சிறப்புக் கட்டுரைகள்

பருவ வயதில் தடம்மாறும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள்

Published On 2025-05-14 14:50 IST   |   Update On 2025-05-14 14:50:00 IST
  • என் மகளை எப்படி கையாளுவது என்று எனக்கே தெரியவில்லை டாக்டர் என்பார்கள்.
  • பெண் குழந்தை சிறந்த கல்வி பெற்று எதிர்காலத்தில் ஒரு நல்ல வேலைக்கு சென்றால் அவர்களின் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கும் என்பதை அந்த குழந்தைக்கு உணர்த்த வேண்டும்.

பருவ வயதில் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே அவர்களின் எதிர்பாலினத்தவர் மீது தானாகவே ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. இதில் பருவ வயது பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர் அவர்கள் அந்த பருவ வயதை எப்படி நல்லபடியாக கடந்து வர வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது இல்லை.

சினிமாவில் கதாநாயகனோ, கதாநாயகியோ தவறான பழக்க வழக்கங்களை கொண்டிருந்தால் இதுதான் சரியான விஷயம் என்று நினைத்து அதை கடைபிடிக்க முயல்வார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களை இந்த காலகட்டத்தில் நல்வழிப்படுத்தும் முயற்சிகளில் பெற்றோர் ஈடுபட வேண்டும்.

எது சரி, எது தவறு என்பதை தெளிவாக சொல்ல வேண்டும்:

இதனை தவிர்ப்பதற்கு சினிமா பார்க்காதே என்று அவர்களிடம் சொல்ல முடியாது. ஆனால் அதில் எது சரி, எது தவறு என்பதை தெளிவாக எடுத்துச்சொல்ல வேண்டும். அதையும் சொல்கிற விதத்தில் சொல்ல வேண்டும். நீ இதை செய்யாதே என்று சொல்வதை விட, இந்த தவறை நீ செய்யும்போது என்னென்ன பின் விளைவுகள் ஏற்படலாம் என்பதை உதாரணத்துடன் தெளிவாக சொல்ல வேண்டும்.

தாய்மார்கள் பலர் பள்ளி வகுப்புதான் முடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி உதாரணத்துடன் சொல்ல முடியும் என்று ஒரு கருத்தரங்கில் என்னிடம் சிலர் கேட்டனர். பருவ வயதில் ஏற்படும் பாலின ஈர்ப்பு பற்றி ஒரு பெண்ணுக்கு தனது தாயாரிடம் கேட்க தெரியாது. ஆனால் அந்த குழந்தைகள் தவறான செயல்களில் ஈடுபடும்போது அது தவறு என்பது அவரது தாயாருக்கு தெரியும்.

எனவே சில நேரங்களில் பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருந்தால் கூட அந்த குழந்தைகள் செய்யும் தவறால் பிரச்சினைகள் வரும் என்று கருதி அந்த குழந்தையை பாதுகாக்க அனைத்து தாய்மார்களும், அவர்களுடைய தந்தைகளும் முயற்சி செய்வார்கள். அப்படியென்றால் அதற்கான வழிமுறைகளை உதாரணத்துடன் சொல்வது எப்படி என்று அவர்கள் யோசிக்க வேண்டும்.

அவர்களுக்கு தெரியவில்லை என்றால் அவர்களைவிட பெரியவர்களாக, அனைத்தும் தெரிந்தவர்களாக ஒரு ஆசிரியர் இருக்கலாம். அல்லது அவர்களுக்கு நல்லது செய்யும் ஒரு பெரிய மனிதர் இருக்கலாம். அவர்களிடம் போய் கேட்கலாம். இதை கண்டிப்பாக பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் மூலம் தங்களின் மகளை நல்வழிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

குழந்தைகளின் தோழியாக பெற்றோர் மாற வேண்டும்:

தங்களின் மகள் நிலைமை பற்றி என்னிடம் வரும் நோயாளிகள் சிலர் கூறுவது உண்டு. என் மகளை எப்படி கையாளுவது என்று எனக்கே தெரியவில்லை டாக்டர் என்பார்கள். என் மகள் என்னிடம் சண்டை போடுகிறாள். தன்னுடைய தோழிகளுடன் சினிமாவுக்கு போவேன் என்று சொல்கிறாள். ஞாயிற்றுக்கிழமை லீவு என்றால் வெளியில் செல்ல வேண்டும் என்று சொல்கிறாள்.

