சிறப்புக் கட்டுரைகள்

வணக்கம் தரும் வாழ்க்கை

Published On 2025-05-04 15:05 IST   |   Update On 2025-05-04 15:05:00 IST
  • அரசனின் உயிருக்குள் இருக்கும் ஆண்டவனும் ஆண்டியின் உயிருக்குள் இருக்கும் ஆண்டவனும் ஒன்றுதானே!.
  • வாழ்த்துவதற்கும் வணங்குவதற்கும் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் அன்பும், வாய்நிறைய மலர்ந்திருக்கும் சிறு புன்னகையும் போதும்.

வணக்கம் சொல்வதில் வாழ்வியல் நன்மைகள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளக் காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

இரு கரங்களையும் கூப்பி, நம்மைப் படைத்த இறைவனையும், நமக்கு உறுதுணையாக விளங்குகின்ற இயற்கையையும் உயிரினங்களையும் வணங்குவது என்பது காலங்காலமாக இருந்து வரும் மனிதகுலப் பழக்கமாகும். 'தொழுதல்' எனப்படும் வணக்க முறை ஆதிகாலத்தில் இயற்கையைத் தொழுவதிலிருந்தே தொடங்கியது ஆகும்.

சூரியனையும், சந்திரனையும், நெருப்பையும், காற்றையும், மழையையும், மலையையும், குன்றையும், மரம் செடி கொடிகளையும், விலங்குகளையும், உயிரினங்களையும், கருவிகளையும் ஆதிமனிதன் வணங்கத் தொடங்கினான். அடிப்படையில் இது ஆற்றலை வணங்குகின்ற வணக்கமாகத் தொடங்கிப், பிறகு இயற்கையையே கடவுளாகவும் வழிபடும் முறையில் மனிதன் ஆழ்ந்தான்.

எது நமக்கு உதவியாக இருக்கிறதோ அதற்கு நன்றி கூறுவது போல வணக்கம் செலுத்துவது; எது ஆற்றல் மிக்கதாக இருக்கிறதோ அதற்குப் பணிந்து வணக்கம் செலுத்துவது; எது நமக்கு அச்சம் தருவதாக இருக்கிறதோ அதற்கு அஞ்சி வணக்கம் செலுத்துவது… என இப்படிப் பலவகைக் காரணங்களால் வணங்கும் முறை வளர்ச்சி பெற்றது.

ஆற்றல், அதிகாரம், செல்வமுடைமை ஆகியவை கண்டு வணக்கம் செலுத்திய மனிதன், காலப்போக்கில் அறிவுகண்டு தொழும் நிலைக்கும் உருவாக்கப்பட்டான். அறிவுலக எழுச்சிக்கு இந்தநிலை, பெரும் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் நல்கியது. செல்வந்தரையும், ஆட்சி அதிகாரமுள்ளோரையும், ஆன்மீகத் துறவிகளையும் அடிமைகள் போல வணங்கி வந்த நிலைமை மாறியது. படிப்பாளிகளையும் சிந்தனையாளர்களையும், எழுத்தாளர்களையும், அறிவாளிகளையும், விஞ்ஞானிகளையும் கலைஞர்களையும் போற்றி வணங்கக் கூடிய வணக்க நிலை புதிய அறிவுப் புரட்சி சமுதாயத்தை ஏற்படுத்தியது.

பொதுவாக வணக்கம் செலுத்துவது என்பது, தகுதியில் குறைந்த ஒருவர், தகுதியில் தன்னைவிட உயர்ந்த ஒருவருக்கு இணங்கி நிற்பதற்கு அடையாளமாய் வணங்கி நிற்பது ஆகும். வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும்போது, அங்குள்ள ஆண்டவன் நம்மைப் படைத்தவன் என்பதனால் நம்மைவிட உயர்ந்தவன் ஆகையினால் பணிந்து வணங்க வேண்டும். இது தெய்வ பக்தி ஆகும்.

