சிறப்புக் கட்டுரைகள்

மகளிர் மருத்துவம் - சினைப்பையில் முட்டைகளை அதிகரித்து குழந்தை பாக்கியம் பெறலாம்

Published On 2025-04-09 15:05 IST   |   Update On 2025-04-09 15:05:00 IST
  • சில பெண்களுக்கு இயற்கையிலேயே ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கலாம்.
  • குழந்தையின்மை சிகிச்சைக்காக வெறும் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு சில விஷயங்களை நிர்ணயிக்க முடியாது.

குழந்தையின்மை பிரச்சினையில் பெண்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்களில் ஒன்று, ஆன்ட்ரல் பாலிக்கில் கவுன்ட் (ஏ.எப்.சி) என்பதாகும். ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை என்பது, பெண்களின் சினைப்பையில் முட்டைகளின் இருப்பை குறிக்கும் முக்கிய விஷயமாகும்.

இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை சரியான அளவில் இருந்தால் தான், அந்த பெண்களால் நல்ல முறையில் கருத்தரிக்க முடியும். ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை குறைவாக உள்ள பெண்களுக்கு முட்டைகளும் குறைவதால் கருத்தரிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. பெண்களுக்கு ஆன்ட்ரல் பாலிக்கல் எண்ணிக்கை குறைவது ஏன்? அவர்களுக்கான சிகிச்சை முறைகள் என்ன? அவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

 

சினைப்பையில் நீர்க்கட்டிகளை தெரிந்து கொள்வது எப்படி?

ஆன்ட்ரல் பாலிக்கில் என்பது கருமுட்டைகள் இருக்கும் நீர்ப்பைகள் என ஏற்கனவே அறிந்தோம். ஆனால் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையை கணக்கீடு செய்யும் போது சில நேரங்களில் எண்ணிக் கையில் சில மாற்றங்கள் ஏற்படும். இதில் சில நீர்க்கட்டிகளாக இருக்கும். இந்த நீர்க்கட்டிகளில் முட்டைகள் இருக்காது.

இவற்றை நாம் எப்படி தெரிந்து கொள்வது என்றால், அதனுடைய அளவில் மாறுபாடுகள் இருக்கும். பல நேரங்களில் அதன் வடிவத்தில் கூட மாறுபாடு இருக்கலாம். சில நேரம் அது ஒரே அளவில் இருந்து கொண்டே இருக்கும். பெரிதாக மாறாது. மேலும் முட்டைகளின் வளர்ச்சியுடன் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். எனவே இவை ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையில் சேராது.

ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பெண்களுக்கு அது எதனால் குறைகிறது என்று பரிசோதித்து பார்த்தால் அதற்கு பல காரணங்கள் உள்ளன. சினைப்பையை பாதிக்கின்ற நோய்கள், தொற்றுக்கள், எண்டோமெட்ரியோசிஸ் எனப்படும் கர்ப்பப்பை உள்சுவர் வெளிவளர்ச்சி ஆகிய பிரச்சினைகளால் பெண்களுக்கு ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை குறையலாம்.

சில பெண்களுக்கு இயற்கையிலேயே ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கலாம். அதனால் வயது குறைவாக உள்ள பெண்களுக்கும் கூட முட்டைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். எனவே ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை குறைவாக இருக்கிற பெண்கள் நல்ல பலன் கொடுக்கும் மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ள திட்டமிடுவது மிக முக்கியமான அடிப்படையாக இருக்க வேண்டும்.

சினைப்பைகளில் புத்துணர்ச்சி முறையில் சிகிச்சை:

அந்த வகையில் இளம்வயது பெண்களுக்கு இயல்பான எண்ணிக்கையில் சினைப்பையில் கருமுட்டைகள் இருந்தால் அவர்களுக்கு ஹார்மோன் கொடுத்து சிகிச்சை அளிப்போம். அந்த ஹார்மோனை குறைந்த அளவில் கொடுப்போம். அப்போது அவர்களுக்கு நன்கு வளர்ச்சி அடைந்த 15 முட்டைகள் வரை கிடைக்கும். அதில் 8 முதல் 10 கரு, நல்ல கருவாக உருவானால் ஐ.வி.எப். வெற்றி விகிதம் 90 சதவீதம் கிடைக்கும்.

அந்த வகையில் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை என்பது மிகவும் முக்கியம். கருத்தரிப்புக்கு அதுதான் ஒரு முக்கியமான அடிப்படையாக கருதப்படும். இந்த பெண்களுக்கு முக்கியமாக முட்டைகள் இருப்பு குறைவாவதற்கான காரணங்களை சரியாக தெரிந்து கொண்டு அந்த காரணங்களை சரிசெய்து ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் போது ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை குறைவாக உள்ள இளம் வயது பெண்களுக்கு சினைப்பைகளில் புத்துணர்ச்சி முறையில் சிகிச்சை அளிக்கலாம். அதாவது பிரீஆன்ட்ரல் பாலிக்கில் நிலையில் இருக்கிற ஆரம்ப நிலை முட்டைகளை அதிகரிப்பதற்கு ஸ்டெம் செல், பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா செலுத்தி சிகிச்சை அளிக்கும் போது ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் மூலமாக ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு முறைகளை செய்வதற்கு ஏற்ப கருமுட்டைகளின் எண்ணிக்கையும் அதிகமாகும். முட்டைகளின் தரமும் நன்றாக இருக்கும்.

