null
வாழ்க்கை போகும் பாதையில்... மீனா மலரும் நினைவுகள்
- வாழ்க்கையில் வெற்றிபெற 75 சதவீதம் கடின உழைப்பு இருக்க வேண்டும்.
- அடுத்தவர்களை காயப்படுத்தி மகிழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வாழ்க்கையில்...
என்ன நடக்கும்?
வாழ்க்கை எப்படி இருக்கும்...?
-இதில் எதையும் நம்மால் தீர்மானிக்க முடிவதில்லை. எவ்வளவோ அறிவியல் முன்னேற்றங்கள்... கண்டுபிடிப்புகள்... ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க பிரமிப்பாக தெரிகிறது.
எல்லாவற்றையும் தன் அறிவால், ஆற்றலால் தீர்மானிக்க முடிந்தாலும் தன் வாழ்க்கையை மட்டும் தீர்மானிக்க முடிவதில்லை.
அதுதான் வாழ்க்கையின் விளையாட்டு.
அஞ்சு வயதில் கேமரா வெளிச்சத்துக்குள் வந்தேன். எதைப் பற்றியும் நான் திட்டமிட்டது இல்லை. ஆனால் நான் சந்தித்த விஷயங்களையும் சாதித்த விஷயங்களையும் திரும்பி பார்க்கும் போது எனக்கே ஆச்சரியமாக இருக்கும்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக உங்கள் மீனாவால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் கதாநாயகி என்ற அந்தஸ்துடன் எப்படி நிலைத்து நிற்க முடிகிறது?
இப்போதும் 'திரிஷ்யம்-3' படத்தின் நாயகியாக ஒத்துக் கொண்டிருக்கிறேன். மீனா உங்களின் இந்த தொடர் வெற்றிக்கு காரணம் என்ன? என்பதுதான் பலரும் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி. அதற்கு நான் சொல்வது 'கடின உழைப்பு+ அதிர்ஷ்டம்' என்பது தான்.
கலைத் துறையில் என்னைவிட திறமையானவர்கள் பலர் உண்டு. ஆனாலும் அவர்களால் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியாமல் போகிறதே! அது ஏன்?
வாழ்க்கையில் வெற்றிபெற 75 சதவீதம் கடின உழைப்பு இருக்க வேண்டும். 25 சதவீதம் அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். அதிர்ஷ்டம் இல்லாமல் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிட்டாது. நேரம் நல்லா இருக்கே என்று வெறுமனே அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி உழைப்பை கைவிட்டாலும் வெற்றியைருசிக்க முடியாது. இது என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட அனுபவம்.
வாழ்க்கையில் நாம் நினைத்ததெல்லாம் நடப்பதில்லை. நினைக்காதது எல்லாம் நடக்கவும் செய்யும். எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்.
நான் பெற்ற இந்த அனுபவங்களால் என் மகள் விஷயத்தில் கூட அவள் இப்படி வரணும், அப்படி ஆகணும் என்று எதைப் பற்றியும யோசிக்க வில்லை. என் ஆசையை அவள் மீது திணிப்பதும் கிடையாது. அவளுடைய ஆர்வத்தை பொறுத்தே அவளுக்கு ஊக்கம் அளித்து வருகிறேன். இரண்டு அடிப்படையான விஷயங்களை மட்டும் தவறாமல் சொல்லி தருகிறேன். ஒன்று வாழ்க்கையில் படிப்பு ரொம்ப முக்கியம். இன்னொன்று நல்ல மனிதராக வாழ பழகிக் கொள் என்பதுதான்.
பொதுவாக யாரையும் காயப்படுத்தும்படி பேசக்கூடாது என்பதில் நான் கவனமாக இருப்பேன். உதாரணத்துக்கு ஒரு படத்தை எடுத்துக் கொள்வோம். அது ஒட்டுமொத்தமாக பிடிக்காமல் இருந்தால் கூட அதில் இருக்கும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை பற்றி பேசலாம். அதைவிட்டு அடுத்தவர்களை காயப்படுத்தி மகிழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வாழ்க்கையில் அதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளக்கூடாது என்று தான் நினைப்பேன். சொல்வேன். ஆனாலும் சில நேரங்களில் மனம் யோசிக்க வைத்து விடுகிறது. அந்த மாதிரி நேரங்களில் காய்த்த மரம் கல்லடிபடும் என்கிறார்களே... அது இதுதானோ என்று என்னை நானே ஆறுதல் படுத்தி கொள்வேன்.
மீனா உன் வாழ்க்கை பயணத்தை பற்றி சொல்லேன். அடுத்து உன்னுடைய திட்டம் என்ன? என்றால்... அப்படி எதுவும் இல்லை. வாழ்க்கை போகும் பாதையில் நானும் சென்று கொண்டிருக்கிறேன் என்பதுதான் நிஜம். இந்த உலகம் விசித்திர மானது.
அதில் வாழும் மனிதர்களும் விசித்திரமானவர்கள் தான். அவர்களுடன் வாழும் நாமும் நம்பிக்கையுடன் வாழ்க்கை பயணத்தை தொடருவோம்.
இதுவரையிலான எனது வாழ்க்கை பயண அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொணடதில் மனதில் நிறைவான மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.
மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.
நன்றி!!!