சிறப்புக் கட்டுரைகள்

குழந்தைகளுக்கு ஊட்டம் தரும் கேழ்வரகு களி

Published On 2025-04-11 15:09 IST   |   Update On 2025-04-11 15:09:00 IST
  • கேழ்வரகு, சிறுதானிய வகையைச் சேர்ந்தது.
  • செரிமானத் தன்மை நன்றாக இருந்தால் மெலிந்த உடல்வாகு உடையவர்களுக்கும் நல்ல ஊட்டமளிக்கும் உணவாக இருக்கும்.

கேழ்வரகுத் தானியமாக ஊறவைத்து பத்து மணிநேரம் கழித்து அதனை மிக்ஸி ஜாரில் இட்டு அரைத்து பாலெடுத்து வடிகட்டிக் காய்ச்சி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் என்று பார்தோம்.

முற்காலத்தில் ஊறவைத்த கேழ்வரகை அம்மியில் அரைத்துப் பாலெடுத்துக் காய்ச்சிக் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். குழந்தையை ஈன்ற தாயிடம் போதிய பால் சுரக்கவில்லை என்றால் சுரப்புக்குத் தூண்டுகிற வண்ணம் நாவில் சுரீன்று சுவையை ஏற்றக்கூடிய கருவாட்டுக் குழம்பினை அவ்வப்போது கொடுப்பார்கள். அதேபோல ஆட்டிறைச்சியைக் காயவைத்துச் சுக்காக் கறி தயாரித்து அதில் குழம்பு வைத்தும் கொடுப்பார்கள். இவ்வகையான உணவுகள் மந்தித்துப் போன தாயின் செரிமான மண்டலத்தையும், சுரப்பு மண்டலத்தையும் தூண்டலுக்கு உள்ளாக்கி அவர்களுக்குப் புத்துணர்வு ஊட்டும். பால் சுரக்கச் செய்யும்.

ஆனால் காடு மேடுகளில் வெயிலில் கடின உடலுழைப்பு இல்லாத பெண்களுக்கு மேற்படி உணவுவகைகள் எதிர்விளைவுகளைக் கொடுத்து விடலாம். எனவே அவர்களுக்குப் பால் சுரப்பைத் தூண்ட வேண்டும் என்றால் வெந்தயக்களி, உளுந்தங்களி, கேழ்வரகுக்களி போன்றவையே பொருத்தமாக இருக்கும். முளைகட்டிய பயிறு வகைகளைச் சேர்த்துக் கூட்டு, குழம்பு போன்றவை சமைத்துக் கொடுத்தும் பால் சுரப்பைத் தூண்ட முயற்சிக்கலாம். அது சாத்தியப்படாத பொழுது கடந்த வாரம் சொன்னது போல கேழ்வரகுப் பால் குழந்தைகளுக்குப் பொருத்தமாக இருக்கும்.

 

பால் பற்றாக்குறைக்கு மட்டுமல்ல, குழந்தை தவழத் தொடங்குகிற பொழுது எலும்புகளுக்கு ஊட்டம் தருவதற்கு கேழ்வரகு உலர் மாவுடன் உலர் பச்சரிசி மாவும் சமபங்கு கலந்து, உடன் வாசனைக்காக பசும்பால் அல்லது பால் பவுடர் போன்றவற்றைச் சேர்த்து களியாகவும் இல்லாமல், கூழாகவும் இல்லாமல் பசைப் பதத்திற்குக் காய்ச்சி ஊட்டலாம்.

முற்காலத்தில் கன்றை ஈன்ற தாய்ப்பசு அல்லது எறுமை அல்லது ஆடு இறந்து விட்டால் பச்சிளம் குட்டியைத் தேற்றி வளர்க்க அரிசிக் கஞ்சித் தண்ணியை ஊட்டுப் புட்டியில் (ஃபீடிங் பாட்டில்) ஊற்றி முளைக்காம்பு போன்ற ரப்பர் போட்டு அரவணைத்துச் சொந்தக் குழந்தைக்குப் புகட்டுவது போலக் கன்றிற்குப் புகட்டுவார்கள். தன்னினமில்லாத தன்னோடு வளர வேண்டிய சக உயிரிடத்தும் அத்தகைய கரிசனம் இருந்தது.

இன்றோ சொந்தக் குழந்தைக்கு பால்குடியை சீக்கிரமாகவே மறக்கடித்து பசும்பாலுக்கோ, மாவுப் பாலுக்கோ பழக்கி விட்டு வேலைக்கு ஓடியாக வேண்டும் என்று பொருளியல் சார் வாழ்க்கை நிர்பந்தித்துக் கொண்டுள்ளது. தாயை இழந்த இளங்கன்றிற்கு கஞ்சித் தண்ணிக் கொடுத்து ஒரு நிலைக்குக் கொண்டுவந்த ஓரிரு மாதங்களுக்குப் பின்னர் அதனை விரைவாகவும் வலுவாகவும் வளர்த்தெடுக்க கேழ்வரகு மாவினை நீர்க்கக் காய்ச்சிக் கொடுப்பார்கள்.

