சிறப்புக் கட்டுரைகள்

பணம் குறித்த பயணம் சுகமா? சுமையா?

Published On 2025-05-02 16:42 IST   |   Update On 2025-05-02 16:42:00 IST
  • நம்மில் பலர் இதனைப் புரிந்து கொள்ளவே நெடுங்காலம் ஆகிறது.
  • முதல் அடியை எடுத்து வைத்தாலே, எப்பேர்ப்பட்ட சுமையான பயணத்தையும் சுகமாக மாற்றிவிடலாம்.

மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். இந்த உலகில் அறம் செய்ய விரும்புகிறோமோ, இல்லையோ, பணம் செய்ய விரும்புகிறோம். காரணம் பணத்தின் மீதான பேராசை அல்ல; பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்ற உலகியல் ஞானம்தான் பணத்துக்கு இத்தனை முக்கியத்துவத்தை உண்டாக்குகிறது. அதை நோக்கிய நம் பயணம் நாம் பிறப்பதற்கு முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று.

ஆம், தாயாரை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல பணம்; டாக்டருக்குப் பணம்; நம்மை நம் பெற்றோருக்கு அறிமுகம் செய்யும் செவிலியருக்குப் பணம் என்று நம் குடும்பத்தினர் செய்யும் செலவில்தான் நம் வாழ்க்கையே துவங்குகிறது.

குழந்தைகளுக்கான தடுப்பூசியில் துவங்கி, ஸ்கூல், காலேஜ் கல்வி, வேலை, திருமணம், குழந்தைப் பேறு, சைக்கிள், பைக், கார், தங்கம், வீடு, குழந்தைகளுக்கான ஏற்பாடுகள், ஓய்வுக்காலம் என்று அதன் பின்வரும் ஒவ்வொரு கட்டத்திலும் பணத்தின் தேவையை, அவசியத்தை, நிர்ப்பந்தத்தை நாம் சந்திக்க நேர்கிறது.

ஏனெனில், வசதி இருப்போருக்கு எளிதில் திறக்கும் கதவுகள் மற்றவர்கள் தட்டித் தட்டி கை ஓய்ந்தாலும் திறப்பதில்லை. இதைக் காணும் நமக்கு வெறும் கை முழம் போட முடியாது என்ற உண்மை புரிய வருகிறது. இதனை சிறு வயதிலேயே உணர்பவர்கள் பணத்தை நோக்கிய தங்கள் பயணத்தை சீக்கிரமே ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்களுக்கு பயணம் சுகம்.

ஏற வேண்டிய சிம்மாசனம்

ஆனால் நம்மில் பலர் இதனைப் புரிந்து கொள்ளவே நெடுங்காலம் ஆகிறது. அப்படியே புரிந்துகொண்டாலும் பணக்காரன் என்ற சிம்மாசனத்தை நோக்கி ஏறுவதற்கு எத்தனை படிகளைத் தாண்ட வேண்டி வருகிறது! சிறந்த கல்வி, நல்ல வேலை, கை நிறைய சம்பளம், செலவைக் குறைக்கும் மனப்பான்மை, சேமிக்கும் சூழ்நிலை, முதலீடுகள் குறித்த அறிவு, சேர்த்த பணத்தைப் பாதுகாக்கும் ஞானம், இத்தனைக்கும் அடிப்படையாக நல்ல உடல் உரம் – இப்படி எத்தனை விஷயங்கள் தேவைப்படுகின்றன? அவற்றில் எத்தனை நம்மிடம் இருக்கின்றன? இவை இல்லாதவர்கள் என்ன செய்யலாம்?

இவற்றில் பல விஷயங்கள் உங்களிடம் இல்லை என்றாலும் உங்களால் ஒரு வசதியான வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும் என்றால் நம்புவீர்களா? உங்கள் வயது முப்பது, நாற்பது, இல்லை, ஐம்பது, என்றாலும் உங்களால் பணம் பற்றிய கவலை இல்லாமல் வாழ முடியும்; அதற்கான வழிமுறைகளைக் கூறுவதுதான் இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம்.

மக்கள் பலவிதம்

அநேகமாக நம்மில் பலரும் நாற்பது வயது வரை சேமிப்பு, முதலீடு போன்றவை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. நம் மீது, நம் இளமை மீது நம்பிக்கை இருக்கும்வரை எதுவுமே ஏற முடியாத பெரிய மலையாகத் தோன்றுவதில்லை. முதல் நரை தோன்றும்போது அல்லது மகள் இளமையின் தலைவாசலில் நிற்பதைக் காணும்போது சட்டென்று ஒரு கவலை தோன்றும்.

