- ஜாதகரீதியாக இந்த யோகம் ஆரம்பிக்கும் இடத்தை வைத்து உண்டாகும் பலன்களை பார்க்கலாம்.
- திருமணத்திற்குப் பின்னர் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
பல்வேறு விந்தைகளையும் வினோதங்களையும் தன்னுள் அடக்கியது ஜோதிடம். இதை புரிந்து கொள்ள பிரபஞ்ச சக்தியின் அனுக்கிரகம் வேண்டும். ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்ட பல்வேறு யோகங்களில் மிகச்சிறப்பான யோகமானது கிரக மாலிகா யோகம். ஒரு ஆண்டின் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே உருவாகக்கூடிய யோகம். இந்த யோகம் கிடைக்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.மிக அரிதாக உருவாகக்கூடிய கிரக அமைப்பு. இந்த கிரக நிலவரத்தில் பிறந்தவர்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் சாதனையாளர்களாக வலம் வருவார்கள். இவர்கள் தொட்டது துலங்கும். பட்டது பூக்கும் தன்மை கொண்ட ராஜயோக கிரக சஞ்சாரமாகும். தற்போது வருட கிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சியாகி உள்ள இந்த நிலையில் கோட்ச்சார ரீதியாக கிரக மாலிகா யோகம் ஏற்பட்டு உள்ளது. இந்த யோகம் 23.5.2025 அன்று மதியம் 1.05 மணி வரை நீடிக்கிறது.
அதன் பிறகு 24.5.2025 மதியம் 1.48 மணி முதல் 26.5.2025 மதியம் 1.41 மணி வரை உள்ளது. மறுபடியும் 31.5.2025 முதல் 6.6.2025 வரை ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் மிகவும் பாக்கிய பலன் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். அதுவும் மகர லக்னமாக பிறந்தால் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும்.
கிரக மாலிகா யோகம்: ராசிக் கட்டத்தில் குறைந்தபட்சம், 6 முதல் 8 கட்டங்களில் கிரகங்கள் வரிசையாக மாலை தொடுத்தது போல் அமையும் போது அது கிரகமாலிகா யோகமாகும். 6 கட்டங்களுக்கு குறைவாக கிரகங்கள் அமையும் போது கிரக மாலிகா யோகமாக கணக்கிடப்படாது. இந்த யோகம் வெற்றி மற்றும் செல்வத்தை அடைய உதவுகிறது. எண்ணற்ற நல்ல பலன்களைத் தருகிறது. இது ஜாதகரை சமுதாயத்தில் தலை சிறந்த குடி மகனாக மாற்றுகிறது. எதையும் எதிர்கொண்டு வெல்லும் வலிமை படைத்தவர்களாக இருப்பார்கள். யோகம் என்று ஒன்று இருந்தால் அதில் சில அசவுகரியங்களும் இருக்கும். அதே போல் இது அவரவர்களின் ஜென்ம லக்ன ரீதியாக சில மாறுபட்ட பலனை தந்தாலும் புகழ், செல்வாக்கு, அந்தஸ்து, கவுரவம் உண்டு. சுய ஜாதகரீதியாக இந்த யோகம் ஆரம்பிக்கும் இடத்தை வைத்து உண்டாகும் பலன்களை பார்க்கலாம்.
மாலிகா யோகம் லக்னத்தில் ஆரம்பித்தால்: ஜாதகர் எதையும் சமாளிக்கும் திறன் உள்ளவராக இருப்பார். தோல்வி பயம் இல்லாதவர். நல்ல உடற்கட்டு, புகழ், ஸ்திரபுத்தி உண்டு. நீண்ட ஆயுள் உள்ளவராக இருப்பார். நல்ல குணங்கள் உள்ளவராக இருப்பார். சுய முயற்சியில் முன்னேற கூடிய வராக இருப்பார். பொதுநலம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உள்ளவராக இருப்பார்கள்.
