சிறப்புக் கட்டுரைகள்

கர்ப்பப்பையை அகற்றும் பெண்கள் சந்திக்கும் பாலியல் உறவு பிரச்சினைகள்

Published On 2025-06-18 15:01 IST   |   Update On 2025-06-18 15:01:00 IST
  • சில பெண்களுக்கு குழந்தை பிறக்கும்போது, அதிகமாக உதிரப்போக்கு ஏற்படுகிறது.
  • கர்ப்பப்பையை எடுக்கும்போது சினைப்பையை சேர்த்து எடுப்பார்களோ என்கிற சந்தேகம் பல பெண்களுக்கு இருக்கிறது.

பெண்கள் பலருக்கு பல்வேறு காரணங்களால் கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுகிறது. அவர்களுக்கு கர்ப்பப்பையை எடுத்தவுடன் பல நேரங்களில் பல்வேறு பிரச்சினைகள் வரலாம். பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகளுக்காக மருத்துவர்கள் கர்ப்பப்பையை அகற்றுகிறார்கள்.

அதாவது அவர்களுக்கு கர்ப்பப்பையில் கட்டி வந்திருக்கலாம், புற்றுநோய்க்கான ஆரம்பம் ஏற்பட்டு இருக்கலாம், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டு அவர்களின் உடல் நிலையை பாதிக்கின்ற அளவில் பெரிய பிரச்சினை இருந்திருக்கலாம், கர்ப்பப்பை வீக்கமாக இருக்கலாம். இதுபோன்ற காரணங்களுக்காக அவர்களின் கர்ப்பப்பையை அகற்றுகின்ற நிலை ஏற்படுகிறது.

பெண்களுக்கு கர்ப்பப்பையை அகற்றும் முறைகள்:

கர்ப்பப்பையை அகற்றும்போது பெண்கள் பொதுவாக டாக்டர்களிடம் கேட்பது சில விஷயங்கள் தான். டாக்டர் நான் எவ்வளவு நாட்களுக்கு பிறகு எழுந்து நடக்கலாம்? நான் எவ்வளவு நாட்கள் கழித்து என்னென்னவெல்லாம் சாப்பிடலாம்? என்னென்ன வேலை செய்யலாம் என்பது போன்ற விஷயங்களை தான் கேட்கிறார்கள். அது அவர்களுக்கு என்னென்ன முறைகளில் கர்ப்பப்பையை அகற்றுகிறோம் என்பதை பொருத்தது.

குறிப்பாக கர்ப்பப்பை அகற்றுவதை லேப்ராஸ்கோபி மூலமாக செய்வார்கள். மற்றொரு வகையாக அடிவயிறு, யோனி எனப்படும் பெண்ணுறுப்பு (வஜினா) வழியாக திறந்தவெளி அறுவை சிகிச்சையாகவும் செய்வதுண்டு.

கர்ப்பப்பை அகற்றும் விதங்களை பொருத்து தான் அவர்கள் எவ்வளவு நாட்களில் குணம் அடைவார்கள். அதன் பிறகு அவர்கள் எவ்வளவு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள புண் எப்படி ஆறும் ஆகிய விவரங்கள் தெரியவரும். இந்த விவரங்களை தான் கர்ப்பப்பை அகற்றும் பெண்களும், அவர்களின் குடும்பத்தி னரும் டாக்டர்க ளிடம் கலந்து ஆலோசிக்கின்ற விஷயங்கள் ஆகும்.

ஆனால் கர்ப்பப்பை அகற்றும் பெண்கள் பலர், ஒரு முக்கியமான பிரச்சினையை பற்றி பல நேரங்களில் மருத்துவர்களிடம் கேட்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இருக்கும் தயக்கம் காரணமாக கேட்க மாட்டார்கள். பெரும்பாலான டாக்டர்களும் இதைப்பற்றி அவர்களிடம் சொல்ல மாட்டார்கள். ஒருவேளை சில மருத்துவர்கள் இதைப்பற்றி சொன்னாலும், கர்ப்பப்பை அகற்றிய சில பெண்களோ அல்லது அவர்களின் கணவரோ காதுகொடுத்து கேட்க மாட்டார்கள்.

