சிறப்புக் கட்டுரைகள்

பெண் குழந்தைகளின் பருவ வயது பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள்

Published On 2025-05-28 14:42 IST   |   Update On 2025-05-28 14:42:00 IST
  • பெண் குழந்தைகளை புரிதலோடு நடத்துங்கள், அவர்களுக்கு மரியாதை கொடுங்கள்.
  • உங்கள் குழந்தைகளின் தோழிகள் யார் என்று உங்களுக்கு தெரிய வேண்டும்.

பருவ வயதில் பெண் குழந்தைகள் உடல் ரீதியாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பல்வேறு பிரச்சினைகளையும், சவால்களையும் சந்திக்கிறார்கள். சில பெண் குழந்தைகள் தடம்மாறி செல்வதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் பருவ வயது பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் என்ன என்பது பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

பருவ வயதில் பெண் குழந்தைகளின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். எனவே அவர்களுக்கு முதலில் நல்லது எது, கெட்டது எது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். அதற்காக நாம் அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுப்பதுடன் அவர்களை சிறந்த பொழுதுபோக்கு விஷயங்களிலும் ஈடுபடுத்த வேண்டும். விளையாட்டுதுறை உள்ளிட்ட அவர்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் ஈடுபடுத்தலாம். அதன் மூலம் அவர்களை பருவ வயதில் ஏற்படும் தவறுகளில் இருந்து திசை திருப்புவது மிகமிக முக்கியம். அவர்களுக்கு தேவையில்லாத ஓய்வு நேரம் கொடுத்தாலே பிரச்சினைதான்.

விருப்பமான துறைகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும்:

இப்போதைய காலகட்டத்தில் அனைத்து குடும்பங்களிலும் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு சென்று விடுகிறார்கள். பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்ததும் பெண் குழந்தைகள் தனிமையாக இருப்பார்கள். தனிமையாக இருக்கும் போது அவர்கள் வீடியோ பார்ப்பார்கள், டி.வி. பார்ப்பார்கள், யூடியூப் பார்ப்பார்கள். அதில் வருகிற எல்லா விஷயங்களையும் பார்க்கும்போது அவர்களுடைய எண்ணங்கள் மாறுபடும்.

எனவே இந்த வயதில் அவர்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு துறையில் ஈடுபடுத்துங்கள். அதற்காக எல்லோரும் குழந்தைகளை இசை, பாட்டு, நடனம், கராத்தே வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்களுடைய பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு குழந்தைகளுக்கு என்ன செய்ய முடியுமோ, அதை செய்யுங்கள்.

மற்றவர்களின் வீடுகளில் வீட்டு வேலை செய்யும் பெண்கள், தங்கள் குழந்தைகள் தனியாக இருக்கும் என்று நினைத்தால், அந்த குழந்தையை தான் வேலை செய்யும் இடத்துக்கு அழைத்து செல்லலாம். தான் படும் கஷ்டத்தை அந்த குழந்தைகளுக்கு புரிய வைக்கலாம். அதன் மூலம் அந்த குழந்தைகளும் தாயின் கஷ்டத்தை புரிந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்வார்கள்.

மேலும் சின்னச் சின்ன வேலைகளில் அவர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்கான வழிமுறைகளை கொடுங்கள். படங்கள் வரைவது, நல்ல புத்தகங்கள் படிப்பது போன்ற விஷயங்களை செய்ய உங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டுங்கள். அவர்கள் தானாக வளர மாட்டார்கள். அவர்களை தானாக வளர விட்டால் தேவையில்லாத விஷயங்களை தேடி செல்வார்கள்.

தவறான வழிமுறைகளில் அவர்கள் போவது போல் இருந்தால் அதை குறை சொல்லாதீர்கள். அவர்களுடைய உணர்வுகளை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இந்த காலகட்டத்தில் உனக்கு இப்படித்தான் இருக்கும். பயப்படாதே, நாங்கள் உனக்கு துணை நிற்கிறோம் என்கிற நம்பிக்கையை முதலில் அந்த குழந்தைகளுக்கு கொடுங்கள்.