நாம் வாழும் நாடு நமக்கு, ஒழுக்கத்தை, வாழும் முறைமையை, சுவாசிக்கும் காற்றை, உண்ணும் நீரை, பருகும் நீரை, வாழ்வதற்குப் பாதுகாப்பான இடத்தைத் தருவதால் அதனையும் வணங்க வேண்டும்; இதற்கு தேசபக்தி என்று பெயர். இதைப்போல, பெற்ற தாய் தந்தையைப் பிள்ளைகளும், கட்டிய கணவனை மனைவியும் (தற்காலத்தில் கட்டிய மனைவியைக் கணவனும்- வணங்கினால் தப்பில்லை), குடும்பத்தில் மூத்தோர்களை இளையோர்களும், சமூகத்தில், அலுவல் இடத்தில் பணிபுரியும் மூத்தோர்களை இளைய ஊழியர்களும், தலைவர்களைத் தொண்டர்களும் ஆசிரியர்களை மாணவர்களும் வணங்கியே ஆக வேண்டும். வணங்குவது என்பது ஒரு மனிதனின் அடக்கத்தையும் பணிவையும் எடுத்துரைக்கும் ஒழுக்கப் பண்பாகும்.

 

முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

வணங்குவது தவிர, வாழ்த்துவது என்பதும் அதன் சார்பாக உருவாகி வளர்ந்ததே ஆகும். வயதில் இளையோரையும், தகுதியில் குறைந்தோரையும் வாழ்த்துகிற முறைமை தொன்றுதொட்டு இருந்து வருகிற பழைய முறைமை ஆகும். அன்னதானம் செய்வதில் அனைவரையும் விஞ்சும் சிறப்போடு திகழ்ந்த சிறுகுடிக் கிழான் பண்ணனை.

'என்னுடைய வாழ்நாளையும் சேர்த்து பண்ணன் சிறப்போடு வாழட்டும்' (யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!) என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் வாழ்த்திப் பாடுகிறான். பரிசில் வேண்டி மன்னர்களைப் பாடவரும் புலவர் பெருமக்களும், மன்னர்களின் கொடைத்திறம் போற்றிப், பல்லாண்டு வாழ்க! என்று வாழ்த்திப் பாடும் மரபும் நம் தமிழகத்தில் உண்டு. வணங்கிப் பாடுவதிலேயே வாழ்த்திப் பாடுவதும் ஒரு கிளையாகச் செழித்துக் காணப்படுகிறது.

ஆன்மீகத்தில் 'நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!' என்று சிவபெருமானை வாழ்த்தி மாணிக்கவாசகர் பாடுகிறார்; 'பல்லாண்டு! பல்லாண்டு! ' மணிவண்ணன் வாழ்க! என்று வைணவத்தில் பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடி வாழ்த்துகிறார். இன்று பெருந்திரள் கூட்டங்களில் தலைவர்களை வாழ்த்தித் தொண்டர்கள் எழுப்பும் 'வாழ்க!' முழக்கங்களும் வணக்கம் சார்ந்த வாழ்த்துகளே ஆகும்.

உடல்மொழி குறித்த தகவல் பரிமாற்றக் குறியீடுகள் பல்வேறுவிதமாகக் கூறப்படுகின்றன. கைகளைத் தூக்கி, மடக்கி, நீட்டி, விரல்களை ஒவ்வொன்றாக நீட்டி மடக்கிக், குவித்து, விசையோடு கைகளை ஒருசேரவும் தனித்தும் உயர்த்தி, மடக்கி…. என்று ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு குறியீட்டு அர்த்தங்கள் இருக்கின்றன.

'அவன் என்னைப்பார்த்துச் சுட்டுவிரல் நீட்டிப் பேசிவிட்டான்!'; 'அவன் கை முழங்கை மடக்கி என்னைச் சண்டைக்கு அழைத்துவிட்டான்'; 'அவன் தன் விரலால் என்னைப்பார்த்து எச்சரிக்கை விடுக்கிறான்!'; 'அவன் கைதட்டி என்னை இளக்காரமாய் அழைக்கிறான்!' என்றெல்லாம் நம் கைகளின் அசைவு மொழிக்குப் பல அர்த்தங்கள் உண்டு. ' இவை எதுவும் என்னிடம் இல்லை; இதோ இரண்டு வெறுங்கைகளையும் ஒன்றாகக் குவித்து வணக்கம் மட்டுமே செய்கிறேன்!; இது எனது பணிவின் அடையாளம்!' என்று பணிந்து நிற்பதே வணக்கம்.