அதேபோல் மாட்டில் பால் நிறைய கறக்க வேண்டும் என்றால் தானியங்கள் அனைத்தையும் ஊற வைத்து வேக வைத்து பின்னர் உறலில் இட்டு ஆட்டி மாட்டிற்கு வைப்பார்கள். அதனை ஆவலுடன் சர் சர் சரென்று உறிஞ்சிக் குடிக்கும் மாட்டின் மடிக் காம்பு பால்கட்டி கோவைக்காயைப் போல விரைத்துத் தொங்கும்.

இன்றைய பெண்களுக்கு சிறுதானியங்களைப் போன்ற வீர்யம் தரும் உணவு உண்ணக் கிடைக்காததால் உரமிட்ட நிலத்தில் விளைந்த நெல்லையு ம் பலமுறை தீட்டிய அரிசியையே உண்பதால் உடலில் ஊட்டம் குறைவாக இருக்கிறது. எனவே பெற்ற குழந்தைக்குப் போதிய பாலைக் கொடுக்க முடியாதது மட்டுமல்ல கருத்தரித்தலே அரிதாகி வருகிறது. இன்று குழந்தைப் பேறு என்பதே அதிர்ஷ்டம் என்கிற அளவிற்கு ஆண், பெண் இருபாலரிடமும் இனப்பெருக்க ஆற்றல் குறைந்து வருகிறது. குழந்தைப்பேறில்லாத இளம் தம்பதியர் எடுத்த எடுப்பிலேயே மருந்து ஊசி, செயற்கைக் கருத்தரித்தல் என்று இறங்குவதை விட்டு நம்முடைய உணவில் வீர்யமானவற்றைத் தேர்வு செய்து முயற்சித்துப் பார்த்தல் பாதுகாப்பானது.

கேழ்வரகு, சிறுதானிய வகையைச் சேர்ந்தது. அதே நேரத்தில் மிகவும் கடினமான தானியமும் ஆகும். எனவே பிற தானியங்களை ஊற வைத்து இடித்து அல்லது ஈரமாவாக அரைத்துப் பயன்படுத்துவது இயலாததாகும். பெரும்பாலும் உலர் மாவாகவே சமைப்பர் நம் மக்கள். வட ஆந்திர மக்கள் உலர் மாவல் சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு போன்றவற்றை இடித்துப் போட்டு வெந்நீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து உருட்டிக் காயவைத்து விடுவார்கள்.

வெளியூர்ப் பயணங்களின் போதும், தொலைதூரத்திற்கு ஆடுமாடுகள் மேய்க்கப் போகும் போதும் இந்த உருண்டைகளைப் பழந்துணியில் போட்டுக் கட்டித் தூக்கிக் கொண்டு போவார்கள். பசிக்கிற நேரத்தில் இம்மாவுருண்டையை எடுத்து பொடித்துப் போட்டு கிடைத்தால் வெங்காயம், புளித்தண்ணி போன்றவற்றை உடன் சேர்த்துப் பிசைந்து உண்பார்கள். வறண்ட நில மக்களிடம் இன்றளவும் இப்பழக்கம் உண்டு. தமிழகத்துத் தென்மாவட்டங்களில் அவசரடி சிற்றுண்டிக்கு மாவை லேசாக நல்லெண்ணை விட்டு வறுப்பார்கள். உடன் சீரகம், பொட்டுக்கடலை, அரிந்த வெங்காயம், இருந்தால் மல்லித்தழையும் பொடியாக அரிந்து போட்டுக் கலக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் நொறுக்குத் தீனியாகத் தின்பார்கள். பலவகைகளிலும் ஆபத் பாந்தவனாக விளங்கும் கேழ்வரகு.

 

கேழ்வரகு மாவில் வெங்காயம், சீரகம், பச்சை மிளகாய், எண்ணை விட்டு வதக்கிய முருங்கைக் கீரை, உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து இரு உள்ளங்கையளவிற்கு வட்டமாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் நன்றாக வேக விட்டு எடுத்தால் குளிர் காலத்தில் கொடு கொடு என்று வாங்கிச் சாப்பிடுவார்கள். புறச்சூழலில் ஈரப்பதம் நிலவும் போது உடலில் வெப்பம் ஏற்றுவதற்குப் பொருத்தமான உணவாக இருக்கும். செரிமானத் தன்மை நன்றாக இருந்தால் மெலிந்த உடல்வாகு உடையவர்களுக்கும் நல்ல ஊட்டமளிக்கும் உணவாக இருக்கும்.

பொதுவாக இதுபோன்ற அடையாகச் செய்வது மட்டுமே நம்முடைய முன்னோர்களின் வழக்கம். இன்று உணவுப் பொருட்கள் ஓரளவு தாராளமாகக் கிடைக்கும் போது சத்தான உணவுக்காக கேழ்வரகு மாவில் மாற்றுப் பண்டங்கள் அவ்வளவாக முயற்சித்துப் பார்ப்பதில்லை.

