சிறப்புக் கட்டுரைகள்

தமிழ் வளர்த்த அறிஞர்கள்- தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்

Published On 2025-04-03 15:05 IST   |   Update On 2025-04-03 15:05:00 IST
  • சிலப்பதிகாரம் இன்னும் தமிழகத்தில் சரியாகப் பரவவில்லை என்ற கருத்து பல தமிழ் அறிஞர்களிடையே உண்டு.
  • செல்லப்பன் தன் பேச்சில் ஒருபோதும் நாகரிகமில்லாத நகைச்சுவையைக் கலக்க மாட்டார்.

பழகுவதற்கு இனிய பண்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் பழந்தமிழ் அறிஞரான சிலம்பொலி செல்லப்பன் அவர்கள்.

கொள்கை வேறுபாடுகளையோ அரசியல் சார்ந்த கட்சி வேறுபாடுகளையோ ஜாதி சமய வேறுபாடுகளையோ பொருட்படுத்தாமல் எல்லோரையும் மனித நேயத்தோடு அணுகும் பக்குவமும் முதிர்ச்சியும் உள்ள தமிழறிஞராக விளங்கினார் அவர்.

அவரை நாத்திகர் என்று கருதுபவர்கள் உண்டு. ஆனால் அவர் நாத்திகர். தன்னைப் பற்றி அவரே ஒருமுறை தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார்.

`என்னை நாத்திகன் என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட குறுகிய வட்டத்தில் என்னை அடக்க இயலாது. மதம் வழிபாடு சடங்கு போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பது உண்மைதான். ஆனால் நமக்கு மேற்பட்ட ஏதோ ஓர் இறைச்சக்தி இருக்கிறது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு!` என்று தன் கோட்பாட்டை விளக்கியுள்ளார்.

இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவியாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். தாய் பெயர் பழனியம்மாள். தந்தை பெயர் சுப்பராயன்.

செல்லப்பன் இளமையிலேயே ஏராளமான தமிழ் நூல்களைத் தாமே விரும்பிப் பயிலத் தொடங்கினார். வாழ்நாள் முழுதும் அவர் பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்துக் கொண்டே இருந்தார்.

எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் இயங்கினார். ஏராளமான மேடைகளில் தொடர்ந்து பேசியதால் பெரிதும் பேச்சாளர் என்றே அறியப்பட்டார்.

சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சீறாப்புராணம், தேம்பாவணி, வைணவத் தமிழ், பாரதிதாசன் பாடல்கள் என எண்ணற்ற தலைப்புகளில் அவர் சொற்பொழிவுகள் நிகழ்ந்தன. `சங்க இலக்கியத் தேன், நல்ல குறுந்தொகையில் நானிலம், சிலப்பதிகாரச் சிந்தனைகள், பெருங்கதை ஆராய்ச்சி, பெருங்குணத்துக் கண்ணகி` முதலிய பற்பல நூல்களின் ஆசிரியர் அவர்.

பக்தி இலக்கியத்திலும் சிலம்பொலி செல்லப்பன் ஆழங்கால் பட்டவர் என்பது பலர் அறியாதது. `கற்பனைக் களஞ்சியம்` துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய பிரபுலிங்க லீலையின் சிறப்புகள் குறித்து அவர் மேடையில் ஒரு மணிநேரத்திற்கும் மேல் பேசியிருக்கிறார். தேம்பாவணி, சீறாப்புராணம் ஆகியவை பற்றியும் பேசியிருக்கிறார். தமிழில் படைக்கப்பட்டுள்ள எல்லா வகை இலக்கியங்களையும் ரசிக்க வேண்டும் என்பதே அவர் கொள்கை.

ம.பொ.சி. அவர்களின் சிலப்பதிகாரப் பேச்சு புகழ்பெற்றது. அதுபோல் செல்லப்பனாரின் சிலம்புச் சொற்பொழிவும் வியக்க வைப்பது. ம.பொ.சி.யைச் சிலம்புச் செல்வர் என்றார்கள். செல்லப்பனார் சிலம்பொலி என அழைக்கப்பட்டார்.

ஒரு பள்ளியில் நடந்த சிலப்பதிகார விழாவுக்கு சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை வந்திருந்தார். அங்கு வரவேற்புரை ஆற்றியவர் செல்லப்பன். அவரது செந்தமிழில் பெரிதும் ஈர்க்கப்பட்டார் சேதுப்பிள்ளை.

`செல்லப்பன் தமிழுக்கு வாய்த்த சொல்லப்பன். நயத்தக்க நல்லப்பன். இன்றுமுதல் இவர் சிலம்பொலி செல்லப்பன்` என மனமாரப் பாராட்டினார். அன்றுமுதல் இவருக்குச் சிலம்பொலி என்ற பெயர் நிலைத்துவிட்டது. பின்னர் சிலம்பொலி செல்லப்பன் என்றே அவர் பெயர் வழங்கப்படலாயிற்று.

