சிறப்புக் கட்டுரைகள்

உழைப்பாளர்களை கொண்டாடும் மே தினம் - உழைப்பு சூழ் உலகு!

Published On 2025-05-01 14:47 IST   |   Update On 2025-05-01 14:47:00 IST
  • பார்வையற்ற ஒருவர் ரெயில் வண்டியில் பேனாக்களை விற்கிறார்.
  • மனிதனின் உழைப்பே... கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.

நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நாளிதழ் உங்களுக்கு...எப்படிக் கிடைத்தது...?

பணம் கொடுத்ததால் கிடைத்தது.

பணம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது...?

உழைத்ததால் கிடைத்தது.

சரி..

அந்தப் பணத்தை செய்தித் தாளுக்கு ஏன் நீங்கள் கொடுக்க வேண்டும்....?

ஏனெனில் இந்த செய்தித்தாளுக்கு பின்னே நூற்றுக்கணக்கான மனிதர்களின் உழைப்பு உள்ளது.

உலகம் இயங்குவது உழைப்பாலே..

மனிதன் தோன்றிய நாளில் இருந்தே உழைப்பும் தொடங்கி விட்டது.

இதை எளிமையாக இப்படிக் கூறலாம்.

நாம் இன்று எழுதப் பயன்படுத்தும்,

யூஸ் அண்ட் த்ரோ... வகை எழுதுகோல் இதற்கு முன் என்னவாக இருந்தது.?

மை ஊற்றி எழுதும் பேனாவாக..

அதற்கு முன்னர்..?

மை தொட்டு எழுதும் பேனா..

அதற்கு முன்னர்..?

பென்சில்..

அதற்கு முன்னர்..?

பனையோலை..எழுத்தாணி.

அதற்கு முன்னர்..?

களிமண் சுடு பலகை/ கைவிரல்.

அதற்கு முன்னர்..?

பாறைக் குகை சுவர்கள்/கற்களால் சித்திரம்... தீட்டியது.

அப்படியானால் இன்றைய யூஸ் அண்ட் த்ரோ வகை எழுதுகோலிற்கு பின்னே ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உள்ளது.

பாறையில் எழுதியதில் இருந்து... படிப்படியாக இன்றைய எழுது கோலிற்கு வந்ததற்கு பின்னே நூற்றுக்கணக்கான மனிதர்களின் உழைப்பும்... அறிவும் உள்ளது.

நமக்கு முந்தைய மனித குலத்தின் உழைப்புதான் நம்முன் உள்ள இந்த நவீன உலகு.

 

கண்மணி ராசா, 8903543802

ஒரு சிறிய வியாபாரி சாலையோரம் கடை வைத்து காய்கறிகளை விற்கிறான்.

ஒரு பெண் தலைச்சுமையாக மீன்களை சுமந்துகொண்டு..வீட்டு வாசலுக்கே வந்து மீன்களை விற்கிறாள்.

பார்வையற்ற ஒருவர் ரெயில் வண்டியில் பேனாக்களை விற்கிறார்.

ஒரு ஆலைத் தொழிலாளி எந்திரங்களை இயக்குகிறார்.

அவரைப் போன்ற நூற்றுக்கணக்கான தொழிலாளர் களை ஆலை மேலாளர் நிர்வாகம் செய்கிறார்.

ஒரு அரசு ஊழியர் மக்களுக்காக பணிபுரிகிறார்.

இப்படி பல்வேறுபட்ட உழைப்பாளிகள்...

இவ்வுலகை உழைப்பால் உய்விக்கின்றனர்.

இன்று உலகின் முன்னணி தொழில் அதிபர்களிடம் அவர்கள் முன்னேறி வந்ததற்கு முக்கிய காரணம் கேட்டால்...

அவர்கள் கூறும் முதல் காரணம்...

எங்களது தொழிலாளர்கள் என்பதாகவே இருக்கும்.

அர்ப்பணிப்பு மிக்க தொழிலாளர்கள்தான் எந்தவொரு நிறுவனத்திற்கும் அடிப்படை.

உழைப்பு மகத்துவங்களை சாதிக்க வல்லது..

தஞ்சைப் பெரிய கோவில்..

தாஜ்மகால்..