கர்ப்பப்பையை அகற்றிய பிறகு பெண்களின் தாம்பத்திய வாழ்க்கை:

ஆனால் இது ஒரு முக்கியமான விஷயம். கர்ப்பப்பையை அகற்றிய பிறகு அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கை பற்றியதாகும். கணவன், மனைவி இடையேயான பாலியல் உறவுகள் பற்றியதாகும். கர்ப்பப்பையை அகற்றிய பிறகு பாலியல் உறவுகள் எந்த அளவுக்கு பாதிப்பு அடையும் என்பது பற்றி அவர்கள் கேட்பது இல்லை. ஆனால் அதுபற்றி பெண்கள் மற்றும் அவரது கணவர் ஆகியோர் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் கர்ப்பப்பை என்பது பெண்களுக்கு எல்லா விதத்திலும் அவர்களின் பெண்மையை குறிக்கின்ற ஒரு உறுப்பாகும். இப்படித்தான் பல பெண்கள் நினைக்கிறார்கள். பெண்கள் பலரும் கர்ப்பப்பையை அகற்றிய பின்பு பலவிதமான பாலியல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

இதுபற்றி சிகிச்சைக்கு வரும் பல பெண்கள் கூறுவதுண்டு, டாக்டர் எனக்கு கர்ப்பப்பையை அகற்றிய பிறகு எனது பாலியல் உணர்ச்சி குறைவாக இருக்கிறது. பாலியல் உறவுக்கான ஆர்வம் குறைந்து விட்டது. யோனி பகுதி ரொம்பவும் உலர்வு தன்மையுடன் இருக்கிறது. பல நேரங்களில் பாலியல் உறவின்போது உச்சக்கட்டம் அடைவதில் எனக்கு கஷ்டங்கள் இருக்கிறது என்பார்கள். இவை கர்ப்பப்பையை அகற்றிய பெண்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சினைகளாக கருதப்படுகிறது.

எனவே கர்ப்பப்பையை அகற்றிய பிறகு பெண்கள் பாலியல் உறவு கொள்ளும் போது, என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இப்போதைய காலகட்டத்தில் பெண்கள் சராசரியாக 60 வயது முதல் 70 வயது வரை வாழ்கின்றனர்.

அவர்களுக்கு 50 வயதில் கர்ப்பப்பையை அகற்றிவிட்டால் அதன்பிறகு 10 முதல் 20 வருடங்கள் வரை வாழவேண்டும். அப்படி வாழ்க்கையில் தாம்பத்திய உறவுகளுடன் அவர்கள் வாழும்போது, பலவிதமான பிரச்சினைகள் ஏற்பட்ட பிறகு அதைப்பற்றி யோசித்து கஷடப்படுவதை விட, முன்பே அதைப்பற்றி தெரிந்து கொள்வது மிக மிக முக்கியம்.

 

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

பாலியல் உறவுகளில் முக்கிய பங்கு வகிக்கும் கர்ப்பப்பை:

கர்ப்பப்பை என்பது குழந்தை பிறப்பு, மாத விலக்கு வருவது ஆகியவற்றுக்கெல்லாம் முக்கியமான விஷயங்கள் ஆகும். ஆனால் அதைவிட முக்கியமான ஒரு விஷயம், பாலியல் உறவு முறைகளில் இந்த கர்ப்பப்பை ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அதாவது, தாம்பத்திய உறவின் போது ஒரு பெண் உச்சகட்டம் அடையும் போது, கர்ப்பப்பை சுருங்கி விரிதல் என்பது இதன் ஒரு முக்கியமான பகுதி ஆகும். தாம்பத்திய உறவில் இது ரொம்ப முக்கியமான விஷயம்.

குறிப்பாக பாலியல் உறவு கொள்ளும்போது ஏற்படுகிற கர்ப்பப்பை சுருங்கி விரியும் தன்மையை பல பெண்கள் விரும்புகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் கர்ப்பப்பையை அகற்றி விட்டால், அந்த உணர்வானது சரியான முறையில் இல்லை என்று பல பெண்கள் சொல்கின்றனர். அந்த வகையில் இதுபோன்ற விஷயங்களை பற்றி அவர்களுக்கு ஒரு தெளிவான விளக்கம் தேவை.

சில பெண்களுக்கு குழந்தை பிறக்கும்போது, அதிகமாக உதிரப்போக்கு ஏற்படுகிறது அல்லது கர்ப்பப்பை சுருங்கவில்லை என்கிற காரணத்துக்காக கர்ப்பப்பையை அவசரமாக எடுக்கும்போது, கர்ப்பவாயை மட்டும் விட்டுவிட்டு ரத்தப்போக்கு ஏற்படும் பகுதியை மட்டும் கர்ப்பப்பையில் துண்டித்து விடுவார்கள்.