பெண் குழந்தைகளை மரியாதையோடு நடத்துங்கள்:

பெண் குழந்தைகள் தங்களின் அறியாத வயதில் யாரையாவது காதலிக்கிறார்கள் என்றால், அந்த விஷயங்களை பெரிதாக்கி, பிரச்சினையாக்கி, திட்டி காயப்படுத்தி அவர்களை குற்றவாளி ஆக்காதீர்கள். அவர்களுக்கு அதனுடைய பின் விளைவுகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுவும் சொல்கிற விதமாக சொல்ல வேண்டும்.

அவர்களை காயப்படுத்தாமல், இந்த விஷயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துக்கூறி, இதை எப்படி கடந்து வருவது என்பதற்கான வழிமுறைகளையும் நீங்கள் சொல்ல வேண்டும். நீங்கள் குறை சொன்னால் திரும்ப அந்த குழந்தைகள் உங்களிடம் பேசவே மாட்டார்கள்.

பெண் குழந்தைகளை புரிதலோடு நடத்துங்கள், அவர்களுக்கு மரியாதை கொடுங்கள். ஏனென்றால் அவர்கள் மரியாதையை விரும்பக்கூடியவர்கள். தேவையில்லாமல் அவர்களை மற்ற பெண்களுடன் ஒப்பிட்டு அவள் நல்ல பெண். நீ தவறு செய்து விட்டாய் என்று சொல்லாதீர்கள். அவர்களுக்கு தைரியம் கொடுங்கள். அதில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையை கொடுங்கள்.

உங்களால் முடியவில்லை என்றால் அவர்களை உங்களுக்கு நம்பிக்கை யானவர்களிடம் அழைத்து செல்லுங்கள். அல்லது ஆசிரியரிடம் அழைத்து செல்லுங்கள். அவர்களிடம் உங்கள் மகளை நல்வழிப்படுத்துமாறு சொல்லுங்கள். ஒருவேளை அவர்களிடம் நீங்கள் சொல்வதை உங்கள் குழந்தைகள் தவறாக எடுப்பார்கள் என்று நினைத்தால், உங்கள் குடும்பத்தில் உள்ள பெரிய வர்களிடம் சொல்லுங்கள். உங்கள் சமுதாயத்தில் உள்ள பெரி யவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் அந்த குழந்தையை சரியாக வழி நடத்துவார்கள். இந்த விஷயத்தை உணர்வு பூர்வமாக அணுகுவது மிக முக்கியம்.

அதே நேரத்தில் அந்த காலகட்டத்தில் அவர்களின் மன உணர்வுகளை நல்ல நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை கொடுங்கள். இன்று குழந்தைகள் தவறான விஷயங்களில் இருந்து விடுபட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. எனவே உங்கள் குழந்தைகளின் எண்ணங்களை திசை திருப்ப நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்.

உங்கள் குழந்தைகளின் தோழிகள் யார் என்று உங்களுக்கு தெரிய வேண்டும்:

சிலர் கேட்கலாம் நாங்கள் பருவ வயதில் நன்றாக தானே வளர்ந்தோம். எங்களுக்கு யாரும் எதுவும் சொல்லித் தரவில்லையே என்று கேட்கலாம். இந்த காலகட்டத்தில் பருவ வயது பெண்களுக்கு நிறைய மன அழுத்தம் இருக்கிறது. உங்கள் காலகட்டத்தில் டி.வி. இருந்திருக்காது. சமூக வலைதளங்கள் இருந்திருக்காது. ஆன்ட்ராய்டு போன் இருந்திருக்காது.

ஆனால் இன்று உங்களின் குழந்தைகளை பாதிக்கின்ற விஷயங்கள் நிறைய இருக்கிறது. இன்று எல்லாவற்றிலும் முதலில் வர வேண்டும், நன்றாக படிக்க வேண்டும், சமூக வலைதளத்தில் நன்றாக பதிவு போட வேண்டும் என்று நினைக்கின்ற குழந்தைகள் நிறைய இருக்கிறார்கள். அதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.

இவர்களுக்கு நடுவில் நீங்கள் உங்கள் குழந்தைகளை முன்னுக்கு கொண்டு வர வேண்டும். அதற்கு ஏற்ப அவர்களை ஊக்கப்படுத்தி பருவ வயதை நல்ல முறையில் கடந்து வருவதற்கான வழிமுறை களை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இதற்கு குடும்பம், தாய், தகப்பன், ஆசிரியர்கள், நல்ல நண்பர்கள் ஆகியோரின் ஒருங்கிணைப்பு மிக முக்கியம்.

