பருவ வயதை கடக்கும் பெண்கள் அனுபவிக்கும் சவால்கள்
- ஒரு ஆண், பெண் இருவரும் குழந்தை பருவம் முதலே நண்பர்களாக இருப்பார்கள்.
- பருவ வயதில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கிறோம்
பருவ வயது எனப்படும் பதின்ம வயது காலகட்டத்தில் ஹார்மோன்களால் ஏற்படுகிற மாற்றங்கள் காரணமாக ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே ஒரு முக்கியமான விஷயம் நிகழ்கிறது. அதாவது அவர்களின் எதிர்பாலினத்தவர் மீது தானாகவே ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த மாற்றங்கள் மற்றும் எதிர்பாலின ஈர்ப்பு காரணமாக அடுத்தடுத்து அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு விஷயங்கள் நடக்கின்றன.
பதின்ம வயதில் இயற்கையாகவே நடக்கிற விஷயங்கள்:
ஒரு ஆண், பெண் இருவரும் குழந்தை பருவம் முதலே நண்பர்களாக இருப்பார்கள். அதுவரை நண்பர்களாக இருப்பவர்கள் பதின்ம வயதை எட்டியதும் அவர்களுக்குள் பையன், பெண் என்கிற உணர்வு வந்துவிடும். அப்போது அந்த பெண்ணுக்கு தான் அழகாக இருக்கிறேனா, அடுத்தவர்கள் தனது அழகை பார்த்து பாராட்டுகிறார்களா, தனது உடல் மாற்றங்கள் நன்றாக இருக்கிறதா என்கிற எண்ணங்கள் தோன்றுகிறது.
அதேபோல் அந்த பையனுக்கும் தான் மற்றவர்களை கவரும் வகையில் இருக்கிறேனா, தான் பேசுவது ரசிக்கும் படியாக இருக்கிறதா, தான் ஒரு சினிமா கதாநாயகன் மாதிரி இருக்கிறேனா என்பது போன்ற பல எண்ணங்கள் அவரது மனதுக்குள் ஏற்படுகிறது.
ஆனால் அவை அனைத்தும் தவறான விஷயம் அல்ல. இது பதின்ம வயது வரும்போது இயற்கையாகவே நடக்கிற விஷயங்கள். இன்றைக்கு உலகத்தில் வாழும் எல்லா மனிதர்களும் இந்த மாதிரியான நிலையை கடந்து தான் வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த பருவ வயதை கடப்பது என்பது பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய சவால். ஏனென்றால் பருவ வயது காலகட்டத்தில் இந்த குழந்தைகளின் மனதில் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று பலருக்கும் தெரிவதில்லை.
பருவ வயதில் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்:
பருவ வயதில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கிறோம். நீ இதை செய்யாதே, இதை பார்க்காதே, இது தப்பு, நீ வெளியில் போகாதே, நீ வயதுக்கு வந்துவிட்டாய், நீ அவனுடன் பேசாதே, அங்கு தனியாக போகாதே என இப்படியெல்லாம் வரையறைகளை விதிக்கிறோமே தவிர, இதன் விளைவுகளை பற்றி நாம் எப்போதும் நினைப்பது இல்லை. இந்த வரையறைகளை குழந்தைகள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்றும் நாம் யோசிப்பதில்லை.
ஆனால் அவர்களுக்கு இந்த பருவத்தில் அவர்களுடைய எதிர்பாலினத்தவர் மீது ஈர்ப்பு வருவதால் அவர்களுடன் நிறைய பேச வேண்டும் என்று தோன்றும். யாராவது அவர்களை பாராட்டினால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அப்போது இன்னும் தங்களை பாராட்ட வேண்டும் என்று நினைக்க தோன்றும். யாராவது அன்பாக பேசினால் அவர்கள் மீது தானாகவே ஈர்ப்பு அதிகமாகும்.
