சிறப்புக் கட்டுரைகள்
null

ரேவதி நட்சத்திர பலன்கள்

Published On 2025-06-17 16:15 IST   |   Update On 2025-06-17 16:15:00 IST
  • ரேவதி என்றால் மிகுதியான செல்வம் என்ற சமஸ்கிருத பொருள் உள்ளது.
  • அறிவு சார்ந்த ஆலோசனை வழங்கி பலரை வழி நடத்தும் திறமை மிகுந்தவர்கள்.

ரேவதி நட்சத்திரம் மீன ராசியில் அமைந்துள்ளது. இதற்கு கடை நட்சத்திரம் என்ற பெயர் உண்டு.

இதன் அதிபதி புதன். இந்த நட்சத்திரத்தில் உச்சம் அடையும் கிரகம் சுக்கிரன். ரேவதி என்றால் மிகுதியான செல்வம் என்ற சமஸ்கிருத பொருள் உள்ளது.

கால புருஷ சக்கரத்தின் கடைசி நட்சத்திரம் ரேவதி. வானில் இது தோணி மற்றும் மீனைப் போல் காணப்படுவதால் இதன் தமிழ் பெயர் தோணி என்பதாகும். பாதுகைகள், பாதச்சுவடுகள் என்பது ரேவதி நட்சத்திரத்தின் வடிவமாகும்.

இதன் வசிப்பிடம் பூங்காவனம், தோட்டமாகும். ரேவதி நட்சத்திரத்தின் பொது வான பலன்கள் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவு, ராஜதந்திரம், புத்திக் கூர்மை, விவேகம் நிபுணத்துவம் என சகல வல்லமையும் நிறைந்தவர்கள். பார்த்த மாத்திரத்தில் ஒருவரை எடை போடுவதில் வல்லவர்கள். நினைக்கும் காரியங்களை புத்தி சாதுர்யத்தால் சாதிப்பதில் கைதேர்ந்தவர்கள். காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு இணையாக காதல் பாடம் கற்பிப்பவர்கள்.

அறிவு சார்ந்த ஆலோசனை வழங்கி பலரை வழி நடத்தும் திறமை மிகுந்தவர்கள்.

எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். ஜோதிடம், வங்கிப் பணி, ஆசிரியர் பணி, தொழில், வியாபாரத்தில் ஆர்வம் அதிகம். திறமையான பேச்சாளிகள். எழுத்துப் பணி, அரசியல் துறையில் நன்கு பிரகாசிப்பார்கள்.பேனா நண்பர்கள் அதிகம் உடையவர்கள். அதிர்ஷ்டம் மிகுந்தவர்கள். பொது ஜன ஆதரவு உண்டு. பெரிய அந்தஸ்து, அதிகாரம் நிறைந்த பதவியில் இருப்பார்கள். எந்த படிப்பு அறிவும் இல்லாத இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர் பன்னாட்டு வணிகத்தில் சாதனை படைத்து இருக்கிறார்கள். ஆங்கில பள்ளிக் கூடத்தில் படித்தவர்களுக்கு கூட முழுமையாக ஆங்கிலம் பேசவோ, எழுதவோ தெரியாது.

அரசாங்க பள்ளியில் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காமல் பலர், பிழை இல்லாமல் தெளிவாக ஆங்கிலத்தில் எழுதுவார்கள், பேசுவார்கள்.

உள்ளுணர்வு நிரம்பியவர்கள். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை நல்ல நிலையில் இருக்கும். இவர்களிடம் கடன் வாங்கும் போது இவரின் வீட்டிற்கு அலைந்தவர்கள், கடனை திருப்பி பெறுவதற்கு இவர்களை அலைய வைத்து விடுவார்கள். அடிக்கடி இட மாற்றம் செய்து கொண்டே இருப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு நிம்மதியாக வாழ்பவர்கள் போல் இருந்தாலும் மனதில் துக்கம், துயரம் நிறைந்தவர்கள். மண வாழ்க்கை போராட்டமானதாக இருக்கும். சிலருக்கு முறையற்ற காதல் விவகாரங்களால் வம்பு. வழக்கு ஏற்படும். தோல் வியாதி, அலர்ஜி தொல்லை உண்டு.

கல்வி

கணிதம் சார்ந்த அனைத்தும், ஆடிட்டிங், நூலாசிரியர், பேராசிரியர், ஆசிரியர், அறிவு சார்ந்த ஆய்வாளர்கள், பத்திரிக்கை துறை, மார்க்கெட்டிங், புள்ளியல், நில அளவை, பத்திரப்பதிவு துறை, வணிகவியல், நூலகத்துறை தகவல் தொடர்பு துறை, ஓவியம், பெயிண்டிங், ஜோதிடம் போன்ற படிப்புகளை புதன் தருகிறது.