சிலப்பதிகாரம் இன்னும் தமிழகத்தில் சரியாகப் பரவவில்லை என்ற கருத்து பல தமிழ் அறிஞர்களிடையே உண்டு. அந்தக் கருத்து உண்மைதான். கோவை நஞ்சுண்டன் போன்றவர்கள் இளங்கோ மன்றம் வைத்து சிலம்பைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தின் பெருமையைத் தமிழகத்தில் பரப்பியவர்களில் தலையாய இடம் பெறுபவர் சிலம்பொலி செல்லப்பன்.

சிலம்பொலியார் ஆகச் சிறந்த சொற்பொழிவாளர். இன்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்துப் பொதுமக்களைக் கவரும் விதத்தில் சொற்பொழிவு செய்பவர்கள் மிகக் குறைவு.

ஆய்வு மாணவர்கள் கேட்கிற மாதிரி பண்டிதத் தமிழில் சொற்பொழிவு செய்ய ஒரு சிலர் இருக்கக் கூடும்.

பழந்தமிழ் இலக்கியத்தை மக்களுக்குக் கொண்டு சேர்க்கிற வகையில் ஜனரஞ்சகமாகப் பேசிய சிலம்பொலி செல்லப்பன் போன்றவர்களின் பணி இன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவைப்படும் ஒன்று.

இன்றைய சொற்பொழிவாளர்கள் பலர் வாழ்வியல் சொற்பொழிவுகளாகச் செய்யத் தொடங்கி விட்டார்கள். பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்களோடு சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள் பெரிதும் குறைந்துவிட்டார்கள்.

சொற்பொழிவாளர்களுக்குப் பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி இருந்தால் தானே அவ்விதம் மேற்கோள் தர இயலும்?

சிலம்பொலியார் பேச்சில் சங்கப் பாடல்களும் காப்பிய வரிகளும் இடைக்கால இலக்கியங்களும் ஒரு சிறு நினைவுப் பிசகும் இல்லாமல் கடகடவென்று மேற்கோள்களாக வந்து மழையாய்க் கொட்டும்.

முத்து மாலையில் இடையிடையே பவழத்தைக் கோப்பது மாதிரி, அவர் எண்ணற்ற இலக்கிய மேற்கோள்களைத் தம் பேச்சில் ஆங்காங்கே பொருத்தமான இடங்களில் தொடுத்துக் கொண்டே இருப்பார் அவர்.

எந்த ஒரு சிறுகுறிப்பும் அவர் கையில் இருக்காது. கேட்பவர்கள் பிரமித்து அமர்ந்திருப்பார்கள். செல்லப்பனாரின் அரிய நினைவாற்றல் அவருக்கு இயற்கை கொடுத்த கொடை.

செல்லப்பன் தன் பேச்சில் ஒருபோதும் நாகரிகமில்லாத நகைச்சுவையைக் கலக்க மாட்டார். ஊனமுற்றோரைக் கிண்டல் செய்வது, பெண்களைக் கேலி பேசுவது போன்றவை அவர் பேச்சில் ஒருபோதும் இருந்ததில்லை. நாட்டுப்புற இலக்கியத்தின் மீது அவருக்கு நாட்டமிருந்தது. எனவே நாட்டுப்புறப் பாடல்களையும் தனிப் பாடல்களையும் அவர் தம் பேச்சில் குறிப்பிடுவதுண்டு.

வல்லிக்கண்ணனைப் போலவே சிலம்பொலியாரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களுக்கு அணிந்துரை வழங்கிய பெருமைக்குரியவர். வல்லிக்கண்ணன் தற்கால இலக்கியப் படைப்புகளுக்கு அணிந்துரைகளை வாரி வழங்கினார் என்றால், செல்லப்பன் பழந்தமிழ் இலக்கிய விளக்க நூல்களுக்கு அணிந்துரைகளை அள்ளித் தந்தார்.

இந்தச் செயலை வாழ்நாள் முழுதும் விடாமல் அவர் செய்துவந்தார். அதனால் `அணிந்துரை நாயகர்` என்றே பலரால் போற்றப்பட்டார்.

இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் அணிந்துரைகளை எழுதித் தருவது ஒரு பெரிய தமிழ்ப் பணி என்று சொல்லத் தேவையில்லை. இவரது அணிந்துரை ஆறு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

காப்பியம், மரபுக்கவிதை, புதுக்கவிதை, இலக்கியத் திறனாய்வு, குழந்தை இலக்கியம், தன் வரலாறு உள்ளிட்ட பல துறைகளில் இவரது அணிந்துரைத் தொகுப்பு நூல் அமைந்துள்ளது. பல்லாண்டு கால உழைப்பின் பயன் அது.