இவையெல்லாம் மனித கூட்டு உழைப்பின் மகத்துவங்கள்.

இன்று உழைப்பு புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது.

எங்கும் எதிலும் 'ஸ்மார்ட் உழைப்பு' விரும்பப்படுகிறது.

திட்டமிட்டு சிரமப்படாமல் உழைப்பதை உலகம் விரும்புகிறது.

ஸ்மார்ட் உழைப்பு என்பதை இப்படிப் புரிந்து கொள்ளலாம்.

நான்கு விறகுவெட்டிகள் தினமும் காட்டிற்கு செல்வார்கள்.

அதில் மூவர் போனவுடனே வேலையை துவங்கி விடுவார்கள்.

மற்றொருவர் அரைமணிநேரம் தாமதமாகவே மரம் வெட்டத் துவங்குவார்.

அதுபோலவே மாலையில் வேலையை அவர்களை விட முன்னதாக முடித்து விடுவார்.

விறகும் அவர்களைவிட அதிகம் வெட்டியிருப்பார்.

மற்றவர்களுக்கு இது புதிராக இருந்தது.

ஒரு நாள் அவர் ஏன் தாமதமாக வருகிறார் என கண்காணித்தனர்.

அவரோ தாமதமாக வரும் அந்த நேரத்தில் தனது கோடாரியைக் கூர்தீட்டிக் கொண்டிருந்தார்.

தினமும் காலையில் கோடாரியைக் கூர் தீட்டி விட்டு மரத்தை வெட்டுவதால் மற்றவர்களைவிட எளிதாகவும், விரைவாகவும், கூடுதலாகவும் விறகு வெட்ட முடிகிறது.

இந்த ஸ்மார்ட் உழைப்பே....

கால்களின் நீட்சியாய் சக்கரத்தைக் கண்டுபிடிப்பு செய்தது. வாகனம் உருவானது.

சித்திரம் தீட்டுவதன் நீட்சியாய்...

புகைப்படக் கருவியை கண்டுபிடிப்பு செய்தது.

பறவையின் நீட்சியாய்...

விமானத்தை கண்டுபிடிப்பு செய்தது.

யோசித்துப் பாருங்கள்....

இன்று நம் கையில் இருக்கும் அலைபேசி எத்தனை கருவிகளை உள்ளடக்கியுள்ளது.

எத்தனை வேலைகளை எளிதாக்கி உள்ளது.

அதனால்தான் அது ஸ்மார்ட் போன்.

இதுபோல பல திறமைகளை கொண்டதாக உழைப்பு இருக்கவேண்டும்.

மனிதனின் உழைப்பே... கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.

அதனோடு அவனின் அனுபவ அறிவு சேர்ந்தபோது மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன.

அதனால்தான் திருவள்ளுவர், முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்றார்.

நீங்கள் எத்தகைய துயரில் இருந்தாலும் தீவிர உழைப்பு அதில் இருந்து உங்களை மீட்டெடுக்கும். சுருக்கமாக கூறினால்

"ஆழி சூழ் உலகு" என்பதைப் போல

"உழைப்பு சூழ் உலகு..." எனலாம்.

அத்தகைய உழைப்பை...

உழைப்பாளர்களைக் கொண்டாடும் நாளிது.

மே 1...

எந்தவித மத... சாதி.. புராண கதைகளும் இல்லாமல்...

மனித மாண்புகளைக் கொண்டாடவென உள்ள திருவிழாக்களில் முக்கியமான நாள் மே 1.

கொத்தடிமைபோல காலமின்றி உழைத்தவர்கள் கொதித்தெழுந்து போராடி, 8 மணிநேரம் தான் உழைப்பு என முடிவு செய்த நாள்.

இன்று ஓரளவுக்கேனும் தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பாக உள்ளதெனில் அதற்கு காரணம்,

மே 1 ன் போராட்ட வரலாறே காரணம்.

அயராத உழைப்பும்...

அதற்கேற்ற பலனுமே...

நம்மை...

நம் பூவுலகை

சுழல வைக்கும்.

உழைப்பே உயர்வளிக்கும்..

உழைப்பாளர்களே உலகை உய்விப்பர்.

மே தின வாழ்த்துகள்!

Tags:    

Similar News