ஐ.ஆனந்தி

 தொழில்

தாமும் சுய தொழில் செய்ய வேண்டும் என்று ஓர் உந்து சக்தி இவர்கள் மனதில் இருக்கும். இவர்கள் கையை ஊன்றி கரணம் போட்டு, பல உருட்டல், பிரட்டல்கள் செய்து சொந்தமாக கடை, தொழிற்சாலை கான்ட்ராக்டர், ஏஜென்சி, நிதி, நீதி, ஆசிரியர், வங்கிப் பணி, நிர்வாகப் பதவியில் இருப்பார்கள்.

அதே நேரத்தில் இவர்களுக்கு தனி ஆளாக செயல்பட முடியாது. யாரையாவது கூட்டாக சேர்ந்து தொழில், வியாபாரம் செய்து முன்னேறுவார்கள். சிலர் சுயமாக தொழில் தொடங்கி அதன் பிறகு நம்பிக்கைக்கு உரியவர்களை கூட்டாக சேர்த்துக் கொண்டு தொழில் நடத்துவார்கள்.

நிலையான ஏற்றமான தொழில், வியாபாரம் என்பது இயற்கையாக உருவாகிவிடும். சிலர் முதலீடு இல்லாத வார்த்தை ஜாலத்தால் பொருள் ஈட்டுவது, ஆடிட்டர், வக்கீல், பொறியாளர், இயல், இசை, நாடகம் போன்ற துறைகளில் உள்ளவர்கள் திட்டங்கள் தீட்டிக் கொடுத்து சம்பாதிப்பது, யோசனை சொல்லி செல்வம் திரட்டுவது போன்றவற்றில் வெற்றிவாகை சூடுகிறார்கள். வாக்கு சாதுர்யத்தால் உடல் உழைப்பு இல்லாமல் மூளையை பயன்படுத்தி பேச்சின்மூலம் பணம் சேர்க்கிறார்கள்.

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்

முன்னோர்களின் பூர்வீகச் சொத்துக்கள் பெற்றோரின் காலத்திற்கு பின் முறையாக இவர்களை சென்று அடையும்.

இல்வாழ்க்கை ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வீட்டில் அதிகம் இருக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் வல்லவரான இவர்கள் தங்கள் சொந்த பிரச்சினைக்கு அப்படி செய்யலாமா இப்படி செய்யலாமா என்று குழம்புவார்கள். முறையான திட்டமிடுதல் இல்லாமல் ஏற்ற இறக்கமான வாழ்க்கை வாழுகிறார்கள். பலர் பல விஷயங்களுக்காக ஏதாவது உருட்டல், மிரட்டல் செய்தே காலத்தை தள்ள வேண்டியுள்ளது.

கையில் காசு பணம் தங்காத நிலை, வட்டி, வட்டிக்கு வட்டி, கடன், நகைக் கடன், வங்கிக் கடன் வாகனக் கடன், வீடு, நிலம் வாங்கியதில் கடன் என்று பணம் பல்வேறு வகைகளில் கையில் பண இருப்பு இல்லாத அமைப்பும் ஏற்படும். பலருக்கு இரண்டு திருமணம் நடக்கிறது. சிலருக்கு காலம் தாழ்ந்த திருமணம் நடக்கிறது.

தசா பலன்கள்

புதன்தசா: இது ஜென்ம தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 17 ஆண்டுகள். ஜென்ம கால பிறந்த நேரத்திற்கு ஏற்ப தசா இருப்பு மாறுபடும்... இது கண்டாந்த நட்சத்திரம் என்பதால் ரேவதி 4-ல் பிறந்தவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. மேலும் ஜாதகரை மட்டுமின்றி அவரது பெற்றோர் உறவினரைக் கூட பாதிக்க வல்லது. சில குழந்தைகளுக்கு ஆரோக்கிய குறைபாடு மிகுதியாக இருக்கும்.

கேது தசா: இது இரண்டாவதாக வரக் கூடிய தன தாரரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 7 ஆண்டுகள். சுய ஜாதகத்தில் கேதுவும் அதற்கு வீடு கொடுத்த கிரகமும் சுப பலம் பெற்று இருந்தால் பெற்றோர்களுக்கு நிம்மதி கூடும் விதமான முன்னேற்றம் இருக்கும். ஜாதகர் பள்ளி கல்லூரி படிக்கும் வயதில் இருந்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்க ளின் நல்லாசிகள் கிடைக்கும்.

சுக்ர தசா: இது மூன்றாவதாக வரக் கூடிய விபத்து தாரையின் தசாவாகும்.

இதன் தசா ஆண்டுகள் 20 ஆண்டுகள்.

