சமையலறையில் இருக்குது மருந்து! கண்களை காக்க எளிய வழி
- பொன்னாங்கண்ணி கீரையை சூடான சாதத்தில் பிசைந்து தினமும் ஒரு முறை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கண் பார்வை கூர்மையடையும்.
- இரண்டு உள்ளங்கைகளையும் 10 விநாடிகள் நன்றாக சூடு பறக்க தேய்த்து இருகண்களின் மீது மெதுவாக வைத்து இருக்கவும்.
கண்கள் நமக்கும் வெளி உலகிற்குமான தொடர்பை "பார்த்தல்" என்ற செயலின் மூலம் ஏற்படுத்துகிறது. தெளிவான கண்பார்வை, ஆரோக்கியமான கண்கள் இவை நம் வாழ்விற்கு இன்றியமையாத ஒன்றாகும். கண்கள் மிகவும் நுட்பமான வடிவமைப்பும் மென்மையான தன்மையும் கொண்டுள்ளன. ஒரு சிறு துரும்பு நம் கண்களில் விழுந்துவிட்டால் கூட நம்மால் அதை தாங்கமுடிவதில்லை. சிறுது நேரம் தடுமாறி விடுகிறோம்.
கண்பார்வை கூர்மை என்பது நம் வாழ்க்கை தரத்தையும்,நாம் அன்றாட வாழ்வில் செய்யும் செயல்களின் தரத்தையும் மேம்படுத்த உதவுகிறது. நம் கண்களை நலமுடன் பேணிக்காப்பது நம் கடமையாகும்.
நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பல்வேறு சூழ்நிலைகளாலும், புற மற்றும் அக ஆரோக்கிய குறைபாட்டாலும் பல்வேறு பிணிகள் நம் கண்களை பாதிக்கின்றது. அவ்வாறு வெகுவாக காணப்படும் சில கண் பிரச்சனைகளுக்கான எளிய வீட்டு வைத்திய முறைகளையும், பயிற்சிகளையும் இக்கட்டுரையில் காண்போம்.
ஆரம்ப நிலையில் கண்களில் ஏற்படும் நோய்களை உடனுக்குடன் குணப்படுத்தாவிடில் அது பிற்காலத்தில் கண்களின் ஒளித்திறனை பாதிக்கக்கூடும். இதனால் பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு. அந்த வகையில் ஆரம்பகட்ட கண் நோய்களை கீழ்வரும் சில எளிய மருந்துகளை வீட்டிலேயே தயாரித்து உபயோகித்தால் பயன் தரும்.
கண் குளிர்ச்சிக்கு தைலம்:-
மிளகு, சீரகம், சுக்கு 1 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்யவும். கீழாநெல்லி, பொன்னாங்கண்ணி 1 பிடி எடுத்து அரைத்துக் கொள்ளவும். வெட்டிவேர், நன்னாரிவேர், கஸ்தூரி மஞ்சள் இவைகளை பொடி செய்து கொள்ளவும். 50 மி.லி. பாலுடன் எலுமிச்சை சாறு 5 மி.லி. விட்டு, அரைத்து வைத்த விழுது மற்றும் பொடியை கலக்கவும். 100 மி.லி. நல்லெண்ணயுடன் இந்த பாலை கலந்து அடுப்பிலேற்றி சிறுதீயிலிட்டு தைலமாக காய்ச்சவும். ஆறியதும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.
வாரம் ஒருமுறை 10 முதல் 20 மி.லி. தைலம் எடுத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து இளஞ்சூடான நீரில் தலைக்கு குளிக்கவும்.
தீரும் நோய்கள்:-
உடல் சூடு, கண்களில் சிவப்பு தன்மை, கண் எரிச்சல், கண் புகைச்சல், பார்வை மங்கல் தீரும்.
கண்நோய்க்கு மஞ்சள் துணி:-
மஞ்சள் கலந்த நீரில் துகள்கள் இல்லாமல் வடிகட்டி வைத்து அதில் மெல்லிய சுத்தமான காட்டன் துணியை நனைத்து காயவைத்து கண்களை துடைக்கவும், ஒற்றி எடுக்கவும் பயன்படுத்தலாம். இதனால் கண் சிகப்பு, கண் எரிச்சல், கண்ணில் நீரொழுகுதல் தீரும்
நேத்திர பூண்டு தைலம்:
நேத்திர மூலிகையின் இலையை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு இலை மூழ்கும் அளவு நல்லெண்ணைய் ஊற்றி ஒரு துணியால் வேடு கட்டி வெயிலில் 10 நாட்கள் வைத்து பின் வடிகட்டி அந்த தைலத்தை இரண்டு துளிகள் விட்டு வர கண்படலம், பார்வை மங்கல் குணமாகும்.
பொன்னாங்கண்ணி கீரை:
பொன்னாங்கண்ணி கீரையை அரிந்து கொள்ளவும். பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் விட்டு சிறிதளவு பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிளகு, சீரகம், உப்பு சேர்த்து வதக்கவும். பின் அரிந்து வைத்துள்ள பொன்னாங்கண்ணி கீரையை சேர்த்து மூடிவைத்து வேக விடவும். கீரை நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
கீரையை சூடான சாதத்தில் பிசைந்து தினமும் ஒரு முறை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கண் பார்வை கூர்மையடையும். விழித்திரையில் உண்டாகும் படலம் கரையும்.
கண் வறட்சி சரியாக:
தினமும் 5 முதல் 7 கறிவேப்பிலைகளை பச்சையாக மென்று தின்று வந்தால் கண்களின் வறட்சி சரியாகும்.
கண்நோய்க்கு படிகார நீர்:
தண்ணீர் - 250 மி.லி.