அதே நேரத்தில் நம்முடன் பணி புரிபவர்கள் நோய்வாய்ப்படுவதைப் பார்க்க நேரும்; அல்லது சிலர் வேலைநீக்கம் செய்யப்படுவதையும் காண நேரும். அப்போதுதான், நமக்கு வேலை போனால் எப்படி சமாளிப்போம் என்ற பயம் தோன்றும்.

இன்னும் சிலர் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்தே சேமிப்பிலும் ஒரு கண் வைத்து, பணம் சேர்த்திருக்கலாம்; ஐம்பது வயதை நெருங்கும்போது, பல காரணங்களால் அந்தப் பணம் கரைந்திருக்கலாம் அல்லது கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கலாம். இன்னும் சிலர், "குடும்பத்தை கவனிக்க இன்று நான் செலவு செய்கிறேன்; என் வயது காலத்தில் குடும்பம் என்னை கவனித்துக் கொள்ளும்" என்ற நம்பிக்கையில் சேமிப்பு குறித்து கவலையின்றி இருந்திருக்கலாம்.

இவர்கள் அனைவருமே இன்று எதிர் காலத்தை எண்ணிக் கலங்கும் நிலையில் இருப்பார்கள். பலர் தங்கள் தவறால்தான் இந்த நிலை வந்தது என்ற குற்ற உணர்வில் இருப்பதையும் பார்க்கிறோம். இன்று பொருளாதாரம் குறித்து நிறைய விழிப்புணர்வு வந்திருக்கிறது. கட்டுரைகள், யூடியூப் நிகழ்ச்சிகள் போன்றவற்றைப் பார்த்து தங்கள் பொருளாதார நிலைமையை சரி செய்ய பலரும் முயற்சி செய்கிறார்கள்.

செலவுகள் அதிகம்; சேமிப்போ எட்டாக்கனி

ஆனால், என்ன முயற்சி செய்து என்ன பயன் என்ற விரக்தியே மிஞ்சுகிறது. ஏனெனில், சம்பளம் அதிகமாக உயர்வதில்லை; ஆனால் செலவுகள் உயர்கின்றன. வீட்டு வாடகை வருடாவருடம் குறைந்த பட்சம் 6 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கின்றது.

பிள்ளைகளின் பள்ளிக்கல்வி என்று எடுத்துக் கொண்டால், ஹோம் ஒர்க் அனுப்புவதற்கு ஸ்மார்ட் போனும், காலேஜ் கல்விக்கு கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டும் அத்தியாவசியமாக உள்ளன. பிள்ளைகளுக்கான கல்விச் செலவும் பெரியவர்களுக்கான மருத்துவச் செலவுகளும் வருடாவருடம் 12 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை ஏறுகிறது. பண்டிகைக்கு புத்தாடைகள், திருவிழாக்கள் மற்றும் திருமணங்களுக்காக பயணம் மேற்கொள்ளுதல், பரிசு வழங்குதல் என்பது போன்ற, உறவுகளுக்கான செலவுகளை எத்தனை குறைத்தாலும் கையில் உள்ள பணம் கரைவதைத் தடுக்க முடிவதில்லை.

இன்னொரு பக்கம் நிலவும் நிலை என்ன? தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. பத்தாயிரத்தை நோக்கி நகர்கிறது. வீட்டு மனைகள் மற்றும் அபார்ட்மென்ட்டுகளின் விலை பல லட்சங்களில் உள்ளது. வங்கிகள் தரும் வட்டி விகிதம் வருடாவருடம் உயரும் விலைவாசியை சமாளிப்பதற்குக் கூட உதவுவதில்லை. பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்ட் போன்றவை சற்று அதிக வருமானம் தரும் என்று கூறப்படுகிறது. ஆனால் அடிக்கடி அவை மேலும், கீழும் நகர்ந்து நம் லாப, நஷ்டங்களைத் தீர்மானிக்கின்றன. அது மட்டுமின்றி, அவற்றைக் கையாள கம்ப்யூட்டர் வசதிகளும், செய்திகளை உடனுக்குடன் பெறும் வசதியும் தேவைப்படுகிறது.

சுந்தரி ஜெகதீசன்


இத்தனையையும் மீறி, சேமிக்க முனைந்தால், சாண் ஏறுகிறது; முழம் சறுக்குகிறது. ஒவ்வொரு மாதமும் குறித்த தொகையை சேமிப்பது பிரம்மப் பிரயத்தனமாக உள்ளது. தப்பித் தவறிக் கடன் வாங்கி விட்டால், நிலைமை இன்னும் மோசமாகிறது. வாங்கும் சம்பளம் அத்தனையும் இ.எம்.ஐ. கட்டவே சரியாக இருக்கிறது. "இப்படி இன்றுள்ள நிலைமையை துல்லியமாகக் கூறும் நீங்கள், எந்த வயதிலும் சேமித்து முன்னேறலாம் என்று எந்த தைரியத்தில் கூறுகிறீர்கள்?" என்ற உங்கள் கேள்வி காதில் விழாமல் இல்லை.