அவளை எப்படி பாதுகாப்பாக அனுப்புவது என்று எனக்கு தெரியவில்லை. அவள் அங்கு போய் ஏதாவது தப்பாக நடந்து கொள்வாளோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. எனவே அவளை எப்படி நல்வழிப்படுத்துவது என்றே எனக்கு தெரியவில்லை என்று நிறைய பெற்றோர்கள் சொல்கிறார்கள்.

அதே நேரத்தில் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம், தோழிகளுடன் வெளியில் செல்வது தப்பு என்று கூறினால், அதன்பிறகு அவர்கள் உங்களிடம் வேறு ஏதாவது காரணத்தை கூறி உங்களிடம் சொல்லாமல், உங்களுக்கு தெரியாமல் வெளியில் போவார்கள். ஏனென்றால் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் நட்புறவோடு பழகவில்லை.

நீங்கள் நட்புறவோடு பழகாததால் பருவ வயதில் ஏற்படும் பாதிப்புகளுக்கான தீர்வுகளை அவர்கள் தங்களின் தோழிகளிடம் போய் கேட்கிறார்கள். எனவே இதில் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்கள் குழந்தைகளின் தோழியாக மாற வேண்டும்.

அவர்களுக்கான அந்த தோழி நீங்களாக இருந்தால் இதுபோன்ற பிரச்சினைகளை எளிதாக தீர்க்க முடியும். பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்திருந்தாலும் உங்கள் மகளுக்கு நல்வழி காட்டும் உங்களை மிஞ்சிய தோழி வேறு யாரும் இருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் மகளிடம் உனக்கு என்னம்மா பிரச்சினை? உனக்கு நான் என்ன பண்ண வேண்டும்? உனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தயங்காமல் சொல், தீர்த்து வைக்கிறேன் என்று நீங்கள் போய் அவர்களிடம் பேசினால் அவர்கள் தினமும் நடக்கும் ஏதாவது ஒரு விஷயத்தையோ அல்லது சம்பவங்களையோ உங்களிடம் சொல்வார்கள்.

அப்போது அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் உங்களுக்கு தெரிய வரும். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு சொல்ல உங்களுக்கு தெரியவில்லை என்றால் கூட, அதை குறையாகவோ, குற்றமாகவோ சொல்லாமல், இதை எப்படி சரி செய்வது என்று உங்களுக்கு தெரிந்த அனுபவமிக்க யாரிடமாவது கேட்க வேண்டும்.

நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் பழகியவர்கள், உங்களுடன் படித்தவர்கள், உங்களை விட அதிக விஷயங்களை தெரிந்தவர்கள் என அவர்களிடம் போய் கேட்கலாம்.

குழந்தைகளை வழி நடத்துவதற்கான ஆலோசனை:

எனக்கு தெரிந்து ஒரு பெண் தூய்மை பணியாளர் இருந்தார். அவரது மகளுக்கு பருவ வயதில் இந்த மாதிரி ஒரு பிரச்சினை. அவர் தான் வேலைபார்க்கும் மருத்துவமனையின் நிர்வாகியான பெண் மருத்துவரிடம் போய் இதை சொன்னார். டாக்டர் எனது மகளுக்கு 16 வயதாகிறது. அவள் ஒரு பையனை காதலிக்கிறேன் என்று சொல்கிறாள். அவள் தடம் மாறி செல்வதால் இதை எப்படி கையாள வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை என்று சொன்னார்.

இதை அவர் அந்த மருத்துவரிடம் போய் சொல்லக் காரணம், அவரால் தனது மகளை கட்டுப்படுத்த முடியவில்லை. கட்டுப்பாடு விதித்தால் அவள் வரம்புமீறி போய் விடுவாளோ அல்லது தப்பு பண்ணி விடுவாளோ என்று பயந்தார்.