கேழ்வரகில் ரிப்பன் பக்கோடா முறுக்கு, சன்னத்துளை உருளையில் இட்டு மிக்சர் போன்றவை அங்கங்கே நொறுவித்தீனியாக விற்பனைக்கு வருகிறது. மாற்றுப் பண்டங்கள் தயாரிக்கும் போது அவற்றிற்கு உரிய மூலப்பொருளின் பண்பை உணர்ந்து தயாரித்தலே பயன் தரும். முன்னரே சொன்னது போல கெட்டித்தன்மையும், வறள் தன்மையுமான கேழ்வரகு மாவில் எண்ணையில் பொறித்தெடுக்கிற பொழுது மேலும் வறள் தன்மை கூடியதாகி விடும் அப்பண்டம். எனவே அப்பண்டங்களை மெல்லும் பொழுது கடினமாக இருக்கும். கடினத்தன்மையைக் குறைக்க வணிகப் பண்டங்களில் சமையல் சோடாவைக் கலப்பார்கள். அது உண்போரின் இரைப்பையையும், குடலையும் கடுமையாகப் பாதிப்பதோடு நிரந்தரமாகச் செரிமானச் சிக்கலையும் கொண்டு வந்து விடும்.

சமையல் சோடா கலக்காத போதும் எண்ணையில் பொறிக்கிற கேழ்வரகு மாவுப் பண்டங்களை உண்டால் அவை செரிமான மண்டலத்தில் உள்ள நீரை வற்றச் செய்து விடும். எனவே உண்போருக்கு வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை உருவாக்கி விடும். எனவே இதுபோன்ற வணிகப் பண்டங்களைத் தயாரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதேநேரத்தில் உணவைக் கடித்துண்ணும் பழக்கம் குறைந்து வரும் இந்நாளில் கேழ்வரகு மாவினைக் கொண்டு மெத்தென்ற பலகாரங்கள் தயாரிக்கலாம்.

கேழ்வரகு மாவுடன், மைதா மாவும் கலந்து நாட்டுச் சக்கரை கலந்து வழக்கமான முறையில் கேக் தயாரித்தல் இன்று பரவலாகி வருகிறது. அதுபோலவே கேழ்வரகு மாவுடன் தாராளமாகத் தேங்காய்ப்பூ சேர்த்து தயாரிக்கும் எதுவானாலும் சுவையாக இருக்கும்.

 

போப்பு, 96293 45938

கே.வ மாவுடன் பாதியளவு அரிசி மாவும் தேங்காய்ப்பூ, ஏலக்காய், வாழைப்பழம் ஆகியவைச் சேர்த்து தோசைப்பதத்தை விட சற்றே கெட்டியான மாவாகக் கலக்கி தோசைக்கல்லில் வார்த்து நெய் ஊற்றி வார்த்தெடுத்தால் உண்ணவும் சுவையாக இருக்கும். நவீன உணவுகளால் சுவை மொட்டுகள் கெடுக்கப்பட்ட நாவிற்கும் ஏற்கும் விதத்தில் இருக்கும். கேழ்வரகின் வறள் தன்மையைப் புரிந்துகொண்டு பதமாகத் தயாரிக்கும் உணவுபண்டங்களைப் புதிது புதிதாக முயற்சித்துப் பார்க்கலாம். அல்லது கேழ்வரகு மாவினை இரவில் ஊறவைத்துக் காலையில் கனமான மண்பாத்திரம் அல்லது வேறு கனமான பாத்திரத்தில் ஊற்றி கேஸ் அடுப்பில் ஏற்றி, ஒரு கொதி வந்தபிறகு சிம்மில் வைத்து பத்து நிமிடங்களில் இறக்கினால் இரண்டு மூன்று நாட்களுக்கு இந்த வெயில் காலத்தில் அவ்வப்போது கரைத்துக் குடிக்கலாம். கூழ் சமைக்கத் தெரியாதவர்களுக்கும் அளித்து மகிழ்ச்சி அடையலாம். இன்று கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறு – பெரு நகரங்களிலும் கூழ் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் அவற்றை விற்கும் எளிய மனிதர்கள் கூட ரேசன் அரிசியை மாவாக அரைத்து கேழ்வரகு மாவில் அதிகபட்சமாக கலந்து வெள்ளை வெளேரென்று கரைத்து விற்பனை செய்கிறார்கள்.

ஆனாலும் வணிக மயமான இக்காலத்திலும் கேழ்வரகோ வேறு தானியமோ தேர்வு செய்து கூழ்க்காய்ச்சி விற்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இந்த உண்மையைப் புரிந்து தள்ளுவண்டிக் கடையிலேயே கூழருந்துவது பொருத்தமே ஆகும். அதிலும் குறிப்பாக வெயிலின் தாக்கம் கூடி வரும் இந்நாட்களில் மதியவேளைக்குப் பொருத்தமான உணவு கேழ்வரகுக் கூழே ஆகும்.

பிற தானியக் கூழ் குறித்தும் வேறு உணவுகள் குறித்தும் தொடர்ந்து பார்ப்போம்.

Tags:    

Similar News