வரலாறு முக்கியம்

முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். நம் நாடு வளர்ந்த நாடல்ல; விவசாயம் சார்ந்த நாடு. முப்பது வருடம் வேலை, முப்பது வருடம் ஓய்வுக்காலம், பென்ஷன், மியூச்சுவல் பண்ட் போன்ற பல பொருளாதார கருத்துக்கள் இங்கு கால் பதிக்கவே நாளாயிற்று. அவை அறிமுகமாகி, சுமார் நூற்றைம்பது, இருநூறு வருடங்கள் இருக்கலாம். அதற்கு முன்பு இருந்த விவசாயம் சார்ந்த சமூகத்தினருக்கு ஓய்வுக்காலம் என்பதே கிடையாது. வயது மூத்த காலத்தில் பிள்ளைகள் உடல் உழைப்பை கைக்கொள்ள, பெரியவர்கள் தங்கள் அறிவையும், அனுபவத்தையுமே பகிர்ந்து கொண்டனர்.

அவர்கள் வாரிசுகளான நமக்கும் மேற்கூறிய பென்ஷன், மியூச்சுவல் பண்ட் போன்றவை ஓரளவு புதியவையே. ஆகவே அவற்றைப் பூரணமாக உள்வாங்குவதில் நமக்கு சிரமம் உள்ளது. மேலும் நகரங்களில் உள்ளோருக்கு எளிதில் வாய்த்துவிட்ட சேமிப்பு வழிகள், கிராமம், சிற்றூர் போன்ற பின்தங்கிய இடங்களில் காலூன்றவே நாளாகியது. போன், இன்டர்நெட், கம்ப்யூட்டர் போன்ற வசதிகளும் மெல்ல மெல்லவே இந்த இடங்களுக்கு வந்து சேர்கின்றன.

ஜெயிக்கும் வழி

இவற்றையெல்லாம் மீறி இன்று வங்கிகளின் சேவை கடைக்கோடி மனிதனுக்கும் சென்று சேர்கிறது. போஸ்ட் ஆபீஸ், ஏ.டி.எம். பயன்பாடு, சேமிப்புத் திட்டங்கள் ஆகியவை நாடெங்கும் பரவி உள்ளன. அவற்றை பயன்படுத்தி முன்னேறும் வழியும் நமக்கு புலப்பட ஆரம்பித்துள்ளது.

ஓட்டப்பந்தயத்திலோ, நீச்சலிலோ ஜெயிக்க விரும்பினால் சிறுகச் சிறுக நம் உடல் உரத்தைப் பெருக்கவேண்டும்; தினந்தோறும் பயிற்சி செய்யவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்சி நேரத்தைக் கூட்டவேண்டும். ஆனால் நாம் எடுத்த எடுப்பில் வானம் வசமாக வேண்டும் என்று எண்ணுகிறோம்; அகலக் கால் வைக்கிறோம்; கடன் வலையில் சிக்கி, இருப்பதையும் இழக்கிறோம். அப்படியானால், இந்த வாழ்க்கைப் பந்தயத்தில் ஜெயிக்கும் வழி என்ன? வரும் வாரங்களில் பார்க்கலாம்.

முதல் அடியை எடுத்து வையுங்கள்

முதலில் உங்களிடம் இருக்கும் பணம், சிறு நகைகள், சைக்கிள், பைக் போன்ற அசையும் சொத்து, அசையாச் சொத்து எவ்வளவு என்பதைக் கணக்கெடுங்கள். (இன்று இந்தக் கட்டுரையைப் படிக்கும் அளவுக்கு உங்களுக்குக் கல்வி இருந்தால் கண்டிப்பாக உங்களிடம் ஓரளவு பணமும், சம்பளம் தரும் ஒரு வேலையும் இருக்கும்.) அத்துடன் மாதாமாதம் உங்களால் எவ்வளவு பணத்தை சேமிப்புக்காக ஒதுக்கமுடியும் என்பதையும் கணக்கிடுங்கள். இந்த முதல் அடியை எடுத்து வைத்தாலே, எப்பேர்ப்பட்ட சுமையான பயணத்தையும் சுகமாக மாற்றிவிடலாம். ஆல் த பெஸ்ட்!

Tags:    

Similar News