சக மனிதர்களைப் பார்த்து வணங்கிக்கொள்வதும், வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வதும், நம்முடைய நல்லெண்ணத்தை, நம்முடைய நேர்முறைச் சிந்தனைகளை அவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டவே ஆகும்.

அவரைப்பார்த்து வாழ்த்துவதும் வணங்குவதும் நமது கோழைத்தனத்தின் அடையாளம் என்று சிலர் கருதலாம். ஏன் வணக்கத்தையும் வாழ்த்தையும் பெறுவோருக்கும்கூடச் சற்று ஆணவம் தலைக்கேறலாம். ஆனால் 'எல்லா உயிரிலும் நானே இருக்கிறேன்' என்று ஆண்டவன் குறிப்பிடும்போது, நம்முடைய உடம்புக்குள் உயிராய் இருக்கின்ற ஆண்டவன், அடுத்த உடம்புக்குள் உயிராய் இருக்கின்ற ஆண்டவனை வணங்குவதும், வாழ்த்துவதும் தவறல்லவே!.

அந்த வகையில் அரசனின் உயிருக்குள் இருக்கும் ஆண்டவனும் ஆண்டியின் உயிருக்குள் இருக்கும் ஆண்டவனும் ஒன்றுதானே!. உயிரெல்லாம் சமம் என்று ஆகும்போது, உடம்பை வைத்து, நிறத்தை வைத்து, அந்தஸ்தை வைத்து நீ சிறிசு! நான் பெரிசு! நீ முதலில் வணங்கு! பிறகுதான் நான் வணங்குவேன்! என்கிற ஆணவம் ஏன்?. வாழ்த்துவதற்கு ஏது இளமை மூப்பு? வாழ்த்தினால் வாழ்த்துவோரும் இணைந்தே வாழ்வர் என்பதுதானே வாழ்த்தின் தத்துவம்!.

நகரத்தில் ஒரு நிறுவனம். மாடு போன்ற பெரிய விலங்குகளை வதைத்து, அவற்றின் இறைச்சியை உறை குளிரில் பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கு அப்படியே ஏற்றுமதி செய்வது அதன் தொழில். அந்தத் தொழிற்சாலையில் நூறுபேர் வேலை செய்கிறார்கள். அந்த நிறுவனத்தில் மாட்டிறைச்சியை உயர் உறை குளிரில் வைத்தி ருக்க ஓர் அறை உண்டு. சாதாரண உடையோடு எவரும் உள்ளே சென்றுவிட முடியாது; உரிய வெப்பலாடைகளோடு சென்றாலும் அரை மணி நேரத்திற்குமேல் எவரும் உள்ளிருக்க அனுமதியில்லை; மீறியிருந்தால் உறைபனியில் அவர்கள் உறைந்து போய்விட நேரிடும்.

அந்தக் குளிர்பதன அறைக்குள் ஒருவர் பணிநிமித்தமாக உள்ளே போனார். தனது கடமைகளை அரைமணி நேரத்திற்குள் முடித்துவிட்டு, அறைக்கதவுப் பக்கம் வந்தார்; அது தானியங்கிக் கதவு; தானாகவே பூட்டிக் கொண்டிருக்கிறது. உள்ளிருந்து திறக்கவும் வழியில்லை; அப்போது தொழிற்சாலை வேலை முடிகிற நேரம்; இனிமேல் யாரும் அங்கு வருவதற்கு வாய்ப்பில்லை. ஓங்கிக் குரலெடுத்து, யாராவது உதவிக்கு வருவார்களா? எனச் சத்தம்போட்டு அழைத்துப் பார்த்தார்; ஒன்றும் பயனில்லை.