இதுபோல் தான் இந்த காலகட்டத்தில் நீங்கள் அவர்களை நல்ல முறையில் வழி நடத்துவதற்கு விஷயம் தெரிந்த ஒருவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். இந்த ஆலோசனை உங்கள் குழந்தைகளை வழி நடத்துவதற்கு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

அதே நேரத்தில் அவர்களை உங்கள் குழந்தைகளுக்கு நேரடியாக ஆலோசனை சொல்ல வைக்கக்கூடாது. அப்படி அவர்கள் உங்கள் மகளிடமே நேரடியாக ஆலோசனை சொன்னால், அதன் பிறகு அவர்கள் உங்களை ஒரு வழி பண்ணி விடுவார்கள். நீ அவர்களிடம் என்னைப்பற்றி சொல்லி விட்டாயா? என்னைப்பற்றி அசிங்கமாக சொல்லி விட்டாயா? அவர்கள் என்னை என்ன நினைப்பார்கள் என்று சொல்வார்கள்.

எனவே அவர்களிடம் இருந்து நீங்கள் ஆலோசனையை பெற்று அதை நீங்கள் உங்கள் மகளுக்கு புரியும் விதத்தில் சொல்ல வேண்டும். அவர்களுடைய எதிர்கால நோக்கம் என்ன என்பதை தெளிவாக யோசித்து சொல்ல வேண்டும்.

உங்கள் வாழ்க்கையையே உதாரணமாக கூறி விளக்கலாம்:

இன்று அந்த குழந்தையின் தாய் ஒரு தூய்மை பணியாளராக இருக்கிறார். அவர் தனது குழந்தையை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். இந்த பெண் குழந்தை சிறந்த கல்வி பெற்று எதிர்காலத்தில் ஒரு நல்ல வேலைக்கு சென்றால் அவர்களின் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கும் என்பதை அந்த குழந்தைக்கு உணர்த்த வேண்டும்.

அவர் தினமும் பார்க்கின்ற அதிகாரிகள் மட்டத்தில் இருப்பவர்கள் எந்த மாதிரி ஒரு நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது? அவர்களின் முன்னேற்றத்துக்கான காரணம் படிப்பும் கல்வியும் தான் என்று அந்த குழந்தைக்கு நீங்கள் போதிய உதாரணங்களை கூறி நன்றாக புரிய வைக்க வேண்டும்.

இது போன்ற குழந்தைகளிடம் நீ செய்தது தவறு என்று சொல்வதை விட, இந்த கால கட்டத்தில் பக்குவமாக நீ யோசித்து முடிவு செய்து, கல்வியில் கவனம் செலுத்தினால் உன் வாழ்க்கை எதிர்காலத்தில் நன்றாக இருக்கும் என்பதை அவர்களின் நிலையில் இருந்து உதாரணத்துடன் எடுத்துக்கூறினால் அவர்கள் நல்வழிக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறது.

உதாரணத்துக்கு அலுவலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளிடமோ அல்லது அலுவலகத்தில் உள்ள மானேஜரிடமோ மகளை அழைத்து சென்று காண்பித்து இவர்கள் வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது பார். இவர்கள் வாழ்க்கையில் இந்த அளவுக்கு முன்னேறி இருப்பதற்கு காரணம் கல்வி. நான் கல்வி கற்காததால் தூய்மைப் பணியாளராக இருக்கிறேன் என்பது போல நீங்கள் செய்யும் வேலையையும், உங்களையும் உதாரணமாக காண்பித்து கூறலாம்.

அப்படி சொல்லும்போது அந்த குழந்தைக்கு நிஜ வாழ்க்கை புரியும். ஆனால் அந்த குழந்தைகளிடம் வாழ்க்கையில் வெற்றி பெற்று சாதித்த பிரபலங்களை காட்டி நீ அவரை போல் ஆக வேண்டும். அதற்காக உனது இலக்கை நோக்கி செல் என்று சொன்னால் கேட்க மாட்டார்கள்.

ஆனால் உங்கள் வீட்டில் இருக்கிற உங்களுடைய வாழ்க்கைத் தரத்தையும், உங்கள் அலுவலக அதிகாரியாக இருக்கின்ற பெண்ணின் வாழ்க்கைத் தரத்தையும் ஒப்பிட்டு கூறினால் புரிந்து கொள்வார்கள்.

இதுபற்றி உங்களின் குழந்தைகளுக்கு உணர்த்துவதற்காக நீங்கள் மருத்துவர்களிடம் கூட கலந்தாலோசனை செய்யலாம். அதன் மூலம் அவர்களுக்கு நீங்கள் என்னென்ன சிறந்த அறிவுரைகள் கூறலாம் என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

Tags:    

Similar News