எதிர்காலம் பற்றிய சிந்தனை, முறையான திட்டமிடுதல் மூலம் அனைத்து நன்மைகளையும் அடைவார்கள். காதல், கல்யாணம், குழந்தை தொழில் என தன் சுய முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். அதிகார வர்க்கத்தின் தொடர்பு கிடைக்கும் தொட்டது துலங்கும். நல்ல சந்தர்ப்பம், வாய்ப்புகள் தேடி வரும்.பூர்வீகச் சொத்தால் மிகுதியான பலன் உண்டு. சுக்ரன் பலம் குறைந்தால் முன்னேற்றம் தடைபடும்.

சூரிய தசா: இது நான்காவதாக வரக் கூடிய சேஷமதாரையின் தசாவாகும்.

இதன் தசா வருடம் 6 ஆண்டுகள். இது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து இன்பங்களையும் வழங்கும் காலம். இதுவரை தடைபட்ட அனைத்து நல்ல விசயங்களும் நடக்கும். பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உணரும் வலிமை உண்டாகும். கடினமான விடாமுயற்சி உள்ளவராக இருப்பார்கள். பகல் இரவு பாராமல் உழைத்து அனைத்து வசதிகளையும் தேடிக்கொள்பவர்கள்.

சந்திர தசா: இது ஐந்தாவதாக வரக் கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும். இதன் தசா ஆண்டுகள் 10 வருடம். பணத்தால் பிரிந்த குடும்பங்கள், பல உண்டு. பிறருக்கு பணத்தை நம்பி கொடுத்து, ஜாமீன் கொடுத்து ஏமாறுவார்கள். கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் கவுரவம் குறையும் என்று பிறர் பிரச்சினையை தன் தலையில் சுமப்பார்கள். பிள்ளைகளால் குடும்ப உறவுகளால் மன அழுத்தம் இருக்கும்.

செவ்வாய் தசா: இது ஆறாவதாக வரக் கூடிய சாதக தாரையின் தசாவாகும். இவர்களுக்கு பணப் புழக்கம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். சுய ஜாதகத்தில் தன, லாப கிரகம் பலம் பெற்றால் தொட்டது துலங்கும். ஜாதகர் எப்படியும் நல்ல நிலைமைக்கு வந்து விடுவார். இந்த தசா பலருக்கு பெரிய திருப்புமுனையை தந்து இருக்கிறது.

ஆனால் வயோதிக கால நோயால் எதையும் சரிவர அனுபவிக்க முடியாது.

மீனம் ராசியின் சிறப்பு அம்சங்கள்

மீன்கள் வசிக்கும் நீர் நிலையை குறிப்பது மீன ராசி என்பதால் இந்த நட்சத்திரத்தில் கிணறு, குளம் வெட்ட, சமுத்திர யாத்திரை செல்ல உகந்த நட்சத்திரமாகும். இதில் உச்சம் பெறும் கிரகம் சுக்கிரன் என்பதால் முதலீடுகள் வங்கிக் கணக்குகள் துவங்க, லாக்கரில் பணம் நகைகள் வைக்க, ரகசிய ஒப்பந்தம் செய்து கொள்ள உகந்த நட்சத்திரமாகும். ரேவதி நட்சத்திரம் வரும் நாளில் மகாலட்சுமியை பூஜித்து வழிபட கையில் பணம் இருப்பு, சேமிப்பு போன்றவை அதிகமாகும்.

நட்சத்திர பட்சி: வல்லூறு

யோகம்: வைதிருதி

நவரத்தினம்: மரகதம்

உடல் உறுப்பு: கணுக்கால்

திசை: வடக்கு

பஞ்சபூதம்: ஆகாயம்

அதிதேவதை: சனீஸ்வரன்

நட்சத்திர மிருகம்: பெண் யானை

நட்சத்திர வடிவம்: முரசு

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

சம்பத்து தாரை: அசுவினி, மகம், மூலம்

சேம தாரை: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்

சாதக தாரை: மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

பரம மிக்ர தாரை: உத்திரட்டாதி, பூசம், அனுஷம்

பொதுவான பரிகாரங்கள்

இந்த நட்சத்திரம் வரும் நாளில் மதுரைக்குச் சென்று மீனாட்சியை தரிசிக்க செல்வம் பெருகும். மேலும் சத்திய நாராயண பூஜை செய்ய மிக உகந்த நட்சத்திரம். இதன் அதிபதி புதன் என்பதால் வித்யா ஆரம்பம் செய்யலாம், பூந்தோட்டம் அமைக்கலாம்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் குருமார்களின் பாதுகைகள் அல்லது தெய்வ உருவங்களின் பாதுகைகளை வழிபட, காலணிகளை தானம் வழங்க வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.

செல்: 98652 20406

Tags:    

Similar News