மாலிகா யோகம் 2ம்மிடத்தில் ஆரம்பித்தால்: செல்வாக்கு, சொல்வாக்கு மிகுந்தவர்கள். இவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டே குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள். பேச்சுத்திறமை உள்ளவர்கள். இனிமையாகப் பேசி குடும்பத்தை திறம்பட நிர்வகித்து செல்வார்கள். நல்ல குடும்பம் அமையும். பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலில் தனித்திறமையுடன் மிளிர்வார்கள். பொருளீட்டுவதிலும்,தனம் சேர்ப்பதிலும் கவனம் செலுத்துவார்கள். வாக்கு வன்மை மிகுந்தவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள்.
மாலிகா யோகம் 3ம்மிடத்தில் ஆரம்பித்தால்: வீரம், விவேகம், நிறைந்த செல்வம் உடையவர்கள். தன் சுய முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். கடினமான விடாமுயற்சி உள்ளவராக இருப்பார்கள். சுயநலவாதியாக இருப்பார்கள். பிறர் கூறும் கருத்தை ஏற்காமல் தான் சொல்வதே சரி என்று வாதம் செய்பவர்கள். தைரியம் உள்ள வராகவும் துணிச்சல் மிக்கவராகவும் இருப்பார்கள். கதை, கட்டுரை, கவிதை எழுதுவதில் ஆர்வம் உண்டு. ஆபரணச் சேர்க்கை உண்டு.
மாலிகா யோகம் 4ம்மிடத்தில் ஆரம்பித்தால்: தாய், தாய்வழி ஆதாயம் மிகுந்தவர்கள். சுகவாசியாக இருப்பார்கள். சொத்து சுக சேர்க்கை மிகுதியாக உள்ளவர்கள். நல்ல கல்வி அறிவு உண்டு. உயிரின வளர்ப்பு, விவசாய நாட்டம் அதிகம். உடல்நலத்தைப் பேணிக் காப்பதிலும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலும் தனி கவனம் செலுத்துவார்கள். பிறரால் விரும்பப்பட கூடியவராக இருப்பார்கள். சம யோசித புத்தியும், சாதுர்யமும் உள்ளவராக இருப்பார்கள்.
ஐ.ஆனந்தி
மாலிகா யோகம் 5ம்மிடத்தில் ஆரம்பித்தால்: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நின்றால் ஜாதகர் அதிர்ஷ்டம், பேரதிர்ஷ்டம் நிரம்பியவர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவார்கள். இரக்க குணம் உண்டு. தானம், தர்மம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். ஆன்மீக நாட்டம் இருக்கும். குணத்தில் பணிவும் அடக்கமும் இருக்கும். ஜாதகரிடம் இயல்பாகவே நற்குணங்கள் இருக்கும். குல தெய்வ அருள் நிரம்பியவர்கள். தாத்தாவின் உருவ ஒற்றுமை இருக்கும். குழந்தைகள் மேல் அதிக பற்று இருக்கும். நல்ல புத்திரபாக்கியம் உள்ளவராக இருப்பார்கள்.
மாலிகா யோகம் 6ம்மிடத்தில் ஆரம்பித்தால்: ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு லக்னாதிபதி சம்பந்தம் இருந்தால் கடன்,நோய், வம்பு வழக்குகள் இதில் ஏதேனும் ஒன்று இருக்கும். எல்லோரிடமும் பகையையும், வெறுப்பையும் காட்டக்கூடியவராக இருப்பார்கள். நோயும் ஜாதகரும் இரட்டை பிறவிகளாக வாழ்வார்கள். உடலில் ஏதாவது நோய் தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.
பிறர்மீது குற்றம் கண்டுபிடிப்பது மற்றும் பிறர் பொருளின் மீது ஆசைப்படுவது போன்ற குணங்கள் இருக்கும். எதிலும் திருப்தி அடையாதவராக இருப்பார்கள். அனைத்திலும் குறைபட்டுக் கொண்டே இருப்பார்கள்.