இந்நூல் திறனாய்வு என்னும் வகைப்பாட்டில், தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

திருப்பூர் கிருஷ்ணன்

பழந்தமிழ்க் கடலில் மூழ்க விரும்புபவர்கள் இவரது அணிந்துரைகளைப் படித்தாலே போதும். வேறு எந்த நூலையும் படிக்கத் தேவையில்லை. அந்த அளவு தகவல் களஞ்சியங்களாக அவை திகழ்கின்றன.

கணிதம் கற்றவர். அவ்வகையில் உயர்நிலைப் பள்ளியில் ஒரு கணித ஆசிரியராகத் தான் தம் பணிவாழ்வைத் தொடங்கினார். அவரிடம் கணிதம் பயின்ற மாணவர்கள் அவர் கணிதத்தைக் கரும்பைப் போல் இனிமையாகக் கற்றுத் தருவார் என அவரது கற்பிக்கும் ஆற்றலைப் புகழ்கிறார்கள். கணக்காசிரியராக இருந்தவர், பின்னர் பதவி உயர்வு பெற்றுத் தலைமை ஆசிரியரானார். அதன்பின் மாவட்டக் கல்வி அலுவலர் ஆனார். தமிழக அரசு அவருக்கு உள்ளாட்சித் துறையில் உயர் அலுவலர் பதவி வழங்கியது.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பதிப்புத் துறையின் இயக்குநராகவும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகவும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் தொடர்ந்து தமிழ் வளர்க்கும் முக்கியப் பொறுப்புகளை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறையில் ஆட்சிச் சொல்லகராதியை நடைமுறைப்படுத்தினார். அயல்மொழிச் சொற்கள் பலவற்றிற்கு நல்ல தமிழ்க் கலைச் சொல்லாக்கங்கள் ஏற்படுவதற்கு வழிவகை செய்தார்.

இவரது அர்ப்பணிப்போடு கூடிய உயரிய தமிழ்ப் பணிகளால் தமிழ் தழைத்தது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர்கள் இவர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன. அந்த மலர்களைக் கண்ணைக் கவரும் சித்திரங்களோடு அழகிய தொகுப்பு மலர்களாகக் கொண்டுவந்த பெருமை சிலம்பொலியாருடையது. இன்றும் சிலம்பொலியாரின் தொகுப்புப் பெருமைக்கு அவை சான்றாகத் திகழ்கின்றன.

திருவள்ளுவர் திருநாளில் தமிழக முதல்வரின் தலைமையில் விழா எடுத்துத் தமிழை வளர்ப்போருக்குப் பல விருதுகளை அளிக்கச் செய்தவர் இவரே. இன்று சிறுகதை, நாவல், நாடகம், மரபுக் கவிதை, புதுக்கவிதை போன்ற பல துறைகளில் அரசு விருதுகள் வழங்கப்படுவதற்கு செல்லப்பனாரின் முயற்சியே காரணம்.

சிலம்பொலியாரின் அன்பு மகள் மணிமேகலை, தந்தைக்குப் பேருதவி செய்து அவரை இறுதிவரை கவனமாகப் பராமரித்தார். தன் தந்தை பேசும் எல்லா இலக்கியக் கூட்டங்களுக்கும் அவர் தவறாமல் தந்தையுடன் வருவார்.

இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட தந்தைக்கு உரிய நேரத்தில் தேவையான மாத்திரைகளை எடுத்துத் தந்து அவர் உடல் நலத்தை கவனமாகப் பார்த்துக் கொள்வார். தந்தையின் ஆற்றல்களை மதிக்கும் இத்தகைய மகப்பேறும் ஒரு நற்பேறுதான்.

தம் 91 வயதில், 2019 ஏப்ரல் ஆறாம் தேதி, சிலம்பொலி செல்லப்பன் காலமானார். அன்று அவர் அஞ்சலிக்காகக் கூடிய பெருங்கூட்டத்தால் சென்னையே குலுங்கியது என்று சொல்ல வேண்டும். அந்தப் பெருங்கூட்டத்தில் பலதரப்பட்ட கொள்கையுடையவர்கள் இருந்தார்கள்.

அவர் அத்தனை பேரின் மனங்களையும் கொள்கை வேறுபாடுகளைத் தாண்டி, தன் அன்பால் வென்றிருந்தார். பழந்தமிழ் இலக்கியச் சொற்பொழிவுத் துறையில் நெடுங்காலம் மின்னிய ஒரு நட்சத்திரத்தைக் கண்ணீரோடு எல்லோரும் வழியனுப்பி வைத்தார்கள்.

இப்போது சிலம்பொலியாரைப் போல் அற்புதமாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்துப் பேசுவதற்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது ஒரு கேள்வி.

அப்படிப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்துப் பேசினாலும் அதை ரசிப்பதற்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது அதை விட முக்கியமான அடுத்த கேள்வி!

தொடர்புக்கு,

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News