 

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

கருமுட்டைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் ஸ்டெம்செல்:

முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்னும் சில வழிமுறைகளும் உள்ளன. அதற்கு ஓவரியன் ஸ்டிமுலேசன் (சினைப்பை தூண்டுதல்) என்று பெயர். இதில் இரட்டை தூண்டுதல் முறையில் கருமுட்டைகளை அதிகமாக வெளியே எடுத்து உறை நிலையில் வைத்து குழந்தை பேறு பெறுவதற்கான சிகிச்சைகளை அளிக்க முடியும்.

இந்த வகையில் பெண்களுக்கு ஐ.வி.எப். கருத்தரிப்பு சிகிச்சை முறைகளை செய்யும்போது, அதன் பலன் சீராக வருவதற்காக மருந்துகள் அளவை நிர்ணயிப்பதற்கும் இந்த வழிமுறைகளை முக்கியமான விஷயமாக கருதுகிறோம். கண்டிப்பாக ஒவ்வொரு பெண்களின் சினைப்பைகளின் செயல்பாடு மற்றும் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையை வைத்து தான் முடிவு எடுப்போம்.

இதன் மூலமாக கருமுட்டைகளின் எண்ணிக்கையை அதிகரித்து, கருத்தரிப்பதற்கான திறனை நிர்ணயிக்க முடியும். ஸ்டெம்செல், பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா ஆகியவற்றை செலுத்தி சிகிச்சை அளிக்கும்போது பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அதாவது பிரீஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை மற்றும் கருமுட்டைகள் குறைவாக இருக்கும் பெண்களுக்கு முட்டைகள் வளர்ச்சி அடைவதற்கான தன்மைகளும் குறைவாக இருக்கும்.

அந்த முட்டைகளின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு இந்த ஸ்டெம்செல், பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா ஆகியவை முட்டைகள் வளருவதற்கு தடையாக உள்ள காரணிகளை சரிசெய்து முட்டைகளின் வளர்ச்சியை தூண்டி அதனால் கரு முட்டைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு அடிப்படையான வழிமுறையாக அமைகிறது.

அந்த வகையில் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை குறைவாக இருக்கிற, முட்டைகள் இருப்பு குறைவாக இருக்கிற பெண்களுக்கு முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு சினைப்பை புத்துணர்ச்சி முறை மூலமாக முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை யையும் அதிகப்ப டுத்த முடியும். இவை அனைத்துமே ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணி க்கை குறைவாக இருக்கும் பெண்கள் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை கண்டிப்பாக பிசிஓடி எனப்படும் பாலிசிஸ்டிக் சினைப்பை நோய் உள்ள பெண்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு 35 மற்றும் 40-க்கு மேலே இருக்கும். இந்த அளவுக்கு ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை இருக்கிற பெண்களுக்கு ஹைப்பர் ரெஸ்பான்ஸ் என்று சொல்வோம். சினைப்பையில் முட்டைகள் வளர்ச்சி அதிக எண்ணிக்கையில் உருவாகி, அதனால் இந்த ஹைப்பர் ரெஸ்பான்ஸ் ஒரு பிரச்சினையை உருவாக்கி அதன் மூலம் பெண்களுக்கு வயிறு வீக்கம், அதிகமான முட்டைகள் வளர்ச்சி, ஹைப்பர் தூண்டுதல் ஆகியவை அதிகமாக ஏற்படும்.

 

நல்ல முறையில் குழந்தை பேறு பெறுவது சாத்தியம்:

முட்டைகளின் எண்ணிக்கை, முட்டைகளின் கருத்தரிக்கும் திறன், வெற்றி விகிதம் எவ்வளவு என்று கணிப்பது, எவ்வளவு ஊசி மருந்துகள் பயன்படுத்தலாம் என்பது பல விஷயங்களுக்கும் அடிப்படையாக அமைவதே இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை தான்.

ஆனால் குழந்தையின்மை சிகிச்சைக்காக வெறும் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு சில விஷயங்களை நிர்ணயிக்க முடியாது. சிகிச்சைக்கு வரும் பெண்களின் வயது மற்றும் அவர்களின் ஏ.எம்.எச். எனப்படும் ஆன்டி முல்லேரியன் ஹார்மோன் அளவு இவை இரண்டும் முக்கியமாக கணிப்பதற்கான குறியீடு ஆகும்.

பெண்களின் வயது, ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை, ஏ.எம்.எச். அளவு ஆகிய மூன்றையும் வைத்து கணித்து அதன் மூலமாக ஐ.வி.எப். சிகிச்சை அளிக்கும் போது வெற்றி விகிதம் அதிகமாகும். ஆரோக்கியமான முதிர்ச்சி அடைந்த முட்டைகள்கிடைக்கும். அதனால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். இதை நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

எனவே ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை என்பது கரு முட்டைகளின் வளர்ச்சியை சரியாக நிர்ணயிக்கக்கூடியது, கணிக்கக் கூடியது. ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை ரொம்ப அதிகமாக இருக்கிற பிசிஓடி பெண்களுக்கு அதனை சரி செய்வதற்கும் முக்கியமான வழிமுறைகள் உண்டு.

அந்த வகையில் ஒவ்வொரு பெண்களின் ஆன்ட்ரல் பாலிக்கிலும் அவர்களின் முட்டைகளின் இருப்பை குறிக்கிறது. இதனை சீராக கவனித்து சரி செய்தால் இயற்கையாகவோ அல்லது ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு முறை மூலமாகவோ நல்ல முறையில் குழந்தை பேறு பெறுவது சாத்தியமாகும்.

Tags:    

Similar News