானிய விளைச்சலற்ற காலங்களில் வேறுவழி…. உயிர் பிழைத்திருக்க வேண்டுமேயென மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டு கொஞ்சங்கொஞ்சமாகப் பழகிக் கொண்டனர்.

கோதுமை நம்மூர் உணவாக பழக்கத்திற்கு வந்து விட்டாலும் நாமெல்லோரும் அடிக்கடி அதனை உண்பதில்லை. நகரவாசிகளேக் கூட வாரத்தில் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே ஒருவேளைக்கு விசேச உணவாக தடபுடலான மசாலா குருமா வைத்து அதன் தயவில் தான் உள்ளே கொண்டு செலுத்துகிறார்கள். அதிலும் கூடச் சப்பாத்திக்கு மாவு பிசையும் போது எண்ணை, முட்டை, பால் என்று பண்டத்தை மிருதுவாக்குவதற்காக அவரவர் பேரறிவிற்கு எட்டிய வகையில் நிறையத் துணைப்பொருட்கள் சேர்க்கின்றனர். இன்று நமது மண்டபத் திருமண விருந்தில் உங்களை அசத்துகிறேன் என்று புல்கா, நான் என்று விதவிதமாகச் சமைத்து தொட்டுக் கொள்ள பன்னீர் மசாலா, சென்னா மசாலா என்று சேற்றைப் போல சொதசொதவென்று முந்திரிப் பருப்பு, தேங்காய் போன்றவற்றைப் போட்டு அரைத்து கலர்ப்பொடியைக் கலந்து மிரட்டலான ஒன்றைத் தொடுகறியாக வைக்கிறார்கள்.

அதை உண்பவர்களுக்கு வயிற்றால் போவது, வயிறு உப்புசம், ஏப்பம் என்று என்னென்னவோ முன்பின் விளைவுகள் ஏற்படுகின்றன. உணவினைச் சிறப்பாகச் செய்ய விரும்புவோர் யாரும் இன்று உண்கிற மக்களைப் பற்றியும், அவர்களது உடல் நலனைப் பற்றியும் கவனத்தில் கொள்வது கிடையாது. அதனை எப்படி ஆடம்பரமாக அலங்காரமாகச் செய்வது என்றுதான் மெனக்கெடுகிறார்கள். தொடர்ந்து நம்முடைய மரபான உணவுவகைகளுக்கு மாறானவற்றையே உண்பதால் தான் நம்மில் பலருக்கும் செரிமானம் – மலம் கழித்தல் தொடர்பான பல்வேறு தொல்லைகள் ஏற்படுகின்றன.

பொருள் போக்குவரத்தும் ஊடக வழிச் செய்திகளும் பரவலாகி விட்ட இன்றைய காலகட்டத்தில் உலகத்தின் ஏதோ ஒருமூலை உணவும் கூட நாம் சுவைத்துப் பார்க்கும் உணவாகி விட்டது. ஆனால் இவை எவற்றிலும் நம்முடைய உடலின் ஏற்புத் திறன் குறித்த அடிப்படையான பார்வை கூட இல்லை. இது பெரிதும் வருந்தத்தக்க விசயம் ஆகும். நம்முடைய உடல்சார் தொல்லைகளுக்கு உணவு குறித்த நம்முடைய கண்ணோட்டமும் முக்கியமான காரணம் ஆகும். கோதுமையை உணவாக ஏற்றுக் கொள்வது ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் அதனைச் சமைக்கும் முறையில் நமக்குச் சற்றுக் கூடுதல் கவனம் இருந்தால் அதனை உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் தயாரித்துக் கொள்ள முடியும். சொல்லப்போனால் அதனை மருந்துணவாகக் கூட எடுத்துக் கொள்ள முடியும்.

தொடர்ந்து சுவைப்போம்... 

செல்- 96293 45938

Tags:    

Similar News