அவர்கள் ஒரு உதவி செய்துவிட்டால் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் போல, மனதளவிலும் உணர்வு பூர்வமான மாற்றங்கள் ஏற்படும். அதைவிட முக்கியமான ஒன்று, அவர்களுடைய உடல் ரீதியான ஹார்மோன்கள் மாற்றத்தினால் மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதற்கான பண்புகள் அவர்களிடம் அதிகரிக்கும்.
அப்படியென்றால் அவர்கள் என்ன நினைப்பார்கள், தாங்கள் வயதுக்கு வந்துவிட்டோம், பெரியவர்கள் ஆகி விட்டோம் என்று கருதி அதுபோல யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி ஒரு முதிர்ச்சியான எண்ணம் அவர்களுக்கு தோன்றும். அப்படி யென்றால் வயதுக்கு வந்தவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்களோ, அதையெல்லாம் செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
பெண்களை வழிமுறைப்படுத்துவதில் பெற்றோருக்கு இருக்கும் சவால்கள்:
நாம் வயதுக்கு வந்து விட்டோம் என்கிற நினைவு அவர்களுக்கு திரும்பத் திரும்ப வரும். எனவே நல்ல விஷயங்களை நினைப்பது என்பது இந்த காலகட்டத்தில் மிகவும் குறைவாக இருக்கும். ஏனென்றால் மற்றவர்களை கவருகிற விஷயங்கள் என்பது இந்த ஹார்மோன்களின் மாற்றங்களினால் ஏற்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் அவர்களிடம் எல்லா விஷயங்களிலும் மாற்றங்கள் ஏற்படும்.
எதிர்பாலின ஈர்ப்பு, அதனால் ஏற்படும் உறவுகளுக்கான தூண்டுதல், அதில் இருக்கிற இன்பம், அதில் இருக்கிற ஆர்வம் ஆகியவை எல்லாம் அதிகமாக ஏற்படும். எனவே இந்த காலகட்டத்தில் அவர்களை வழிமுறைப்படுத்துவது என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சவால்.
இப்படி ஒரு உணர்வு வரும்போது அவர்களுக்கு கட்டுப்பாடு போடுவதை தவிர இதை எப்படி கடந்து வருவது என்று யாரும் சொல்லித் தருவதில்லை. அப்படியென்றால் இந்த பருவத்தை நல்ல முறையில் கடந்து வருகிற வழிகளை அவர்களுக்கு எப்படி தெளிவுபடுத்துவது என்பது ரொம்ப முக்கியமான விஷயம்.
இதுபோன்ற முக்கியமான காலகட்டத்தில் இந்த குழந்தைகளுக்கு தேவை அறிவுரை கிடையாது. அறிவுரை சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் அறிவுரை சொன்னால் அதை செய்து பார்க்கத்தான் ஆசைப்படுவார்கள். நீ இதை செய்யாதே என்று அவர்களிடம் சொன்னால், அதை செய்து பார்க்க வேண்டும் என்று தான் தோன்றும். ஏனென்றால் அவர்களின் உடலிலேயே அதுபோன்ற மாற்றங்கள் வருகிறது.
ஆனால் அவர்களுக்கு முதிர்ச்சி என்பது 19 அல்லது 20 வயதில் தான் வரும். அதாவது உடல் ரீதியாக அவர்களின் மூளைகளில் ஏற்படும் மாற்றங்களே அந்த முதிர்ச்சிக்கு காரணமாக அமைகிறது. மூளையில் ஏற்படுகிற மாற்றங்களினால் தான் முடிவு எடுக்கிற தன்மையும் அவர்களுக்கு 20 வயதில் வருகிறது. அதனால் தான் கார் ஓட்டுனர் உரிமம் கூட அவர்களுக்கு 18 வயது நிரம்பியவுடன் தான் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அப்போதுதான் அவர்களுக்கு சவாலான விஷயங்களை சமாளிப்பது எப்படி என்பது தெரியும். எனவே பருவ வயதில் ஏற்படும் உடல் வளர்ச்சியின் ஒவ்வொரு விஷயங்களிலும் ஒரு விஞ்ஞான அடிப்படை இருக்கிறது. இது பல நேரங்களில் அவர்களுக்கும் தெரிவதில்லை, நாமும் தெரிந்து கொள்வதில்லை.