மாலிகா யோகம் 7ம்மிடத்தில் ஆரம்பித்தால்: வாழ்க்கைத் துணையால் வளர்ச்சி உண்டு. சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை நிறைந்த நல்ல வாழ்க்கைத் துணை அமையும். மனைவிவழி ஆதாயமும் உண்டு. திருமணத்திற்குப் பின்னர் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இன்பம், துன்பம் என அனைத்து சூழ்நிலைகளிலும் மனைவியின் ஆதரவும், அரவணைப்பும் உண்டு. ஜாதகரின் முன்னேற்றத்திற்கு வாழ்க்கைத் துணை பக்கபலமாக இருப்பார். அதிக நண்பர்கள் உண்டு. நண்பர்களின் ஆதரவும், ஆதாயமும் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் உண்டாகும்
மாலிகா யோகம் 8ம்மிடத்தில் ஆரம்பித்தால்: நித்திய கண்டம், பூரண ஆயுள் என வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். ஆயுள் பயம் இருந்து கொண்டே இருக்கும். தாழ்வு மனப்பான்மை மிகுந்தவர்கள். விரக்தி அதிகம் இருக்கும். வாழ்க்கை அவமானம், கேவலம், துக்கம், நிறைந்ததாக இருக்கும். இனம் காணமுடியாத நோய் இருக்கும். அங்கீனம், திருட்டுத்தனம் உண்டு.
இழப்புகள் அதிகம் இருக்கும். சட்டத்திற்குப் புறம்பான சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள். சொத்திற்காக கோர்ட் கேஸ் என்று அலைந்து கொண்டிருப்பார்கள். அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்வை தொலைப்பார்கள். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு. சிலருக்கு பினாமி சொத்து அல்லது உயில் சொத்து கிடைக்கும்.
மாலிகா யோகம் 9ம்மிடத்தில் ஆரம்பித்தால்: குடும்பத்தில் மூத்த வாரிசாக இருப்பார்கள். தர்ம ஸ்தாபனம் நடத்துவர்கள். ஆன்மீக நாட்டம் மிகுந்தவர்கள். கோவில் விழாக்களில் முன்னே நின்று தலைமை தாங்குபவர்கள். ஆன்மீக குருமார்களின் ஆசி உண்டு. புனித யாத்திரை செல்லும் பாக்கியம் உண்டு. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று வாழ்வார்கள். அழியாப்புகழ் கிடைக்கும். வேதங்கள் கற்பவர்கள். ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடிப்பார்கள். சுய ஒழுக்கம் உள்ளவராக இருப்பார்கள். வெளிநாட்டு வருமானம் உண்டு. தந்தை, தந்தை வழி முன்னோர்களின் நல்லாசி உண்டு. பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் உண்டு.
மாலிகா யோகம் 10ம்மிடத்தில் ஆரம்பித்தால்: ஜாதகர் சுய தொழில் செய்பவராக இருப்பார்கள் அல்லது கவுரவப் பதவியில் இருப்பார்கள். சிலர் பரம்பரை குலத்தொழிலை நடத்துவார்கள். தொழில் வியாபாரத்தில் தனி முத்திரை பதிப்பவர்கள். பொருளாதாரத்தில் வளர்ச்சியும் புகழும் கிடைக்கும். அடிமைத் தொழிலை விரும்பாத கடினமான உழைப்பாளியாக இருப்பார்கள். தாய், தாய்வழி உறவுகளுடன் தொழில் தொடர்பு உண்டு. உழைப்பை நம்புபவராகவும் இருப்பார். தொழிலில் நேர்மையை கடைபிடிப்பார். சுய கவுரவம் உள்ளவராக இருப்பார்கள். நல்ல கல்வி அறிவு உண்டு. படித்த படிப்பிற்கு சம்பந்தமான தொழில் உத்தியோகம் உண்டு.