ஏனெனில் உள்ளிருந்து ஒருபொட்டுக் காற்றுக்கூட வெளியே போக முடியாத அளவுக்கு இருப்புத் தகடுகளால் அந்தக் குளிர்பதன அறைச்சுவர் உருவாக்கப்பட்டிருந்தது. தொலைபேசி, செல்பேசி வசதிகளும் இல்லை. அவர் முடிவுக்கு வந்துவிட்டார். விடியும் வரை யாரும் அறைக்கு வரப்போவதில்லை; அதற்குள் இன்னும் சிலமணி நேரத்தில், உறைபனியில் உறைந்து நாமும் செத்துப்போக வேண்டியதுதான்.

அந்த நேரத்தில் அந்த இரும்புக்கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தால், அந்தத் தொழிற்சாலையின் வாயிற் காவலர், 'சார்! நீங்க இங்கேயா இருக்கீங்க?' என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார். ' நான் இங்கிருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?' போக இருந்த உயிர் திரும்ப வந்த மகிழ்ச்சியில் கேட்டார் அறையிலிருந்த நபர்.

நடந்தது இதுதான். குளிர்பதன அறைக்குள் மாட்டிக்கொண்ட நபர் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பொறியாளர். இவரைப்போல அந்த நிறுவனத்தில் பலர் பணிபுரிந்தாலும் இவரிடம் மட்டும் சிறப்பான ஒரு குணம் உண்டு. அலுவலகத்தில் யாரைப்பார்த்தாலும், அவர்கள் சீனியர் ஜூனியர் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லாருக்கும் வணக்கமும் வாழ்த்தும் மகிழ்ச்சியோடு சொல்லுவார்.

அதிலும் குறிப்பாக நிறுவனத்திற்குள் நுழையும்போது அந்த வாயிற்காவலரைப் பார்த்து, 'குட் மார்னிங்'; அதே போல மாலை வேலைமுடித்து நிறுவனத்தைவிட்டு வெளியே செல்லும்போது, ' குட் ஈவினிங்' 'நாளை சந்திப்போம்!' என்று மகிழ்ச்சிபொங்கச் சொல்லிவிட்டுச் செல்வார்.

இனி வாயிற்காவலர் சொல்கிறார்," இந்த நிறுவனத்தில் கடை நிலை ஊழியராகப் பணியாற்றும் என்னையும் ஒரு மனிதனாகக் கருதி, எனக்கு நாள்தோறும் காலை மாலை இருவேளையும் வணக்கமும் வாழ்த்தும் சொல்லுகின்ற ஒரே மனிதர் இந்தப் பொறியாளர் மட்டும்தான். அதனால் நூறுபேரில் இவர் மட்டுமே என் நினைவில் நிற்பவர்.

இன்று, காலை வணக்கம் சொல்லிவிட்டு உள்ளே சென்றவர், மாலை வேலைமுடித்து எல்லாரும் வெளியே சென்றபின்னரும் இவரை மட்டும் காணவில்லை; ஏனென்றால் நாளை சந்திப்போம் என்கிற மகிழ்ச்சிக்குரல் கேட்கவில்லை. உடனடியாக நான் செயல்படத் தொடங்கினேன்; நிறுவனத்திற்குள் ஒவ்வொரு அறையாகக், கழிவறை உட்படத் தேடினேன்; கடைசியாக இந்தக் குளிர் அறைக்குள்ளும் நுழைந்தேன். கண்டுபிடித்து விட்டேன். ஐயா! ஒங்க நல்ல மனசுக்கு எந்தக் குறையும் வராதையா! குட் ஈவினிங் ஐயா! நாளை சந்திப்போம்!" கண்ணீர் மல்க முடித்தார் வாயிற் காவலர்.

அடக்கத்தின் வெளிப்பாடு பணிவு; பணிவின் வெளிப்பாடு வணக்கமும் வாழ்த்தும். வாழ்த்துவதற்கும் வணங்குவதற்கும் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் அன்பும், வாய்நிறைய மலர்ந்திருக்கும் சிறு புன்னகையும் போதும். எதை எழுதத் தொடங்கினாலும் வணக்கத்தோடு எழுதுவது!, யாரைப் பார்க்க நேரிட்டாலும் வாழ்த்தோடு பேசுவது!... வேறென்ன வேண்டும்? இந்த உலகம் முழுமையுமே நம்மைக் காத்திடும் சொந்தங்கள்தாம்.

தொடர்புக்கு,

94431 90098

Tags:    

Similar News