படிகாரம் - 5 கிராம்
படிகாரத்தை ஒரு துணியில் வைத்து முட்டையாக கட்டி பனங்கள் ஆவியில் காட்டி எடுக்க படிகாரம் சுத்தியாகும். சுத்தி செய்த படிகாரத்தை பொடி செய்து தண்ணீரில் கலந்து இரு முறை வடிகட்டினால் படிகார நீர் தயார். இதை ஒரு வாரம் வரை உபயோகிக்கலாம். இதனை நாம் கண்களுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்தலாம். காலை இரவு 2 சொட்டுகள் கண்களில் விடலாம். கண்களை கழுவ இதே நீரை பயன்படுத்தலாம்.
இயற்கை மருத்துவர் நந்தினி, 9500676684
கண் கூச்சம் சரியாக:
5 மி.லி. தேனுடன் 5 மி.லி. வெந்நீர் கலந்து தினமும் இருவேளை 2 சொட்டுகள் கண்களில் விட கண் கூச்சம் சரியாகும். கண்களில் உள்ள தசைகள் பலம் பெறும்.
கண்கள் பலம் பெற:
தான்றிக்காயை மஞ்சள் இழைப்பது போல இழைத்து கண்களை சுற்றி பற்றிட கண்கள் பலம் பெறும். கண்பார்வை கூர்மையடையும்.
கண் அழற்சி இருந்தால்:
படுக்கைக்கு போகும்முன் உள்ளங்காலில் பசுவின் நெய்யை நன்றாக தேய்த்து, தவிட்டை பொருத்தி உறங்கி எழுந்து தண்ணீர் விட்டு கழுவித் துடைத்து இழைத்த சந்தனத்தை பூசி வரலாம்
சித்த மருத்துவத்தில் கண்களுக்கான மருந்துகள்:
இளநீர் குழம்பு
பழக்கிராம்பு பக்குவ வெண்ணெய்
கண்டு பற்பம்
நாரிகேளஞ்சனம்
மேற்கண்ட மருந்துகளை சித்த மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று பின் உபயோகிக்கலாம்.
கண்களின் திறனை அதிகரிக்கும் உணவுகள்:
கேரட், முட்டை, மீன், மஞ்சள், சர்க்கரைவள்ளிகிழங்கு, தக்காளி, புராக்கோலி, பப்பாளி, பாதாம் பருப்பு, பருப்பு வகைகள், கீரை வகைகள், ஆரஞ்சு போன்றவை.
கண்கள் ஒளி பெற நிலவை பார்த்தல்:
கைவிரல்களை பலகணி போல் பின்னிக்கொண்டு இரவில் சந்திரனை அவ்விரலின் இடைவெளியில் சிறிது நேரம் பார்த்திருந்து பிறகு கண்ணில் தண்ணீரை விட்டு கழுவிட்டு வர கண்ணுக்கு ஒளியுண்டாகும்.
திராடகா பயிற்சி:
ஒரு விளக்கு அல்லது மெழுகுவர்த்தியை இருண்ட அறையில் ஏற்றி வைத்து அதை கண்களுக்கு முன்பாக ஒரு நேர்கோட்டில் வைத்திருக்க வேண்டும் இமைக்காமல் சில நொடிகள் திரியின் மேலே உள்ள சுடரின் பிரகாசமான பகுதியை பார்க்க வேண்டும் பிறகு உள்ளங்கைகளை தேய்த்து சூடாக்கி கண்களின் மீது வைத்து மெதுவாக கண்களை திறக்கவும் இந்த பயற்சியால் கண்கள் அமைதி பெறுகின்றன கண்பார்வையை கூர்மைப்படுத்துகிறது.
கண்களுக்கு பயிற்சி:
தொடர்ச்சியாக கண்களை உபயோகப்படுத்தும்போது கண்கள் சோர்வடையும். அப்போது இரண்டு உள்ளங்கைகளையும் 10 விநாடிகள் நன்றாக சூடு பறக்க தேய்த்து இருகண்களின் மீது மெதுவாக வைத்து இருக்கவும். இதை 2 முதல் 5 நிமிடங்கள் செய்யலாம். இதற்கு பால்டிங் என்று பெயர்.
கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். இப்படி செய்வதால் கண்கள் வறட்சி அடைவதை தவிர்க்கலாம். கண்களை இறுக்கி பிடித்தலை 5 விநாடிகள் செய்யலாம். ஒரு பொருளை 10 இன்ச் தூரத்தில் வைத்து இருந்து, அதை கண் இமைக்காமல் உற்றுநோக்கி பின் 6 மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு பொருளை உற்றுநோக்க வேண்டும். ஒருவர் 20 நிமிடம் தொடர்ந்து கணினி அல்லது கைபேசி திரையை பார்த்து கொண்டிருந்தால் 20 அடி துரத்தில் உள்ள பொருளை 20 நொடிகள் உற்று நோக்கவேண்டும்.
கண்களை மேலும் கீழும் மற்றும் வலது, இடது பக்கங்களிலும், கடிகார சுழற்சி முறை, எதிர் கடிகார சுழற்சி முறையில் உருட்டி உருட்டி தலையை ஆட்டாமல் சுற்றி பார்க்கவும். பின் கண்களை இறுக்கி பிடித்து சிமிட்டவும்.
கண்களுக்கு 8 பயிற்சி:
ஒரு சுவரிலிருந்து 10 அடி துரத்தில் நின்று கொண்டு, கண்களை வைத்து சுவரில் ஒரு புள்ளியை மையமாக கொண்டு 8 என்ற எண்ணை போட வேண்டும். இப்படி செய்வதால் கண் தசைகளுக்கு பலம் கிடைக்கிறது.