குறிப்பாக இந்த கர்ப்பவாய் என்பது, பாலியல் உறவின்போது பெண்களின் உணர்வு பூர்வமான தூண்டுதலுக்கு முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் கர்ப்பப்பையும், கர்ப்பவாயும் இணையும் இடத்தில் தான் நிறைய நரம்புகள் இருக்கிறது. கர்ப்பப்பையை எடுக்கும் போது, இந்த பகுதியை துண்டிக்கும்போது, இங்கிருக்கும் நரம்புகளும் துண்டிக்கப்படுகிறது

பெண்ணுறுப்பான யோனியில் தான் பாலியல் உறவு என்பதே நடக்கிறது. கர்ப்பப்பையை எடுத்த பிறகும் யோனி இருக்கும். ஆனால் கர்ப்பப்பை இல்லாத நிலையில் அந்த யோனியை தூண்டும்போது ஏற்படுகிற உணர்வுகள் ரொம்ப ரொம்ப குறைவாக இருக்கிறது.

கர்ப்பப்பையை அகற்றும்போது பாலியல் குறைபாடு வருவதற்கான காரணங்கள்:

பொதுவாக பாலியல் உறவு கொள்ளும்போது யோனி விரிவடைகிறது. அது விரிவடையும்போது உச்சக்கட்டம் ஏற்படும் நேரங்களிலோ அல்லது அவர்கள் தொடர்ந்து உறவு கொள்ளும்போதோ, அந்த யோனியின் மேல் பகுதி ஒரு பலூன் போல விரிவடையும் செயல் முறையானது இயற்கையாக நடக்கிற ஒரு விஷயமாகும்.

உதாரணத்துக்கு செரிமானம் என்ற ஒரு விஷயம் இருக்கிறது. ஒவ்வொருவரும் உணவு சாப்பிட்டவுடன் செரிமானம் ஆகிறது. அதுபோல பாலியல் உறவு கொள்ளும்போது, இதுபோன்ற மாற்றங்கள் பெண்களின் கர்ப்பவாயிலோ அல்லது கர்ப்பப்பையிலோ இருக்கும். பெண்களுக்கு இந்த பகுதியை துண்டிக்கும் போது, அதாவது கர்ப்பப்பையை அகற்றும்போது அந்த யோனியின் மேல் பகுதியை துண்டிப்பார்கள்.

அதை துண்டித்து தான் கர்ப்பப்பையை வெளியே எடுக்க முடியும். ஏனென்றால் கர்ப்பப்பை, யோனி எல்லாமே ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கிறது. இதனால் அந்த யோனியின் மேல்பகுதியை துண்டித்து தையல் போடுவார்கள். அந்த பகுதியில் தான் பெண்ணுறுப்புக்கான முக்கியமான நரம்புகள், அதனுடன் தொடர்புடைய ரத்தக்குழாய்கள் நிறைய இருக்கிறது. அந்த பகுதிதான் பாலியல் உறவு கொள்ளும்போது விரிந்துகொடுக்கும்.

இந்த மாதிரியான விஷயங்கள் கர்ப்பப்பையை எடுத்த பெண்களுக்கு சீராக நடப்பது இல்லை. எனவே கர்ப்பப்பையை எடுத்த பெண்கள் பாலியல் உறவு கொள்வதில் குறைபாடுகள் ஏற்படுவதற்கு இது ஒரு முக்கியமான காரணம்.

யோனியில் ரத்தக்குழாய்கள், நரம்புகள் எல்லாமே ரொம்ப குறைவாக இருக்கும். ஆனால் அதன் மேல் பகுதியில் ரத்தக்குழாய்கள், நரம்புகள் எல்லாமே ரொம்ப அதிகமாக இருக்கிறது. இதுதவிர அந்த யோனியில் லூப்ரிகேஷன் சுரப்பு என்பது, மேல்பகுதியில் இருந்து வருகிற தூண்டுதலின் வெளிப்பாடுதான். அதில் இருந்து தான் இந்த சுரப்பு நிறைய வரும். ஆனால் கர்ப்பப்பையை எடுக்கும்போது இந்த லூப்ரிகேஷன் சுரப்பு பாதிப்பு அடையும். இதுவும் பாலியல் உறவுகள் குறைவாவதற்கு காரணம் ஆகும்.

கர்ப்பப்பையை எடுக்கும்போது சினைப்பையை சேர்த்து எடுப்பார்களோ என்கிற சந்தேகம் பல பெண்களுக்கு இருக்கிறது. அதுபற்றிய விளக்கங்களையும், கர்ப்பப்பையை எடுத்த பெண்கள் பாலியல் உறவில் ஆர்வம் ஏற்பட என்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் அடுத்த வாரம் பார்க்கலாம்.

Tags:    

Similar News