மாலிகா யோகம் 11ம்மிடத்தில் ஆரம்பித்தால்: ஜாதகர் திரண்ட சொத்து, ககம் நிரம்பியவர். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமும் அனு கூலமும் கிடைக்கும். செல்வம், செல்வாக்கு நிரம்பிய வாழ்க்கை துணை உண்டு. 7-ம் அதிபதி பலம் குறைந்து இருந்தால் இருதார தோஷத்தை கொடுக்கும். பூர்வீகச் சொத்துக்களால் லாபமும் ஆதாயமும் கிடைக்கும். 10-ம் அதிபதியின் தொடர்பு இருந்தால் பல தொழில் செய்து லாபம் சம்பாதிப்பார்கள். கூட்டுத் தொழில் வெற்றி உண்டு. வழக்குகளில் வெற்றி உண்டு.
மாலிகா யோகம் 12ம்மிடத்தில் ஆரம்பித்தால்: ஜாதகர் நிறைய விரயங்களை சந்திப்பார். ஜாதகர் தனது செயல்பாடுகளால் நிறைய விரயங்களை உண்டாக்குவார். வரவுக்கு மீறி செலவு செய்வார். கட்டுக்கடங்காத விரயம் இருந்து கொண்டே இருக்கும். சேமிக்கும் பழக்கம் இருக்காது. கடன் பெற்றும் வீண் செலவு செய்ய தயங்க மாட்டார். சோம்பேறியாக இருப்பதுடன் சொந்த ஊரை விட்டு அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செய்யும் தொழிலில் இருப்பார். பிறர் மீது நம்பிக்கை இல்லாதவராக இருப்பார்கள். வீண் வம்பு, வழக்கு, விரோதங்களை தானே உருவாக்குவார். கடன், வம்பு வழக்கிற்காக அடிக்கடி தலைமறைவாக வாழ்வார்கள்.
ஒரு ஜாதகத்தில் நவக்கிரகங்களும் மாலை போன்ற அமைப்பில் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்த ராசிகளில் வரிசையாக அமைந்திருக்கும் இந்த யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் உயர்வான யோகமாக கருதப்படுகிறது. கிரக மாலிகா யோகத்தில் லக்னத்திற்கு அசுப கிரக சம்பந்தம் இருக்க கூடாது.
லக்னம் சுத்தமாக இருப்பது நலம். லக்னத்தையும் லக்னாதிபதியையும் எந்த கிரகமும் பார்க்கக் கூடாது. லக்னம், லக்னாதிபதிக்கு அதிக கிரகங்களின் சம்பந்தம் இருந்தால் அனுபவிக்க வேண்டிய வினைப் பதிவு மிகைப்படுதலாக இருக்கும். லக்னம் வலிமை குறைந்து அனைத்து முயற்சியிலும் தோல்வியை சந்திப்பார்கள்.
அதே போல் லக்னாதிபதி பகை, நீசம், வக்ரம் அஸ்தமனம் அடைந்தாலும் சுபத்தன்மை மட்டுப்படும். நவ கிரகங்களும் தனித்தன்மையான நிலையில் இயங்கினால் இந்த யோகம் தனித்துவம் கொண்ட இயல்புகளுடன் பலன் தரும். ஒவ்வொரு கிரகமும் மற்ற கிரகங்களுடன் தொடர்பு படாமல் சுயமாக செயல்பட்டால், கூட்டு விளைவுகள் இன்றி அந்த ஜாதகம் தனித்தன்மையுடன் இயங்கும். இந்த யோகத்தில் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து அஸ்தமனம், கிரகயுத்தம் போன்ற நிலைகளை பெரும்பான்மையாக அடைவதில்லை.
பகைக் கிரகங்கள் ஒரு ராசியில் இணையும் போது அந்த வீட்டிற்கான பலன்கள் ஜாதகருக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. நட்புக் கிரகங்கள் இணைவது யோகமான பலன்களை தனித்தன்மையான பலன்களை அதிகரிக்கும். இந்த யோகத்தில் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணையாமல், அடுத்தடுத்த கட்டங்களில் வரிசையாக அமர்ந்து சுப நன்மைகளை அளிப்பதே இந்த யோகத்தின் சிறப்பம்சமாகும்.
செல்: 98652 20406