உங்கள் குழந்தைகளின் தோழிகள் யார் என்று உங்களுக்கு தெரிய வேண்டும். உங்கள் மகளின் தோழிகள் எப்படி இருப்பார்களோ, உங்கள் மகளும் அப்படித்தான் இருப்பார்கள். எனவே உங்கள் மகளின் தோழிகளை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் அவர்கள் மட்டத்திலேயே பழகுங்கள். உங்கள் குழந்தைகள், உங்களை மீறி வேறு யாரிடமும் போய் அறிவுரை கேட்க முடியாத நிலையை உருவாக்குங்கள். குழந்தைகளுடன் பேச பெற்றோர் நேரம் ஒதுக்குவது இப்போது குறைவாகி விட்டது. உங்களின் நேரத்தை ஒதுக்கி உங்கள் குழந்தைகளுடன் பேசுங்கள். அவர்களுடன் நன்றாக பழகுங்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கொடுங்கள். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நல்ல முறைகளில் ஆதரவுக்கான வழிமுறைகளை கொடுங்கள். இது பெற்றோரின் கடமை.

தவறான விஷயத்தை தவறு என்று அழுத்தமாக சொல்லிக் கொடுக்க வேண்டும்:

உங்கள் குழந்தைகள் இந்த காலகட்டத்தை கடந்து வந்துவிட்டால் அவர்களின் இலக்கை அடைவது மிகவும் எளிது. நீங்கள் விட்டு விட்டால் அதில் இருந்து அந்த குழந்தைகள் எழுந்து வருவது கஷ்டம். அவர்கள் இளம் பருவத்தை நல்ல முறையில் கடப்பதற்கு முக்கிய தேவை குடும்பத்தினுடைய தாக்கம். இரண்டாவது தாய், தகப்பன். மூன்றாவது குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள். நான்காவது சமூக வலைதளத்தில் ஒரு விஷயத்தை பார்த்தால் அது தவறு என்றால், தவறு என்று உறுதியாக சொல்ல வேண்டும்.

உதாரணத்துக்கு ஆண் குழந்தைகளுக்கு புகைபிடித்தல் தவறு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். 10 பேர் வெளியே செல்லும் இடத்தில் 2 பேர் மது குடிப்பார்கள். மீதமுள்ளவர்களை குடிக்க வைப்பார்கள். அது வேண்டாம் என்று சொல்வதில் உறுதியாக இருக்க வேண்டும். அதுபோல் தான் பெண் குழந்தைகளிடமும் தவறான விஷயங்களை தவறு என்று அழுத்தமாக சொல்லிக்கொடுக்க வேண்டும்.

இதை கற்றுக்கொண்டு வளரும் குழந்தைகள், தவறான விஷயங்களை எளிதாக கடந்து செல்ல முடியும். எந்த சூழ்நிலைகள் வந்தாலும் அதை எதிர் நோக்குவதற்கான மன தைரியம் அவர்களுக்கு இருக்கும். அந்த தைரியத்தை உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தான் வரவழைக்க வேண்டும். அந்த தைரியம் மற்றும் உங்களின் முழுமையான ஆதரவை அவர்களுக்கு கொடுத்தால் உங்கள் குழந்தைகள் எந்தவித பிரச்சினைகள் மற்றும் கெட்ட பழக்க வழக்கங்களில் சிக்காமல் பருவ வயதை எளிதாக கடந்து வருவார்கள்.

இன்று முன்னேறிய நிலையில் இருக்கும் பெண்கள் பலர், தங்களின் பருவ வயதில் பாலியல் பிரச்சினைகளை எப்படி கடந்து வந்துள்ளார்கள் என்பதை எடுத்துக்கூறியும் புரிய வைக்கலாம். அவர்கள் இன்று உயர்ந்த இடத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டலாம்.

இதை நீங்கள் சரியான முறையில் செய்து, உங்கள் குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்தால், உங்கள் குழந்தைகளின் பருவ வயது பிரச்சி னைகளுக்கு முழுமையான தீர்வுகள் கிடைக்கும். அவர்கள் நல்ல முறையில் பருவ வயதை கடந்து தங்களின் இலக்கை அடைவார்கள். எதிர்காலத்தில் அவர்கள் ஒரு நல்ல நிலையில் இருப்பார்கள்.

Tags:    

Similar News