எனவே தான் 20 வயதுக்கு முந்தைய பதின்ம வயது காலகட்டத்தில் இந்த குழந்தைகளுக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படுகிறது. எதிர் பாலினத்தவரை பார்த்தால் அவர்களுடன் பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கும். அப்படி பேசுவது சரியா தவறா என்று அவர்களுக்கு தெரியாது. மேலும் அந்த எண்ணத்தால் அவர்களுக்கு படிப்பிலும் கவனம் சிதறி விடும்.
டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
பருவ வயதை கடப்பது பற்றி சொல்லித் தருவதில்லை:
அந்த பெண்ணுக்கு அந்த பையனிடம் அடிக்கடி பேச வேண்டும் என்பது போல் தோன்றும். அரட்டை அடிக்க வேண்டும் என்று தோன்றும். அவனுடன் பேசுவதுதான் அந்த பெண்ணுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். அப்படி பேசுவதில் ரொம்பவும் ஆர்வம் இருக்கும். இதனால் அவர்களின் படிப்பு விஷயங்கள் பாதிக்கப்பட ஆரம்பித்து விடும்.
அப்போது அவர்களை யார் வழிநடத்துவது? தனக்கு ஏற்பட்டு இருக்கும் உணர்வு ரீதியான மாற்றத்தை அந்த பெண் தனது பெற்றோர்களிடம் போய் கூறினால் அவர்களுக்கு என்ன தோன்றும்? அது தப்பு என்று கண்டிப்பார்கள். செல்போனை பிடுங்கி வைத்துக் கொள்வார்கள். அவனிடம் பேசக்கூடாது என்றுதான் சொல்வார்களே தவிர இதை எப்படி கடப்பது என்பதை நாம் யாரும் சொல்லி கொடுப்பதே இல்லை.
அப்படியென்றால் தங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் அந்த உணர்வு பற்றி அவர்கள் யாரிடம் கேட்பார்கள்? அவர்களை விட ஒரு வருடம் மூத்த தோழிகளிடம் கேட்பார்கள்.
அவர்களுக்கு என்ன தெரியும்? இவர்களுக்கு தெரிந்த அளவுதான் தெரியும். ஆனால் அவர்கள் பெரியவர்கள் போல அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். ஓ... அப்படியா...? இந்த வயதில் இப்படித்தான் இருக்கும். இது தவறு இல்லை. நீ இதை செய் என்பார்கள். அவர்களுக்கு பல தோழிகள் இருந்தால் அவர்களுக்குள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி மாற்று கருத்துக்கள் இருக்கலாம்.
மேலும் அவர்கள் இந்த காலகட்டத்தில் ஊடகத்தில் அதிகம் மூழ்கி கிடப்பார்கள். நிறைய சினிமா பார்ப்பார்கள். சினிமாவில் கதாநாயகன், கதாநாயகி என்ன செய்கிறார்களோ அதை செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். கதாநாயகனோ, கதாநாயகியோ சினிமாவில் தவறான பழக்க வழக்கங்களை கொண்டிருந்தால் இதுதான் சரியான விஷயம் என்று நினைத்து அதை கடைபிடிக்க முயல்வார்கள். இது தவறு, இது சரி என்று சொல்வதற்கு யாரும் கிடையாது.
அப்படி இந்த மாதிரியான விஷயங்களில் அவர்கள் ஈடுபடும் போது நிறைய சவால்களை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் புகை பழக்கம், மதுபழக்கம், மற்ற தீய பழக்க வழக்கங்கள் இளம் பருவத்தினருக்கு ஏற்பட்டால் இது ஒரு பெரிய பிரச்சினையாக எதிர்காலத்தில் உருவாகும்.
அப்படியானால் அவர்களை இந்த காலகட்டத்தில் நல்வழிப்படுத்துவது எப்படி...? அடுத்த வாரம் பார்ப்போம்.